தமிழர் அரசியலின் தேர்தல்கால அதிரடிகள் | தினகரன் வாரமஞ்சரி

தமிழர் அரசியலின் தேர்தல்கால அதிரடிகள்

“புலிகள் பெயரில் இயங்கும் கட்சிகளே ஒன்று படுங்கள்” என்று அழைப்பு விடுத்திருக்கிறார் மாவை சேனாதிராஜா.

“தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்” என்று கேட்கிறார் விக்கினேஸ்வரன்.

“அரசியல் தீர்வுப் பேச்சுக்கு தமிழ்க் கூட்டமைப்புத் தயார்” என்கிறார் சம்மந்தன்.

“போராளிகளையும் இணைத்துப் பயணிக்க வேண்டும் தமிழரசுக் கட்சி” என்று கூறுகிறார் சுமந்திரன்.

இதையெல்லாம் படிக்கும்போது உங்களில் சிலருக்குச் சிரிப்பு வரக்கூடும். சிலருக்குக் கோபம் வரலாம். சிலர் இவற்றைப் பொருட்படுத்தாமலே கடந்து செல்லக் கூடும்.

ஆனால், பலரும் இவற்றை நம்பத்தான் போகிறார்கள். நம்பி வாக்களிக்கவே போகிறார்கள்.

இவை முற்று முழுதாகவே தேர்தல்கால (பச்சைப் பொய்கள்) அதிரடிகள் என்று பலருக்கும் தெரியும். ஆனாலும் இதையெல்லாம் கடந்தே சனங்களின் வாக்களிப்பு நடக்கும். அப்படித்தான் கடந்த காலங்களிலும் நடந்திருக்கிறது. அதை அடிப்படையாக வைத்துக் கொண்டே இந்த மாதிரிக் கதைகளையும் அதிரடி அறிவிப்புகளையும் விட்டுக் கொண்டிருக்கின்றனர் இவர்கள்.

அரசியலில் மக்களுக்கு வெற்றியையும் முன்னேற்றத்தையும் பெற்றுத் தராது விட்டாலும் தாங்கள் மட்டும் எப்படியோ வெற்றியைப் பெற்று விடுகிறார்கள். அதற்கான வழிகள் அத்தனையும் இவர்களுக்குத் தெரியும். அந்த வகையில்தான் இப்போதும் மக்களின் மனநிலை, அறிவுத்திறன் போன்றவற்றைச் சரியாகவே மதிப்பிட்டு இவ்வாறு கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்தளவுக்குத்தான் உள்ளது தமிழ்ச்சமூகத்தின் அரசியல் விழிப்பும் அறிவுத்திறனும்.

ஏற்கனவே பல சந்தர்ப்பங்களிலும் இவர்கள் இந்த மாதிரி (ஏராளமான பொய்களை) ச் சொல்லியே வாக்குகளைக் கவர்ந்திருக்கிறார்கள். தாம் எதை, எப்படிச் சொன்னாலும் அதை எந்த விதமான யோசனையும் இல்லாமல், எதையும் ஆராயமல் அப்படியே வாக்களிக்குக் கூடியவர்கள் தமிழ் மக்கள் என்ற வலுவான நம்பிக்கை இவர்களுக்குண்டு. மக்கள் மட்டுமல்ல, தமிழ் ஊடகவியலாளர்களும் இவற்றைக் குறித்து எந்த விதமான யோசனைகளையும் கொண்டு செய்திகளை எழுதுவதில்லை. எந்தக் கேள்விகளையும் எழுப்புவதில்லை.

ஆகவே மொண்ணை பத்திப்போயிருக்கும் தமிழ்ச்சமூகத்தை வளைத்துக் காரியம் பார்ப்பதற்கான அத்தனை ஆயகலைகளையும் கற்று வைத்திருக்கிறார்கள் நம் தலைவர்கள். அந்தக் கலைகளின் வித்தையெல்லாம் நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் களை கட்டப்போகிறது.

இப்பொழுதுதான் இந்த வித்தைகளின் தொடக்கம் ஆரம்பமாகியுள்ளது. இனி வரும் நாட்களில் இதை எல்லோரும் பார்த்தும் கேட்டும் களிக்கலாம்.

இது ஒரு பக்கமிருக்கட்டும். இப்போது இவர்கள் இப்படிக் கூறியிருப்பவற்றைப் பற்றி நாம் ஒரு கணம் ஆராய்ந்து பார்ப்போம்.

“புலிகள் பெயரில் இயங்கும் கட்சிகளே ஒன்று படுங்கள்” என்று அன்பொழுக அழைப்பு விடுத்திருக்கும் மாவை சேனாதிராஜா, ஏற்கனவே புலிகளின் அடையாளத்தோடிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன், பொ. ஐங்கரநேசன், அனந்தி சசிதரன் போன்றோரையெல்லாம் விரட்டிக் கலைத்தது ஏன்?

அல்லது தேர்தல் அறிவிப்புக்கு முன்பு, தமிழ்ச் சமூகத்தின் அரசியல் உறுதிப்பாட்டையும் பலத்தையும் நிலைப்படுத்திக் கொள்வதற்கு வெளியே இருந்த சக்திகளை ஒன்று திரட்டியிருக்கலாம் அல்லவா?

