அரசுடன் இணைந்து அபிவிருத்தி செய்பவர்களுக்கே கிழக்கு மக்களின் வாக்கு | தினகரன் வாரமஞ்சரி

அரசுடன் இணைந்து அபிவிருத்தி செய்பவர்களுக்கே கிழக்கு மக்களின் வாக்கு

அரசாங்கத்துடன் இணைந்து தொழில் வாய்ப்பு அபிவிருத்தி கல்வி போன்ற பல அபிவிருத்திகளை எமது மக்களுக்கு    பெற்றுக்கொடுக்க முடியும். இவ்வாறான செயற்பாடுகளைச் செய்கின்ற கட்சியினருக்கே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். வெறுமனே கதிரையைச்  சூடாக்குகின்றவர்களுக்கு அல்லவென்கிறார் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளருமான ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி.

கேள்வி : ஜனாதிபதியின் செயற்பாடுகள் தொடர்பில் என்ன கருதுகின்றீர்கள்?

பதில்: தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ நாட்டையும், நாட்டு மக்களையும் நல்வழிப்படுத்த வேண்டும் என்ற போக்கில் தற்போதைய ஜனாதிபதியின் செயற்பாடுகள் உள்ளன என்பது உலகறிந்த உண்மையாகும். ஆனாலும் பல குறைபாடுகளும் இல்லாமலில்லை என்பதையும் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். ஜனாதிபதிக்கு வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் வாக்களித்தது குறைவுதான். அதற்கு காரணம் தற்போதிருக்கின்ற தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி என்ன மாதிரியான தொந்தரவுகளைச் செய்தது என்பது தெரியாது. ஜனாதிபதியின் விரிவான தேர்தல் பிரசாரங்களும் எமது பகுதியில் இடம்பெற்றிருக்கவில்லை.

தமிழ் பிரதேசங்களில் 1958 1978 1983காலப்பகுதிகளில், தமிழ் மக்கள் பட்ட துன்ப துயரங்களை எடுத்துரைத்திருந்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அளித்த வாக்குகளைவிட தமிழ் மக்கள் கணிசமாக ஜனாதிபதிக்கு வாக்களித்திருப்பார்கள். தற்போதைய நிலையில் சஹ்றானின் பிரச்சனைக்குப் பின்னர் தமிழ் மக்கள் சிங்கள பெரும்பான்மை மக்களுடன் இணைந்து வாழ்வதற்கு விரும்பியிருக்கின்றார்கள். இதனைக் கருத்தில் கொண்டு சிங்களத் தலைவர்கள், எதிர்காலத்தில் தமிழ் மக்களையும் அரவணைத்து, இலங்கையர் என்ற தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும். அதுவே தமிழினத்திற்கும் இந்நாட்டுக்கும் செய்கின்ற கைங்கரியமாகும். எனவே கடந்த கால கசப்பான விடையங்களை மறப்போம் மன்னிப்போம் எதிர்காலத்தில் இலங்கை நாமம் உலகளாவிய ரீதியில் புகழ்பெற இலங்கைவாழ் மக்கள் நிம்மதியாக வழிசமைக்க வேண்டும் என்பதே எனது அவா.

கேள்வி : நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்ததலில் நீங்கள் எந்தக் கட்சி சார்பாக போட்டியிடவுள்ளீர்கள்?

பதில் : நான் ஆரம்பத்திலே அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தமிழர் விடுதலைக் கூட்டணி அதன் பின்ன தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளில்தான் எனது அரசியல் வாழ்க்கையை தொடர்ந்தேன். அவர்கள் விட்ட தவறினால் தொடர்ந்து அவர்களோடு பயணத்தை மேற்கொள்ள முடியாத சூழ்நிலையை அக்கட்சிகளின் தலைவர்கள் உருவாக்கினார்கள். தேசிய ​ெபரும்பான்மைக் கட்சிகளில் தேர்தல் கேட்டால் நான் எட்டப்பனாக முத்திரை குத்தப்பட்டு விடுவேன் என்பதற்காக கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி) கட்சியுடன் இணைந்து எதிர்வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றேன் எதிர்காலத்தில் எந்த அரசாங்கம் நாட்டில் ஆட்சியமைக்கின்றதோ அந்த அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்களை வளம்பெறச் செய்வதற்கு வழிசமைப்பதே எனது அவா.

