ஜனாதிபதியின் நிலைப்பாடும் தமிழ் சமூகத்தின் எதிர்காலமும்... | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதியின் நிலைப்பாடும் தமிழ் சமூகத்தின் எதிர்காலமும்...

இது நாட்டின் தலைமைத்துவங்களின் வழிநடத்தலும் நெறிப்படுத்தலும் மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் நாட்டின் வரலாற்றுப்பதிவிலும் எந்தளவு தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றது என்பதை கொரோனா உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கும் காலகட்டமாகும். சுருங்கக்கூறுவதாயின் ஒரு நாடு வல்லரசாக இருப்பினும் ஒரு சாதாரண நாடாக இருப்பினும் அதன் தலைவிதி தலைமைத்துவத்தின் வழிநடத்தலிலேயே தங்கியிருக்கின்றது என்பதையே இத்தொற்று நோய் ஏற்படுத்தியிருக்கும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் பாதிப்புக்களும் மிகத் தெளிவாக தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றது. வசதிகள், வளங்கள், வாய்ப்புகள் எந்தளவிற்கு தம்வசம் இருக்கின்றது என்பதை விட அவை எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதிலேயே ஒரு நாட்டின் தலையெழுத்து தீர்மானிக்கப்படுகின்றது.

பொருளாதார ரீதியிலும் வளங்கள், சனத்தொகை மற்றும் பரப்பளவு ஆகியவற்றிலும் உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாக காட்சிதரும் இலங்கையின் இருப்பும் நற்பெயரும் காலத்திற்கு காலம் இலங்கையை ஆட்சி செய்த தலைவர்களின் திறமைக்கேற்பவே உலகறிய செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கையை ஆட்சி செய்த தூரநோக்கற்ற, அரசியல் சுயலாபத்தை இலக்காகக் கொண்டு செயற்பட்ட தமிழ், சிங்கள அரசியல் தலைமைகளின் தவறான வழிநடத்தல்களால் இந்த நாட்டில் தமிழ், சிங்கள இனமுறுகலுக்கு களம் அமைத்துக் கொடுக்கப்பட்டதோடு, இறுதியில் அது உள்நாட்டு யுத்தமாக உருவெடுத்து நாட்டையும் மக்களையும் மூன்று தசாப்தங்களாக அழிவுப் பாதையில் இட்டுச்செல்லும் ஒரு தொற்று நோயாக மாறியிருந்தது. அதற்கு முடிவு காணாது நாட்டிற்கு விமோசனம் இல்லை என்பது உண்மையாக இருந்தபோதிலும் சுமார் முப்பது வருடங்களாக இலங்கை அரசினால் முடிவிற்கு கொண்டுவர முடியாது திணறிய யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வருவதென்பது இயலாத காரியம் என்றே உலக போர்க்கள நிபுணர்களின் எதிர்வுகூறல்களாக இருந்தது.

இந்தப் பின்னணியில் 2005ஆம் ஆண்டு ஆட்சி பீடமேறிய மகிந்த ராஜபக்‌ஷ அரசு ஆரம்பத்தில் பேச்சு வார்த்தைகளின் மூலம் போர் மூள்வதை தவிர்க்க முயன்றபோதிலும் போரிடுவதன்றி போரை முடிப்பதற்கு வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டதால் வரலாறுகாணாத அசுர வேகத்தில் போரை முன்னெடுத்து இறுதியில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதியன்று வட, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட பிரிவினைவாதத்திற்கு எதிரான போரில் தாம் வெற்றி கண்டதை இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தியது.

அன்றிலிருந்து இன்று வரை சில தரப்பினர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் விளைவிக்கும் வகையில் அந்த யுத்தத்தினை முன்னெடுத்த தலைவர்களும் அவர்களின் கட்டளைகளை செயற்படுத்திய இராணுவத்தினரும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோஷத்தை தொடர்ச்சியாக எழுப்பி வருகின்றனர். அந்தவகையில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சில உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புக்கள், நிறுவனங்கள் ஆகியன யுத்தத்துடன் சம்பந்தப்பட்ட இலங்கை இராணுவ தரப்பை தண்டிப்பதற்கு முயன்று கொண்டிருக்கும் பின்னணியிலேயே, தமிழ் பிரிவினைவாத யுத்தத்திற்கு எதிரான போரினை முன்னெடுப்பதில் அரச தரப்பின் பிரதான சூத்திரதாரியும் அன்றைய பாதுகாப்பு செயலாளரும் இலங்கையின் இன்றைய ஜனாதிபதியுமாகிய கோட்டாபய ராஜபக்‌ஷநாட்டின் அரச தலைவர் என்ற வகையில் கடந்த 19ஆம் திகதி யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவத்தினரை நினைவுகூரும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு,

