இலங்கை வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையத்திலேயே பி.சி.ஆர் பரிசோதனை | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையத்திலேயே பி.சி.ஆர் பரிசோதனை

வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் வரும் அனைத்து பயணிகளையும் விமான நிலையத்திலேயே பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்துவதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளது.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, அங்கு நிலைமைகளை  ஆராய்ந்த பின்னர் அது தொடர்பில் சுகாதார சேவை அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான அனைத்து வசதிகளையும் விரைவாக மேற்கொள்ளுமாறும் அவர்  சுகாதாரத்துறை அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

அரசாங்கம் வெளிநாடுகளிலுள்ள இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், நாடு திரும்பும் இலங்கையருக்கு கொரோனா வைரஸ் தொற்று காணப்படுவது அவதானிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவதை தனிமை படுதலுக்கு உட்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகிறது என்பதை சுட்டிக் காட்டிய அமைச்சர், விமான நிலையத்தில் தற்போது முன்னெடுக்கப்படும் பரிசோதனை நடவடிக்கைகளை மேலும் விரிவு படுத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் பயணிகள் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, விமான சேவைகள் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.

நாட்டுக்குள் வரும் நோயாளிகள் மற்றும் விமான நிலையத்தில் பணிபுரியும் பாதுகாப்பு உத்தியோகத் தர்கள், குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள், சுங்கத் திணைக்களத்தினர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுப்பது கட்டாயமாகும்.

மேற்படி அதிகாரிகள் அல்லது விமான பயணிகள் மூலம் கொரோனா வைரஸ் சமூக மயப் படுத்தப்படுவதை தடுப்பதும் முக்கியமாகும்.

விமான நிலையத்தை சுற்றி பார்வையிட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, பயணிகள் விமானத்திலிருந்து தரையிறங்கும் பகுதிக்கும் விமான நிலையத்திலிருந்து வெளிச்செல்லும் பகுதியையும் அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பார்வையிட்டார். இந்த நிகழ்வில்அமைச்சர்களுடன் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, விமான நிலைய தலைவர் ஜி ஏ.சந்திரசிறி உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments