எதிரணியின் வகிபாகத்தை ஏற்றுள்ள தேர்தல் ஆணைக்குழு | தினகரன் வாரமஞ்சரி

எதிரணியின் வகிபாகத்தை ஏற்றுள்ள தேர்தல் ஆணைக்குழு

தற்போதைய  அரசியல் சூழ் நிலையில் எதிர்க்கட்சிகளின்  வகிபாகத்தை  தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தனது கையில் எடுத்துள்ளார் என்று கலவான தேர்தல் தொகுதியின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜானக்க வக்கும்புற குற்றம்சாட்டினார்.

பொதுத்தேர்தலை ஒத்திவைக்கும் பின்னணியில், எதிர்க்ட்சிகளின்;, அரசியல் நோக்கத்தை ஆணைக்குழுவின் தலைவர் நிறைவேற்றி வருகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரத்தினபுரி பட்டுகெதரவிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட காரியாலயத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இக்குற்றச்சாட்டை அவர் தெரிவித்தார்.

சபரகமுவ மாகாண முன்னாள் அமைச்சர் ரஞ்சித் பண்டார உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

கடந்த காலங்களில் அதாவது மார்ச் மாதம் 19ஆம் திகதி பொதுத்தேர்தலின் வேட்புமனு தாக்கலின் பின்னர் 5வாரங்களில் தேர்தலை நடாத்த தம்மால் முடியும் என்று தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தற்போது 2மாதங்கள் கடந்த நிலையில் கூடத் தேர்தலை நடாத்த முடியாது என்று கூறுவதன் பின்னனி என்ன?

கொரோனா வைரஸ் அச்சத்தை தொடர்ந்து தேர்தல் திணைக்கள ஆணைக்குழு தேர்தலை நடாத்த முடியுமென்று கூறி ஜூன் மாதம் 20ஆம் திகதிக்கு அதனை ஒத்தி வைத்தது. எனினும், தற்போது தேர்தலை நடாத்த முடியாதென்று நீதிமன்றில் கூறிவருகின்றது.

அன்றே இதனைக்கூறியிருந்தால் இன்று எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்திற்குப் போயிருக்க மாட்டார்கள். தேர்தல் ஆணக்குழு சிறுப்பிள்ளைத்தனமாக பொதுத்தேர்தல் குறித்து தினம் தினம் வெவ்வேறு கருத்துக்களை கூறிவருகின்றது.

தேர்தல் ஆணைக்குழுவின் இந்த செயற்பாடானது எதிர்க்கட்சிகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதாகவே கருதவேண்டியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட சுதந்திர ஆணைக்குழுக்கள் பல சுயாதீனமாக செயற்படுவதில்லை. குறிப்பாக தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழு என்பன தன்னிச்சையாக செயற்படுவதாக கருதுகின்றேன்.

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட நாட்டிலுள்ள 74இலட்ச குடும்பங்களுக்குத் தலா 5000ரூபாய் நிதி வழங்கப்படுகின்றது. தற்போது இரண்டாம் கட்ட நிதியும் வழங்கப்பட்டு வருகின்றது. அடுத்த மாதமும் வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதனை வழங்க வேண்டாமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தலையும் நடாத்த முடியாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் வழங்கக்கூடாது என்று கூறுவதன் நோக்கம் என்னவென்று தெளிவாக தெரிகின்றது. எதிர்க்கட்சிக்காரர்களின் நோக்கத்தை நிறைவேற்றவே தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் அமைகின்றன என்றும் ஜானக்க வக்கும்புற மேலும் குற்றஞ்சாட்டினார்.

இரத்தினபுரி தினகரன் நிருபர்

Comments