எனது நிலைப்பாடுதான் சரியானதென வரலாறு நிரூபித்துக் கொண்டிருக்கின்றது | தினகரன் வாரமஞ்சரி

எனது நிலைப்பாடுதான் சரியானதென வரலாறு நிரூபித்துக் கொண்டிருக்கின்றது

கோட்டாபயவின் அரசாங்கத்தின் காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியுமென நான் நம்புகின்றேன். தமிழ் மக்கள் சரியான முறையில் யோசித்து வாக்குப் பலத்தை எனக்கு அளிக்க வேண்டும். நான் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முடிப்பேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தற்கால அரசியல் நிலமைகள் தொடர்பாக தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய செவ்வி பின்வருமாறு:-

கேள்வி: சுமந்திரன் ஆயுதப் போராட்டம் தொடர்பாக வெளியிட்ட கருத்து சரியா பிழையா? ஆயுதப் போராட்டம் தொடர்பில் அவரின் கருத்தை ஏற்றுக் கொள்கின்றீர்களா?

பதில்  : விடுதலைப் போராட்டம் வேறு அழிவு யுத்தம் என்பது வேறு, இதைப் பற்றி என்ன நோக்கதோடு சுமந்திரன் சொன்னார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தக் கட்சியினர் தங்களுடைய சுயலாப அரசியலுக்காக கடந்த காலத்தில் விடுதலைப் போராட்டம் அழிவு யுத்தம் அல்லது சகோதர படுகொலை எல்லாவற்றையும் அரசியல் இலாபத்திற்காக மூடி மறைத்து நியாயப்படுத்தி அதை தூண்டிவிட்ட செயற்பாடுகளைத் தான் அக் காலகட்டத்தில் செய்தார்கள்.

கேள்வி : தேர்தல் காலத்தில் அவர் வெளியிட்ட கருத்து பற்றி உங்களுடைய கருத்து என்ன?

பதில்  : அவர் அறியாமையினால் சொன்ன கருத்து என்றுதான் நான் நினைக்கிறேன். ஏன் என்றால் அவர்களுடைய தளமே அதுதான். தங்களுடைய கருத்துக்களை நியாயப்படுத்தி அதனை தூண்டிவிட்டுதான் தம்முடைய  அரசியலை முன்னெடுத்தார்கள். அவர் வாய் தடுமாற்றத்தினால் அவ்வாறு சொல்லி இருக்கலாம்.

கேள்வி : அவர் சொன்னது சரி என்று ஏற்றுக் கொள்கின்றீர்களா?

பதில் : அவர்கள் தங்களுடைய கருத்தை சொன்னார்கள். அதாவது கடந்த காலத்தில் ஜனநாயக சூழல் கிடைக்கவில்லை. அதனால் இந்த அழிவு யுத்தத்தை நியாயப்படுதுகிற மாதிரித் தான் அவர் தன்னுடைய கருத்தை சொல்கிறார். புலிகளால் தானே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவானது. அந்தத் தளத்தில் இருந்து வந்ததால் தான் தன்னை அறியாமல் வாய் தவறி சொல்லிவிட்டார் என்று எண்ணுகின்றேன்.

எம்மைப் பொறுத்தவரையில், இலங்கை – இந்திய ஒப்பந்ததிற்கு  முதலே சகோதரப் படுகொலை தாண்டவமாடியது. அது பின் அழிவு யுத்தமாக மாறியது. அவற்றை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து முன்நோக்கிச் செல்லலாம் என்றுதான் இருந்தோம். ஆனால் துரதிர்ஸ்ட வசமாக ஜனநாயக வழி முறையில் வந்ததாகவோ அல்லது விடுதலைப் போராட்டத்திற்குள்ளாக வந்தவர்களாகவோ இருக்கலாம், அல்லது சகோதர படுகொலை அல்லது அழிவு யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் என்னுடைய   மாற்றுக் கொள்கைச் செயற்பாடுகளை தங்களுக்கு எதிரானதாக நினைத்தார்கள். 

இலங்கைக்கு வரும் போது   மாற்றுக் கொள்கையுடன்தான் நான் இங்குவந்தேன்.  அவர்கள் புலிகளோடு சேர்ந்து எதிர்த்தார்கள். ஆனால் என்னுடைய பார்வைதான் சரியானது என்று வரலாறு நிரூபித்துள்ளது.

கேள்வி:- தற்போது கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது அது தேர்தலை மையமாக வைத்து தளர்த்தப்பட்டுள்ளதா?

