கொரோனாவுடன் வாழப்பழகுவது சாத்தியமா? | தினகரன் வாரமஞ்சரி

கொரோனாவுடன் வாழப்பழகுவது சாத்தியமா?

நமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டுவதாகவும் ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பது என்றும் அதிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை முந்நூறுக்கு மேல் என்றும் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

நோய்த்தொற்றுக்குள்ளாகியவர்கள் அதிகமாக இருந்ததாக கொள்ளப்பட்டு அடைக்கப்பட்டிருந்த பிரதேசங்கள் எல்லாம் திறக்கப்பட்டுள்ளன. நோய்த் தொற்று அபாயம் இல்லாமலாக்கப்படவில்லை என்றும் நோய்த்தொற்றின் வீரியம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் கூறுகின்றனர். இவ்வாறான உத்தியோகபூர்வ தகவல்களை முழுமையாக எல்லா இலங்கையர்களும் நம்பும் சூழல்கள் எல்லாக் காலங்களிலும் எல்லா விடயங்களிலும் இருந்தது கிடையாது. இதனால் இவை சரியாக இருக்குமா என்று மக்களில் பெரும்பான்மையானவர்கள் சந்தேகங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

கொரோனாவை தடுக்க அல்லது குணப்படுத்த அல்லது வெற்றிகொள்ள இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வாறு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் மக்களின் பாவிப்புக்கு வர ஆறு மாதங்கள் முதல் ஒருவருட காலம் வரை எடுக்கலாம்.  நோய்த்தொற்று பரவாமலிருக்க தனிமைப்படுத்தல், சமூக விலகி இருத்தல் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. வீடுகளிலிருந்தே அலுவலக வேலைகளைச் செய்ய வேண்டுமென கூறி காரியாலயங்கள், கடைகள் அடைக்கப்பட்டன. 23 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து வேலைக்கு செல்வோருக்கு மட்டுமென அனுமதிக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்டிருந்த பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் அடுத்த மாதம் பகுதி பகுதியாகவேனும் திறக்கப்படலாம். நீதிமன்ற நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெறுகின்றன.

நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் பலபேர் குணமடைந்து விட்டதாக அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது எமது நாட்டில் மட்டுமல்ல, பல உலக நாடுகளிலும் நடந்துள்ளது. இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்திகள் இருந்தபடியாலும், நோய் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்பட்டதாலும் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கியூபாவின் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் இத்தாலி, சீனா ஆகிய நாடுகளில் பாவிக்கப்பட்டுள்ளன. மலேரிய எதிர்ப்பு மருந்துகள் அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மன் ஆகிய நாடுகளில் பாவிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை அதனுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறியுள்ளது. இதுவே அந்நிறுவனத்தின் கொரோனா பற்றிய பிந்திய அறிக்கையாகும். அத்துடன் அந்நோயை கட்டுப்படுத்த ஆயுர்வேத மருந்துகளும் பரீட்சிக்கப்படுவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. உலக மக்களின் சுகாதாரம் பற்றிய உலகளாவிய தலைமையாக அந்நிறுவனமே செயற்படுகிறது. சர்வதேச நிறுவனங்கள் பலம்வாய்ந்த நாடுகளினதும், பெரிய பல்தேசிய கம்பனிகளினதும் அழுத்தங்கள், செல்வாக்கு என்பனவற்றுக்கு உட்படாமல் எல்லா நாடுகளுக்கும் மக்களுக்கும் பொதுவாக பாரபட்சமின்றி செயற்படுவதாக அடித்துக் கூறமுடியாது. கொரோனா வைரஸ் பிறப்பாக்கத்திற்கும் தொற்றுக்கும் சீனாதான் காரணமென குற்றஞ்சாட்டி வந்த ஐக்கிய அமெரிக்க அரசுகள் (ஐ.அ.அ) உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு சார்பாக செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன் அந்நிறுவனத்திற்கு பிரதானமாக வழங்கிவந்த நிதியை இனி வழங்க முடியாதென நிறுத்தியுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ருஸ் மிகவும் பின்தங்கிய எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்தவரெனினும் சர்வதேச மருந்து கம்பனிகளில் (மருந்து மாஃபியா) இலாப நோக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருகிறார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறார். அதேவேளை சீனா உலக சுகாதார நிறுவனத்திற்கு அது வழங்கிவந்த நிதிக்கு மேலதிகமாக கொரோனா ஒழிப்பிற்காக வழங்கியுள்ளது. கொரோனாவை பிறப்பாக்கம் செய்தமை, பரப்பியமை போன்றவற்றுக்காக ஐக்கிய அமெரிக்க அரசுகளே பொறுப்பென்று சீனாவும், சீனாவே பொறுப்பென்று ஐக்கிய அமெரிக்க அரசுகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றன. அதேபோன்று ஐக்கிய அமெரிக்க அரசுகளை ஆதரிக்கும் சீன எதிர்ப்பாளர்கள் சீனாவே பொறுப்பென்கின்றனர். சீனாவை ஆதரிக்கும் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் எதிர்ப்பாளர்கள் ஐ.அ.அரசுகளே பொறுப்பென்கின்றனர். உண்மை என்னவென்பது அவ்விரு நாடுகளுக்கே வெளிச்சம்.

