கொரோனவின் கோரப்பிடியிலிருந்து உலகம் மீள்வதற்கான அறிகுறிகள்! | தினகரன் வாரமஞ்சரி

கொரோனவின் கோரப்பிடியிலிருந்து உலகம் மீள்வதற்கான அறிகுறிகள்!

உலகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தத் தொடங்கி அரை வருடம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனாலும் இன்னும்தான் உலகம் அந்த அச்சுறுத்தலில் இருந்து மீள முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றது. இக்கட்டுரை தயாராகும் வேளையில் உலக சனத்தொகையில் மொத்தமாக மூன்றேகால்  இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிரைப் பறித்து விட்டது கொரோனா!

அதேசமயம் இரு தினங்களுக்கு முன்னர் வெளியான உத்தியோகபூர்வ தகவலின்படி உலகமெங்கும் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1 இலட்சத்துக்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் தாக்கி உள்ளமை தெரியவந்துள்ளது. அதாவது 24 மணி நேரத்தில் ஒரு இலட்சத்து 1,400-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இத்தகவலை வைத்துப் பார்க்கின்ற போது கொரோனாவின் 2-வது அலை தாக்கும் அபாயம் உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதுவரை இல்லாத வகையில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இது என உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது.

சீனாவில் வுகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ம் திகதி தோன்றிய கொரோனா வைரஸ்இ இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் 100 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி விட்டது.

ஊரடங்கு, வீட்டுக்குள் பொதுமக்கள் முடக்கம், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை   அடிக்கடி தொற்று நீக்குதல் என பல கட்டுப்பாட்டு வழிகளை கையாண்டும் கொரோனா பரவுவது குறையாமல் உலகமே திண்டாடிக் கொண்டிருக்கிறது.

கொரோனாவினால் உலகமெங்கும் பாதிக்கப்பட்டோர் தொகை 52 இலட்சத்தையும் தாண்டி விட்டது.

3 இலட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி விட்டனர். உலகம் தனது நிலையில் இருந்து வீழ்ந்து கிடக்கிறது. இது சர்வதேசமெங்கும் ஏற்பட்டுள்ள அதிர்வு.

உலகமெங்கும் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 49 இலட்சத்தைக் கடந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறினாலும், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகம் என்றும் குறைவான பரிசோதனைகளே உலகமெங்கும் நடந்து வருவதாகவும், பல தொற்றுகள் பற்றிய விபரங்கள் வெளியில் வருவதில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

உலகளவில் அதிக பாதிப்பைச் சந்தித்து வருகிற நாடாக அமெரிக்காதான் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த நிலையில் ரஷ்யா, பிரேசில், இங்கிலாந்து ஆகிய நாடுகள்   நிற்கின்றன.

உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அதனோம் கூறும் போது “கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வருவதற்கு இன்னும் நீண்ட தூரம் சென்றாக வேண்டும்” என்று எச்சரிக்கிறார். 

இதற்கிடையே ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மெலிடா வுஜ்னோவிக் கூறுகையில் “கொரோனா வைரஸ் தொற்று இன்னும் அச்சுறுத்தலாகத்தான் தொடர்கிறது. இதை மக்கள் புரிந்து கொள்வது அவசியம். கொரோனா வைரஸ் தொற்று முதல்முறையாக ஏற்பட்ட எல்லா இடங்களிலும் 2-வது அலையாக வந்து தாக்கும் வாய்ப்பு இருக்கக் கூடும்” என்று எச்சரிக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் கடந்த வருடம் டிசம்பர் 1ம் திகதி தோன்றினாலும் கூட 100 நாட்களுக்குப் பின்னர்தான் உலக
சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்றை உலகளாவிய தொற்றுநோயாக கடந்த மார்ச் 11-ம் திகதி அறிவித்தது. இந்த அறிவிப்பு தாமதம் என்பது உலக நாடுகளின் கருத்தாக இருக்கிறது. அமெரிக்காவின் குற்றச்சாட்டும் இதுதான். சீனா கொரோனாவை உலகுக்கு மறைத்து விட்டது என்பதுவும் உலக நாடுகள் பலவற்றின் குற்றச்சாட்டு ஆகும்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 52 இலட்சமாக உள்ள போதிலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 20.78 இலட்சத்தைக் கடந்துள்ளதென்பது நிம்மதி தருகின்ற ஒரு செய்தியாகும்.

ஆனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 46 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 3 இலட்சத்து 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளை நோக்கும் போது அமெரிக்காவில் தாக்கம் சற்றுத் தணிந்து வருகின்ற போதிலும் ரஷ்யாவில் கொரோனாவின் தாக்கம் வேகமான உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் உருவான   சீனாவில் இப்போது வேகம் குறைந்து விட்டது. நாளுக்கு நாள் அங்கு இந்த வைரஸ் வீரியம் குறைந்து வருகிறது. அங்கு மக்கள் பாதிக்கப்படும் சதவீதம் பெருமளவு குறைந்து விட்டது. இப்போது ரஷ்யாவில்தான் தீவிர நிலைமை உள்ளது.

உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடென்றால் அது அமெரிக்காதான். அங்கு 95,000 பேருக்கு மேல் உயிரிழந்து விட்டனர். இரு தினங்களுக்கு முன்னர் ஒரே நாளில் மட்டும் 1552 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ரஷ்யாவில் இதுவரை உயிரிழப்புகள் 2837 ஆகும்.

ஸ்பெயின் நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை சுமார் 28,000 பேர் உயிரிழந்துள்ளனர். 4வது இடத்தில் உள்ள பிரேசிலில் சுமார் 18இ000 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் 35,500 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர்.

உலக உயிரிழப்புகள் இவ்வாறிருக்கையில் கொரோனா விடயத்தில் சீனாவுக்கு எதிராக உலகின் பல நாடுகள் அணிதிரண்டு நிற்கின்றன. ஆரம்பத்தில் அமெரிக்கா மட்டுமே சீனாவை எதிர்த்தது. இன்று பல நாடுகள் எதிர்க்கத் தொடங்கி விட்டன.

கொரோனா வைரஸ் சீனாவில் எப்படித் தொடங்கியது, எப்படிப்  பரவியது என்பது குறித்து 30 நாட்களில் சுதந்திரமான விசாரணையை நடத்தாவிட்டால் உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கும் நிதி முழுமையாக முடக்கப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு டிசம்பரில் தெரியவந்த போதிலும் ஜனவரி 22ம் திகதிதான் சீனா அதிகாரபூர்வமாக எச்சரிக்கை செய்தது. அப்போதுதான் உலக நாடுகளுக்கு உண்மை தெரியவந்தது. ஆனால் அதற்குள் கொரோனா பரவிய வுகான் நகரில் இருந்து இலட்சக்கணக்கானோர் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று விட்டனர். இதனால் அவர்கள் மூலம் படிப்படியாக கொரோனா பரவ ஆரம்பித்தது. ஜனவரி இறுதியில் அமெரிக்கா முதன்முதலாக கொரோனாவைச் சந்தித்தது.

அடுத்த ஒரு மாதத்தில் வேகமாக அதிகரிக்க ஆரம்பித்தது. மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் அசுர வேகத்தில் வளர்ந்தது. இன்றைய நிலைவரப்படி அமெரிக்காவில் தினமும் 1000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பலியாகி வருகின்றனர். 15 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக பாதிக்கப்படுகிறார்கள். கொரோனாவால் அமெரிக்காவில் இதுவரை சுமார் 93 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை சந்திக்காத ஒரு பேரழிவை அமெரிக்கா கொரோனாவால் சந்தித்துள்ளது.

சீனாவின் செயலால் உலகுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு விட்டதாக ட்ரம்ப் கூறி வருகிறார். இதனிடையே உலக சுகாதார அமைப்பானது சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், அதன் கைப்பாவையாக செயல்படுவதாகவும் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். உலக சுகாதார அமைப்புக்கு ஆண்டு தோறும் வழங்கி வந்த 50 கோடி டொலர் நிதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், கடந்த 18ம் திகதி உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் ஜெனரல் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியசுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் 4 பக்கம் அளவிலான கடிதம் எழுதி இருக்கிறார்.

"நீங்களும் உங்கள் அமைப்பும் சரியாக செயல்படாத காரணத்தால் உலகமானது மிகப் பெரிய இழப்பை சந்தித்து வருகிறது. இதற்கான ஒரே வழி சீனாவிடம் இருந்து விலகி சுதந்திரமாக செயற்பட வேண்டும். இதற்காக சுகாதார அமைப்பில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் குறித்து ஏற்கனவே ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. நேரத்தை வீணடிக்க எங்களுக்கு விருப்பமில்லை. உலக சுகாதார அமைப்பானது அடுத்த 30 நாட்களில் சீனாவிடம் இருந்து விலகி கொரோனா வைரஸ் தொற்று விவகாரம் குறித்து சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும். இல்லையென்றால் சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதி நிரந்தரமாக முடக்கப்படும். அத்துடன் உலக சுகாதார அமைப்பில் உறுப்பினராக இருப்பதில் இருந்து அமெரிக்கா வெளியேறும்.”

இவ்வாறு ட்ரம்ப் எழுதியுள்ளார்.

இதனிடையே உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரஸ், உலக நாடுகளின் கோரிக்கைக்கிணங்க பாரபட்சமற்ற ஆய்வு மற்றும் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். சீனாவும் கொரோனா வைரஸ் எப்படி தொடங்கியது மற்றும் பரவியது என்பது குறித்து விசாரணைக்கு ஒப்புக் கொண்டுள்ளது. உலக சுகாதார கூட்டத்தில் அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை கொண்டு வந்த தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 116 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கொரோனா விடயத்தில் உலக நாடுகள் இரு துருவமாகி நிற்பது இங்கே புலப்படுகின்றது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க உலகம் முழுவதும் 213 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனாலும் கொரோனாவால் ஏற்படும் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. 

