மலையகத்தை மீண்டும் புரட்டிய வெள்ளம் | தினகரன் வாரமஞ்சரி

மலையகத்தை மீண்டும் புரட்டிய வெள்ளம்

கொரோனா தொற்று காரணமாக பொருளாதார ரீதியாக முடங்கிப் போயிருந்த மலையகத்தை மீண்டும் ஒரு முறை புரட்டிப் போட்டிருக்கின்றது வெள்ளம். கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நாட்டில் நிலவும் காலநிலை சீர் கேடு காரணமாக பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு மண் சரிவு ஏற்பட்டதுடன் பொது மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு மலையகத்தையும் விட்டு வைக்கவில்லை.

நுவரெலியா, ஹட்டன், மஸ்கெலியா, பொகவந்தலாவை போன்ற பகுதிகளில் பெரும் பாதிப்பை இந்த காலநிலை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக மஸ்கெலியா சாமிமலை பகுதியில் சுமார் 75 குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதிலும் சாமிமலை ஆத்தடி பிள்ளையார் பகுதி கிரீன் ஹில் கொலனி போன்ற பகுதிகள் முழுமையாக நீரில் மூழ்கியதுடன் ஏனைய பகுதிகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

கொட்டகலை பகுதியில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதியாக லொக்கில் (28 வீடுகள்) ஹரிங்டன் கொலனி (36 வீடுகள்) காணப்படுவதுடன் யதன்சைட் சக்திபுரம் ஸ்டோனிகிளிப் ரொசிட்டா போன்ற பகுதிகளிலும் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஹட்டன் தரவலை பகுதியில் 10 குடும்பங்களும்; பொகவந்தலாவை டின்சின் போன்ற பகுதிகளும் பாதிக்கபட்டுள்ளன.

இது தவிர விவசாய நிலங்கள் பாரிய அளவில் பாதிப்படைந்துள்ளன. மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் கொரோனா காரணமாக வருமானத்தை இழந்திருந்த பலர் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயத்தில் ஈடுபட்டுவந்தனர். அதன் மூலமாவது தங்களுடைய வருமானத்தை அதிகரித்து கொள்ள முடியும் என முடிவு செய்து விவசாயத்தில் ஈடுபட்ட பலரும் இந்த வெள்ளம் காரமாக முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்து என்ன செய்வது என்ற கேள்விக்குறியுடன் இந்த மக்கள் இருக்கின்றார்கள்.

ஏற்கனவே கொரோனா காரணமாக நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருந்த பல பொது அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் இந்த திடீர் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலைமையை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றன. தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா காரணமாக வருமானத்தை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதா? அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதா? என்ற கேள்வியுடன் இருக்கின்றார்கள்.

மலையகத்தில் பல இடங்களிலும் ஏற்பட்ட மண்சரிவு காணரமாக பிரதான பாதைகளின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை சீரமைப்பதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

தற்பொழுது இந்த வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மானியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? இல்லையா என்ற கேள்விக்குறியும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒரு பெரும் சந்தேகமாகும்.

ஆனால் ஒரு சில கிராம சேவகர்கள் களத்தில் நின்று தங்களுடைய சேவைகளை முன்னெடுப்பதை காண முடிந்தது. இதுவரையில் யாரும் வந்து தங்களுடைய நிலைமைகளை பார்க்கவில்லை என்ற மக்களுடைய குற்றச்சாட்டும் இல்லாமல் இல்லை. அதிலும் குறிப்பாக அனர்த்த முகாமைத்துவம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் என்பன வருகை தரவில்லை என்பது மக்களின் குறை. ஆனால் தங்களுக்கு இருக்கின்ற வசதிகளின் அடிப்படையில் தங்களால் முடியுமான அளவு வேலைகளை செய்து வருவதாக இந்த நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.

நிலைமை இவ்வாறு இருக்க இந்த நிலைமைக்கு காரணம் என்ன என்பதையும் நாம் ஆராய வேண்டியவர்களாக இருக்கின்றோம். சில பகுதிகளில் வெள்ள அனர்த்தம் என்பது பல முறை ஏற்பட்டிருக்கின்றது. அவர்களுக்கு அரசாங்கம் வேற்று இடங்களை வழங்கிய பொழுதும் அவர்கள் அங்கு செல்ல மறுத்துவிட்டு அதே இடங்களில் தொடர்ந்தும் தங்கியிருப்பது இந்த பாதிப்பிற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் சட்ட விரோதமான கட்டடங்கள் காரணமாக நீர் உரியமுறையில் வெளியேறுவதற்கான சந்தர்ப்பம் இல்லாததால் வெள்ளம் ஏற்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. இதனை எத்தனை முறை அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்தினாலும் செவிமடுக்க மக்கள் தயாராக இல்லை என்பதும் கவலைக்குரிய ஒரு விடயமே.

அரசாங்கத்தின் அறிவுரைகளை செவி மடுக்காமையும் இந்த பாதிப்பிற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கின்றது. மக்களின் பிழையான நடவடிக்கைகள் காரணமாகவே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் சரியாக செயற்பட்டிருந்தால் இதனைத் தடுத்திருக்க முடியும். ஆனாலும் எதிர்காலத்தில் இதனை சிந்தித்து அனைவரும் செயற்பட வேண்டியது கட்டாமாகும். பொது மக்கள்; இதனைப்  புரிந்து கொண்டு செயற்படுவார்களா?

எஸ்.தியாகு - நுவரெலியா தினகரன நிருபர்

Comments