உலகை மாற்றிய கொரோனா... | தினகரன் வாரமஞ்சரி

உலகை மாற்றிய கொரோனா...

ந்தாவது மாதமாகவும் மனித அறிவையும் தடுப்பாற்றலையும் விஞ்சி கொரோனா வைரஸ் முன்நகர்ந்துக் கொண்டிருக்கின்றது. இத்தொற்று நோயினை நம்மால் ஒடுக்க முடியாததால் நாமே இயன்றளவு ஒதுங்கி நடந்து கொள்வதை தவிர இதிலிருந்து தப்புவதற்கு வேறு வழியில்லை என்ற நிலைமையே இன்னும் நிலவி வருகின்றது. ஆகையால் இதுவரை காலமும் மனித சமூகம் வாழ்ந்துவந்த விதத்தை அதாவது தமக்கு பழக்கப்பட்ட வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டியது கட்டாயமாகியிருக்கின்றது. குறிப்பாக தனிப்பட்ட மனித வாழ்க்கையிலும் சமூக செயற்பாடுகளிலும் தொழில்புரியும் விதத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தி புதிய அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்க மனித சமூகம் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

அதற்கமைய ஸ்பரிசம் மூலம் கொரோனா வைரஸ் பரவி வருவதனால் இயன்றளவு அதாவது தொடுதல், படுதல், தடவுதல், உரசல் ஆகிய விதத்திலான ஸ்பரிசங்களை தவிர்க்கும் வகையில் குரல் மற்றும் உருவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட எதிர்கால கொடுக்கல்வாங்கல் செயற்பாடுகளை திட்டமிட வேண்டியிருக்கின்றது. ஏற்கனவே கையடக்கத் தொலைபேசி, மடிக்கணனி ஆகியவற்றில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஆளை அடையாளம் காணும் வழியாக உருவம் மற்றும் குரல் ஆகியவற்றை பயன்படுத்தும் தொழிநுட்பத்தை வங்கி செயற்பாடுகள், தொழில் நிலையத்திற்கு உள்வாங்கும் மற்றும் வெளியேறும் நேரப் பதிவு இயந்திரம், ஊதியம் வழங்குதல், பயணச்சீட்டு உள்ளிட்ட பிரவேசப் பத்திரங்களை பெற்றுக் கொள்ளுதல் போன்ற பரந்த செயற்பாடுகளுக்கு பெருமளவு உபயோகப்படுத்திக் கொள்வதற்கான முனைப்பு இன்று உலகளாவிய ரீதியில் பரீட்சார்த்த முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

சமூக இடைவெளியை பேணுதல் அத்தியாவசியமாக இருக்கும் பின்னணியில் குறிப்பாக காரியாலய அலுவல்களில் ஈடுபடுவோருக்கு வீட்டில் இருந்தவாறு தொழில் புரியும் வாய்ப்பை மென்மேலும் ஊக்குவிக்கும் கட்டாயத் தேவை இப்போது நமது நாட்டிலும் ஏற்பட்டிருக்கின்றது. சில மேற்கத்திய நாடுகள் இவ் உத்தியினை நீண்ட காலமாக கடைப்பிடித்து வந்திருக்கும் பின்னணியில் நமது நாட்டில் இப்பரீட்சார்த்த முயற்சி கைக்கூட வேண்டுமாயின் தொழிநுட்ப மற்றும் டிஜிட்டல் அடிப்படை வசதிகளை மென்மேலும் அதிகரிக்க வேண்டும்.

தொழில் புரிவதோடு அதனுடன் இணைந்ததாக நடைபெறும் சந்திப்புகள், கலந்துரையாடல்கள் ஆகியனவற்றையும் தொலைத்தொடர்பு தொழிநுட்பம் மூலமாக மேற்கொள்வது தற்போது சாத்தியமடைந்து வருகின்றது. அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் தூதுவர் பதவியேற்பு இத்தகைய செய்மதி தொலைத்தொடர்பு வாயிலாக நடத்தப்பட்டமை முன்மாதிரியாகும். ஏற்கனவே இந்திய நிதி உதவியுடன் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட யாழ் துரையப்பா மைதானத்தினை இந்திய பிரதமர் மோடி தமது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இருந்தவாறு செய்மதி தொழிநுட்பம் வாயிலாக இலங்கை மக்களின் உபயோகத்திற்காக அங்குரார்ப்பணம் செய்து வைத்ததோடு அங்கே குழுமியிருந்த பொதுமக்களுக்கு நேரலையில் உரையாற்றியமை சமூக இடைவெளியை பேணுவதற்கு முன்னராக நமது நாடு பெற்றுக்கொண்ட செயற்பாட்டு ரீதியிலான ஒரு அனுபவமாகும்.

தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் பின்னணியில் அம்முறைமையினை உள்நாட்டு ரீதியாக உபயோகப்படுத்துவதற்கான சாத்தியப்பாடு அதிகமாக காணப்படுகின்றது. கொரோனாவின் வியாபித்தலை அடுத்து பாடசாலைகள் மூடப்பட்டதன் விளைவாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் Zoom, Microsoft Team, தொலைக்காட்சி கல்வி அலைவரிசை ஆகியன நமது நாட்டிலும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருவதுடன் வறிய மற்றும் தூரப் பிரதேசங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம் நோய் தடுப்பை வெற்றி கொள்வதோடு நம் நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் காத்திரமான கல்வி வாய்ப்பினை சமமாக பெற்றுக் கொடுப்பதற்கு இதனை ஒரு வாய்ப்பாக மாற்றிக் கொள்ளலாம்.

