தொற்று நோய் தவிர்ப்பும் தனிமனித பங்களிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

தொற்று நோய் தவிர்ப்பும் தனிமனித பங்களிப்பும்

மானிட வரலாற்றில் அவ்வப்போது ஏற்பட்ட தொற்று நோய்கள் மனித சமூகத்தின் இருப்பை வெகுவாக பாதித்திருக்கின்றது என்பதை வரலாற்று நூல்களிலும் கதைகளிலும் திரைப்படங்களிலுமே இதுவரை காலமும் கண்டுவந்த இன்றைய நவீன மனிதன், முதன்முறையாக ஒட்டுமொத்த உலகத்தினதும் இருப்பை கேள்விக்குறியாக்கி இருக்கும் கொரோனாவின் தாக்கத்தை அனுபவபூர்வமாக உணர நேர்ந்திருக்கின்றது.

அத்தோடு வசதிகளும் வளங்களும் படைத்திருந்த பின்னணியிலும் தொற்று நோயின் பாரதூர தன்மையினை உரிய முறையில் ஊகிக்கத் தவறிய சில நாடுகள் பரிதாபகரமான முறையில் தமது மக்களின் உயிரை பறிகொடுத்துக் கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இதுவரையிலும் இத்தொற்று நோயினை தடுத்து நிறுத்தத்தக்க மருந்தினை எந்தவொரு நாட்டினாலும் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாதிருக்கும் பின்னணியில் நோய் பரவுவதை தாமாகவே தடுத்துக் கொள்வதே ஒரே தீர்வாக அமைந்திருக்கின்றது. இந்தப் பின்னணியிலேயே உலக சுகாதார அமைப்பு கொரோனா தொற்று நோயுடன் புதிய பல சுகாதார முறைகளை கட்டாயமாக பின்பற்றி புதிய விதத்திலான இயல்பு வாழ்க்கையை ஆரம்பிப்பதை தவிர்ந்த வேறு வழியில்லை என்ற அறிவுறுத்தலை உலக மக்களுக்கு விடுத்திருக்கின்றது. அப்புதிய பழக்கவழக்கங்களில் தொற்று நோய் தொற்றியிருப்பின் அல்லது நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளியை பேணுதல், கைகளை நன்றாக அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ளுதல், தாமாகவேனும் தமது கண், மூக்கு, வாய் ஆகிய உடல் உறுப்புக்களை தொடுவதை தவிர்த்துக் கொள்ளுதல், நோயுற்றவர்களுடனான தொடர்பினை தவிர்த்துக் கொள்ளுதல், புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துவதை தவிர்த்துக் கொள்ளுதல், உணவுடன் உப்பினை சேர்ப்பதை இயன்றளவு குறைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை கட்டாயமாக பின்பற்றுமாறு வலியுறுத்தியிருப்பதுடன், குறிப்பாக சிறுவர்களும் முதியவர்களும் இத்தொற்று நோயின் சமூக தாக்கத்தினால் உள ரீதியாக வெகுவாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவர்கள் மீது கூடுதல் கவனத்தையும் அன்பையும் செலுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருக்கின்றது.

இவ்விடயங்கள் மீது கவனத்தை செலுத்தி கொரோனா நோய் நாட்டு மக்கள் மத்தியில் பரவுவதை தடுக்கும் நோக்கில் உலக சுகாதார அமைப்பின் இந்த வழிகாட்டலிலான செயற்பாடுகளை உரிய வகையில் உரிய நேரத்தில் இலங்கை அரசாங்கம் செயற்படுத்தியதன் விளைவாக இத்தொற்று நோயினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இதுவரை நோய் பரவுதலை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கு அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட கொரோனா நோய்த்தடுப்பு விசேட செயலணியினால் முடிந்திருக்கின்றது.

இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி பற்றிய தகவல் அறிந்த மறுகணமே பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் சகல கல்வி நிறுவனங்களினதும் வழமையான செயற்பாடுகளை இடைநிறுத்தி மாணவ சமுதாயத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுத்த அரசு, சமூகம் இயல்பு நிலைக்கு திரும்பி பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று நோயினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்ற சுகாதார அமைச்சின் உத்தரவாதத்தைப் பெற்றதன் பின்னர் சமூகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதன் இறுதி அங்கமாகவே மாணவர்கள் பாடசாலைக்கு திருப்பி அழைக்கப்படுவார்கள் என்ற உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. அத்தோடு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கும் கொரோனா தாக்கத்தை அடுத்து பாடசாலைகள் ஆரம்பித்த மறுகணமே பரீட்சைகளை எதிர்வுகொள்ள நேரிடுவதனால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய மனத்தாக்கத்தை தவிர்க்கும் வகையிலும் இயன்றளவு மாணவர்களுக்கு இணைய வழி கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கும் அதற்கான அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதோடு, இத்தொற்று நோய் காரணமாக வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் மனநிலையை பேணும் வகையிலும் சகல பாடசாலை மாணவர்களினதும் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும்வகையிலும் மாணவர்களைக் கொண்டு நூல்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் ஒன்றினை செயற்படுத்தியிருக்கும் கல்வி அமைச்சு அவர்களின் அப்படைப்புக்களை தரப்படுத்தி தேசிய அளவில் தேர்வு செய்யப்படும் சிறந்த படைப்புக்களை நூல்களாக வெளியிட திட்டமிட்டிருக்கின்றது.

