விளைநிலங்கள் மீதான வெட்டுக்கிளியின் போர் | தினகரன் வாரமஞ்சரி

விளைநிலங்கள் மீதான வெட்டுக்கிளியின் போர்

2020ஆம் ஆண்டு ஆரம்பித்து அரையாண்டு கழிந்துள்ள  நிலையில் உலகம் பல்வேறு அழிவுகளை சந்தித்து வருகின்றது. கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸானது படிப்படியாக உலகம் முழுவதும் பரவலடைந்தது.

இதனால் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து சுமார் மூன்று மாதங்கள் முழு உலகுமே முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தும் பல இலட்சம் மக்கள் நோய்க்குள்ளாகியும் உள்ளனர்.

சர்வதேச ரீதியில் நாடுகளின் போக்குவரத்துக்கள், வர்த்தக, பொருளாதார தொடர்புகள் இடைநிறுத்தப்பட்டன. இவ்வாறு நாடுகள் தம்மை முடக்கிக் கொண்டதால் ஒவ்வொரு நாடுகளினதும் பொருளாதாரம் வெகுவாகவே பாதிக்கப்பட்டது.

இது சர்வதேச பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்; அதிலிருந்து மீள் எழுச்சி பெற நாடுகள் ஒவ்வொன்றும் நீண்ட காலம் போராட வேண்டிய சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு கொரோனாவால் பாதிப்படைந்த உலகம் அதிலிருந்து மெது மெதுவாக மீள முயற்சித்துக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது மற்றுமொரு பாதிப்பு உலகின் சில நாடுகளை சூழ்ந்துள்ளது. இப் பாதிப்பினால் பஞ்சம் ஏற்படுவதற்கான அச்சுறுத்தலும் தோன்றியுள்ளது.

ஆம், வெட்டுக்கிளி என்ற பூச்சியானது உலகின் சில நாடுகளின் விளைநிலங்கள் மீது போர் தொடுத்துள்ளன. ஏற்கனவே வறுமையில் சிக்கியுள்ள ஆப்பிரிக்காவில் தொடங்கி யெமன், பஹ்ரைன், குவைத், கட்டார் ஈரான், சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பயிர் நிலங்களை இலக்கு வைத்து அவை தமது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.

இதனால் இந் நாடுகளில் பல்லாயிரம் ஏக்கர் வயல், தானிய நிலங்கள் துவம்சம் செய்யப்பட்டுள்ளன. இதனால் கோடிக்கணக்கான ரூபா  நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன் இந் நாடுகளில் பாரிய உணவு பஞ்சம் ஏற்படுவதற்கான அச்சமும் காணப்படுகின்றது.

குறிப்பாக ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய  அமைப்பின் பிரதிநிதிகள், கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் வெட்டுக்கிளிகளால் இந்திய உணவு உற்பத்திக்கு ஆபத்து இருக்கும் என எச்சரித்திருந்தனர்.

அவர்கள் எச்சரித்தது போலவே வெட்டுக்கிளிகள் தமது கைவரிசையை காட்டியிருந்தன. இந்தியாவின் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசங்களில் உள்ள பயிர் நிலங்களை இவை அழிந்துள்ளன.

சுமார் 5,00,000 ஹெக்டயர் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை இவை அழித்துள்ளதாகவும் அவற்றில் ஆமணக்கு, சீரகம், பருத்தி, கடுகு, உருளைகிழங்கு போன்ற பயிர்கள் உள்ளடங்குவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரை இந்தியாவின் 41 மாவட்டங்களில் அவை அழிவை ஏற்படுத்தியுள்ளன. இந்தியா மீது இவ் வெட்டுக்கிளிகள் நடத்தியுள்ள தாக்குதலானது 27 ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்றுள்ளதாக இந்திய விவசாயத் துறை தெரிவித்துள்ளது.

17ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் மதுரையில் இவ் வெட்டுக்கிளிகளால் பாரிய அழிவு ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.  அதேபோன்று 1875இல் அமெரிக்காவிலும் வெட்டுக்கிளி தாக்கியதாக கூறப்படுகின்றது.

1930களின் பிற்பகுதி முதல் 1960 வரை பெருவாரியாக வெட்டுக்களின் தாக்கம் காணப்பட்டது. எனினும் அதன் பின்னர் அது மந்த நிலையிலேயே காணப்பட்டது. அத்துடன்  இவை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் பெருந்திரளாக வாழ்வதாக எமது புராண இதிகாச கதைகளிலும் பைபிள் போன்ற புனித நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவின் வட மாநிலங்கள் மீது தாக்குதல் நடத்திய இவ் வெட்டுக்கிளிகளால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என தமிழ்நாடு விவசாயத்துறை அறிவித்திருந்த போதும்; கிருஸ்ணகிரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் காணப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை இப் பாலைவன வெட்டுக்கிளிகள் (Desert Locuts) தாக்கும் சந்தர்ப்பம் காணப்பட்டால் அதிலிருந்து தமிழக விவசாயத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் வானூர்தி துறை ஆயத்தமாகி  வருவதாக அப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இவை தமிழகத்துக்கு வந்தால் வலை அமைத்து டிரோன் உதவியுடன் சுறா மீன் கடலில் வேட்டையாடும் வியூகத்தை பின்பற்றி பிடிக்கவும், தடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வெட்டுக்கிளிகளில் புரத சத்து அதிகம் இருப்பதால் பிடிக்கப்படும் வெட்டுக்கிளியை மண்ணுக்கு உரமாக பயன்படுத்த முடியும் எனவும் அண்ணா பல்கலைகழகத்தின்  வானூர்தி துறையின்    மூத்த விஞ்ஞானி வசந்த்ராஜ் கூறியுள்ளார்.

இதேவேளை எமது நாட்டிலும் குருநாகல்- மாவத்தகம, வடக்கில் யாழ்.குப்பிழான் மற்றும் கிளிநொச்சி திருவையாறு  ஆகிய பிரதேசங்களில் வெட்டுக்கிளிகளால் தமது விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள் இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்ட அழிவு போல இங்கும் ஏற்பட்டுவிடுமோ என அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகளுக்கும் இந்தியாவின் வட மாநிலங்கள் மீது பாதிப்பை ஏற்படுத்திய வெட்டுக்கிளிகளுக்கும் தொடர்பில்லை எனவும் அவை இரண்டும் வேறு வேறானவை எனவும் சூழலியலாளரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இந்தியா உட்பட ஆபிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வெட்டுக்கிளி 'பாலைவன வெட்டுக்கிளி' (Desert Locuts) எனக் கூறப்படுகின்றது. இவை பாலைவனத்தில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.

இவற்றின் வாழ்க்கை முறையானது ஏனைய பூச்சி இனங்கள் போலில்லை. அதாவது ஏனைய பூச்சிகள் முட்டை - குடம்பி - கூட்டுப்புழு - நிறையுடலி என்ற நிலையில் காணப்படும். ஆனால் இவ் வெட்டுக்கிளியானது முட்டை - கூட்டுப்புழு - நிறையுடலி என்ற நிலையில் காணப்படும். அதேநேரம் இவற்றின் கூட்டுப்புழுக்கள் உணவை உண்பவையாகவும் காணப்படுகின்றன. இது இவற்றின் விசேட இயல்பாகும்.

இவை மூன்று மாதங்களில் இருபது மடங்காகவும், ஆறு மாதங்களில் 400 மடங்காகவும், ஒன்பது மாதங்களில் 8 ஆயிரம் மடங்காகவும் இனப்பெருக்கம் செய்யக்கூடியது.