இதுவரையில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து வாக்களித்து ஏமாந்துபோயுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் தனி நாடுகேட்டது தமிழ் ஈழம் கேட்டது சமஷ்டி கேட்டது ஒன்றுபட்ட நாட்டுக்குள் சுயாட்சி கேட்டது இறுதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் கேட்டது இவற்றில் எதையும் பெற்றுக் கொடுக்காத தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குப் பின்னால் யாரும் செல்லக்கூடாது என்பது எனது கருத்தாகும்.

கேள்வி : தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியிலிருந்து நீங்கள் விலகியதற்கான காரணம் என்ன?

பதில் : நான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் சிரேஷ்ட உப தலைவராகவும் மட்டக்களப்பு மாவட்டத் தலைவராகவும் இருந்து சேவை செய்து கொண்டிருந்தேன். அப்போது கல்முனை வடக்கு பிரதேச செயலத்திற்குள் இந்துக் கோயில் கட்டியதற்கு கல்முனை மாநகர சபை மேயர் வழக்குப் போட்டார். அப்போது கல்முனை மாநகர சபை ஆட்சியமைப்பதற்கு உதவிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் குறித்த வழக்கிற்கு ஆனந்த சங்கரி ஐயாவின் நேரடி ஆலோசனையின் பெயரில் ஆதரவு வழங்கியதனால் எனக்கும் ஆனந்த சங்கரி ஐயாவிற்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அவர்கள் வழக்கை மீளப்பெறவேண்டும் அல்லது மாநகர சபையின் பாதீட்டிற்கு ஆதரவு வழங்கக்கூடாது என நான் தெரிவித்திருந்தேன். இந்நிலையிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி அந்த பாதீட்டுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. உரிமைக்குப் போராடிய நாங்கள் சலுகைக்கு அடிபணியக்கூடாது என தெரிவித்தது  இவ்விடையத்தில் எனது கருத்தை ஆனந்த சங்கரி ஐயா கேட்கவில்லை எனவே நான் அக்கட்சியிலிருந்து வெளியேறினேன்.

கேள்வி : கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிடும் முயற்சி ஏன் இறுதிவரையில் கைகூடவில்லை?

பதில் : கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என்ற முயற்சியை நானும் மேற்கொண்டிருந்தேன். அதற்காக கிழக்குத் தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பு உருவாகியது. பின்னர் அவ்வமைப்பின் தலைவர் சிவநாதன் இணைத்தலைவர் கோபாலகிருஷ்னன் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அவ்வமைப்புக்குள் பிரிவு ஏற்பட்டு கிழக்குத் தமிழர் ஒன்றியம் ஒரு அணியாகவும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு இன்னுமொரு அணியாகவும் உருவெடுத்து. கிழக்கு மண்ணைப் பாதுகாப்பதற்கு யாராலும் முடியாதுள்ளது என்பதை மிகவும் வேதனையுடன் தெரிவிக்க விரும்புகின்றேன்.

ஏனைய இனத்தவர்கள் ஒருமித்து செயற்படுகின்ற இந்நிலையில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி மட்டக்களப்பிலே தற்போது பல அமைப்புக்கள் தோன்றியுள்ளன. இவை அனைவரும் தாங்களும். தங்களுடைய கட்சிகளும் மேலோங்க வேண்டும் என்ற நோக்குடன் செயற்படுகின்றனவே தவிர கிழக்குவாழ் குறிப்பாக மட்டக்களப்பு வாழ் மக்களை வளர்ச்சிபெறச் செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் வாழ்கின்றார்களா? என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

கேள்வி :  நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என கருதுகின்றீர்கள்?