கொரோனா தொற்று நோய் பற்றிய சகல தகவல்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு தகவல் தொழிநுட்பமே தற்போது முக்கிய பங்களிப்பினை செய்து வருகின்றது. இத்தகவல் தொழிநுட்பத்தின் ஊடாக புள்ளிவிபரங்களையும் தகவல்களையும் உரிய முறையில் சேகரித்து எதிர்கால நோய்த்தடுப்பு திட்டங்களையும் சமூக செயற்பாடுகளையும் திட்டமிடுவதற்கான வாய்ப்பு கொரோனாவினால் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றது. அத்தோடு புதிய தகவல் தொழிநுட்பத்துடன் Robot தொழிநுட்பத்தையும் உபயோகப்படுத்தி சமூக செயற்பாடுகளை கண்காணிப்பதுடன் அவசர உதவிகளை மேற்கொள்வதற்கான வழிமுறைகளையும் இத்தொற்று நோய் பின்னணி தோற்றுவித்திருக்கின்றது. அத்தோடு புPளு தொழிநுட்பத்தை உபயோகப்படுத்திக் கொள்வதன் மூலம் துல்லியமாக உலக செயற்பாடுகளை இனங்கண்டு தக்க நடவடிக்கைகளை எடுப்பதற்கான பரீட்சார்த்த களமாக கொரோனா தொற்று நோய் இன்று இந்த உலகை மாற்றியிருக்கின்றது.

மனிதன் விண்ணைத் தொடும் அளவிற்கு தமது வேகத்தை அதிகரித்துக் கொண்டிருந்த போதிலும் கொரோனா நோய் உள்ளிட்ட தொற்று நோய் பரவும் வேகத்தினை கட்டுப்படுத்த திண்டாடும் பின்னணியில் மனிதனாலேயே மனித அறிவையும் இயந்திரங்களின் அறிவையும் இணைத்து உருவாக்கப்பட்டிருக்கும் செயற்கை நுண்ணறிவை (Artificial Inteligence) மிகச் சாதகமாக அதற்காக பயன்படுத்த முடியும் என்ற நிலைமை தற்போது ஏற்பட்டிருக்கின்றது. இயற்கையின் செயற்பாடாகிய தொற்று நோய் பரவுதலைக் கட்டுப்படுத்த நோயாளர்களின் எண்ணிக்கையையும் அது பரவிவரும் வேகத்தையும் எதிர்காலத்தில் பரவக்கூடிய சாத்தியப்பாட்டையும் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு துல்லியமாக கணிப்பிட்டு எதிர்வு கூறுவதன் மூலம் சிறந்த எதிர்கால தற்காப்பு நடவடிக்கைகளை சாத்தியப்படுத்திக் கொள்வதற்கு இத்தொழிநுட்பத்தை உபயோகப்படுத்த மனித சமூகம் முயன்று கொண்டிருக்கின்றது.

வைத்தியர், நோயாளி பிரசன்னம் என்பது இயன்றளவு தவிர்க்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாலும் தற்கால உலக வைத்திய தொழிநுட்பம் துரித வளர்ச்சியடைந்திருக்கும் பின்னணியில் ஒளிநாடா கலந்துரையாடல் மூலம் உலகில் மிகச் சிறந்த அபூர்வமான சத்திர சிகிச்சைகளே சாத்தியமாகியிருக்கின்ற பின்னணியில் தொலை மருத்துவம் (Tele Medicine) மனித சமூத்தின் தற்பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் ஒரு உத்தியாக காணப்படுகின்றது. ஆகையால் வளர்ந்துவரும் தொழிநுட்பத்தின் அடிப்படையில் மென்மேலும் இத்துறைகளை வளர்ப்பதற்கான வாய்ப்பினையும் கொரோனா ஏற்படுத்தியிருக்கின்றது.

சில தசாப்தங்களுக்கு முன்னர் மனித செயற்பாடுகளுக்கு பதிலாக இயந்திர மனிதனை உபயோகப்படுத்தல் என்பது மனிதனின் கற்பனைக்கும் அக்கற்பனையினால் உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும் கொரோனா நோய்த்தடுப்பு செயற்பாட்டின் அவசியம் கருதி நமது நாட்டின் பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் இயந்திர மனிதரை (Robot) உருவாக்கி சுகாதாரப் பணிகளில் அதன் செயற்பாடு இன்று சாத்தியமாகி இருக்கின்றதென்றால் அதற்கு உந்துசக்தியாக அமைந்தது இத்தொற்று நோயே என்பதை மறுப்பதற்கில்லை. ஆகையால் நமது நாட்டில் இலைமறைகாயாக இருந்துவரும் இத்தகைய திறமைசாலிகளுக்கு களம் அமைத்துக் கொடுப்பதன் மூலம் கொரோனா வைரஸை ஒரு சாபக்கேடாக நோக்குவதற்கு பதிலாக சாதகத்தன்மைக்கு களம் அமைத்துக் கொடுத்த ஓர் வாய்ப்பாக்கிக் கொள்ளலாம்.

இத்தொற்று நோய் பரவுதலையடுத்து நமது நாட்டிலும் வரலாறு காணாத வகையில் களமிறக்கப்பட்டிருக்கும் இணைய வழி மூல பொருள் மற்றும் சேவை கொள்வனவை (online shoping) மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அதற்கான அடிப்படை வசதிகளை விரிவாக ஏற்படுத்திக் கொடுப்பதுடன் அத்துறைசார் கட்டணங்களை கண்காணித்து நியாயமான கட்டணத்தை செலுத்தி இணையவழி கொள்வனவை மேற்கொள்வதை ஊக்குவித்தல் வேண்டும். அது நுகர்வோருக்கு வசதியினையும் தொழில்முனைவோருக்கு புதிய தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமையும். இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சகல புதிய உத்திகளையும் நாட்டுக்கும் மக்களுக்கும் நலனையும் புதிய வருமான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

ரவி ரத்னவேல்

Comments