நேரடி தபால் விநியோகம் இல்லாமல் அவதியுறும் பன்விலை மக்கள் | தினகரன் வாரமஞ்சரி

நேரடி தபால் விநியோகம் இல்லாமல் அவதியுறும் பன்விலை மக்கள்

தகவல் பரிமாற்றத்தில் நம் நாட்டில் தபால் திணைக்களத்தின் நேரடித் தபால் விநியோகமும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. காலம் கடந்தெனினும் மலையகத் தோட்டப்புறங்களும் நேரடித் தபால் விநியோகப் பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட்டிருப்பது முன்னேற்றகரமான ஒரு செயல் என்பது மறுப்பதற்கில்லை.  

கிராமப்புறங்களையும் நகர்ப்புறங்களையும் போன்று நாடு முழுவதும் தபால்கள் தற்போது தோட்டக் குடியிருப்புகளுக்கே நேரடியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நேரடியாக மக்களுக்கு தபால் விநியோகிகப்படாமல் மிகப் பழைமையான தோட்ட நிர்வாகங்கள் மூலம் தபால்கள் விநியோகிக்கப்படும் முறை தற்போதும் நம் நாட்டில் நடைமுறையில் உள்ளதென்றால் யாரிதை நம்புவது ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.

கண்டி மாவட்டம் பன்விலை பிரதேசத்திலுள்ள ஒரு பிரதேச மக்களே இவ்வாறு நேரடியாகத் தபால் விநியோகத்தைப் பெறாமல் தோட்ட நிர்வாகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தபால் விநியோக சேவையைப் பெற்று வருகிறார்கள் இது இவ்வாறான வளர்ச்சி மிக்க காலத்தில் நிகழ்வது பெரும் வேதனைக்குரியதென்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு தோட்ட நிர்வாகங்கள் தபால்களை விநியோகிப்பதால் பொது மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமை பலரறிந்த விடயமாகக் காணப்பட்டாலும் இந்த நிலை தொடர்ந்த வண்ணமே உள்ளது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அரசாங்கத்தின் தபால் விநியோக சேவையை தாமும் பெற்றுக்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.  

பன்விலை மடுல்கலை கலாபொக்க பெருந்தோட்டத்தைச் சேர்ந்த பெரிய கலாபொக்க தோட்டம் கலகிரிய பிரிவு நெல்லிமலை தனியார் தோட்டம் அரச பெருந்தோட்டம் சோலங்கந்தை தோட்டம் அப்பிரிவிலுள்ள நடுக்கணக்கு தோட்டம் போன்றவற்றுக்கும் கலாபொக்க மேற்பிரிவு டீமலை தோட்டம் ரெலிகஸ் தோட்டம் காச்சாமலை தோட்டம் ஆகியவற்றுக்கும் நேரடியான தபால் விநியோகம் இடம்பெறுவதில்லையெனவும் மாவுசா தோட்டத்திலுள்ள இரண்டு தோட்டப்பிரிவுகளுக்கும் மடுல்கலை பெருந்தோட்;;டத்தைச் சேர்ந்த மேற்பிரிவு தோட்டம் உனனகலை தோட்டம் 50 ஏக்கர் தோட்டம் ரிச்லேண்ட் தோட்டம் மடுல்கலை கீழ்பிரிவு தோட்டம் கவதன்ன பிரிவு ஆகியவற்றுக்கும் நேரடி தபால் விநியோகம் இடம்பெறுவதில்லை என பொது மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.  

நேரடி தபால் சேவை இந்த தோட்டங்களுக்கு கிட்டாமல் இருப்பதனால் பலரும் பல்வேறு பாதிப்புகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பொது மக்களும் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் அவற்றில் சில இங்கு தொகுத்துத் தரப்படுகின்றன.  

நெல்லிமலை தனியார் தோட்டம் எஸ்.குணவதனி :-

பத்தனை ஸ்ரீ பாத தேசிய கல்வியியல் கல்லூரிக்;கான நேர்முகப் பரீட்சைக்கான கடிதம் கால தாமதமாகக் கிடைத்தது அதனால் எனக்கு நேர்முகப் பரீட்சைக்கு சமுகமளிக்க முடியவில்லை நண்பர் ஒருவர் மூலமாக தகவலை அறிந்து கல்லூரிக்கு தொடர்பினை மேற்கொண்டு அதன் பின்னரே நான் நேர்முகப் பரீட்சைக்குச் கென்றேன். கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டதற்கான கடிதமும் கால தாமதமாகியே கிடைத்தது இதனால் நான் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தேன் குருவி தலையில் பனம் பழம் என்பது போல் அதிகளவு பணச் செலவை நான் சந்திக்க வேண்டியிருந்தது. காலதாமதமாகி கடிதத்தைப் பெற்றதால் உரிய ஆவணங்களை உரிய நேரத்தில் தயார் செய்வதில் கல்வி அமைச்சுக்கும் கல்வியியல் கல்லூரிக்கும் அலுவலகங்களுக்குமாக அலைந்து திரிய வேண்டியேற்பட்டது. நான் எதிர்கொண்ட சிரமங்கள் எண்ணிலடங்காதவை நான் அசட்டையாக இருந்திருந்தால் எனது கனவான கல்வியியற் கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பை கை கழுவ விட்டிருப்பேன்.  

கலாபொக்க மத்திய பிரிவு டீ.என்.ஆம்ஸ்ட்ரோங் (31) :-

2012 ஆம் ஆண்டளவில் நான் கல்வியியல் கல்லூரிக்கு செல்வதற்காக விண்ணப்பித்துக் காத்திருந்தேன் ஆனால் எனக்கு நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறவில்லை. அக்கடிதம் 6 மாதங்களின் பின்னரேயே எனக்குக் கிடைத்தது. இதனால் கல்வியியல் கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பினை இழந்து விட்டேன்.  