குறைந்த பட்சம் ஏனைய தமிழ்க்கட்சிகள் எல்லாம் ஒரு பொது உடன்பாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கலாம். அல்லது அதற்கான முயற்சிகளை விசுவாசமாக மேற்கொண்டிருக்கலாமே! 

இதையெல்லாம் செய்யாமல் இப்போது இவ்வாறு சொல்வது எதற்காக? தேர்தலுக்காகத்தானே!

இவ்வாறே விக்கினேஸ்வரனும் தன்னுடைய தேர்தல்காலப் பணிகளை ஆரம்பித்திருக்கிறார். “தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்” என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கும் விக்கினேஸ்வரன், இதே கோரிக்கையோடு கோட்டாபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றதற்குப் பிறகு சந்தித்துப் பேசியிருக்கலாம். அல்லது பேசுவதற்கான சந்தர்ப்பத்தைக் கோரியிருக்கலாம். அல்லது வீதியில் இறங்கிப் போராடியிருக்கலாம் அல்லவா!

அப்படியெல்லாம் அவர் செய்யவே இல்லை. அவர் மட்டுமல்ல, அவருடைய அணியிலிருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா, அனந்தி போன்றவர்களும் இதில் ஈடுபடவில்லை. அரசியல் கைதிகளின் (சிறைப்பிடிக்கப்பட்ட விடுதலையாளர்கள்) விடயத்தில் மட்டுமல்ல, காணாமலாக்கப்பட்டோர் தொடக்கம் தமிழ்ச்சமூகம் எதிர்கொண்டு நிற்கும் எந்த நெருக்கடியிலும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. அதற்கான எந்த வேலைத்திட்டத்தையும் கொண்டிருக்கவும் இல்லை.

ஆனால், இப்பொழுது அறிக்கைகள் மட்டும் வெளியிடப்படுகின்றன. இது எதைக் காட்டுகிறது? ஒன்று மக்களை முட்டாளாக்க முற்படுவது. இரண்டாவது, போலியாகக் கண்ணீர் சிந்துவது. மூன்றாவது தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான உபாயம்.

இதையெல்லாம் மிஞ்சி நிற்கிறார் சுமந்திரன். “போராளிகளையும் இணைத்துப் பயணிக்க வேண்டும் தமிழரசுக் கட்சி” என்று சொல்லியிருக்கிறார் அவர். ஆயுதப்போராட்டத்தையே அங்கீகரிக்கவில்லை என்றவர் எப்படி அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டோரை அங்கீகரிக்க முடியும்? அவர்களை இணைத்துக் கொண்டு செயற்பட முடியும்? அடுத்தது, போராளிகளைத் தமிழரசுக் கட்சி இணைத்துப் பயணிக்க வேண்டும் என்பதை அவர் வெளியே சொல்வதை விடவும் தன்னுடைய கட்சிக்குள்ளேயே சொல்லி, அதை நடைமுறைப்படுத்துவதே நல்லது. அப்படிச் செய்யத் தயாரா? இல்லை. நிச்சயமாகவே அப்படி நடக்காது.

இதையும் விட இன்னொன்றைத் தமிழரசுக் கட்சி இந்தத் தடவை செய்திருக்கலாம். இந்தத் தேர்தலில் போராட்டத்தில் ஈடுபட்ட, பெரும் பங்களிப்புகளைச் செய்தவர்களுக்கு இடமளித்து, அவர்களைத் தேர்தலில் நிறுத்துவதற்குத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது என்று கூறியிருக்கலாம். அப்படியொரு தீர்மானத்தை எடுத்திருந்தால் உண்மையில் அது வரவேற்கக் கூடியதாகவும் ஒரு நல்ல மாறுதலாகவும் இருந்திருக்கும். நல்லதொரு முன்னுதாரணமாகவும் வரலாற்றுச் சிறப்புக்குரியதாகவும் இருந்திருக்கும். அதுதான் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கான மதிப்பளித்தலாகவும் தமிழ் அரசியலுக்கொரு புதிய ரத்தோட்டமாகவும் கூட மாறியிருக்கும். ஏன், ஏகமனதோடு கூட்டமைப்பே இதைச் செய்திருக்கலாம்.

அப்படிச் செய்யவே இல்லை. அதற்கு கூட்டமைப்பும் தயாரில்லை. தமிழரசுக் கட்சியும் தயாரில்லை. இவ்வாறெல்லாம் சொல்வதற்கு இவர்களுக்கு எவ்வளவு மனத்துணிவு வந்தது? ஒரு சிறிய மனக்கூச்சம் கூட இல்லையா?

இதற்கெல்லாம் மேலே போயிருக்கிறது, “அரசியல் தீர்வுப் பேச்சுக்கு தமிழ்க் கூட்டமைப்புத் தயார்” என்று சொல்லியிருக்கும் சம்மந்தனின் கருத்தும் “அரசமைப்பை மாற்றுவதானால் கோட்டா அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கத் தயார் என்ற சுமந்திரனின் அறிவிப்பும்.