இது தனித்து வாழக்கூடிய உயிரினமாகும். ஆனால் அவை ஒன்று சேர்ந்தால் அவற்றின் இயல்பு மாறுபட்டுவிடும். இவை பெருந்திரளாக இடம்பெயரக்கூடியவை. அவ்வாறு இடம்பெயரும் போது 100 கிலோ மீற்றர் தூரத்துக்கு நீண்டு இருக்கும். இதற்குள் சுமார் 10 பில்லியன் வெட்டுக்கிளிகள் அடங்கியிருக்கும்.

அதேநேரம் இவை ஒரு நாளில் 200 கிலோ மீற்றர் தூரத்தை கடக்கக்கூடியவையாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 2 ஆயிரம் அடி உயரத்திலும் பறந்து கடக்கக்கூடியவை. கடந்த காலங்களில் இவை செங்கடல் மற்றும் கரீபியன் கடல் போன்றவற்றை கடந்து சென்றுள்ளன. ஆனால் இமயமலை போன்ற குளிர் நிறைந்த பகுதிகளை கடக்கமாட்டாதவை.

இவ்வாறு இவை இடம்பெயரும் போது தமது பயணப் பாதையில் காணப்படும் வயல் நிலங்கள், மேய்ச்சல் தரைகள் போன்ற பச்சையாக உள்ள அனைத்து பயிர்களையும் அரைத்து உண்டுவிடும். ஒரு பாலைவன வெட்டுக்கிளி ஒரு நாளில் தனது உடல் எடைக்கு சமனான அதாவது 2 கிராம் உணவை உண்ணும்.

2500 பேர் ஒரு வருடத்தில் உண்ணும் உணவை ஒரு நாளில் இவை உண்டு முடிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயத்துக்கு பொறுப்பான நிறுவனம் அறிவித்துள்ளது.

இவை எப்போதும் இடம்பெயரும் தன்மை கொண்டவையல்ல. ஆனால் காலநிலை மற்றும் சூழ்நிலைகளை பொறுத்து அது மாறுபடும். காற்றின் வேகத்துக்கு ஏற்ப அவை இடம்பெயரக் கூடியவை. அந்தவகையில் தற்போது இந்தியாவில் தாக்கியுள்ள வெட்டுக்கிளி இலங்கைக்கு வராது என்றோ அல்லது வரும் என்றோ உறுதியாக கூறமுடியாது.

ஆனால் தற்போது குருநாகல் பகுதியில் இனங்காணப்பட்டுள்ள வெட்டுக்கிளி பாலைவன வெட்டுக்கிளியல்ல. இது இலங்கைக்கே உரித்தான வெட்டுக்கிளியாகும். அது பீடையாக தற்போது பரவியுள்ள போதும் இடம்பெயரும் தன்மை கொண்டதல்ல.

அத்துடன் எமது வயல் நிலங்கள் இயற்கை சமநிலையிலேயே உள்ளன. அதாவது அங்கு செம்பகம், புழுனி, குருவியினங்கள் இருக்கும். அவை அங்குள்ள வெட்டுக்கிளி, மயிர்க்கொட்டி போன்ற பயிர்களுக்கு தீங்கான பூச்சியினங்களை தமக்கு இரையாக்கி கொள்வதன் மூலம் இயற்கை சமநிலை பேணப்படுகின்றது.

இந்த வெட்டுக்கிளியை அழிப்பதற்கு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்? என்று கேட்டதற்கு ஒரு பீடையை உயிரியல் ஆட்சி முறையில் அழிப்பது என்பதுவே சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பானதாகும். அதாவது குறித்த பீடையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு பங்கஸ் அல்லது பக்றீரியாவை உருவாக்கி அதனை அழிப்பதே உயிரியல் ஆட்சி முறையாகும்.

ஆனால் அதனை மேற்கொள்வதற்கு நீண்ட காலம் தேவைப்படும். இது தற்போது பெருமளவில் உற்பத்தியாகியுள்ளது. உயிரியல் ஆட்சி முறையில் அதனை அழிப்பது இப்போது சாத்தியமாகாது. எனவே தற்போது பூச்சி கொல்லியினை விசிறியே இவற்றை அழிக்க முடியும் என்றார்

முன்கூட்டியே மேற்கொள்ளக் கூடிய தற்காப்பு நடவடிக்கைகள் எதுவும் உள்ளனவா?

