சுயநல அரசியலுக்கு சிறந்ததொரு பாடம் | தினகரன் வாரமஞ்சரி

சுயநல அரசியலுக்கு சிறந்ததொரு பாடம்

பொதுத் தேர்தல் நடத்துவதுபற்றி உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுத் தீர்ப்புதான் இன்றைய அரசியல் பேசுபொருள்.

எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை  கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை எப்படியாவது கூட்டிவிடுவது, அதன் மூலம் இழக்கப்பட்ட ஓய்வூதியத்திற்கு வழிபிறக்குமா? ஜனாதிபதியின் காலைப் பிடித்து இழுத்துவிட முடியுமா? என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் கனவுக்கோட்டை, நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் சரிந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க நீதிமன்ற தீர்ப்பு வரவேண்டும் எனத் தொடர்ச்சியாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்து வந்த நிலையில், பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியையும், எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்குத் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த வர்த்தமானியையும் வலுவிழக்கச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் அவற்றைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பினை அறிவித்ததை அடுத்து தேர்தல் திகதி மற்றும் தேர்தலை நடத்தினால் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து  தேர்தல்கள் ஆணைக்குழு கூடி ஆராய்ந்துள்ளது.

தீர்ப்பு வந்துள்ள காரணத்தினால் அடுத்ததாக திகதி குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் எவ்வாறு இருப்பினும் தேர்தலை நடத்த 60 தொடக்கம் 70 நாட்கள் வரை தேவைப்படும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார். அதற்கமைய பார்த்தால் ஓகஸ்ட் மாதம் இறுதி அல்லது செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் பொதுத் தேர்தலை நடத்த முடியும். அதேபோல் இம்முறை தேர்தலை நடத்த வழமையை விடவும் அதிகமான நிதி தேவைப்படுகின்றது. எவ்வளவு நிதி தேவைப்பட்டாலும் அதனை அரசாங்கம் வழங்க வேண்டும். திறைசேரியில் அதற்கான நிதி ஒதுக்கித்தரப்படும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுத் தேர்தலை நடத்துவதென்றால் முறையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றியாக வேண்டும். சமூக இடைவெளியை கையாண்டு மக்கள் வாக்களிப்பது மட்டுமல்ல தேர்தல் பிரசாரங்களை செய்யும் போதும் சமூக இடைவெளியை கையாள வேண்டும். இந்தத் தேர்தல் மட்டும் அல்ல அடுத்து நடத்த வேண்டிய மாகாணசபை தேர்தலையும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியே நடத்த வேண்டும். ஏனெனில் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோயின் தாக்கம் 2021 ஆம் ஆண்டு இறுதிவரை இருக்கும் என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். இதன்படியே தேர்தலை நடத்த வேண்டும் என்று ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பது தொடர்பாக அறிய சில கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஒத்திகை நடைபெறுமென தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் தேர்தலை நீண்ட காலத்திற்கு ஒத்திவைப்பதன் மூலம் பல்வேறு வழிகளிலும் தமக்குச் சாதகத்தை ஏற்படுத்திக்கொள்ளவே எதிர்க்கட்சியினர் முயற்சித்தனர். அவர்கள் கொரோனாவைப் பற்றிச் சிந்தித்தார்களோ இல்லையோ, அரசியலில் அடுத்த கட்ட காய்நகர்த்தலை மிக மிக உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறப் போவதில்லை.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டை வழிநடத்த ஓர் உறுதியான தலைமைத்துவம் தேவை என்றே நாட்டு மக்கள் கருதுகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவராக, உரியவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கிடைத்திருப்பது இலங்கை மக்கள் செய்த பாக்கியம் என்கிறார்கள்.

திருத்தியமைக்கப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே கட்சியினராக இருக்கிறார்கள். இல்லையேல், மற்றோர் அரசியலமைப்பு நெருக்கடி, ஆயிரக்கணக்கானோரை கொரோனாவிற்கு இரையாக்கியிருக்கும்! இது நாடளாவிய ரீதியில் ஒலிக்கும் சிறிமான் பொதுசனத்தின் குரல்.

நெருக்கடியான நிலைபற்றிப் பேசுவதற்குப் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டாலும், நாட்டைச் சீரழிப்பதற்குச் சட்ட புத்தகத்தைத் தூசு தட்டியவர்கள், இப்போது மட்டும் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

ஏனெனில், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், பாராளுமன்ற அமர்வுகள் தொடர்பான 70 ஆவது சரத்தின் 7ஆவது உப பிரிவின்படி, கலைக்கப்பட ஒரு பாராளுமன்றத்தை, நாட்டில் நெருக்கடியான ஒரு சூழ்நிலை காணப்படுவதாக ஜனாதிபதி திருப்தியடைந்தால் மீண்டும் கூட்டலாம் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

அப்படியென்றால், உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், கொரோனா ஒழிப்பில் இலங்கை திருப்தியான மட்டத்தில் அல்லவா இருக்கிறது? நெருக்கடியான நிலை இருப்பதாக யார்தான் திருப்திகொள்வார்கள்? கடந்த முறை எப்படி ஒரு சொல்லாடலை வைத்துக்கொண்டு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவறிழைத்துவிட்டார்  என்று சொல்ல முடிந்ததோ, அவ்வாறான ஒரு சொல்லாடல் பாராளுமன்றத்தைக் கூட்டாமல் இருப்பதற்கும் வழிவகை செய்திருக்கிறது என்பதே யதார்த்தம். அரசியலமைப்பைக் கூர்ந்து வாசித்தால் இதனைப் புரிந்துகொள்ள முடியும். அப்படியிருந்தும் சில சட்ட வல்லுநர்கள் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் விதமாகத்தான் நடந்துகொண்டிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் ஏற்படுவதற்கு முன்பிருந்த உலகமோ உலகநாடுகளோ இப்போது இல்லை. உலகமயம், திறந்த பொருளாதாரம், உலகம் ஒரு கிராமம் என்ற பொருளாதாரக் கட்டமைப்பு சிதைந்து பல மாதங்களாகிவிட்டன.

இனிவரும் காலத்தில் உலகின் ஒவ்வொரு நாடும் தத்தம் அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் கவனம் செலுத்த வேண்டியிருக்குமே தவிர, உலகத்தைப்பற்றிச் சிந்திப்பதற்கு அவகாசம் இருக்காது. இந்தப் பாடத்தையே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் புகட்டியிருக்கிறது.

Comments