ஒரு அதிபர் ஓய்வு பெறுகிறார் | தினகரன் வாரமஞ்சரி

ஒரு அதிபர் ஓய்வு பெறுகிறார்

தலைமை ஆசிரியர் என அழைக்கப்பட்டுவந்த அதிபர் கனகசபை முந்தநாள் முதல் ஓய்வுபெற்ற அதிபராகிவிட்டார். தன்னிடம் இத்தனை வருடங்களாக இருந்துவந்த விலைமதிக்க முடியாத ஏதோ ஒன்றை பறிகொடுத்துவிட்டது போன்ற ஓர் உள்ளுணர்வு அவரிடம் குடிகொண்டது. வெளியில் காட்டிக்ெகாள்ளாது புன்முறுவலுடன் காணப்பட்டாலும், கனகசபை மாஸ்டரின் அடிமனதில் அனல் தகதகத்துக் கொண்டுதானிருந்தது.

அவருடைய பிரியாவிடை வைபவத்தில், தாம் ஒன்றும் உயர்வான உபாத்தியாயர் தொழிலைவிட்டு ஓரங்கட்டவில்லையெனவும், சற்று ஓய்வுபெறுவது மாத்திரமே என கூறி உள்ளே வெந்துகொண்டிருந்ததை சற்றே அணைத்துக்ெகாண்டார்.

எவ்வாறாயினும், தலைநகர் கொழும்பில் சர்வதேச பாடசாலையில் கல்வி பயிலும் தனது இரு பெண் பிள்ளைகளினதும், பிரபல கல்லூரியொன்றில் கல்விகற்கும் தனது மூத்த மகனினதும் கல்வி நடவடிக்ைககளைக் கண்காணிப்பதற்கு தமக்கு நேரமும், காலமும் கிடைத்துவிட்டதாக எண்ணி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் கனகசபை.

இவ்வளவு காலமாக வீட்டு வேலைகள் அனைத்தையும் தலைமேல் சுமந்துகொண்டு ஓய்வு ஒழிச்சலின்றி கஷ்டப்பட்டு களைத்துப் ​போகும் தன் மனைவிக்கு கையுதவியாக இருந்து அவளது வீட்டுவேலைப் பளுவை குறைக்கலாமெனவும் அவர் நினைத்தார்.

நேற்று முன் தினமும் நேற்றும் மனதை வறுத்தெடுத்துக் கொண்டிருந்த உத்தியோக ஓய்வு பற்றிய மன உளைச்சலிலிருந்து ஒருவாறு நீங்கி அதிகாலையிலேயே எழுந்து கதவு யன்னல்களைத் திறந்து வைத்தார். தும்புத்தடியைக் கையிலெடுத்து வீடு முழுதும் பெருக்குவதென களமிறங்கினார்.

"இந்தாங்க என்ன செய்றீங்க? அதெல்லாம் பொம்பிளைக செய்ற வேலை!" உரத்த குரலில் கூவிக் ெகாண்டு ஓடிவந்தாள் மனைவி.

"பரவாயில்லை. நம்ம வீட்ட நாம பெருக்குறது. என்ன, ஆம்புள வேல, பொம்பிள வேலைன்னு இருக்குது?" அவர் கருமமே கண்ணாகினார்.

"ஐயோ! எனக்கு இதெல்லாம் புடிக்கவே இல்ல!" முணுமுணுத்துக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள் அவள். வீடு முழுவதும் கூட்டிப் பெருக்கியாயிற்று. பின்புறம் வைக்கப்பட்டிருந்த விளக்குமாறு இப்போது அவரது கையில். வீட்டு முற்றத்தைக் கூட்டி இலைகுழைகள், அறுகுகள் என அனைத்தையும் ஓர் இடத்தில் குவித்துவிட்டு வீட்டுக்கு முன்புறம் பிரதான பாதையில் வீட்டு நுழைவாயில்வரை கூட்டிப் பெருக்கிக் ெகாண்டிருந்தார் கனகசபை.