எவ்வித வேறுபாடுகளுமின்றி அனைத்து உலக மக்களையும் அழிக்க அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவை ஒழிக்க வேண்டிய பொதுக்கடமையில் இருந்து விலகி தமது இருப்பையும் ஆதிக்கத்தையும் பற்றி மட்டுமே கரிசனை கொள்ளும் பலம்பொருந்திய நாடுகள் ஆதிக்கப் போட்டியை துரிதப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றன. இது மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கக்கூடிய ஆரோக்கியமான சர்வதேச சூழல் அல்ல.

இதனால் அவற்றின் ஆதிக்கத்தில் இருக்கும் உலக சுகாதார நிறுவனமும் மக்களுக்கு நம்பிக்கை தருவதாக இல்லை. நோய்த்தொற்று இனங்காணப்பட்ட ஆரம்ப நாட்களில் இந்நோய் அவ்வளவு பாரதூரமானதல்ல என்றும் அதனை முறியடித்து விடலாம் என்றும் அந்நிறுவனம் கூறியது. பின்பு மிகவும் பயங்கரமான நோய் என எச்சரித்தது. நோய் அறிகுறிகள் பற்றியும் நேரத்திற்கு நேரம் வேறுபட்ட தகவல்களை தந்தது. தற்போது அந்நோயை முறியடிக்க முடியாது என்பதால் அதனுடன் வாழப்பழகிக்கொள்ள வேண்டும் என்கிறது.

அரசியல், பொருளாதாரம், சமூக பண்பாட்டு விடயங்களில் முதலாளித்துவ கட்டமைப்பின் இலாப நோக்கம் சுகாதாரம் என்ற மனிதகுலத்தின் அடிப்படைத் தேவையிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ள உள்நாட்டு, வெளிநாட்டு சூழலில் கொரோனா பரவலுக்கு கியூபா, சீனா, வடகொரியா என்பன சாதுரியமாக முகங்கொடுத்து வருகின்றன. இதற்கு கியூபாவிலும் சீனாவிலும் வடகொரியாவிலும் சுகாதாரத்துறை முழுமையாக மக்களின் நலன்சார்ந்த அரச கட்டுப்பாட்டில் இருப்பதால் நோய்ப் பரவலை முறியடிக்கும் நடவடிக்கைகள் முன்னேற்றகரமாக இருக்கின்றன. சிலர் கூறுவதுபோல் அந்நாடுகளில் சோஷலிஸ ஆட்சி நடைபெறுவதால்தான் நோய்ப்பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. அந்நாடுகளில் சோஷலிஸ கட்டுமானங்கள் இருக்கின்றபோதும் சோஷலிஸ ஆட்சி நடைபெறுகிறதா என்ற விவாதம் தற்போது முதன்மைபெற வேண்டியது அவசியமில்லை.

