உலகம் மீண்டும் ஒரு அணுவாயுத போருக்குள் நுழைகிறதா? | தினகரன் வாரமஞ்சரி

உலகம் மீண்டும் ஒரு அணுவாயுத போருக்குள் நுழைகிறதா?

கொரோனா பெரும் அரசியல் சூறாவளியை ஏற்படுத்திவிட்டதாகவே தெரிகிறது. மென் அதிகாரத்தை உலகம் முழுவதும் பரப்பி வந்த சீனாவும் சீனாவுடன் நட்புறவாடிய அமெரிக்காவும் எதிரிகளாக மாறும் நிலை ஏற்பட்டுவிட்டது. சீனாவுக்கு எதிராக பேரெழுச்சியுடன் உலகம் முழுவதும் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தி வரும் அமெரிக்காவின் நகர்வு பாரிய போருக்குள் உலகத்தை நகர்த்துவது போல் தென்படுகிறது. ஆனால் அவை எல்லாம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அற்றுவிடும் என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை. இக்கட்டுரையும் உலகளாவிய ரீதியில் மீண்டும் வலுவான சக்தியாக அணுவாயுதம் எழுச்சியடைய வாய்ப்புள்ளதா என்பதை தேடுவதாக அமையவுள்ளது.

முதலாவது நான்கு வாரங்களுக்கு மேல்  அதிக விமர்சனங்களுக்கும் வதந்திகளுக்கும் அகப்பட்ட வடகொரிய ஜனாதிபதி கிம்-ஜோங்-உன் தமது இராணுவத்துடனான சந்திப்பு ஒன்றினை (24.05.2020) அணுவாயுதங்களுக்கான புதிய கொள்கை ஒன்றினை உருவாக்குவது பற்றிய உரையாடலில் அணுவாயுதங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் அணுவாயுதப் போர் தடுப்புக்களை தேசத்தின் எல்லைகளை நோக்கி அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்ததுடன் ஏவுகணைத் தொழில் நுட்பத்தினையும் அதன் எண்ணிக்கைகளையும் அதிகரிப்பதன் மூலம் தேசத்தின் மீது எதிரிகளது தாக்குதல்களை முறியடிக்க முடியும் எனவும் தெரிவித்தார். மூலோபாயங்களை வலுவாகக் கொண்ட தாக்குதல் படைப்பிரிவு உயர் எச்சரிக்கையுடன் எப்போதும் தயாராக இருத்தல் வேண்டும் எனவும் அப்போது கிம் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது வோசிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில் சீனாவின் லாப் தூர் அணு சோதனை நிலையத்தில் நிலத்திற்கு கீழே ஒர் அணுவாயுதப் பரிசோதனையை சீனா மேற்கொண்டிருக்கலாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை வழங்கிய தகவலை ஆதாரப்படுத்தியுள்ளது. அது மட்டுமன்றி சீனா தனது அணுவாயுதங்களை நவீனமயப்படுத்துவதாகவும் அமெரிக்;க வெளியுறவுத் துறை குற்றம் சாட்டியுள்ளதாக போஸ்ட் தெரிவித்துள்ளது. அதே நேரம் போஸ்ட் பத்திரிகை அமெரிக்கா தனது அணுவாயுதங்களை நவீன மயப்படுத்த வேண்டும் எனவும் ரஷ்யாவுடன் செய்யப்பட்ட வோர்சோ உடன்பாட்டிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளது.

மூன்றாவது அமெரிக்கா லேசர் கதிர் மூலம் விமானங்களை சுட்டுவீழ்த்தும் பரிசோதனையை வெற்றிகரமாக செய்துள்ளது. இது ஏறக்குறைய ஆயுதமற்ற போருக்கான மார்க்கமாக அமைவதுடன் போரியல் வலுவில் முதன்மையான நிலை என்றும் அளவீடு செய்யப்படுகிறது. குறிப்பாக ஈரானிய படைத்துறைத் தளபதியை அமெரிக்க ஆளில்லாத விமானம் மூலம் கொலை செய்தமை அதன் தொழில்நுட்பத்தின் வலிமையைக் காட்டியது. அவ்வாறே மீண்டும் ஒரு பரிசோதனையை செய்துள்ளது. தென் சீனக்கடலில் போர் உத்திகளுடன் அமெரிக்க் சீனத் தரப்பு மோதுவதற்கு தயாராகும் நிலையில் அமெரிக்காவின் லேசர் பரிசோதனை அதனது போர்த் திறனைக் கூட்டியுள்ளதை காட்டுகிறது.