தேர்தலில் தாமே அதிகூடிய வெற்றியைப் பெறுவோம் என்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாகவே இருவருடைய கருத்துகளும் உள்ளன. அப்படியே திட்டமிடவும் பட்டுள்ளது. இதுதான் இவர்களுடைய தந்திரோபாயமும் உத்தியுமாகும்.

ஆக மொத்தத்தில் இந்த மாதிரியான அறிவிப்புகள், பிரகடனங்கள் எல்லாமே தமிழ் மக்களைத் தோற்கடிப்பதற்கான வியூகத்தின் பாற்பட்டவையே தவிர, தமிழ் அரசியலை முன்னகர்த்துவதற்கானவை அல்ல. தமிழ் மிதவாத அரசியலே இப்படித்தான் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனால்தான் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆமாம், தமிழ் மக்கள் இரண்டு சக்திகளால் தொடர்ச்சியாகத் தோற்கடிக்கப்படுகிறார்கள். ஒன்று சிங்கள மேலாதிக்க சக்திகளால், பேரினவாதிகளால். இரண்டாவது தமிழ் மிதவாதத் தலைமைகளால்.

உண்மையில் செய்யப்பட வேண்டியது, தமிழ் மக்களைப் பாதுகாப்பதும் அவர்களை ஈடேற்றுவதுமே. மறுவளமாக அரசை வென்றெடுப்பது. அரசின் அதிகாரத்தைப் பெறுவது அல்லது அதிகாரத்தைப் பகிர்வதாகவே இருக்க வே்ணடும். அதாவது அதிகாரமுள்ள தரப்பினராகத் தமிழ்ச்சமூகத்தையும் உருவாக்குவதாக.

ஆனால், அது நடக்கவில்லை. தமிழ் மக்கள் எப்போதும் அதிகாரமற்ற தரப்பாக (Power less people’s) வே இருக்க வைக்கப்படுகிறார்கள். Power less people’s ஆக தமிழ்ச்சமூகம் இருக்கும் வரையில் அதனால் நெருக்கடிகளிலிருந்து மீளவே முடியாது. பதிலாக நெருக்கடிகளுக்குள் சிக்குண்டிருக்கவே முடியும்.

தொடரும் நெருக்கடிகள் என்பது ஒரு சமூகத்தைப் பெரும்பாதிப்புக்குள்ளாக்கும். என்பதால்தான் தமிழ்ச் சமூகம் வரவரப் பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் சமூகத்தையும் விட பலமான நிலையில் இருந்த தமிழ்ச்சமூகம் இன்று முஸ்லிம் சமூகத்தையும் விடப் பின்தங்கியிருக்கிறது. மலையக மக்களின் வளர்ச்சியோடும் மலையகத் தலைமைகளின் அரசியலோடும் ஒப்பிடும்போது தமிழ் மக்களின் வளர்ச்சியும் தமிழர் அரசியலும் பலவீனமாகவே உள்ளன. கடந்த முப்பது ஆண்டுகால நிலவரங்களுக்குள் தம்மைத் தகவமைக்கும் அரசியலை முன்னெடுத்த விதமே இந்த இரண்டு சமூகத்தையும் பாதுகாத்து உயர்த்தியது. இதில் குறைபாடுகள் இருந்தாலும் ஒப்பீட்டளவில் இந்த வளர்ச்சியைக் குறைத்து மதிப்பிட முடியாது.

தமிழர்கள் புலம்பெயர்ந்து உலகமெல்லாம் பரந்து பலமான நிலையில் உள்ளனர் என்று யாரும் இதற்கு நியாயம் கூற முற்படக் கூடும். ஆனால், கள யதார்த்தத்தின்படி அப்படிப் பலமான நிலையில் தமிழ்ச்சமூகம் இல்லை என்பதே உண்மை.

இதற்கு இரண்டு செழிப்பான உதாரணங்களைச் சொல்ல முடியும். ஒன்று, முஸ்லிம் மக்களைக் கண்டு பொருமும் கிழக்குத் தமிழர்களும் வடமாகாணத்தின் பொருளாதார வீழ்ச்சியும் கல்வி நிலையில் பின்தங்கியமையும். இரண்டாவது, தமிழ்ப்பிரதிநிதித்துவம் குறைந்துள்ளமை. அதாவது தமிழ் வாக்காளர்களின் தொகையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி. தமிழ்ச்சமூகம் சிதறியதால் ஏற்பட்ட நிலை இது. இதற்கெல்லாம் முக்கியமான காரணம், Power less people’s ஆகத் தமிழர்கள் இருப்பதே. இதை மாற்றியமைப்பதே இன்றுள்ள முதல் தேவையும் முதற்பணியுமாகும்.

இதற்கான சிந்தனையோடுதான் வரவுள்ள தேர்தலை அணுக வேண்டும். பழைய வேதாளங்களைத் தொடர்ந்தும் காவித் திரிய முடியாது.

கருணாகரன்

Comments