பதில்: இது மக்களின் பாதுகாப்பிற்காக இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மட்டுமல்லாமல்,  முழு உலகும் எதிர் கொள்கின்ற பிரச்சினை. அந்தந்த நாடுகளில் வன்முறைகள் இருந்தாலும் கொரோனா மிகவும் பயங்கரமானது. இலங்கையில் கொரோனா அழிவுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் இல்லை என்றால் உயிரிழப்புகளை 10க்குள்  மட்டுப்படுத்தியிருக்க முடியாது. ஊரடங்குசட்டம் மக்களுடைய தேவைக்காகத் தான் கொண்டுவரப்பட்டது. இதனால் மக்கள் இந்த கொரோனாவிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளார்கள்.

உயிர் அச்சுறுத்தல் மட்டுமல்லாமல், பொருளாதாரம், வாழ்வாதாரம், அபிவிருத்தி என்ற தேவையும் எமக்கு இருப்பதால், அரசாங்கம் இலகுபடுத்திக் கொண்டுவருகிறது. 

நாடாளுமன்ற ஜனநாயகம் என்றவகையில் தேர்தல் அவசியம். அரசாங்கம் நாடாளுமன்றத்தை கலைத்ததும், உடனடியாக தேர்தலை வைப்பதற்காகத்தான், இதனால் 3 மாதம் வீணாகி விட்டது.  பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது. வேறு அரசாங்கம் இருந்திருந்தால் இன்னும் மோசமான நிலைமைக்கு போயிக்கும். ஆனால் இந்த அரசங்கம் மக்களை காப்பாற்றியுள்ளது. 

மக்களுடைய வாழ்வாதாரம், பொருளாதாரம், அபிவிருத்தி என்பனவற்றையும் பார்க்கத்தான் வேண்டும். 

நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்து  சுகாதாரத் துறையினர் தேர்தல் வைக்கலாம் என்று உறுதிபடுத்தியதன் பின்னர் 9 முதல்  11வாரம் வரை தேவைப்படலாம் என்று தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியிடம் நல்ல திட்டம் இருப்பதாக எனக்கு தோன்றுகின்றது. அதனை செயற்படுத்த கூடியவர்களும் இருக்கின்றார்கள். இதில் பிரதமருடைய வழி காட்டுலும் இருகின்றது. அவர்கள் முலம் இது சரிவரும் என நம்புகிறேன்.

கேள்வி : அண்மையில் தமிழ்த் தேசிய கூடமைப்புக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகின அதனைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் : எனக்கு தெரிந்தளவில் அப்படி எதுவும் இல்லை. பிரதமர் ஒரு அரசியல்வாதி. அவருக்கு எல்லோருடனும் தொடர்பு இருக்கு. அவர் தேர்தலில் ஒரு கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அந்த பதவிக்குப் பிறகு அவர் பொதுவானவராகத் தான் இருக்க முடியும். அரசாங்கத்தின் கொள்கைகளையும் வேலைத் திட்டங்களையும் முன்னெடுக்க சமீபத்தில் எல்லோருக்கும் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டவர்களும் ஏற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள். ஏற்றுக் கொண்டவர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒன்று.

அதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரதமரை வந்து சந்தித்து அரசியல் ஆதாய கருத்துக்களை முன் வைத்தார்கள். பின்னர் தனியாவும் சந்தித்து கதைத்தார்கள். முன்னரே அவரை சந்தித்திருந்தால் அல்லது நான் கேட்டபோது சந்தித்திருந்தால் இந்தளவிற்கு அழிவுகள் ஏற்பட்டிருக்காது.   

கேள்வி: தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் அரசு மென்போக்கைக் கடைப்பிடிப்பதாக சிலர் கூறுகின்றனரே. அது உண்மையா? தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து செயற்படுமா?

பதில் :  சேர் பொன் ராமநாதன் முதல் சம்பந்தர் வரை இருந்த இருக்கிற தமிழ்த் தலைவர்களின் தவறான போக்கு காரணமாகத்தான் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் உள்ளது என்பதை எனது அனுபவத்தில் இருந்து சொல்கின்றேன்.

அந்தவகையில் மீண்டும் மக்களுக்கு ஒன்று சொல்கின்றேன். எதிர்வரும் சந்தர்ப்பங்களில் மக்கள் எனக்கு எவ்வளவு வாக்குகளும் ஆசனங்களும் தருகிறார்களோ அந்தளவுக்கு அவர்களுக்கு பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுத் தருவேன். கடந்த காலங்களில் அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை அன்றைய நிலைமை வேறு, இன்றைய நிலைமை வேறு.

மக்கள் எந்தளவுக்கு வாக்களிக்கிறார்களோ அந்தளவுக்கு அவர்களுக்கு நான் அவர்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பேன்

கேள்வி:- அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பை மென்மையாகக் கையாள நினைக்கின்றதா? அவ்வாறு கையாண்டால் உங்களின் அரசியல் களம் எவ்வாறு இருக்கும்?