"இந்தா பாருங்க, உங்களுக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? அக்கம் பக்கத்து சனங்க - காலைல வேல வெட்டிக்குப் போறவங்க என்ன சொல்லுவாங்க?" ​வெளியில் வந்தாள் மனைவி.

இந்தா பாரு! இது நம்மவீடு! நம்ம வாசல்! நம்ம விளக்குமாறு! நம்ம மரம், செடிகளோட இலையும் குழையும்! இதுல மத்தவங்க சொல்றதுக்கு என்ன இருக்குது?" வேலையை நிறுத்திவிட்டு ஆறுதலாக விளக்கம் அளித்தார்.

"அது சரிங்க! ஆனா.... இத்தனை வருஷமா உழைச்ச மனுஷன்.... பென்சன் ஆனது மட்டுந்தான். இந்தா... வீட்டு வேலைகளையெல்லாம் அவர் தலையில் கட்டிட்டாங்கன்னு சொல்லமாட்டாங்களா? அது மட்டுமில்லீங்க! இந்த வேலைகளையெல்லாம் எந்த சிரமமும் இல்லாம இவ்வளவு காலமா நான் செய்துகிட்டு தானே வர்றேன்! இங்கே குடுங்க அந்த கூட்டுமாற!" வெடுக்கென பிடுங்கியெடுத்தாள்.

அவர் வெறுங்கையுடன் நின்றுகொண்டிருக்க விட்ட இடத்திலிருந்து பெருக்கத் தொடங்கினாள் மனைவி.

சின்னஞ்சிறு புன்னகை கனகசபையாரின் கன்னங்கள் வழியே விரிந்தது. மாமரத்து கிளைகளில் மறைந்திருந்த குயில் கூவியது. அதிகாலை கூவத் தொடங்கிய சேவல்கள் தம் கூடுகளைத் திறந்து விடுமாறு கூவி கூப்பாடு போட்டன. புள்ளினங்களின் இசை கனகசபையாருக்கு சுப்ரபாதமாக செவிகளில் புகுந்தன. தாம் ஓய்வுபெறுவதற்கு முன்னர் என்றுமே இவ்வாறு விடியலில் சாரமும் அரைக்ைக பெனியனுமாக பாதையில் அவர் நின்றது கிடையாது. ஒரு புதிய அனுபவமாக இந்த பொழுது அவருக்கு அமைந்தது.

மனைவி பாதையைப் பெருக்கிக் கொண்டிருக்க இடுப்பில் கைவைத்தவாறு நிற்பதென்பதும் இதுவே முதல் தடவையென உணர்ந்தார்.

அதிகாலைப்பனி காரணமாக தலையில் அணிந்திருந்த தொப்பிகளை இவரைக் கண்டதும் கழற்றிக் கொண்டார்கள் பாதையில் சென்றுகொண்டிருந்த சிலர். பெண்கள் மரியாதைப் புன்னகையுடன் ஓரமாக நடந்தார்கள்.

'வணக்கம் சேர்!' 'குட்மோர்னிங் சேர்!' என்று சிலர் மரியாதையுடன் சொல்லிச் சென்றார்கள்.

ஊரில் தமக்கு இந்தளவு மதிப்பும், மதியாதையும் இருப்பதை அவர் உணர்ந்து கொண்டபோது கண்கள் நனைந்தன. பின்னங்கையால் துடைத்துக்ெகாண்டு பூரித்துப்போனார் கனகசபை.

*

தனது இளைய மகன் பாடசாலையிலிருந்து வீடு வந்தவுடன் புதிய அதிபர் பற்றி விசாரித்தார்.

"ரொம்ப நல்லவரு! அவ்வளவு வயது இல்ல. அழகா உடுத்தியிருக்கிறாரு!" என்றான் சின்னவன்.

கனகசபையாரின் நெற்றியில் சுருக்கங்கள் குவிந்து விரிந்தன. தலையை இருபுறமும் அசைத்து மகன் கூறியதைக் கேட்டுக் ெகாண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டார்.

