ஒவ்வொரு குடும்பத்திலும் விவசாயப் புரட்சி | தினகரன் வாரமஞ்சரி

ஒவ்வொரு குடும்பத்திலும் விவசாயப் புரட்சி

கொவிட் - 19 எனப்படும் உலகையே ஆட்டிக் கொண்டிருக்கின்ற புதியவகை வைரஸின் தாக்கத்தினால் முடங்கியிருந்த இலங்கை தற்போது மெல்ல மெல்ல பழைய நிலைக்குத் திருமபுவதை அவதானிக்க முடிகின்றது. ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. வழமைபோல வர்த்தக நிலையங்கள் மரக்கறி மீன்வியாபார நிலையங்கள்  யாவும் திறக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

இதேபோல் மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்கள் மற்றும் ஏனைய அரச திணைக்களங்களின் அலுவலகங்களும் உத்தியோகத்தர்களின்  வருகையின் அடிப்படையில் அரசின் சுகாதார சட்டதிட்டங்களை பேணி  சமூக இடைவெளிகளில் மக்களும் உத்தியோகத்தர்களும்  செயற்பட்டு  மக்கள் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இது தவிர அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளும் சமூக இடைவெளியைப் பேணியவாறே சேவையில் ஈடுபடுத்தப்படுவதையும் அவதானிக்க  முடிகின்றது.

இது இவ்வாறு இருக்க கொரோனா அச்சத்தின் காரணமாக முடங்கியிருந்த வாழ்வாதாரங்களை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறுபட்ட செயற்பாடுகள் மாவட்ட செயலகத்தின் நெறிப்படுத்தலின் கீழ் பிரதேச செயலகங்கள் மற்றும் துறைசார்ந்த திணைக்களங்களின் ஊடாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.

நவீன தொழிநுட்ப மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு உலகவங்கியின் உதவி பெற்றுக் கொடுக்க மட்டக்களப்பு அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நவீன தொழிநுட்பத்துடன் விவசாயத்தில் ஈடுபாடுகாட்டி வருகின்ற விவசாயிகளுக்கு உலகவங்கியின் உதவி வழங்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளை ஊக்கப்படுத்த மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கலாமதி பத்மராஜா நடவடிக்கை எடுத்துள்ளார்.

வறுமையான மக்கள் வாழும் மாவட்டங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த திட்டம் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மற்றும் பதுளை மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் அரசாங்கத்தினால் தற்போது அமுல்படுத்தப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நவீன தொழிநுட்பத்துடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபாடுகாட்டி வருகின்ற விவசாயிகளுக்கும் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கும் இந்த உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான அறிவூட்டல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் விசேட செயலமர்வு கடந்தவாரம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர். சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

பெருந்தோட்ட கைத் தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சினூடாக முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தினூடாக நவீனதொழில்நுட்பத்துடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஐந்து மாகாண விவசாயிகளிடமிருந்து தற்பொழுது திட்ட முன்மொழிவுகளும் கோரப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நவீன தொழிநுட்பத்துடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டி வருகின்ற விவசாயிகளுக்கும் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கும் அரசாங்கத்தின் இந்த உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் தேவையான அறிவூட்டல்கள் மற்றும் ஆலோசனைகளும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் வை.பீ.இக்பால், மாவட்ட கால்நடை அபிவிருத்தி வைத்தியர் உதயராணி குகேந்திரா, கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.சுதர்சன், மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் என்.தனஞ்ஜயன் மாவட்ட மீன்பிடி உத்தியோகத்தர் ருக்சான் குறுசான் மற்றும் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள்  பலரின் பங்குபற்றுதலுடன் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில்  அரசாங்கத்தின் சௌபாக்யா திட்டத்திற்கு இணங்க 30 ஆயிரம் வீட்டுத் தோட்டங்களுக்கான பயிர்க் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன
இது இவ்வாறு இருக்க நாட்டில் உணவுப்பஞ்சம் ஏற்படாதிருக்க முன்கூட்டியே ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் எண்ணக்கருவில் தற்சார்பு பொருளாதார அபிவிருத்திக்கு ஆர்வமூட்டி ஆரோக்கிய உணவை தத்தமது வீடுகளிலேயே பெற்றுக் கொள்ளவும் கொரோனா போன்ற தொற்றுக்களில் தவிர்ந்து கொள்ளவும் ஆரோக்கிய உணவும் அழகிய வாழ்வும் திட்டம் 2020 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட செயலகத்தினூடாக கணபதிப்பிள்ளை பொன்னம்மா பௌண்டேசன் எனும் அமைப்பின் நிதி உதவியுடன் வாழைச்சேனை தூய துளிர் எனும் அமைப்பு 30ஆயிரம் வீட்டுத் தோட்ட பொதியினை இலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்விசேட திட்டத்தில் மரக்கறி செய்கைக்கு ஆர்வம் காட்டும் குடும்பங்களுக்கு இலவசமாக பயிர்க் கன்றுகள் மற்றும் விதைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்திட்டத்தில் ஆர்வமுள்ள குடும்பங்களுக்கு மேலதிகமாக சகல அரச ஊழியர்களையும் பயன்பெறச் செய்யும் நோக்கில் அரச ஊழியர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மரக்கன்றுகள் மற்றும் விதைகளை வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு மரக் கன்றுகளும் விதைப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அந்த இம்மரக்கறிப் பொதிகளில் கத்தரி மிளகாய் கன்றுகளும் வெண்டி கீரை பயற்றை மற்றம் அவரை போன்ற விதைகளும் உள்ளடங்கியுள்ளமை எடுத்துக்காட்டத் தக்கதாகும்.