நான்காவது சீனாவின் பாராளுமன்றமான காங்கிரஸ் 2020க்கான கூட்டத்தொடரில் சீன ஜனாதிபதி அதன் இராணுவத்தை  போருக்கான தயார் நிலையில் இருக்குமாறு பணித்துள்ளார். உலகத்தில் ஏற்பட்டுவரும் நெருக்கடிகள் சீனாவின் தேசிய இருப்பினை பாதிக்காத வகையில் அமைய வேண்டுமாயின் சீன இராணுவம் தயார் நிலையில் இருத்தல் வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐந்தாவது தைவான் அமெரிக்கா உட்பட உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படும் நிலை வளர்ந்து செல்கிறது. அமெரிக்கா தைவானை அங்கீகரிக்கும் நிலைக்கு உலக நாடுகளிடம் ஆதரவு தேடிவருகிறது. இதனை விட்டுக் கொடுக்கும் நிலையில் சீன இல்லை என்பதும் அடுத்து ஒரு போருக்கு தயாராவதில் சீனா கவனம் கொள்கிறது என்பதும் தெளிவாக தெரிகிறது. தைவான் இழக்கப்படுதல் என்பது வரலாற்றில் சீனாவால் நினைத்துக் கூடப்பார்க்க முடியாத விடயமாகவே உள்ளது.  

ஆறாவது சீனா தனது பிரஜைகளை இந்தியாவிலிருந்து விலக்கிக் கொள்கிறது. இந்தியாவுடனான முறுகல் மட்டுமல்ல தைவானுக்கு எதிரான போரையும் கருத்தில் கொண்டு சீனா செயல்படுவதாகவே தெரிகிறது. அல்லது தென் சீனக்கடலில் ஏற்பட்டுள்ள அமெரிக்க-சீனப் பதட்டமும் ஒரு காரணமாக அமைய வாய்ப்புள்ளது. எதுவாயினும் சீனப் பிரஜைகள் இந்தியாவிலிருந்து வெளியேறுவது ஏதோ ஒரு முனையில் போர் பற்றிய முடிவை சீன எடுத்த பின்பு நிகழ்வதாக அமைய வாய்ப்புள்ளது. அது மட்டுமன்றி அமெரிக்காவும் சீனாவும் தென் சீனக்கடலில் தமது இராணுவ ஒத்திகைகளை செய்ய ஆரம்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

எனவே ஒரு அணுவாயுதப் போருக்கு போக வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாக எழவாய்பிருந்தாலும் அதன் விளைவு சில வினாடிகளில் போரை முடித்துவிடும் அபாயம் உள்ளது. இவை அனைத்தையும் கடந்து போரின் தாக்கம் சில வேளைகளில் போர்களை தவிர்க்க வைத்துள்ளன. தற்போதைய போக்கானது போருக்குள் உலகம் நகர்வதாகவே தெரிந்தாலும் விளைவுகளால் அவ்வகை நகர்வுகள் பரஸ்பரம் அச்சுறுத்தலாக மாறி முடிவுக்கு வரக்கூடியதாக தெரிகிறது. இந்திய- சீன முறுகலுக்கு தாம் மத்தியஸ்தம் வகிக்க தயார் என அமெரிக்க ஜனாதிபதி அறிவித்ததற்கு பதிலளித்து கருத்து தெரிவுக்கும் போது (27.05.2020) இந்தியாவுக்கான சீன தூதுவர் H.E. Sun Wildong இரு நாடுகளும் தமக்கிடையிலான பிணக்குகளை பேசித் தீர்க்கும் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது இரு நாட்டுக்குமான போரை தவிர்க்க உதவும் என்பது கவனத்திற்குரியது.

கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்

Comments