றிஸ்வானைக் கொச்சைப்படுத்தாதீர்கள் ! | தினகரன் வாரமஞ்சரி

றிஸ்வானைக் கொச்சைப்படுத்தாதீர்கள் !

“என்ன சளியா? “

 “சேச்சே  எனக்கா? இண்டைக்குக் காலைல தலை முழுகினேன்..அதான் லைற்றா மூக்கு ஒழுகுது. வேறொன்றும் இல்லையே..என்கிறார்கள்.

முன்பெல்லாம் அலுவலகத்தில் அவசர விடுமுறை எடுப்பதற்குக் கை கொடுத்ததே இந்தச் சளியும் முக்கு ஒழுகலும்தான். இப்பவெல்லாம், யாருக்குமே சளி, தும்மல், இருமல், காய்ச்சல், தலையிடி இப்படி எந்த வருத்தமும் வருவதில்லை. வந்தாலும் சொல்வதில்லை. இப்ப வருத்தம், நோய் என்றால், கொரோனா மட்டுந்தான் என்றாகியிருக்கிறது.

மக்கள் எல்லோரும் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகச் சரியான சுகதேகியாக இருக்கிறார்கள் என்கிறார் நண்பர்.

மருத்துவரிடம் நோற் புத்தகம் போட்டுப் பரிசோதனை நடத்தி வந்தவர்கள் எல்லோரும் அதனை மறந்துவிட்டு நிம்மதியாக உறங்குகிறார்கள். யாருக்கும் நெஞ்சு வருத்தம் வருவதில்லை. மாத்திரைகளுக்கான தேவையும் இருப்பதில்லை. சாதாரண உடம்பு அசதி  என்றால்கூடப் படுத்துக்கொள்ளும் புண்ணியவான்கள், பாவம், வந்ததும் வந்தது கொரோனா அச்சம், இப்ப யாருமே உடல் நிலை சரியில்லை என்று சும்மாவேனும் உறங்குவதில்லை, பாவம் என்கிறார் நண்பர். இது முற்றிலும் மெய்யான கதை!

இன்னொரு கதை, இப்பவெல்லாம் வைத்தியசாலைகளில் சனத்தைக் காணவில்லை என்பதும் உண்மை. இஃது எல்லாவற்றுக்கும்  காரணம், சும்மா சளி, காய்ச்சல் என்று சென்றால்கூடக் கொரோனா என்று சொல்லிவிடுவார்கள் என்ற அச்சம்! இந்தப் பீதி நீடித்தால்,மக்கள் மனத்தளவில் சுகம்பெற்று என்றும் நலமாக வாழ்வார்கள் என்பது தனது திடமான நம்பிக்கை என்கிறார் அருமை நண்பர்.

அவரது நம்பிக்கை உண்மையானதுதான். ஏனென்றால், மனிதனுக்கு நோய் வர முதல் காரணம் மனம்தான். தனக்குச் சுகமில்லை என்று அவன் நினைக்கின்றானோ, அப்போதுதான் அவனுக்கு நோய் மனநிலை தொற்றிக்கொள்கிறது. அதனால்தான் நோய் என்று வைத்தியசாலைக்குச் செல்பவர்களுக்கு முதலில் அதுவும் 75 சதவீதம், பிளேஸ்போ சிகிச்சை அளிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

அதாவது, ஒரு சடத்தன்மையான மாத்திரையை நோயாளிக்குக் கொடுத்து, அதனைப்பற்றிய உண்மையைக் கூறாது, அந்த மாத்திரையை உட்கொள்வதால், அவரது நோய் குணமாகும் எனக் கூறுதலாகும். இவை எவ்வித மருத்துவப் பண்பும் இல்லாத ஒரு பொருளாகவோ அல்லது குறிப்பிட்ட நோய்க்கான மருந்தாகவோ இருக்காமல் போனாலும், இதைத் தரும் போது நோயாளிகள் ஏதோ ஒரு வகையில் மனநிறைவுற்று அவரிடம் உளவியல் மாற்றம் ஏற்பட்டு அது அவரின் உடலிலும் மாற்றங்களை செய்வது அறியப்பட்டுள்ளது. அந்த நோயாளியும் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருந்து, அதனை நோய் தீர்க்கும் இயல்புடைய மாத்திரைதான் என முற்றாக நம்பும்போது, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதாக உணருவார். இதனை 'மருத்துப்போலித் தாக்கம்' அல்லர் பிளாஸ்போ சிகிச்சை என்பார்கள் என்றாலும் இதுபற்றிய மாறுபட்ட கருத்துகளும் இல்லாமல் இல்லை. இருப்பினும் நோய்க்கு மனமே அடிப்படை என்பதை விளங்கிக்கொள்வதற்கு இது போதுமான விளக்கமாக இருக்கும் என நினைக்கின்றேன். மருத்துவர்கள் இதைப்படித்தால், மேலதிகமாக விளக்கட்டும்.

