அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம்! | தினகரன் வாரமஞ்சரி

அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம்!

கொரோனா வைரஸ் உலகில் மனிதனுக்கு ஏற்படுத்தி வரும் நேரடியான தாக்கத்தைவிடவும், மறைமுகமான இழப்புகள்தான் அதிகம் என்கிறார்கள். பொதுவாகச் சொன்னால், இந்தக் காலப்பகுதியில் கொரோனா உயிரிழப்புக்குச் சரிசமமாக, மாரடைப்பினால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தகவல் என்ன தகவல்! நண்பர் ஒருவரின் சகோதரி நின்றது நிற்க மரணித்துவிட்டார். இலேசாக நெஞ்சு வலிக்கிறது என்று மட்டுந்தான் சொல்லியிருக்கிறா. கவர்மன்ற் ஆசுப்பத்திரியிலை நல்ல நாள்கள்லயே கவனிப்புக் குறைவு. இந்த நாள்கள்ல சொல்லவா வேண்டும்? ஒண்ணும் பண்ண முடியாது. எல்லாம் முடிஞ்சு போச்சு என்று கையை விரிச்சிருக்கிறாங்கள் “  என்கிறார் நண்பரின் நண்பர்.

அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் ஏக்கங்கள். ஒவ்வொருவரின் மனத்திலும் என்னென்ன கவலைகள் பொதிந்து கிடக்கின்றனவோ! யாரறிவார்..இப்படி எழுதும்போது கே.டானியலின் யார் மனத்தில் யார் இருப்பார் சிறுகதைதான் நினைவுக்கு வருகிறது.

அப்போது யார் மனதில் என்றுதான் இருந்தது. இப்போதுதான் திருத்திக்கொண்டிருக்கிறார்கள். மனதில் என்பது தவறு. தமிழ்ப் பிழை! மனத்தில் என்பதுதான் சரி. வாசிப்பில் நாட்டங்கொண்டவர்கள் கண்ணுற்றிருப்பார்கள்.

சரி விசயத்திற்கு வருவோம்.

உலகளவில் ஏற்படும் நோய்களில் மன அழுத்தம்தான் முதலிடத்தில் உள்ளது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் பலரும் இதை ஒரு நோய் என்றே உணருவதில்லை. மன அழுத்தம் என்பது ஒரு தீவிரமான மனநோய். இதிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி, மனநல மருத்துவரைச் சந்தித்து, சிகிச்சை எடுத்துக்கொள்வதுதான். கொஞ்சம் முயற்சி செய்தால் மன அழுத்தம் ஏற்படுவதை எளிதாகத் தவிர்த்துவிடலாம்’’ என்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன். ஆனால், இந்தக் காலகட்டத்தில் இது சாத்தியமா?

உங்களுக்கு ஒரு பிரச்சினை வந்தால், அது உங்களுக்கானது மட்டும் அல்ல. அது உங்களைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதை உணருங்கள். அதனால், உங்களுடைய  துயரங்கள் அனைத்தையும் நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் என்கிறார்கள்.

கொரோனா தொற்று தடுப்பு எவ்வளவு முக்கியமானதோ அதேபோன்று தொற்று தாக்கிய காலங்களில் மனநலம் பேணுவதும் மிக முக்கியமானதாகும். ஏனெனில் நோய் தொற்று தாக்குதலில் இருந்து விடுபடுவதற்கு தனிமைப்படுத்துதல் அவசியமாகி விடுகிறது.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பிறரிடம் தொடர்பு இல்லாமல் இருப்பதால் மனச்சோர்வு நோய்க்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. எதிர்கொள்ள இருக்கும் நிச்சயமற்ற காலத்தை நினைக்கும்போது மன அழுத்தம் ஏற்படும். வீட்டில் அவர்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்துவிடும் நிலையில் உதவி செய்ய ஆள் இல்லாதபோது மனம் பதற்றமடையும்.