"டிப் டொப்பா உடுத்துனா மட்டும் போதாது! வயசு குறைஞ்சவங்களுக்கு புள்ளைக பயப்படுறதில்ல. முந்தியெல்லாம் என்னோட நிழலுக்ேக புள்ளைக பயப்படுவாங்க!" திருவாய் மலர்ந்தார் கனகசபை.

*

தவணை விடுமுறைக்காலம் ஆரம்பமாகியது. கொழும்பில் தங்கியிருந்து படிக்கும் பிள்ளைகள் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். பெரிய மகள் வீட்டுக்குள் நுழையும்போதே,

"ஐயோ! சுருட்டு வாடை!" என்று கூறிக்ெகாண்டே முகம் சுளித்தாள்.

பிள்ளைகளின் நடை, உடை, பாவனைகள் அவ்வளவாக கனகசபையாருக்குப் பிடிக்கவில்லை. பாடசாலை விடுமுறை கொடுத்தவுடனேயே பெரியவன் செய்த முதல் வேலை தலைமுடியை புதிய வடிவில் வெட்டிக்ெகாண்டதுதான். கொண்டைக் குருவியின் தலையைப் போலவும், சேவற்கோழியின் சிகையைப் போன்றும் சிலிர்த்துக்ெகாண்டிருந்தது அவனது சிகையலங்காரம். அவனது மேலாடையும், கீழாடையும் நவீனம் பாடின. சில நாட்களாக இதனை அவதானித்துக் கொண்டிருந்தவர் அவனை அழைத்தார்.

'என்னப்பா, இந்த உடுப்பும், தலையும்! வெறும் பெனியன் மாதிரி சட்டை! கால்சட்டையில இத்தனை கிழிசல்கள். பிச்சைக்காரனோட உடுப்பு மாதிரி. இந்த ஊர்ல உன்னோட தலையும், உடுப்பும் வித்தியாசமான பிறவியா மத்தவங்க பார்வையில விழும்.

"அப்பா. உங்களுக்கு என்ன தெரியும்? நாங்க என்ன இன்னமும் சின்ன புள்ளைகளா? அங்க போய் பார்க்கணும். பொடியனுக எப்படியெல்லாம் உடுத்துறாங்க, எப்படியெல்லாம் ஹேர் கட்டிங் போட்டுக்கறாங்கன்னு....!"

தலையை கையால் நீவிக்ெகாண்டிருந்த அவனிடமிருந்து சர்வசாதாரணமாக பதில் வந்தது.

"ஆனா.... உடுத்துற உடுப்புலேயும் ஒரு ஒழுங்குமுறை இருக்குதில்லே...! அத வெச்சி நல்ல குடும்பத்து பிள்ளைகள் அப்படின்னும், நாதாரி குடும்பத்து பிள்ளைகள்னும் ஊர் சொல்லும்!" சற்று கோபத்துடன் அவர் கூற, அவனோ தங்கைகளைப் பார்த்து தந்தையைப் பரிகசிப்பது போன்று கண் சிமிட்டினான்.

"அந்த கோப்பி காலமெல்லாம் போயிடுச்சி. இப்போ எங்களோட காலம்! நாங்க நீட்டா உடுத்தனும். அப்போ தானே அப்பாவுக்கும் மரியாதை!" எல்லோரும் விளங்கிக் கொள்ளக்கூடியவாறு கூறிவிட்டு வெளியில் இறங்கி பாதையில் நடந்தான்.

ஏய்! இந்தாபாரு! நம்ம மூத்த மகனா அவன்? கொழும்புக்கு போறதுக்கு முந்தி என்னோட முகத்தப் பார்த்து பேமாட்டன்! இப்போ பார்த்தியா எப்படி பேசறான்னு! எல்லோரும் உன்னோட வளர்ப்பு'

இருப்பின் மீது இரு கைகளையும் வைத்துக்ெகாண்டு வீடுபூராவும் திரியலானார்.