சிறந்த விவசாய நடைமுறைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இயற்கை முறையிலமைந்த ஊக்குவிப்பு உதவிகள்.

எனினும் சிறந்த விவசாய நடைமுறைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இயற்கை முறையிலமைந்த ஊக்குவிப்பு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

விவசாயத்தில் பீடைகளையும் பூச்சிகளையும் கிருமிகளையும் களைகளையும் கட்டுப்படுத்துவதற்காக விவசாயிகள் இரசாயனங்களைப் பாவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக சிறந்த விவசாய நடைமுறைத் திட்டத்தின்  அவர்களுக்கு இந்த அனுகூலங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

மேலும் விவசாய உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது இரசாயனம் கலக்காத இயற்கையான உற்பத்திக்கே அதிகம் கேள்வி என்பதையும் நாங்கள் விவசாயிகளுக்கு விழிப்பூட்டுகின்றோம்.

அத்துடன் உடல் ஆரோக்கியத்திற்கும் இயற்கைவள பேணலுக்கும் உயிரின பன்மைத்துவத்திற்கும் இயற்கை விவசாயமே சிறந்தது என்பதைப் புரிய வைக்கின்றோம் என விவசாயப் போதனாசிரியை நிலக்ஸி அன்ரனி தெரிவித்தார். ‬‬‬

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல திணைக்களங்களால் இரண்டாம் கட்ட சௌபாக்கியா வீட்டுத்தோட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்காக வாழ்வாதாரம் முடங்கியுள்ள மக்கள் மத்தியில் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்கம் ஆகியவை இணைந்து சௌபாக்கியா வீட்டுத்தோட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளது. 

வருடம் முழுவதும் அன்றாடம் வீட்டுப்பாவனைக்கான மரக்கறிகளை உற்பத்திசெய்யும் நோக்குடன் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக விவசாய அமைச்சினால் 10 இலட்சம் வீட்டுத் தோட்டங்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டமாக இந்த சௌபாக்கியா வீட்டுத்தோட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்போது விவசாயிகளுக்கு விதைப் பொதிகள் வழங்கப்பட்டதுடன் தற்காலத்தில் வீட்டுத்தோட்டத்தின் அவசியம் பற்றியும் விவசாயப் போதனாசிரியர்களால் விளக்கமளிக்கப்பட்டு வருகின்றது.

எமது பிரதேசத்தில் உருவாக்கக்கூடிய உணவுப் பொருட்களை நாம் எமது பிரசேத்திலே பயிரிட வேண்டும் என்பதுடன் தமது மாவட்டம் எல்லாவகையான பயிர்களையும் உற்பத்தி செய்யககூடிய தன்னிறைவான மாவட்டமாக மாற்றமடைய வேண்டும் எனவும் கமநல  திணைக்கள மாவட்டப் பணிப்பாளர் என்.ஜெகன்நாத் தெரிவித்தார்.