மேற்குறித்த மூன்று நாடுகளிலும் கியூபா மருத்துவத்துறையில் சிறந்து விளங்குவதுடன் ஏனைய நாடுகளுக்கும் அதன் சுகாதார சேவை நீடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா சூழலிலும் கியூபாவின் சேவை முன்னணியில் இருக்கிறது. சீனாவும் உள்நாட்டில் நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதுடன் வெளிநாடுகளிலும் கட்டுப்படுத்த உதவி வருகிறது. இம்மூன்று நாடுகளைத் தவிர ஏனைய முதலாளித்துவ நாடுகள் கொரோனாவால் திணறுகின்றன.

ஐ.அ.அ, கனடா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளும் ஆசிய நாடுகளும் மத்திய கிழக்கு நாடுகளும் தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளை முடக்கி வைத்திருக்க முடியாது.

அடைக்கப்பட்ட நிலைக்கு முடிவுகட்டி எல்லாவற்றையும் திறக்க வேண்டி இருக்கின்றன. சில கட்டுப்பாடுகளை மக்கள் மீது சுமத்தியிருந்த போதும் பொருளாதார நடவடிக்கைகளுக்காக திறப்பது என்பது கொரோனாவுடன் வாழப்பழகிக்கொள்ள மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகிறது. இது உலக சுகாதார நிறுவனத்துடன் ஒத்திணங்குவதாகும்.

இலங்கையின் அடைப்பு நிலையை நீக்கி திறப்பது என்பது பொருளாதார நடவடிக்கைகளுக்கு அவசியமாகிறது. கடந்த இரண்டு மாதங்களாக மக்கள் வாழ்நிலையை ஓட்டிவிட்டார்கள். போதுமானதாக இல்லாவிட்டாலும் அரசின் மாதாந்தம் 5000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு தேவையாக இருந்தவர்கள் அனைவருக்கும் கிடைக்கவில்லை. அந்நிவாரணம் வழங்கப்பட வேண்டியவர்களில் உள்ளடக்கப்படாத மக்களில் ஒருசில பெரும் வசதி படைத்தவர்களை தவிர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், மத்தியதர வர்க்கத்தினர், சிறு வியாபாரிகள் இனியும் தொழிலும் வருமானமுமின்றி தாக்குப்பிடிக்கக்கூடிய நிலையில் இல்லை. பொருளாதார நடவடிக்கைகள் இல்லாமல் எல்லா மக்களுக்கும் வாழக்கூடிய அத்தியாவசிய பொருட்களை இனாமாக நீண்டகாலத்திற்கு விநியோகிக்கக்கூடிய, அடிப்படை சேவைகளை வழங்கக்கூடிய, ஆட்சிப் பொறிமுறையும் இல்லை. இதனால் தொடர்ந்து நாட்டை முழுமையான அடைப்பிற்குள்ளோ, ஊரடங்கு நிலையிலோ வைத்திருக்க முடியாது.

அத்துடன் பாராளுமன்றத் தேர்தலை நடத்த முடியாதுள்ளது. அடைப்பையும், ஊரடங்கையும், சமூக விலகலையும் வைத்துக்கொண்டு தேர்தலை நடத்த முடியாது. நாட்டை முற்றாகத் திறப்பது நோய்த்தொற்று அபாயத்தை அதிகரிக்கச் செய்யுமெனினும் மட்டுப்பாடுகளுடனாவது திறக்காவிடின் தேர்தலை நடத்த முடியாது. தேர்தலை நடத்தாவிடின் புதிய பாராளுமன்றத்தை அமைக்க முடியாது. பாராளுமன்றமில்லாமல் நாட்டிற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்ளவோ,  ஒதுக்கிக்கொள்ளவோ, செலவிடவோ முடியாது. இதனால் கொரோனா அபாயத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய தேவையை விட பொருளாதார நடவடிக்கைகளும், பாராளுமன்றத் தேர்தலும், பாராளுமன்ற இயக்கமும் முன்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.