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் 47 தடுப்பு மருந்துகளை ரஷ்யா உருவாக்கி வருவதாக அந்நாட்டு துணைப் பிரதமர் டட்யானா கோலிகோவா தெரிவித்தார்.அவற்றில் சில தடுப்பூசிகள் நல்ல விளைவை தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 5 தடுப்பு மருந்துகள் மருத்துவ ஆய்வில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

சில நாடுகளில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. 188 நாடுகள் கொரோனா பாதிப்பால் கடுமையான சூழலை சந்த்தித்து வரும் நிலையில் சில நாடுகளில் கொரோனா தொற்று அறவே இல்லை.   நெதர்லாந்து,  இந்தோனேசிய தீவுகள், ஆஸி. பகுதிகளில் கொரோனா தொற்று மிகக் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கியக் காரணம் மேற்கண்ட நாடுகள் கொரோனா பரவத் தொடங்கிய 2019ம் ஆண்டு டிசம்பர் மாதமே விழித்துக் கொண்டதுதான். மேலும் சமூக விலகலை பொதுமக்கள் மதித்து நடந்து கொண்டதால் கொரோனா பாதிப்பு முற்றிலும் விலகியது. 

கொரோனாவின் பக்கவிளைவுகளையும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. கொரோனாவைச் சமாளிக்கத் தேவையான மருத்துவ வசதிகள் ஏழை நாடுகளிடம் இல்லை. உயிரிழப்புகளால் ஏழை நாடுகளில் உள்ள ஏராளமான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளன.

ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏராளமான மக்கள் பசியால் வாடுவது அதிகரித்துள்ளது. இந்தப் பெருந்தொற்றால் பல பத்தாண்டுகள் கண்டிராத ஏழ்மை மற்றும் ஊட்டச்சத்து இன்மை பிரச்சினைகளை உலகம் சந்திக்கப் போகிறது என்பது உண்மை. 

கொரோனா வைரஸ் வெடிப்பின் மையமான சீன நகரமான வுஹானில் சிங்கம், புலி, மயில், பாம்பு, வௌவால் மற்றும் எறும்புதிண்ணி உள்ளிட்ட வன விலங்குகளின் நுகர்வு தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் வௌவால்களில் இருந்தே தோன்றியதாவும், இது வுகானின்  சந்தையில் இருந்தே உலகிற்கு பரவியது என்றும் நம்பப்படுகிறது. சீனா கண்டபடி காட்டு விலங்குகளை உண்பதாலயே வைரஸ் தொற்று நோய்கள் பரவுவதாக உலகின் பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று-நோய்கள் நிபுணர் டொக்டர் அந்தோனி பாசி வுகான் சந்தையில் வனவிலங்குகள் இறைச்சி வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து வன விலங்குகளின் இனப்பெருக்கம், வேட்டை மற்றும் நுகர்வு ஆகியவற்றை தடை செய்து வுஹான் மாநகராட்சி புதிய கொள்கை நடைமுறைக்கு வந்துள்ளது. சிங்கம், புலி, மயில் மற்றும் எறும்புதின்னி உட்பட சில வன விலங்குகளை இறைச்சி சந்தையில் இனி விற்கக் கூடாது. மேலும் இந்த உணவுகளை உண்ணவும் வேட்டையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வனவிலங்குகளை உண்பதைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வௌவால் மற்றும் பாம்பு உள்ளிட்ட பிற உயிரினங்களும் உண்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளன.

இங்கு நல்லதொரு செய்தியையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தம். ஐரோப்பியநாடுகளில் தற்போது நோய் தொற்று குறைகிறது. ஆனால் பலி எண்ணிக்கைதான் குறைந்தபாடாக இல்லை.

ஐரோப்பிய நாடுகளில் தொற்று வேகமாக குறைந்து வருகிறது. விரைவில் இயல்புநிலைக்கு திரும்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் அமெரிக்கா,ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே புதிய தொற்று வீதம் நாள்தோறும் அதிகமாக உள்ளது. உயிரிழப்பு வீதம் அமெரிக்கா மற்றும் பிரேசிலில் அதிகமாக உள்ளது. மற்ற நாடுகளில் மிகமிக குறைவாகவே உள்ளது.

ஒட்டுமொத்தமாக நோக்குகையில் உலகின் பல்வேறு நாடுகளில் உயிரிழப்பு வேகமாக குறைந்து வருகிறது. இந்த நாடுகளில் பாதிப்பும் குறைவாகவே உள்ளது. விரைவில் கொரோனா தொற்றில் இருந்து ஐரோப்பிய நாடுகள் மட்டுமன்றி மொத்த உலகமும் மீண்டும் வரும் என்ற நம்பிக்கைகள் படிப்படியாக உருவாகி வருகின்றன.

Comments