'சரி விடுங்க! சின்ன வயசு தான்? அந்த புள்ளைகளும் கொழும்பு புள்ளைக மாதிரி நடந்துகொள்ள வேன்னா... அவங்க தான் அவமானப்படுவாங்க!'

அவரது கோபத்தைத் தணிப்பதற்காக இப்படி கூறினாள் மனைவி. சில நிமிட நேரம் சிந்தனை வாய்ப்பட்ட கனகசபை தலைவாரிக்ெகாள்வதற்காக சீப்பைத் தேடிக்ெகாண்டு பெண் பிள்ளைகளின் அறைக்குள் நுழைந்தார்.

அறைச்சுவர்கள் முழுவதும் சினிமா நடிகர்களினதும், நடிகைகளினதும் படங்கள் ஒட்டப்பட்டு வண்ணமயமாக காட்சி தந்தன. அறைச் சுவர்களை ஆக்கிமித்திருந்த அந்த படங்களில் காணப்பட்ட நடிகர்களும், நடிகைகளும் அரைவாசியும், முக்கால்வாசியுமாக நிர்வாணக் கோலத்தில் சேட்டைகளில் ஈடுபட்டிருப்பதை கண்டார் கனகசபை.

முகம் சுளித்துக்ெகாண்டே படங்களின் மீது பார்வையைச் செலுத்தியவர் ஆத்திர மேலீட்டால் சில படங்களைத் தாறுமாறாகக் கிழித்து எறியலானார். அடுத்த படத்தில் அவர் கைவைக்கும்போது அவரது பெண் பிள்ளைகள் அறைக்குள் ஓடிவந்தார்கள்.

"அப்பாவுக்கு என்ன, பேய் பிடிச்சிருக்குதா?" மூத்தவள் அவரை பின்னால் தள்ளிவிட்டாள். இரண்டு மூன்று அறைகள் அவளது கன்னங்களில் 'பளார்' ஆகின. சிறியவள் அவரை முறைத்துப் பார்த்துக்ெகாண்டு நின்றாள்.

"நீ என்ன? நீயும் எனக்கு பாடம் போதிக்க வர்றியா?" அவள் மீதும் எரிந்து விழுந்தார். மனைவி அலறி அடித்துக்ெகாண்டு அறைக்குள் ஓடி வந்தாள்.

"பார்தியா ஒன்னோட வளர்ப்பு எப்படின்னு? இந்த மாதிரி அம்மண படங்கள வீட்டுக்குள்ள ஒட்டிவெச்சி வேடிக்ைக பார்க்கிறாளுக! அந்தளவுக்கு இவளுக கெட்டுக் குட்டிச்சுவரா போயிட்டாளுக!"

களைத்துப் ​போய் மூச்சிரைக்க சாய்வு நாற்காலியில் சாயலானார்.

"இந்தா பாருங்கடி! ஏன்டி இந்த மாதிரி படங்கள வீட்டுக்குள்ள ஒட்டிவெச்சி வீட்ட அசிங்கப்படுத்தறீங்க? ​வேண்டிய மட்டும் நல்ல நல்ல படங்கள் கடைகள்ல விக்கலியா! அதுகள வாங்கிவந்து வீடுபூராவும் ஒட்டுனாலும் நாங்க ஒன்னும் சொல்லப் போறதில்ல. இதென்னடி கேவலம்!"

கோபத்தோடு தாய் பேசிக்ெகாண்டிருந்தாள். நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர் பெண் பிள்ளைகள் இருவரும். சற்றே அமைதி கொண்ட கனகசபை மீண்டும் வாய் திறந்தார்.

"இந்தா பாருங்க! நீங்கள்லாம் இன்னமும் எங்களோட கட்டுப்பாட்டுல இருக்கிறீங்க. நாங்க சொல்றமாதிரி நீங்க நடந்துகொள்ளனும். இல்லேன்னா... இன்னும் கொஞ்சகாலம் நான் இந்த ஊர்ல மதிப்போட, மரியாதையோட இருந்துட்டு கண்ணமூடுறதுக்கு வழிவிட்டுட்டு எங்கேயாவது போய் தொலையுங்க! இப்போ... நான் உங்களுக்ெகல்லாம் செல்லாக் காசாகிட்டேன்.... இல்ல!"