கை கழுவுதல், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு செயல் ஆகியவற்றை சரிவர செய்தோமா? முக கவசம் சரியாக அணிந்தோமா? போன்ற சந்தேகங்கள் வருவதால் திரும்பத் திரும்ப அந்த வேலைகளைச் செய்ய முற்படுவதுண்டு. தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் பிற உறவினர்களை சந்திக்க இயலாதபோது அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற இயலாததால், மனக்குழப்பத்திற்கு ஆளாக நேரிடும். இது தீவிரமடையும் போது தற்கொலை எண்ணங்கள் மேலோங்கும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

இயல்பாக தும்மலோ, இருமலோ, மூக்கில் பசபசப்போ வெளிப்பட்டால் இது கொரோனாவின் அறிகுறி என்று அச்சப்படும் நிலை ஏற்படும். விடுமுறை காலங்களில் இணையத்தள பயன்பாட்டையே நம்பி இருப்பதால், அதிலிருந்து விடுபட முடியாமலும், அதற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையும் ஏற்படும். பேரிடர் நீங்கி, சமூக அமைதி திரும்பிய பின்னரும், பேரிடர் காலத்தில் கடந்து வந்த எதிர்மறை சம்பவங்களின் பிரதிபலிப்பாக மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் உருவாகும்.

அரசு சொல்கிற தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி மன அமைதியுடன் இருப்பதற்கு கொரோனா பற்றிய செய்திகளை அறிய நம்பகமான வழிகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும். அந்த செய்திகளை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே கேட்டு அறிந்து கொள்ளவேண்டும். குழந்தைகளுடன் உள் விளையாட்டுகள் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுங்கள். குடும்பத்தோடு செலவிட உகந்த காலமாக இந்த நாட்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆலோசனைகள் ஒருபுறமிருக்க, பண்பாடு சார்ந்த புத்தகங்கள், நீதி நெறி, நாளிதழ் மற்றும் உங்களைக் கவர்ந்த புத்தகங்களை வாசிக்கலாம். அவற்றை வாசித்ததை குடும்பத்தினருடன் பகிர்ந்து விவாதிக்க வேண்டும். உங்கள் குழந்தை பருவ அனுபவங்களை வீட்டில் உள்ள உங்களது பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை தினமும் செய்யவேண்டும்.

தியானம், வழிபாடு, கூட்டுப்பிரார்த்தனை செய்து குடும்பத்தினருடன் இணைந்து இருக்கவேண்டும். குடும்பத்தோடு செலவிடக்கூடிய காலத்தை பொன்னான காலம் என்று கருதுங்கள். மன உளைச்சல் மிகுந்த காலங்களில் இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்தை மேலோங்க செய்ய வேண்டும். மெல்லிய இசை, ஊக்கம் தரும் பாடல்கள், நல்ல புத்தகங்கள் ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றாலும் அநேகருக்குச் சோகப்பாடல்களில் சுகம் இருப்பதாகவும் சொல்லிக்கொள்கிறார்கள்.

இந்தக் காலத்தில் மன வலிமை மிகவும் தேவை. மேலும் சீரிய சிந்தனை திறன் பிரச்சினைகளை சமாளிக்கும் திறன் போன்றவைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும். எந்த செயலை செய்ய முற்படும்போதும் என்னால் முடியும் என்ற உணர்வோடு செய்ய தொடங்கவேண்டும். இவ்வாறு செய்வதனால் கொரோனா தரும் மன அழுத்தத்தில் இருந்து மீளலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும், நண்பரின் சகோதரிக்கு தன் மூத்த மகன் இருந்திருந்தால், இன்று எம்மோடு வீட்டில் ஒன்றாக  இருந்திருப்பானே! என்ற ஏக்கம் அதிக  மன உளைச்சலைத் தந்திருக்கிறது. ஆகவேதான், வீட்டில் ஒன்றாக இருக்கும் நீங்கள், யாரையும் தனித்துவிட்டுவிடாதீர்கள்.  

Comments