பதில்: நான் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களிடம் அன்பாகவும் பணிவாகவும். இருகரம்கூப்பி வேண்டுவது என்னவெனில் ஏமாந்த ஏமாற்றப்பட்ட ஏமாறுகின்ற ஒரு இனமாக எதிர்காலத்தில் நாம் வாழாது எங்களை நாங்களே ஆளுகின்ற ஒரு இனமாக வாழவேண்டுமாக இருந்தால் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற ஒரு தமிழ் கட்சியாக இருந்து செயற்பட்டு வருகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைப் பலப்படுத்த வேண்டும்.

அதனடிப்படையில் நாட்டில் எந்த அரசாங்கம் வருகின்றதோ அந்த அரசாங்கத்துடன் இணைந்து தொழில் வாய்ப்பு அபிவிருத்தி கல்வி போன்ற பல அபிவிருத்திகளை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும். இவ்வாறான செயற்பாடுகளைச் செய்கின்ற கட்சியினருக்கும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

எனவே வெறுமனே கதிரையைச் சூடாக்குகின்றவர்களுக்கும் எம்மினத்தை விட்டு மாற்றினத்தை வளப்படுத்துகின்ற தமிழ் கட்சிக்கு வாக்களிக்காமல் தமிழ் மக்கள் இவ்விடயத்தில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

கேள்வி : பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ள நீங்கள் உங்களது வெற்றி தொடர்பில் என்ன கூறுங்கள்?

பதில் : கடந்த காலங்களில் நான் 4தேர்தல்களில் போட்டியிட்டிருக்கின்றேன். அவ்வேளைகளில் எனக்கெதிராகப் போட்டியிட்ட எந்த வேட்பாளர்களையும் தாக்கிப் பேசியதுமில்லை இனிமேலும் தாக்கிப்பேசப் போவதுமில்லை. அதற்குரிய அவசியமும் எனக்கில்லை. நான் தேர்தல் கேட்பது அதிலே வெற்றிபெற்று அதனூடாக மக்களுக்குச் சேவை செய்வதற்காகத்தான். அரசியல் வேறு நட்பு வேறு அரசியலுக்காக நான் எவருடனும் சண்டை பிடிக்கப் போவதுமில்லை. இதுபோன்று ஏனையவர்களும் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும். எனவே நடைபெறவுள்ள தேர்தலில் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேள்வி : பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள இந்நிலையில் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்றது இது தேர்தலில் தாக்கம் செலுத்துமா?

பதில் : கொரோனா நோய் உலகளாவிய ரீதியில் பரவி ஆட்டிப்படைக்கின்றது. இந்நோய் உருவெடுப்பதற்கு முன்னர்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அண்மையில் இந்நோயினால் பீடிக்கப்பட்ட  சந்தேகத்தின் பேரில் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டபோது அங்கு மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டார்கள், அவர்களில் சிலர் கைதும் செய்யப்பட்டிருந்தார்கள்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கை மக்கள் இங்கு வரும்போது அவர்களுக்கு நோய்த் தொற்று உள்ளதா என்பதை இலங்கையின் எப்பாகத்திற்காவது கொண்டு சென்று பரிசோதிக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது, இதனை விமர்சிப்பதோ, ஆர்ப்பாட்டம் செய்வதோ தேவையற்றது எடுத்ததற்கெல்லாம் ஆர்பாட்டங்களும், ஹர்த்தால்கள் என்பதும் வேண்டாத விடயமாகும், “ஆத்திரம் கண்ணை மறைத்திடும்போது அறிவுக்கு வேலை கொடுக்க வேண்டும்”எனவே எடுத்த எடுப்பிலே அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும் குறை கூறுவதைவிடுத்து, கொரோனா நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றது. மேலும் இச்செயற்பாட்டை துரிதப்படுத்த வேண்டும்.

வ.சக்திவேல்

Comments