இந்நாட்டின் தொழிற்படையில் பெரும் பங்கினை வகிக்கும் அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு தத்தமது வீடுகளில் இருந்தவாறே தொழில் புரிவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுத்திருப்பதன் மூலம் தமது அலுவலகங்களுக்கு சமூகமளிக்க முடியாததனால் தொழில் பாதிக்கப்படும் என்ற மனத்தாக்கத்திற்கு இந்நாட்டின் தொழிற்படை உள்ளாகுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் செயற்படுத்தி வருகின்றது. அத்தோடு குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா வீதம் இரண்டு மாத காலமாக நிதி உதவியை பெற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதையும் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருக்கின்றது.

இந்த நாட்டின் சுகாதார துறை என்றும் இல்லாத வகையில் மிக நேர்த்தியான முறையில் இயங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை துரிதமாக ஏற்படுத்தி கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்தி நோயாளிகளின் மரண வீதத்தை இயன்றளவு கட்டுப்படுத்துவதற்கான உச்சபட்ச நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த நாட்டில் எந்தவொரு அவசர நிலைமை ஏற்படும் போதும் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைமைக்கு கொண்டுவரும் வகையில் களமிறக்கப்படும் முப்படையினரையும் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரையும் சுகாதார துறையின் பணிகளை எளிதாக்கும் வகையில் களமிறக்கி வழிநடத்தி வருவதன் மூலம் உலக நாடுகளின் குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளின் பாராட்டை பெறத்தக்க வகையில் கொரோனா நோய்த்தடுப்பு செயற்திட்டங்களை அரசாங்கம் இதுவரை செயற்படுத்தி வந்திருக்கின்றது.

இதன்போது தொற்று நோய்த்தடுப்பு பணிகளில் களத்தில் செயற்பட்டுவந்த கடற்படை சிப்பாய்கள் எதிர்பாராத விதமாக கொரோனா தொற்று நோய்க்கு ஆளாகி அந்நோயினால் பாதிக்கப்பட்ட படையினரின் எண்ணிக்கை 700ஐ தாண்டியிருக்கும் பின்னணியில் ஒருபுறத்தில் அவர்களை துரிதமாக குணப்படுத்தும் நடவடிக்கையினையும் மறுபுறத்தில் அவர்களினால் சிவில் சமூகம் மத்தியில் தொற்று நோய் பரவுவதற்கான வாய்ப்புக்களை தவிர்ப்பதற்குமான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.  அத்தோடு கொரோனா தொற்று நோயினால் இலங்கை மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் தொழில் நிமித்தமும் கல்வி நிமித்தமும் உலகில் பல பாகங்களுக்கும் சென்றிருந்த இலங்கை பிரஜைகளை அவர்கள் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருப்பின் அதன்மூலம் மென்மேலும் அந்நோய் பரவக்கூடிய அபாயம் இருக்கின்ற பின்னணியிலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் புலம்பெயர் இலங்கையர்களை மீண்டும் இந்த நாட்டுக்கு கொண்டுவந்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் செயற்திட்டத்தினையும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. இதிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதில் அரசாங்கம் அதன் கடமையினை மிக நேர்த்தியாக மேற்கொண்டு வருகின்றது என்பதே தெளிவாகின்றது.

இந்தப் பின்னணியிலேயே ஆரம்பக்கட்டத்தில் ஒட்டுமொத்த நாட்டின் செயற்பாடுகளையும் முடக்கிய அரசு ஊரடங்கு சட்டத்தினை செயற்படுத்தி சமூக தனிமைப்படுத்தலை முறையாக நடைமுறைப்படுத்தி நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. ஆயினும் சமூக, பொருளாதார செயற்பாடுகளை எல்லையற்ற விதத்தில் செயலிழக்கச் செய்தல் என்பது விபரீத விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதனால் ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவுடனான வாழ்க்கைக்கு தயாராகிவரும் பின்னணியில் நமது நாட்டையும் முழுமையாக செயற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

இதுவரை காலமும் அரசாங்கம் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நோய்த்தடுப்பு செயற்திட்டத்தினை இதற்கு அப்பாலும் கடைப்பிடித்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய முழுமையான சமூகப் பொறுப்பு தற்போது ஒவ்வொரு குடிமகனிடமும் கையளிக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் நாட்டு மக்கள் அனைவரும் மிகப் பாரதூரமான அப்பொறுப்பின் தன்மையை உணர்ந்து தம்மையும் தமது நாட்டையும் பாதுகாத்துக் கொள்வதற்கான சுகாதார வழிமுறைகளைத் தவறாது கடைப்பிடித்தல் இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாக அமைந்திருக்கின்றது.

ரவிரத்னவேல்     

Comments