வேதனையுடன் மேசைமீது தலைகவிழ்ந்தார். "எனக்கு என்னோட சின்ன பையனையாவது மனுசனாக்க முடியாம போகுமோ தெரியாது!" முனகிக்ெகாண்டே தாரை தாரையாக கண்ணீர் சொரிந்தார் கனகசபை.

பொறுக்க முடியாத வேதனையுடன் கண்களை குளமாக்கிக்ெகாண்டாள் மனைவி. இத்தனை வருடகால தாம்பத்திய வாழ்க்ைகயில் இருவருக்குமிடையில் எவ்விதமான சண்டைகளோ, சச்சரவுகளோ, வாய்த்தர்க்கங்களோ ஏற்பட்டதில்லை. அவர் கண் கலங்கி கொள்ள முடியவில்லை.

பெண் பிள்ளைகளுக்கு பெரிய வகுப்பு படிப்பெல்லாம் தேவையில்லையென்று தாம் எடுத்துக் கூறியும் அதனை உதாசீனப்படுத்திவிட்டு அவர்களை கொழும்புக்கு அனுப்பியவர் அவர்.

"இந்தாபார்! முந்தியெல்லாம் பெண்பிள்ளைகளுக்கு படிப்பு தேவையில்லைன்னு சொன்னதெல்லாம் வாஸ்தவம்தான். ஆனா - இப்போ, தொழிலுக்காக படிக்கலேன்னாலும், மனுசனுக்கு படிப்பு மிகமுக்கியம்னு ஆயிடுச்சி. அதனால நம்ம புள்ளைகள நல்ல ஸ்கூல்ல சேர்ந்து பெரிய படிப்பு படிக்க வெச்சிடனும்!" என்று உறுதியாக நின்று அவர்களின் கல்வி நடவடிக்ைககளுக்கு முயற்சியையும், உழைப்பையும் மூலதனமாக்கினார்.

*

அன்று மாலைப் பொழுது. கனகசபையார் தாம் தொழில்புரிந்த பாடசாலை வளாகம் பக்கமாக போய்க்ெகாண்டிருந்தார். அந்த பாடசாலைச் சுற்றுப்புறத்தில் அவர் காலடிபடாத ஓர் அங்குல நிலமேனும் கிடையாது. ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆரம்ப பாடசாலையை உயர்தர வகுப்பு வரையில் கொண்டுவந்து பல்கலைக்கழகத்திற்கு பலரை அனுப்பிவைத்தவர் அவர். அவரை இடமாற்றம் செய்யும் எண்ணம் திணைக்களத்திற்கு ஏற்பட்டதில்லை. பெற்றார்களின் எதிர்ப்புகள் கிளம்புமென நம்பியது வலயக் கல்விப் பணிமனை.

பாடசாலை பக்கமாக போய்க்ெகாண்டிருந்தவரின் வழியில் அவரிடம் கல்வி கற்றவர்களில் பலர் அவரைக் கண்டுகொண்டனர். அவர்கள் சிரம் பணிந்து அவருக்கு மரியாதை வார்த்தைகளை கூறினர். "சேர்" என வாய் நிறைய அழைத்து மகிழ்ந்தனர். தெய்வத்தின் முன்னால் நிற்பதுபோல அவர் முன் பக்தியுடன் நின்றனர் சிலர். இன்னும் ஆறே மாதங்களில் ஸ்டெதஸ்கோப்பும் கழுத்துமாக தொழில்புரியப் போகும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவனொருவன் அந்த சந்தடிமிக்க நடுத்தெருவில் அவரது காலைத்தொட்டு வணங்கி தனக்கு பெருமை சேர்த்துக்ெகாண்டான்.