அதுசரி, இந்தக் கொரோனா மனிதனை மருத்துவ ரீதியாகவும் மனத்துவ ரீதியாகவும் எவ்வளவோ மாற்றித்தான் இருக்கிறது. ஆனால், அவனை மானுட ரீதியாகச் சிந்திக்கச் செய்திருக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

ஏன் இப்படிச் சொல்கிறாய்? என்று நீங்கள் கேட்பதும் புரிகிறது!

பிறகெப்படி சொல்வது?

தலவாக்கலையில் ஒரு தமிழ்ப் பிள்ளை ஆற்றில் வீழ்ந்த சாகப்போனாவாம், அவளை ஒரு முஸ்லிம் பெடியன் காப்பாற்றிவிட்டுச் செத்துப் போனானாம்.. என்று பேஸ்புக்கில் எழுதுகிறார்களே! இதனை என்னவென்று சொல்வது? மனிதனின் மனம் மாறியிருக்கிறது என்று சொல்ல முடியுமா?

தமிழ்ப் பிள்ளையைக் காப்பாற்றிய முஸ்லிம் இளைஞர் என்று சொல்வதே இனவாதச் சிந்தனை என்கிறேன் நான். ஏன் மனிதர்களுக்குப் புத்தி இன்னும் இப்படி பேதலித்துக்கிடக்கிறது?

இவர்கள் சொல்வதைப் பார்த்தால், ஒரு தமிழ்ப்பிள்ளையை ஒரு முஸ்லிம் இளைஞன் காப்பாற்றமாட்டான், ஆனால், றிஸ்வான் காப்பாற்றிவிட்டான் என்றல்லவா அர்த்தங்கொள்ள வேண்டியிருக்கிறது. அட முட்டாள் பசங்களா, மனிதாபிமானத்தில் ஏதடா தமிழ், முஸ்லிம்? ஆற்றில் குதித்தது ஒரு தமிழ்ப்பிள்ளை என்று தெரிந்தா செய்தார்? வேறு யாராக இருந்தால் காப்பாற்றியிருக்கமாட்டாரா? என்னடா சொல்ல வருகிறீர்கள். இப்படிச் சொல்வது றிஸ்வான் என்கின்ற ஒரு தியாகியைக் கொச்சைப்படுத்துவதாக இல்லையா?

“எரியட் தெமள உனத் லஸ்ஸனய், எய சிங்களத் கத்தா கரய்” என்பதற்கும் உங்கள் கதைக்கும் என்னடா வித்தியாசம்? எரியட் தமிழ் என்றாலும் அழகானவள், அவள் சிங்களமும் கதைக்கிறாள், என்றால், தமிழ்ப் பிள்ளைகள் அசிங்கமானவர்கள், எரியட் மட்டும் அழகானவள்! என்று சொல்வது எப்படி தவறோ, அதேபோல்தான், றிஸ்வான் என்கின்ற முஸ்லிம் இளைஞர் தமிழ்ப் பிள்ளையைக் காப்பாற்றப்போய் உயிரிழந்தார் என்பதும் தவறு என்கிறேன். இதற்கு உங்களின் மூளை எப்படி எப்படி எதிர்வினையாற்றுகிறதோ அப்படியே ஆகட்டும். இல்லாவிட்டால், இந்தக் கூற்றுக்கும் லைக் போடுவீர்களா நீங்கள்? 

Comments