அறிவாளிகளும் அறிவிலிகளும்! | தினகரன் வாரமஞ்சரி

அறிவாளிகளும் அறிவிலிகளும்!

அந்த ஆள் இருந்தாலேனும் அவரைப் பற்றிக் குறைசொல்லி வாக்கு கேட்கலாம். இப்ப ஆளும் இல்ல. இறந்த ஒரு மனிசனைப்பற்றிக் குறைகூறிக்கொண்டிருக்க முடியுமா? என்று சில தலைவர்கள் கருதுவதாக நாடி பிடித்திருக்கிறார் நண்பர்.

ஆனால், இந்த நெட்டிசன்கள் அமரர் ஆறுமுகன் தொண்டமான் செத்த நாள்ல இருந்தே விமர்சிச்சுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல்வாதிகளை விமர்சிக்கும் அதிக அறிவுஜீவிகள் வந்துவிட்டார்கள் என்று திருப்திகொள்வதா, அல்லது அறிவிலிகள் அதிகரித்துவிட்டார்கள் என்று கவலைப்படுவதா? என்று தெரியவில்லை என்கிறார் நண்பர்.

உலகம் முழவதும் இன்று எவ்வாறு இந்தப் பெரும் வீழ்ச்சியிலிருந்து மீள்வது என்று சிந்தித்திக்கொண்டிருக்கும்போது, நாங்கள் மட்டுந்தான் அரசியலைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறோமோ என்றும் தெரியவில்லை.

தேர்தல் பற்றிய தீர்ப்பு எதிர்பார்த்தபடி இருந்திருந்தால்கூடத் திருப்தியடைந்திருக்கலாம்.

எப்படி?

தேர்தல் ஒத்திவைக்கப்படுமாகவிருந்தால், புதிதாக வேட்பாளர் நியமனங்களைச் செய்துகொள்ளலாம். அவரை மாற்றி இவரை மாற்றிப் போட்டுக்கொண்டிருக்கலாம். பிரிஞ்சாக்களையும் ஒட்ட வைச்சிருக்கலாம். ஆறுமுகன் தொண்டமானையும் மறந்துபோய்விடுவார்கள்.

அப்ப, அவரைப் பற்றி விமர்சித்துக்கொண்டிருக்கலாம். இப்படி பலவாறு மூளையில் ஓடிய சிந்தனையெல்லாம், இன்னு ஒரு மூலையில் கிடக்கின்றதே என்பது நண்பரின் கவலை.

அவரின் கவலையல்ல, சிலருடைய மனத்தை வாசித்துச் சொல்றார். ஏனென்றால், இப்பிடியான விசயத்திலை நண்பர் நல்ல அறிவாளி. பேஸ்புக்கிலை உள்ள சில அறிவிலிகள் மாதிரியெல்லாம்; கதைக்கமாட்டார். உலக விசயத்தையெல்லாம் விரல் நுனிக்குள்ள வைச்சிருப்பார்.

உலக நாடுகளின் பரிபூரணமான ஒத்துழைப்புகளைப் பேணிக்கொண்டு தனித்துவக் கொள்கையுடன் முன்னேறி வரும் காலகட்டமாகவே அடுத்து வரும் காலப்பகுதி நமக்கு அமையப்போகிறது.

உலகப் பொருளாதாரத்தின் மையப்பகுதி சீனாவாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் பல்வேறு உலக நாடுகள் உறைந்துள்ளன.

ஆனால், உலகத்தைப் பற்றி அச்சங்கொள்வதற்கு முதல் உண்ணாட்டுப் பொருளாதாரத்தினை வளர்ச்சி நோக்கிக் கொண்டு செல்லும் சவாலுக்கே நாம் அனைவரும் ஒற்றுமையாக முகங்கொடுத்தாக வேண்டும்.

