உலகில் கொரோனா உயிரிழப்பு வீதம் திடீரென அதிகரிப்பு! | தினகரன் வாரமஞ்சரி

உலகில் கொரோனா உயிரிழப்பு வீதம் திடீரென அதிகரிப்பு!

கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் இறுதியாகக் கிடைத்த அறிக்கைகளின்படி 46 இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் நாளாந்த உயிரிழப்பு எண்ணிக்கை சதவீதம் தற்போது அதிகரித்து இருக்கிறது. நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 5,072 பேர் உயிரிழந்துள்ளனர். னால் மொத்தமான பலி ண்ணிக்கை 3 இலட்சத்து 8 ஆயிரமாக உயர்ந்துள்ளது.  25 இலட்சத்து 58 ஆயிரம் பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.17 இலட்சத்து 55 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 88,500 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் 1,595 பேர் பலியாகியும், 26 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டும் உள்ளனர். அமெரிக்காவில் இதுவரை மொத்தமாக 14 இலட்சத்து 84 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்ட மாகாணமாக நியூயோர்க் உள்ளது. அங்கு எல்லாமாக 27,500 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த வாரத்தில் நாளாந்த பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபடி இருந்தது. 1000 பேர் பலியாகியும் புதிதாக 18 ஆயிரம் பேர் பாதிப்பு என்ற நிலையில் குறைந்தபடியே இருந்தது. ஆனால் மீண்டும் அங்கு பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. நேற்றுமுன்தினம் புதிதாக 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு மீண்டும் கொரோனா வைரசின் தாக்கம் குறையவில்லை என்று கருதப்படுகிறது.

ஆனால் தற்போதைய நிலைவரப்படி நியூயோர்க் மாகாணத்தில் பலி மற்றும் பாதிப்பு கணிசமான அளவுக்கு குறைந்திருக்கிறது. இந்த நிலையில் நியூயோர்க் மாகாணத்தில் உள்ள 5 பகுதிகளில் நேற்று முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளன.

தென்அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. அங்கு அந்த வைரஸ் உச்சக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 824 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 14,817ஆக உயர்ந்தது.

பிரேசிலில் கொரோனா கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கையில் அந்த நாடு இத்தாலி, இங்கிலாந்தை முந்துகிறது.

ரஷ்யாவிலும் தினமும் பாதிப்பு 10 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. ரஷ்யாவில் மொத்தம் 2418பேர் பலியாகியும், 2 லட்சத்து 62 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

இங்கிலாந்தில் கொரோனா பலி 34 ஆயிரத்தை நெருங்கி விட்டது. நேற்றுமுன்தினம் 384 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவிலும் பலி எண்ணிக்கை தினமும் அதிகரித்தபடியே இருக்கிறது. அங்கு 2 நாட்களில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,477 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

கனடாவில் 5,662 பேரும் ஈரானில் 6,902 பேரும் நெதர்லாந்தில் 5,643 பேரும் துருக்கியில் 4,055 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Comments