“நாட்டையும் நாட்டின் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து அனைத்து இலங்கையருக்கும் சமாதானத்தை ஏற்படுத்திக்கொடுத்த எமது படைவீரர்களின் கௌரவத்திற்கும் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்த எந்தவித சக்திக்கும் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. அத்தோடு நாட்டிற்கு அநீதியை விளைவிக்கும் வகையில் செயற்படும் எந்த நிறுவனமாகவோ அமைப்பாகவோ இருப்பினும் அவற்றின் உறுப்புரிமையிலிருந்து நாட்டை விலக்கிக்கொள்ள ஒருபோதும் நான் பின்வாங்கப் போவதில்லை”என மிகத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் வெளிப்படுத்தி இருப்பதோடு, தமது அக்கருத்து திரிபுபடுத்தாத வகையில் உலகை சென்றடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே அந்நிகழ்வில் அக்கருத்தினை ஆங்கில மொழியிலும் எடுத்துரைத்தார்.

யுத்த காலத்தின் போது யுத்தத்தின் பிரதான சூத்திரதாரி என்ற வகையில் அனைத்து வளங்களையும் ஒன்று திரட்டி களமிறக்கி போர்க்களத்தில் ஏற்படும் சாதக, பாதக தன்மைகளை உணர்ந்து தேவைக்கேற்ப வசதிகளை பெற்றுக்கொடுப்பதில் பாதுகாப்பு செயலாளர் என்ற பதவியில் கோட்டாபய ராஜபக்‌ஷமிக நேர்த்தியாக செயற்பட்டமையே இந்த யுத்தத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என கூறும் அப்போதைய 58வது படைப்பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த தற்போதைய இராணுவ தளபதி தமது கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் பின்வரும் நிதர்சனத்தை முன்வைத்திருக்கின்றார்.

“வடக்கில் இறுதி யுத்தம் உக்கிர நிலையை அடைந்திருந்தபோது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் தொடர் அடைமழையையும் சந்தித்திருந்ததால் களத்தில் போராடும் அரச படையினருக்கு நீண்ட நேரமாக மழை நீரில் நனைந்த உடைகளையே தொடர்ச்சியாக அணிந்திருக்க நேர்ந்ததுடன் அது போர் முனையின் சிப்பாய்கள் மத்தியில் மனவலுவையும் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. இதனை பாதுகாப்பு செயலாளருக்கு தெளிவுபடுத்தி ஒருசில தினங்களுக்குள் இராணுவ முகாம்களில் இராணுவத்தினரின் சீருடைகளை சில விநாடிகளுக்குள் உலர்த்திக் கொள்ளக்கூடிய ஹீட்டர்கள் பொருத்தப்பட்ட கொள்கலன்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.”இது பாதுகாப்பு செயலாளர் செயற்பாட்டு ரீதியான தீர்வுகளை உடனுக்குடன் பெற்றுக்கொடுப்பதில் எத்தகைய திறமையை கொண்டிருந்தார் என்பதை உணர்த்துவதாக இராணுவத் தளபதி தெரிவித்திருக்கின்றார்.

அன்று பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்கள் வெளிப்படுத்திய செயற்திறன்மிக்க தகுந்த நபர்களை உரிய பதவிகளில் அமர்த்தி அவர்களது முழுமையான சேவையினை பெறவேண்டும் என்ற நோக்கமே போர் முனையில் படையினரால் கைது செய்யப்பட்டு, சரணடைந்த 12,000இற்கும் அதிகமான தமிழ் போராளிகளுக்கு மிகச் சிறந்த முறையில் புனர்வாழ்வு அளிக்கும் செயற்திட்டம் கைகூட காரணமாக அமைந்ததென அச்சமயம் அந்நடவடிக்கைக்கு பொறுப்பாகவிருந்த பொறுப்பதிகாரிகள் பிற்காலத்தில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்கள்.