எனவேதான், அரசியல், கட்சி பேதங்கள், ஆட்சியைப் பிடித்தல், வெளிநாட்டிலிந்து வந்த பணத்திற்கெல்லாம் கணக்கு வழக்கு என்னவானது என்றெல்லாம் சிந்திப்பதை விடுத்து, நாட்டிற்குக் கிடைத்திருக்கும் உறுதியான தலைமைத்துவத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

இதுவிடயத்தில் நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள், அரச நிர்வாகிகள், பணியாளர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் அரசியல் கருத்தியல் பேதங்களுக்கு அப்பால், நாட்டைப் பற்றியும் நாட்டின் மக்கள் பற்றியும் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

ஏனெனில், நம் முன்னே இருப்பது தேர்தல் போட்டி மட்டுமல்ல, எதிர்காலச் சந்ததியினரின் கல்விச் செயற்பாடுகள், வீழ்ச்சியுற்றுள்ள வர்த்தகச் செயற்பாடுகள், தனி மனித வாழ்வாதாரம், சமுதாயக் கட்டுமானங்கள், விவசாயம் பொருளாதாரம், செயற்கை மதிநுட்பம், டிஜிற்றல் தொழில்நுட்பம், மருத்துவ மேம்பாடு, சுகாதாரத்துறை கட்டமைப்பு, பொது நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம், ஊடகத்துறை எனப் பல்வேறு துறைகளைப் பற்றியும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

தற்போதைய சூழலில் அரசியல் சுயலாபங்களைக் கைவிட்டுவிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமைத்துவத்தை மேலும் பலப்படுத்தி எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்வதே இலங்கையர்களுக்கு தற்போதிருக்கும் ஒரே வழி!

நாடும் காபந்து அரசாங்கமும் இப்போது ஜனாதிபதியின் தலைமையில் இயங்குகிறது. ஜனாதிபதியின் கீழ்தான் அரச நிர்வாகப் பொறிமுறை இயங்குகிறது. சுயாதீன தேர்தல் ஆணைக்குழு என்பது அரசின் கீழுள்ள ஒரு நிர்வாகப் பொறிமுறையேயன்றி, அரசின் நிர்வாத்தைத் தீர்மானிக்கும் தலைமைப்பீடமன்று. கொரோனா முற்றாக நீங்கிவிட்டது, இனித் தேர்தலை நடத்தலாம் என்று மகிந்த தேசப்பிரியவுக்கு அனில் ஜாசிங்க சொல்ல வேண்டும்.

இதுதான் இன்றைய நிலை என்பதைத் தெரிந்தும் தெரியாதவர்களாகச் சில அரசியல்வாதிகள் சுயநலமாக நடந்துகொண்டமைதான் வியப்பாக உள்ளது.

பத்திரிகையொன்றில் எழுதப்பட்டிருந்த ஆசிரிய தலையங்கத்தை அப்படியே ஒப்புவித்து, இதுதான் சரியான கருத்து. என்ரை கருத்தும் இதுதான் என்கிறார் நண்பர்.

ஜே.ஆர்.கொண்டுவந்த திறந்த பொருளாதாரத்தாலை எங்கடை பிசினசும் போச்சு. எல்லாரும் எல்லாத்தையும் விற்கலாம்.

அதாவது வெளிநாட்டுச் சாமான்களையும் இங்கக் கணக்கு வழக்கு இல்லாம விற்கலாம். எங்கடை உற்பத்திக்குத்தான் பிரச்சினை. இப்ப பாருங்களன், கொரோனா வந்தத்தாலை திரும்பவும் எல்லாரும் வீட்டிலை விவசாயம் செய்ய வெளிக்கிட்டிட்டாங்கள்.

சிறிமா அம்மையார் கொண்டுவந்த சுயசார்பு பொருளாதாரம் இப்ப வடக்கிலை வலு சோக்கா நடந்துகொண்டிருக்கிறது என்கிறார் நண்பர்.

என்னதான் நடந்தாலும் இன்னும் ஒரு வருசத்திற்கேனும் இவள் கொரோனா போகமாட்டாள் போலத்தான் கிடக்கு! என்றும் ஓர் எச்சரிக்கையைச் செய்கிறார்.

“இதை நான் சொல்லேல்ல, சுகாதாரத்திற்குப் பொறுப்பான ஆட்கள் சொல்லுறாங்கள். திங்கட்கிழமையிலிருந்து கந்தோர் வேலை எல்லாம் தொடங்குது. பஸ், ரயில் சேவையும் சரியா வந்திடும்.

அப்ப திரும்பவும் பழைய மாதிரி இல்லாம கொஞ்சமாவது அறிவாளிகள்போல நடந்துகொள்ள வேண்டும் என்பது நண்பரின் அறிவுறுத்தல்.

Comments