ஒரு வருடத்துக்குள் நாட்டை கட்டியெழுப்ப 4 வேலைத் திட்டங்கள் | தினகரன் வாரமஞ்சரி

ஒரு வருடத்துக்குள் நாட்டை கட்டியெழுப்ப 4 வேலைத் திட்டங்கள்

கொரோனா 19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக பாரிய பொருளாதார  வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள நாட்டை ஒரு வருட கால எல்லைக்குள் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும்  பொருட்டு 4 வேலைத் திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகருமான அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனையும் அதற்கான வட்டியையும் மீளச் செலுத்துவதற்கு ஒரு வருடம் அல்லது  இரண்டு வருட கால அவகாசத்தைப் பெற்றுக் கொள்ளவும் உற்பத்தி பொருளாதாரத்தை கட்டி எழுப்புதல் வர்த்தகத்துறையை பலப்படுத்தல், மூலதன இருப்பை தக்க வைத்துக்  கொள்ளல் போன்ற நான்கு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிவாரணத்தினுடாக 02 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டை விட்டு வெளியேறுவதை தடுத்துக்கொள்ள முடியுமெனவும் அதனூடாக நாட்டை பலம் கொண்டதாக மாற்றியமைக்க  முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் மூலதனம் வெளியேறுவதை தடுத்து நிதியை உள்நாட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் வர்த்தக மேம்பாட்டுக்காக 200 பில்லியன் ரூபாவையும் மேலும் 200 பில்லியன் ரூபாவை வறுமைக்கோட்டில் வாழும் மக்களின் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் முதலீட்டுச் சந்தையை   பலப் படுத்தும் பொருட்டு பங்குச்சந்தையை திறந்துவிட்டு இருக்கின்றோம் என குறிப்பிட்ட நிவாட் கப்ரால் எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கூடிய உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் உற்பத்தி பொருளாதாரத்தை பலப்படுத்தி உள்  நாட்டு வர்த்தக சந்தையை மேம்படுத்தவும்  நாட்டு மக்களின் கைகளில் பணப்புழக்கம் கிட்டுவதற்கு  வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் உள்நாட்டு வர்த்தகத்தை பரவலாக்க முடியும்.

அத்துடன் சுற்றுலாக் கைத்தொழிலை  மேலோங்கச் செய்யும் பொருட்டு அதற்கான புதிய நியதித் சட்டங்கள், சுகாதார நடவடிக்கைகளை பயன்படுத்தி சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் நம்பிக்கையூட்டும் விதத்திலும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் அவர் விளக்கினார். இவற்றை உரிய முறையில் பேணுவதன் மூலம் நாம் எதிர்பார்க்கும் பொருளாதார இலக்கை எட்டுவது கடினமான காரியமாக இருக்காதென அவர் வலியுறுத்திக் கூறினார்.

இதற்கான பணிகளை உடனடியாக ஆரம்பிப்பதன் மூலம் ஆறு மாதங்களுக்கும் ஒரு வருடத்திற்குமிடையில் நாட்டை பொருளாதார ரீதியில் வளம் கொண்ட நாடாக கட்டியெழுப்ப முடியுமென்ற நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருப்பதாக அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

எம். ஏ .எம். நிலாம்

Comments