அவ்வாறு எதுவும் இல்லை. ஆனால் இது தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்பூட்டல்களை மேற்கொள்ள முடியும். அதாவது எமது நிலத்துக்கே உரிய வெட்டுக்கிளி இனங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு நன்கு தெரியும்.

அதனை விடுத்து புதிதாக வெட்டுக்கிளிகள் வருகின்ற போது அது தொடர்பாக விவசாய போதனாசிரியர் ஊடாக விவசாய திணைக்களத்துக்கு தெரியப்படுத்துவதன் மூலம், சிறியளவில் இருக்கும் போதே அவற்றை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

எனவே வெட்டுக்கிளிகளின் தாக்கம் எதிர்காலத்தில் எமது பகுதிகளில் ஏற்பட்டால் அவற்றிலிருந்து எமது விளை நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக ஆக்கபூர்வமான திட்டங்களை வகுக்க வேண்டியதும், அது தொடர்பாக விவசாயிகளுக்கு அறிவூட்ட வேண்டியதும் அவசியமாகும்.

குறிப்பாக தமிழக விவசாயத்துறை பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பற்ற வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்தினை பயன்படுத்தல், மலத்தியன் மருந்தினை பயன்படுத்தல், பெரிய உழவு இயந்திரங்கள் மற்றும் தீயணைக்கும் வாகனங்கள் மூலம் பூச்சி கொல்லிகளை வீசிறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

அது தவிர உயிரியல் கட்டுப்பாட்டு காரணியான மெட்டாரைசியம் அனிசோபிலே என்ற எதிர் உயிர் பூஞ்சாணத்தினை தெளித்தல், வெட்டுக்கிளிகளை உண்ணும் கோழி மற்றும் பறவைகளை பயன்படுத்தல் மற்றும் அரச அனுமதியுடன் பூச்சி மருந்தினை ஹெலிகாப்டர் அல்லது ஆளில்லா விமானம் மூலம் தெளித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள விவசாயத்துறை  நடவடிக்கை எடுத்துள்ளது.

இந் நிலையில் எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வடமாகாண விவசாய பணிப்பாளர் சிவபாதம் சிவகுமார் கூறுகையில்,

குருநாகல் மாவத்தகம பகுதியில் காணப்பட்ட வெட்டுக்கிளி தொடர்பாக எமது விவசாயப் பணிப்பாளர் நேரில் சென்று ஆராய்ந்திருந்தார். அது எமது நாட்டுக்குரிய வெட்டுக்கிளியாகும். எனினும் அது அதிகளவில் பரவியுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் வெட்டுக்கிளி முட்டையிடும் பகுதிகளை உழுதுவிடுவதன் மூலமும், உழ முடியாத இடங்களில் ரோலர் போட்டு கிளறி விடுவதன் மூலமும் அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

இது தொடர்பாக நாம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அத்துடன் இவை குறுகியளவில் காணப்படும் போது அதனை இயற்கை முறைகளை பயன்படுத்தி அழிப்பதற்கான நடவடிக்கையும், அதேநேரம் அதிகளவில் பெருகும் போது பூச்சி மருந்துகளை தெளித்து அழிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில் பூச்சி மருந்துகளை தெளிப்பதற்கு விவசாயத் திணைக்களத்தின் கீழ் பயிர்ப் பாதுகாப்பு பிரிவினர் உள்ளனர். அவர்கள் இரசாயன பூச்சி மருந்துகளை தெளித்து அவற்றை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். இலங்கையானது ஆபத்தற்ற வலயத்திலேயே தற்போது உள்ளது. இருந்து போதிலும் நாம் இது தொடர்பாக அவதானம் செலுத்தி வருகின்றோம் என்றார்.

ரி.விரூஷன்

Comments