எனவே எமது நாட்டு மக்களும் கொரோனா நோய்த் தொற்றுக்கு அப்பால் எழுந்துள்ள நீண்ட நாட்களுக்கு பிற்போட முடியாத பொருளாதார நடவடிக்கைகள், பாராளுமன்றத் தேர்தல், பாராளுமன்ற இயக்கம் போன்றவற்றால் கொரோனா வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்கவேண்டியிருக்கிறது.

அதாவது நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுக்கு பராமரிப்பு செய்ய வேண்டியதுடன் மட்டுப்படுத்தப்பட்ட நோய்த் தொற்று எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் நோயால் இறப்பவர்களை கண்டுகொள்ளாது வாழ்வதுடன், உயிருடன் இருப்பவர்களை கண்டுகொள்வது என்ற இயலாமையின் விரக்தி நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

உலக நாடுகளும், சர்வதேசமும், நமது நாடும் 'வந்தது வரட்டும் போனது போகட்டும்' என்ற நிலைக்குள்ளாகியுள்ளன. நாடுகளையும், சர்வதேசத்தையும் கட்டுப்படுத்தி இருக்கும் கட்டமைப்புகளுக்கு அப்பால் சுதந்திரமான முயற்சிகள் என்பது உடனடியாக சாத்தியமில்லை. எனவே இருக்கின்ற உள்நாட்டு, வெளிநாட்டு கட்டமைப்புகளில் மக்கள் நலனை மையமாகக் கொண்டே கொரோனா எதிர்ப்பு சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், கொரோனா தாக்கத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் மக்களின் அழுத்தங்கள் அவசியம்.

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்நோக்குவதில் உலக சுகாதார நிறுவனம் பின்னடைவை சந்தித்துள்ளது போன்று இக்காலகட்டத்தில் கொரோனா எதிர்ப்பிற்கு முன்னுரிமை கொடுத்து, உலக சமாதானத்தை பேணுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச்சபை போர் தவிர்ப்பு, தாக்குதல் தவிர்ப்பை மேற்கொள்வதற்கான சம்பந்தப்பட்ட நாடுகளை கட்டுப்படுத்துவதற்காக எடுத்த முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன.

தற்போது பாலஸ்தீன - இஸ்ரேல் போர், சிரியா, யேமன், ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் இடம்பெறும் போர்கள் மற்றும் போர் மூளும் அபாயமுள்ள பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட நாடுகளின் நடவடிக்கைகளை நிறுத்தி அமைதியை பேணுவதற்காக பாதுகாப்புச் சபையில் பிரேரணைகளை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. அதாவது உலகளாவிய போர்த் தவிர்ப்பிற்கான (Global Ceasfire) பிரேரணையை நிறைவேற்றி தீர்மானத்தை நிறைவேற்ற எடுக்கப்பட்ட முயற்சிக்கு ஐக்கிய அமெரிக்க அரசுகளின்  டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சம்மதிக்காததால் பாதுகாப்புச்சபை அதன் முயற்சியை கைவிட்டுள்ளது. இதனால் உலக சமாதானத்திற்கு ஐ.அ.அ விடுத்துள்ள மறைமுக அச்சுறுத்தலாக கொள்ளப்படுகிறது.

எனவே பாரிய உயிராபத்தை ஏற்படுத்தி அழிவை தரக்கூடிய கொரோனா அச்சுறுத்தலையும், உலக சமாதானத்திற்கு ஏற்படவுள்ள அபாயத்தையும் எதிர்கொள்ள சர்வதேச ரீதியாகவும், நாடளாவிய ரீதியிலும் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் அவசியமாகின்றன.

பெருமாள் காமாட்சி

Comments