இருப்பதைப் பலப்படுத்திக்கொண்டு எதிர்காலத்தை வளப்படுத்துவோம்! | தினகரன் வாரமஞ்சரி

இருப்பதைப் பலப்படுத்திக்கொண்டு எதிர்காலத்தை வளப்படுத்துவோம்!

மனிதர்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் எல்லா வழிகளிலும் புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது.

மனித வாழ்வியல் போக்குகள், அரசியல் செல்நெறிகள், சுதந்திரப் போராட்டங்கள், மனித உரிமைகள், பொருளாதார வளர்ச்சிப் பாதைகள், மொத்த தேசிய உற்பத்தி எனப் பல்வேறு தளங்களிலும் சடுதியான மாற்றத்தைக் கொண்டுவரப்போகிறது இந்தக் கொரோனா.

இவற்றில் இலங்கையும் விதிவிலக்காக இருக்கப்போவதில்லை. ஆனால், இதனை விளங்கிக்கொள்வதில்தான் நமக்குள் பிரச்சினையாகவுள்ளது. முன்னே சந்திக்கப்போகும் பொருளாதார மந்த நிலைக்கு எவ்வாறு முகங்கொடுக்கப்போகிறோம் என்பதைவிடவும், இந்தச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி அரசியலில் எப்படி முந்திக்கொள்ளப்போகிறோம் என்று சிலர் கணக்குப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கணக்கு கடந்த காலத்தைப்போலவே தப்புக்கணக்காகப்போகிறது என்பது மட்டும் உண்மை.

அரசியல் கட்சிகளுக்குள் ஒரு நிலையான வலுவான தலைமைத்துவக் குழுவைக் கட்டியெழுப்ப முடியாத நிலையில் இன்று ஒவ்வோர் அரசியல் கட்சியும் திண்டாடிக்கொண்டிருக்கிறது. கட்சியில் என்னைவிடக் கற்றவன் யாரும் கிடையாது என்ற மமதையால் சீரழியும் நிலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முதல், தமிழ் முற்போக்கு கூட்டணிவரை நீளுகிறது. பெரிய பெரிய கட்சிகளுக்குள் பெரிய பெரிய பிரச்சினைகள் ஒருபுறம். அவர்களைப் பொறுத்தவரை, கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை எப்படியாவது கூட்டிவிடுவது, அதன் மூலம் இழக்கப்பட்ட ஓய்வூதியத்திற்கு வழிபிறக்குமா? ஜனாதிபதியின் காலைப் பிடித்து இழுத்துவிட முடியுமா? என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

நல்லவேளை, தற்போது திருத்தியமைக்கப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே கட்சியினராக இருக்கிறார்கள். இல்லையேல், மற்றோர் அரசியலமைப்பு நெருக்கடி, ஆயிரக்கணக்கானோரை கொரோனாவிற்கு இரையாக்கியிருக்கும்! இது நாடளாவிய ரீதியில் ஒலிக்கும் சிறிமான் பொதுசனத்தின் குரல்.

அருகில் இருந்தும் தொடப்பயந்தேனே என்று என்.எஸ்.கிருஸ்ணன் சொன்னதைப்போல, அண்டை நாட்டிலிருக்கும் சுமார் இரண்டாயிரம்பேரை மீட்பதற்கு ஜூன் வரை காத்திருக்கும்போது எத்தனை இலங்கையர்கள் வெளிநாடுகளிலிருந்து அவசர அவசரமாக விமானத்தின் மூலம் கொண்டுவரப்பட்டார்கள். இதில் வடநாட்டான், தென்னாட்டான் என்று யாரும் சிந்திக்கவில்லை. ஜனாதிபதியின் நேரடி முடிவு, செயல் துணிவு.  இவைதான் அதனை நிறைவேற்றியது.

இந்தப் பின்னணியில் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்கிறார்கள். மறுபுறம் தேர்தலை நடத்தியே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நின்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, தேர்தலை நடத்த முடியாது என்று சொல்கிறார். ஆனால், இனித் தேர்தலை நடத்துவதா, இல்லையா என்பதை தீர்மானிக்கப்போவது ஆணைக்குழுவின் தலைவராக இருக்கமாட்டார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க, முடிவெடுத்தாலொழிய மகிந்த தேசப்பிரியவால் முடியாது.

ஏனெனில், நாடும் காபந்து அரசாங்கமும் இப்போது ஜனாதிபதியின் தலைமையில் இயங்குகிறது. ஜனாதிபதியின் கீழ்தான் அரச நிர்வாகப் பொறிமுறை இயங்குகிறது. சுயாதீன தேர்தல் ஆணைக்குழு என்பது அரசின் கீழுள்ள ஒரு நிர்வாகப் பொறிமுறையேயன்றி, அரசின் நிர்வாகத்தைத் தீர்மானிக்கும் தலைமைப்பீடமன்று. கொரோனா முற்றாக நீங்கிவிட்டது, இனித் தேர்தலை நடத்தலாம் என்று மகிந்த தேசப்பிரியவுக்கு அனில் ஜாசிங்க சொல்ல வேண்டும். இதுதான் இன்றைய நிலை. இந்த நிலையைத் தெரிந்தும் தெரியாதவர்களாகச் சில அரசியல்வாதிகள் சுயநலமாக நடந்துகொள்வதுதான் வியப்பாக உள்ளது.