கிழக்கில் உலக வங்கி ஐரோப்பிய யூனியன் நிதியிலான நவீனமயமாக்கல் விவசாயத் திட்டம் துரிதப்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் உலக வங்கி ஐரோப்பிய யூனியன் உதவித்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் இவ்விரு மாவட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 1327.5 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்திட்டத்தில் 50 ஏக்கர் பச்சை மிளகாய்ச் செய்கையும்  ஏக்கர் பீற்றூட் செய்கையும் 100 ஏக்கர் நிலக்கடலை செய்கையும் 500 ஏக்கர் கெக்கரி செய்கையும் 528 ஏக்கர் விசேட உணவு உற்பத்திகளான நிலக்கடலை கௌபி போன்ற தானிய வகைகளும் மாதுளை பப்பாசி வாழை போன்ற பழப்பயிர் செய்கைகளும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்எருவில் பற்று மண்முனைப்பற்று கோறளைப்பற்று வடக்கு ஆகிய  பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் இப்பயிர்ச்செய்கைக்குத் தேவையான ஆலோசனைகள் வழிகாட்டல்கள் விவசாயத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவற்றுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் விவசாய உபகரண வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக விவசாயப் பிரிவு நவீன மயமாக்கல் திட்டத்தின் கிழக்கு மாகாண சிரேஷ்ட பொறியியலாளரான கே.பாஸ்கரதாஸ் தெரிவித்துள்ளார்.

இதேபோல் அம்பாரை மாவட்டத்திலும் சுமார் 1300 மில்லியன் ரூபா செலவில் 50 ஏக்கர் மஞ்சள் செய்கை 50 ஏக்கர் கடுகு உற்பத்தி 80ஏக்கர் மரவள்ளிக் கிழங்குப் பயிர்ச்செய்கை பண்ணப்பட்டுள்ளதுடன் புதிய திட்டங்களாக விவசாயம் நவீனமயமாக்கப்பட்டதும் பெறுமதி சேர்க்கப்பட்ட திட்டங்களாக தேசிக்காய் உற்பத்தி கோழித் தீவனங்களுக்கான சோளம் உற்பத்தி ஏற்றுமதிக்கான வழிபாட்டு மலர் உற்த்தி சேதன மரக்கறி உற்பத்தி மஞ்சள் மற்றும் இஞ்சி உற்பத்தி மற்றும் ஆரஞ்சு உற்பத்தி போன்றவை முன்மொழியப்பட்டுள்ளன.

அறுவடையினை சந்தைப்படுத்தும்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாக களுதாவளையில் மேற்கொள்ளப்படும் மிளகாய்ச் செய்கையானது பெறுமதி சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட முடியாமலிருப்பதையும் கொரோனா தொற்று காலப்பகுதியில் அது நடைமுறையில் உணரப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கான மாற்று வகை மிளகாய்ச் செய்கைக்கு ஊக்கமளிக்க வேண்டும் நெல் அறுவடை செய்யும்போதும் விவசாயிகள் காயவைத்த நெல்லினையே கூடிய விலைக்கு விற்கமுடிகின்றது.

எனவே அறுவடை செய்யும்போது அவற்றைக் காயவைக்கும் நடமாடும் இயந்திரங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் ஆராயப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நவீன தொழில் நுட்பரீதியாக விவசாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது வரவேற்கத்தக்கதாகும். எது எவ்வாறு அமைந்தாலும் கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவாட்டம் முடங்கியிருந்த வேளை மாவட்டத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்டிருந்த மிளகாய் கத்தரி பயற்றை போன்ற மரக்கறி வகைகளின் விலைவாசி வெகுவாக வீழ்ச்சியடைந்திருந்தது.  வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலைமையும் ஏற்பட்டிருந்தது. 

விவசாயிகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டதோடு பலத்த நஷ்டத்தையும் எதிர்நோக்கியிருந்தனர். எனினும் தற்போது மீண்டும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள நவீன தொழிநுட்ப ரீதியான விவசாயச் செய்கையில் கிடைக்கின்ற விளைபொருட்களுக்காக வேனும் சிறந்த தகுதியான சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் விளைபொருட்களுக்குரிய தகுந்த விலைகளை நிர்ணயிக்கவும் நடவடிக்கை எடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் விவசாயப் புரட்சியை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுவே மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

வ. சக்திவேல்

Comments