பதில்:- ஏனைய தமிழ் கட்சிகளின் நோக்கங்கள் வேறு என்னுடைய நோக்கம் வேறு. 1986 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சென்று 1990 ஆம் ஆண்டிலேயே இலங்கைக்கு வந்தேன். இந்தியாவில் இருந்தே வெளிநாட்டிற்குச் செல்ல நினைத்திருந்தால் சென்றிருக்கலாம்.

இந்த மக்கள் சிந்திய இரத்தத்திற்கு நானும் ஒருவகையில் பொறுப்பு. அந்த தார்மீக பொறுப்பை ஏற்றே  திரும்பிவந்தேன். தற்போதைய சூழ்நிலையில் எனது நிலைப்பாடுதான் சரியானதென வரலாறு நிரூபித்துக் கொண்டிருக்கின்றது.

அதாவது   தேர்தல் ஜனநாயகத்தின் ஊடாகத்தான் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்பதால் விடுதலைப் புலிகள் தமிழ் தேசிய  கூட்டமைப்பை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டனர் . புலிகளின் பெயரை வைத்தே தேர்தலில் போட்டியிட்டவர்கள். அன்றே பேச்சுவார்த்தையின் ஊடாக பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முடிவை எடுத்திருந்தால் இவ்வாறான  அழிவுகள் மற்றும் துன்ப துயரங்கள் ஏற்பட்டிருக்காது. நான் இதை அனுபவத்தின் ஊடாகத் தான் சொல்கின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன் வருவார்களாக இருந்தால் நான் அதை வரவேற்பேன்.

கேள்வி:- கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வட கிழக்கில் அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு அளிக்கவில்லை. எதிர்வரும் தேர்தலில் மக்களின் ஆதரவு கிடைக்குமா? நிலைமை எவ்வாறு காணப்படுகின்றது.

பதில்:- அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதா இல்லையா என்பது பிரச்சினை அல்ல. தமது பிரச்சினைகளை யார் தீர்த்து வைப்பார்கள். மாற்றுக்கொள்கை மற்றும் மாற்றுக் கருத்துக்கள் ஊடாகத் தான் பிரச்சினையைத் தீர்க்கமுடியுமென நான் கூறிவந்தேன். அதை மக்கள் நம்பினால் எனக்கு வாக்களிக்கட்டும்.  பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் யார் அணுகுகின்றார்கள். பிரச்சினைகளைத் தீராதவகையில் யார் அணுகுகின்றார்கள் என்பதை  மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

அரசியல் உரிமை அபிவிருத்தி, அன்றாடப் பிரச்சினைகள் இந்த மூன்றிற்கும் யாரால் தீர்வுகாண முடியுமென மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். மக்கள் விரும்பவில்லை என்றால் நான் ஒதுங்கிவிடுவேன்.

கேள்வி: நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

பதில்:- வட கிழக்கில் போட்டியிடுகின்றோம். ஆகையினால் போட்டி போடும் இடங்களில் அதி கூடிய வாக்குகளும் ஆசனங்களும் கிடைக்குமென நினைக்கின்றோம். தேர்தல் எப்போது என அறிவித்ததும் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவோம்.

கேள்வி:- கெரோனா வைரஸ் தொற்று காலப்பகுதியில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மக்களுக்கு செய்த நிவாரணப் பணி போன்று தமிழ் அரசியல்வாதிகள் செய்யவில்லை. என்பதை ஏற்றுக்கொ ள்கின்றீர்களா?

பதில்:- தென்னிலங்கையில் அதிகமாக செய்தார்களா? வட இலங்கையில் அதிகமாக செய்தார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் மனித நேயத்தினாலும் அரசியல் காரணங்களுக்காகவும் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தனிநபர்கள் நிவாரணப் பணிகளை முன்னெடுத்துள்ளார்கள்.

கேள்வி:- நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் அரசாங்கம் வெற்றிபெற்றால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சாத்தியமாகுமா?

பதில்:- நாங்கள் மூன்று “அ”க்களை முன்வைத்துள்ளோம். அரசியல் உரிமை அபிவிருத்தி, அன்றாடப் பிரச்சினை என அதற்குள் எல்லாமே அடங்குகின்றது. எங்களுக்கு கணிசமான வாக்குகளும் கணிசமான ஆசனங்களும் இருந்தால் அந்தக் காலகட்டத்திற்குள் செய்து முடித்து விடுவோம். இதை எனது அனுபவத்தில் இருந்து சொல்கின்றேன்.

மூன்று“அ”க்களை முன்வைத்து ஈ.பி.டி.பி தனது அரசியலை முன் வைத்துள்ளது. அவற்றின்  அடிப்படையில் ஈ.பி.டி.பி செயற்படும். மக்களை ஏமாற்றவோ பொய்யான வாக்குறுதிகளை வழங்கவோ எத்தனிக்காது.

சுமித்தி தங்கராசா

Comments