நெருக்கடியான நிலைபற்றிப் பேசுவதற்குப் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டாலும், நாட்டைச் சீரழிப்பதற்குச் சட்ட புத்தகத்தைத் தூசு தட்டியவர்கள், இப்போது மட்டும் ஏன் அவ்வாறு செய்கிறார்கள் இல்லை என்று தெரியவில்லை.

ஏனெனில், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், பாராளுமன்ற அமர்வுகள் தொடர்பான 70 ஆவது சரத்தின் 7ஆவது உப பிரிவின்படி, கலைக்கப்பட்ட ஒரு பாராளுமன்றத்தை, நாட்டில் நெருக்கடியான ஒரு சூழ்நிலை காணப்படுவதாக ஜனாதிபதி திருப்தியடைந்தால் மீண்டும் கூட்டலாம் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அப்படியென்றால், உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், கொரோனா ஒழிப்பில் இலங்கை திருப்தியான மட்டத்தில் அல்லவா இருக்கிறது? நெருக்கடியான நிலை இருப்பதால் யார்தான் திருப்திகொள்வார்கள்? கடந்த முறை எப்படி ஒரு சொல்லாடலை வைத்துக்கொண்டு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவறிழைத்துவிட்டார் என்று சொல்ல முடிந்ததோ, அவ்வாறான ஒரு சொல்லாடல் பாராளுமன்றத்தைக் கூட்டாமல் இருப்பதற்கும் வழிவகை செய்திருக்கிறது என்பதே யதார்த்தம்.

எனவே, நாட்டில் உள்ள தற்போதைய நிலவரத்தையும் எதிர்கால பொருளாதார மந்த நிலைமையையும் கருத்திற்கொண்டு நாட்டை மீட்டெடுப்பதே இப்போதுள்ள பெரும் சவால் என்பது அறிஞர் பெருமக்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.

ஏனெனில், கொரோனா வைரஸ் ஏற்படுவதற்கு முன்பிருந்த உலகமோ உலக நாடுகளோ இப்போது இல்லை. உலகமயம், திறந்த பொருளாதாரம், உலகம் ஒரு கிராமம் என்ற பொருளாதாரக் கட்டமைப்பு சிதைந்து பல மாதங்களாகிவிட்டன. இனிவரும் காலத்தில் உலகின் ஒவ்வொரு நாடும் தத்தம் அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் கவனம் செலுத்த வேண்டியிருக்குமே தவிர, உலகத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கு அவகாசம் இருக்காது.

சுருக்கமாகச் சொன்னால், உலக நாடுகளின் பரிபூரணமான ஒத்துழைப்புகளைப் பேணிக்கொண்டு தனித்துவக் கொள்கையுடன் முன்னேறி வரும் காலகட்டமாகவே அடுத்து வரும் காலப்பகுதி நமக்கு அமையப்போகிறது. உலகப் பொருளாதாரத்தின் மையப்பகுதி சீனாவாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் பல்வேறு உலக நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. ஆனால், உலகத்தைப் பற்றி அச்சங்கொள்வதற்கு முதல் உண்ணாட்டுப் பொருளாதாரத்தினை வளர்ச்சி நோக்கிக் கொண்டு செல்லும் சவாலுக்கே நாம் அனைவரும் ஒற்றுமையாக முகங்கொடுத்தாக வேண்டும்.

எனவேதான், அரசியல், கட்சி பேதங்கள், ஆட்சியைப் பிடித்தல், வெளிநாட்டிலிந்து வந்த பணத்திற்கெல்லாம் கணக்கு வழக்கு என்னவானது என்றெல்லாம் சிந்திப்பதை விடுத்து, நாட்டிற்குக் கிடைத்திருக்கும் உறுதியான தலைமைத்துவத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

இதுவிடயத்தில் நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள், அரச நிர்வாகிகள், பணியாளர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் அரசியல் கருத்தியல் பேதங்களுக்கு அப்பால், நாட்டைப் பற்றியும் நாட்டின் மக்கள் பற்றியும் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

ஏனெனில், நம் முன்னே இருப்பது தேர்தல் போட்டி மட்டுமல்ல, எதிர்காலச் சந்ததியினரின் கல்விச் செயற்பாடுகள், வீழ்ச்சியுற்றுள்ள வர்த்தகச் செயற்பாடுகள், தனி மனித வாழ்வாதாரம், சமுதாயக் கட்டுமானங்கள், விவசாயம் பொருளாதாரம், செயற்கை மதிநுட்பம், டிஜிற்றல் தொழில்நுட்பம்,மருத்துவ மேம்பாடு, சுகாதாரத்துறை கட்டமைப்பு, பொது நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம், ஊடகத்துறை எனப் பல்வேறு துறைகளைப் பற்றியும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

கொரோனா ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைப் பட்டியலிட்டால், பல ஆசிரிய தலையங்கங்களைத் தீட்டிவிடலாம். அதனால்தான், தற்போதைய சூழலில் அரசியல் சுயலாபங்களைக் கைவிட்டுவிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தை மேலும் பலப்படுத்தி எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்வதே இலங்கையர்களுக்கு தற்போதிருக்கும் ஒரே வழி!

Comments