மனித நேய நடவடிக்கை என அப்போதைய அரசாங்கத்தினால் பெயரிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட நில விடுவிப்பின் இறுதி கட்டத்தில் இலட்சக்கணக்கான மக்களை போர் முனையில் இருந்து மீட்டெடுப்பது முதல் அவர்களை உரிய விதத்தில் முகாம்களில் தங்க வைப்பது வரையிலான சகல செயற்பாடுகளின் போதும் நாட்டின் முப்படைகளின் தலைவரின் சகோதரர் என்ற வகையில் அப்போதைய அரச தலைவருடன் பாதுகாப்பு செயலாளர் கொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளும் புரிந்துணர்வும் தமக்கு யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மிகுந்த பக்க பலமாக அமைந்திருந்ததாக இறுதி யுத்தத்தின் இராணுவ தளபதி யுத்தத்தின் முடிவில் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார்.

பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் கோட்டாபய ராஜபக்‌ஷவெளிப்படுத்திய திறமையின் அடிப்படையிலேயே அப்போதைய அரச தலைவரினால் அவரிடம் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பதவியும் கையளிக்கப்பட்டது. அதற்கமைய அவரின் வழிகாட்டலின் கீழ் குறிப்பாக கொழும்பு நகரில் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்ட வரலாறு காணாத துரித அபிவிருத்தி செயற்பாடுகளால் உலகத் தரப்படுத்தலில் கொழும்பு நகரம் மிகத் துரிதமாக அபிவிருத்தியடைந்துவரும் சுற்றுலா பயணிகளின் மனங்கவர் தரிப்பிடமாக மாறியிருப்பதாக சர்வதேச கணிப்பீடுகள் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்டன.

அந்தவகையில் தம்மிடம் கையளிக்கப்பட்ட முக்கியமான இரு பொறுப்புக்களை மிக நேர்த்தியாக நிறைவேற்றியவர் என்ற நற்பெயருடன் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி அதில் பிரம்மாண்ட வெற்றியை ஈட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தமது பதவிக்காலத்தின் ஆரம்ப கட்டத்திலேயே உலகளாவிய ரீதியில் பரவிவரும் உயிர்க்கொல்லி தொற்றுநோயான கொரோனாவிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய பாரிய சவாலை எதிர்நோக்க நேர்ந்தது.

அதன்போது உலகில் ஓரிரு நாடுகளைத் தவிர வேறு எந்தவொரு நாட்டிலும் கையாளப்படாத தனக்கே உரித்தான திட்டத்தினை வகுத்து புலனாய்வு பிரிவினரின் முழுமையான பங்களிப்பில் ஒருபுறத்தில் கொரோனா தொற்று நோயுடன் தொடர்புபட்டவர்களின் வலையமைப்பினை இனங்காணுதலையும் அவ்வாறு இனங்காணப்பட்டோரை முழுமையான அரச செலவில் படையினரைக் கொண்டு துரிதமாக ஸ்தா பிக்கப்பட்ட தனிமைப்படுத்தும் நிலையங்களில் தனிமைப்படுத்தி பராமரிக்கும் திட்டத்தையும் ஆரம்ப காலத்தில் அறியாமையினால் மக்கள் வெளிப்படுத்திய எதிர்ப்பை பொருட்படுத்தாது செயற்படுத்திய அதேவேளை, மறுபுறத்தில் நாடுதழுவிய ரீதியில் சகல வைத்தியசாலைகளிலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விசேட சிகிச்சை அளிப்பதன் மூலம் உலக சுகாதார அமைப்பு பாராட்டும் வகையிலும் சர்வதேச ஊடகங்கள் கொரோனா தடுப்பு செயற்திட்டத்தை மிக நேர்த்தியாக முன்னெடுத்துவரும் ஒரு நாடாக இலங்கையை இனங்காணும் வகையிலும் ஜனாதிபதி என்றவகையில் தமக்கு முகங்கொடுக்க நேர்ந்த முதலாவது முக்கிய சவாலுக்கு நேர்த்தியாக முகங்கொடுத்து வருகின்றார்.

ஆகையால் பாதுகாப்பு செயலாளர் முதல் ஜனாதிபதி பதவி வரையிலான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின்  பயணமானது அவரது தெளிவான பயணப்பாதையை வெளிப்படுத்தி நிற்பதோடு, செயற்பாட்டு ரீதியிலான தீர்வுகளையே அவர் வலியுறுத்தி நிற்கின்றார் என்பதால், தமிழ் சமூகமானது அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை இவ்வரச தலைமைத்துவத்தின் கீழ் சாத்தியப்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கமைய தமிழ் தலைமைகள் பிரச்சினைகளுக்கான அணுகுமுறைகளை காலத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள முனைவதே தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளின் தீர்வுக்கான வழியை வகுக்கும்.

ரவி ரத்னவேல்

Comments