"வாங்க சேர்! இவ்விடம் வரணும்!" கெஷியர் மேசையை விட்டிறங்கி வாசலில் வந்து நின்று உள்ளே வருமாறு மலையாள வாசனையுடன் அழைத்தார் அசனார் ஹோட்டல் முதலாளி கோயா காக்க. அவரது பிள்ளைகளுக்குக் கனகசபையாரின் பள்ளியில் கற்று உயர் கல்விக்குச் சென்று இப்போது பெரிய தொழிலில் இருக்கிறார்கள்.

அங்கு போடப்பட்டிருந்த கதிரைகளிலேயே ஆகச் சிறந்த கதிரையொன்றை கொண்டுவந்து அதில் அமரும்படி பணிவாக வேண்டினார் காக்கா. அங்கே தேனீர் அருந்திவிட்டு விடைபெற்றார் நல்லாசான்.

"நம்ம பெரிய சேர் கிட்ட படிச்ச எத்தனை பேர் இன்னிக்கு அரசாங்க தொழில் செய்றாங்க! டீச்சர் வேலையில் மட்டும் எத்தனை பேர்!

"ஆமா... நம்ம புள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் இன்னிக்கி வேற லெவலுக்கு போறதுக்கு காரணமே "தங்கமானவரு!"

"இப்போவெல்லாம் ஆசிரியர் தொழில் செய்றவங்க டியூசன் கிளாஸ் வெச்சி உழைக்கிறாங்க! பொதுமக்களோட வரி பணத்துல படிச்சி வேலைக்கு வந்தவங்க அதே பொதுமக்களுக்கு படிப்ப விக்கிறாங்க! மாசா மாசம் பீஸ் வாங்கிவிட்டு படிப்பிச்சவங்க இன்னிக்கி ஒவ்வொருநாளும் அம்பது ரூபா, நூறு ரூபான்னு டெயிலி கலேக்‌ஷனா பீஸ் வாங்குறாங்க! ஐநூறு ரூபாவுக்கும் எழுநூறு ரூபாவுக்கும் மாரடிக்கிற பக்கத்து தோட்டத்து சனங்களோட புள்ளைகள் டியூசன் போக முடியாம தவிக்கிறாங்க! ஆனா.... கனகசபை சேர் ஸ்கூல் வேலை முடிஞ்சப்பறமும் அந்திவரைக்கும் புள்ளைகளுக்கு பின்னேர வகுப்பு எடுத்தாரு! ஒரு சதம்கூட பீஸ் வாங்குனதில்ல!"

அவரைப் ​போகவிட்டு இப்படியெல்லாம் அந்த ஊர் வாய் மென்று கொண்டிருந்தது. அவர் மகிழ்ச்சியுடன் வீட்டை நோக்கி நடந்தார்.

கலங்கிய கண்களோடு வெளியேறிய தனது கணவர் பூரித்த முகத்தோடு உற்சாகம் கலந்து நடையுமாக வீடு திரும்புவது கண்டு திகைத்தாள் மனைவி. அவருக்கு இருப்பு கொள்ளவில்லை.

"இந்தா பார் சாரதா! நான் தோல்வியடையல! எத்தனையோ புள்ளைகள வளர்த்து பெரியவங்களாக்கிட்டேன். மூனேமூனு புள்ளைகள் மட்டும்தான் எனக்கு கீழ் படியல்ல. பாதையில போறப்போ, வர்றப்போ, கடை வீதியில் நடக்கிறப்போ என்னோட மத்த புள்ளைக அத்தனை பேரும் எனக்கு மரியாதை கொடுக்கறாங்க. கடவுளா மதிக்கிறாங்க. சந்தோஷமா கண் மூடுறதுக்கு இது போதும் எனக்கு!"

மனைவியிடம் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டே சாய்வு நாற்காலியில் சாய்ந்து ஓய்வெடுக்கலானார் கனகசபை.

சி. கே. முருகேசு

Comments