யாப்பு விதிகளுக்கு முரணான செயற்பாடு; ஐ.தே.கவிலிருந்து 99 பேர் நீக்கம் | தினகரன் வாரமஞ்சரி

யாப்பு விதிகளுக்கு முரணான செயற்பாடு; ஐ.தே.கவிலிருந்து 99 பேர் நீக்கம்

ஐக்கிய தேசிய கட்சியின் 99 உறுப்பினர்களின் அங்கத்துவத்தை இரத்துச் செய்வதற்கு கட்சியின் செயற்குழு நேற்று அனுமதி அளித்துள்ளது. இதன் பிரகாரம் அவர்கள் அனைவரும் கட்சியிலிருந்து உத்தியோக பூர்வமாக நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.

நேற்று காலை கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடிய  செயற்குழு கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டதாக கட்சியின் பேச்சாளரான முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கட்சி யாப்பு விதிகளுக்கு முரணாக செயற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட 99 பேர் இவ்வாறு கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சி விதிகளை மீறிய இவர்களிடம் விளக்கம் கோரப்படுகின்ற போதிலும் அவர்கள் விளக்கம் அளிக்கத் தவறியதன் காரணமாக செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய 99 பேரையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை இவ்வாறு நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியுடன் இணைந்து செயற்பட முன்வருவார்களானால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி இணைத்துக் கொள்ளப்படும். அதற்கான கதவுகள் திறக்கப்பட்டே உள்ளன. அவ்வாறு வருவோரின் கோரிக்கையை கட்சி செயற்குழு பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வேறு கட்சிகளில் அணிகளிலும் இணைந்திருப்பதை துறந்ததற்கான உத்தரவாதத்தை அவர்கள் எழுத்து மூலம் சமர்ப்பித்து மன்னிப்புக் கோரும் பட்சத்தில் அவர்களுக்கு மன்னிப்பு வழங்க கட்சி தயாராகவுள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறு இடம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய வஜிர அபேவர்தன எவரிடமும் பழிவாங்கும் எண்ணம் கட்சிக்குக் கிடையாதென தெரிவித்தார்.

வெள்ளியன்று காலை 10 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடிய ஐக்கிய தேசிய கட்சி விசேட செயற்குழு கூட்டத்தில் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் கட்சி யாப்பு விதிகளுக்கு முரணாக செயற்படுபவர்கள் விடயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென செயற்குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தெரிவித்தற்கமையவே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கட்சி உறுப்பினர்கள் எவரும் கட்சித் தலைமைக்கோ கட்சிக்கோ களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாதெனவும் எதிர்வரக்கூடிய தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

செயற்குழு எடுத்திருக்கும் இத் தீர்மானத்திற்கமைய அவர்கள் மீள இணைவதற்கு உரிய கால அவகாசம் வழங்கப்படுமெனவும் அதற்குப் பின்னர் நீக்கப்பட்ட அமைப்பாளர்களின் வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அதற்குரிய ஏற்பாடுகளை கட்சி செயலாளர் அகில விராஜ் காரியவசம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற வேளையில் கட்சித் தலைமையகத்துக்குள் செயற்குழு உறுப்பினர்கள் தவிர வேறு எவரும் அனுமதிக்கப்படவில்லை. அதே சமயம் அப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜயவர்தன, கட்சி அங்கத்துவத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கட்சியில் இணைய முடியும் எனவும், கட்சியின் பிரதித் தலைவராக ரவி கருணாநாயக்கவும் செயலாளராக அகிலவிராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுக்கூட்டம் அதன் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நேற்று கூடியது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தங்களை நீக்குவதற்கு எடுத்த முடிவு தொடர்பாக இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது. ஐதேக முக்கியஸ்தர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரவும் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியை மீட்டெடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எம் ஏ எம் நிலாம்

Comments