நெரிசலில் உயிரிழந்த மூன்று பெண்களின் ஜனாஸாக்கள் அடக்கம் | தினகரன் வாரமஞ்சரி

நெரிசலில் உயிரிழந்த மூன்று பெண்களின் ஜனாஸாக்கள் அடக்கம்

ரமழானை முன்னிட்டு மாளிகாவத்தை பகுதியில்  பணம் பகிர்ந்தளிக்கப்பட்ட நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மூன்று பெண்களினதும் ஜனாஸாக்கள் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மூவரினதும் இறுதிக் கிரியைகள் மாளிகாவத்தை மையவாடியில் முன்னெடுக்கப்பட்டன. இதே வேளை  சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் உட்பட 07பேரும் எதிர்வரும் ஜூன் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வர்த்தகர் ஒருவர் மாளிகாவத்தையிலுள்ள தனது களஞ்சியத்தில் வைத்து வறியவர்களுக்கு பணம் பகிர்ந்தளித்த போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்தனர். நீதிமன்ற உத்தரவுக்கமைய இந்த சம்பவத்தில் உயிரிழந்த மூவரினதும் பிரேத பரிசோதனை கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

நெரிசலினால் சுவாசத் தொகுதி அடைபட்டதால் இந்த மரணங்கள் சம்பவித்ததாக சட்ட வைத்திய அதிகாரி ரூஹுல் ஹக் தீர்ப்பளித்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைய மூவரினதும் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டன.

மருதானையை சேர்ந்த உம்மு அகீலா (62), மாளிகாவத்தை ஜும்ஆ மஸ்ஜித் வீதியை சேர்ந்த எம்.பெளசியா மற்றும் மாளிகாவத்தை லக்சிறி வீதியை சேர்ந்த பரீனா (68) ஆகியோரின் இறுதிக் கிரியைகளே இவ்வாறு இடம்பெற்றன.

பணம் பகிர்ந்த வர்த்தகர் உள்ளிட்ட எழுவர் மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். இவர்களை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதிரிப்பாக கடை உரிமையாளரான எம்.இம்தியாஸ்,அவரின் புதல்வரான எம்.நஸீர், எம்.ரிஸ்வான், ஆர்.யோகேஸ்வரன்,முபாரக்,எம்.சிவபாலன், இம்ரான் பாரூக் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வறிய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக எடுத்து வந்த ஆயிரம் ரூபா நோட்டுகள் அடங்கிய 500நாணயத் தாள்களும் (5இலட்சம் ரூபா) பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு மேலதிக நீதவான் நெரஞ்சளா சில்வா நேற்று முன்தினம் மாலை சம்பவ இடத்திற்கு சென்று ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டார்.

பொலிஸாரின் அனுமதி இன்றி தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு மாற்றமாக பணம் பகிரல் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்துகின்றனர். (பா)

ஷம்ஸ் பாஹிம்

Comments