மத்திய மாகாண சபையினால் அனுப்பப்பட்ட பாடசாலைகளில் ஊழியராக பணி புரிவதற்கான நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதமும், விவசாயத் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளராக சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான நேர்முகப் பரீட்சைக் கடிதம், சிறைச்சாலை காவலர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைக் கடிதம் போன்றவை காலதாமதமாகிக் கிடைத்ததால் நான் அத்தனை வாய்ப்புகளையும் இழந்து விட்டேன். தற்போது நான் ஒரு தனியார் கம்பனியில் தொழில் செய்து வருகிறேன்.  

கலாபொக்க அபிராமி தமிழ் மகா வித்தியாலய அதிபர் எஸ். ஸ்ரீதரன்:-

வலயக் கல்விப் பணிமனையிலிருந்தும் ஏனைய அலுவலகங்களிலுமிருந்தும் பாடசாலைக்கு அனுப்பப்படும் கடிதங்கள் கால தாமதமாகி எமக்கு கிடைப்பதால் ஆசிரியர்கள் கருத்தரங்குகளில் பங்குபற்றமுடியாத சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. உரிய நேரத்தில் கடிதங்களுக்கு பதில் அனுப்ப முடிவதல்லை பல கடிதங்கள எமது கரங்களுக்குக் கிடைக்காத சந்தர்ப்பத்தில் ஒட்டுமொத்த தகவல் பரிமாற்றத்திலும் சிக்கல்களை நாம் எதிர்நோக்குகிறோம்.  

மடுல்கலை தபால் நிலையத்திலிருந்து கலாபொக்க தோட்டத்திற்கு அனுப்பப்படும் கடிதங்கள் தோட்டத்தில் வகை பிரிக்கப்பட்டு தோட்டக் காரியாலயத்திற்கு அனுப்பப்படுகிறது. அத்தோட்டக் காரியாலயத்திலிருந்துதான் கடிதங்கள் பாடசாலைக்கு வந்து சேர்கிறது. இவ்வாறு பல இடங்களுக்கு கடிதங்கள் சுற்றிச் செல்வதால் ஒரு நாளில் கிடைக்க வேண்டிய கடிதங்கள் கூட மூன்று நாட்கள் தாமதமாகியே எமக்குக் கிடைக்கிறது. சில நேரங்களில் நாம் சென்று கடிதம் வந்திருக்கிறதா? எனக் கேட்டுப் பெறுவோம். சில வேளைகளில் எமக்கு அனுப்பி வைப்பார்கள். பாடசாலைக்கு வரும் பதிவுத் தபால்களும் தோட்ட நிர்வாகத்தால் கையொப்பமிட்டே பெறப்படுகின்றன.  

பன்விலை பிரதேச சபை உறுப்பினர் சங்கபிள்ளை சிவலிங்கம் (இ.தொ.கா):-

இப்பிரதேசத்தில் நேரடி தபால் விநியோகம் தபால் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படாமையால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் பற்றி பன்விலை பிரதேச சபையில் பேசியிருக்கிறேன். அவ்வாறு தபால் ஊழியர்கள் 6 பேருக்கு இப்பிரதேசத்தில் நியமனம் வழங்கக்கூடிய வாய்ப்பும் உள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு இவ்விடயம் சம்பந்தமாக தெரிவித்ததும் அவர் தபால் அமைச்சர் மற்றும் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் பேசி இவ்வருடத்திற்குள் தீர்வு காண்பதாக பதிலும் அனுப்பியிருக்கிறார். ஆனால் அவர் இயற்கையெய்தி விட்டார்.   

ஸ்ரீ லங்கா பொதுஜன தோட்ட தொழிலாளர் சங்க கண்டி மாவட்ட செயலாளர் மடுல்கலை அழகன் சிங்காரம்:-

தபால் நிலையங்களிலிருந்து தோட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் கடிதங்கள் பெரட்டுக்களத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கடிதங்கள் யாருக்கெல்hம் வந்திருக்கிறது என்று பெயர் வாசிக்கப்படுகிறது உரியவர்கள் இருந்தால் அக்கடிதத்தைப் பெறுவார்கள் இல்லாவிட்டால் அக்கடிதம் உரியவருக்கு சென்று சேர்வதில் சிக்கல்கள் இருக்கின்றன இதனால் பாதிக்கபடுவது மக்களே! பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கு தோட்டப்புறங்களிலுள்ள தபால் பிரச்சினை உட்பட்ட பல விடயங்களும் வெற்றிடங்களும் சம்பந்தமாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையால் சகலதும் பிற்போடப்பட்டுள்ளது. அவை தீர்க்கப்படாத சந்தர்ப்பத்தில் நான் மேலிடத்திற்கு இவற்றைக் கொண்டு செல்ல ஆவன செய்வேன்.  

மடுல்கலை பிரதேசத்தில் கீழ் வீதியிலுள்ள தோட்டப்புறங்களுக்கு நேரடி தபால் விநியோகம் மேற்கொள்ள நால்வர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் மஹபதன மற்றும் மஹபதன கிராமத்திற்கும் நேரடியாக தபால் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கும் மக்கள் மடுல்கலை மேல் வீதியிலுள்ள தோட்டப்புறங்களுக்கு மாத்திரம் இவ்வாறான பாகுபாடு காட்டப்படுவது வேதனையளிப்பதாகவும் இப்பிரச்சினையைத் தீர்க்க சம்பந்தப்பட்ட தரப்பினர் உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.  

மருதமுத்து நவநீதன் -  புசல்லாவை

Comments