கசப்பும்… இனிப்பும்… | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும்… இனிப்பும்…

திரைப்படத் துறையில் ஒரு கன்னட ரஜினிகாந்த் “சூப்பர் ஸ்டார்”  எனப்பெயர் பெற்றிருப்பது போல்,  இங்கே இலங்கையில்  சிறுபான்மையினரை விசேடமாக தமிழ்ப் பேசும் சமூகத்தினரை, சீண்டிப் பார்ப்பதில் சூப்பர் ஸ்டார் அல்லது சூப்பர் மேனாகப் பெயரெடுத்திருப்பவர் ஒரு மதகுரு. அவர் பெயர் யாவரும் அறிந்தது.

அவர் காலத்திற்குக் காலம், அதுவும் தேர்தலொன்று  அண்மிக்கும்   சமயங்களில். வாயால் உமிழ்வது வர்ணிப்புக்கு அப்பாற்பட்டது.

மிகச் சமீபத்தில் அவர் தம் உமிழ்தல்கள் இப்படி:

"வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தமிழரின் தாயகமல்ல. இந்தப் பிரதேசங்கள் சிங்கள பௌத்தர்களின் பூமி தான். முழு நாடுமே சிங்கள பௌத்த நாடு தான் என்பதைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு பாதுகாப்புக்கு இராணுவமே பொருத்தம். இது குறித்து வீணாகப் புலம்பிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை!"

இதே தேரர்,வேர்விலை  அறிவியல் கலாபீடமான ‘ஜாமி ஆ நளீமிய்யா’வையும் ஒரு மாயக் கண்ணாடி கொண்டு பார்த்து பெரும்பான்மையினருக்கு பூதாகாரம் ஆக்குகிறார். தென்னிலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதம் உருவாகும்  இடம் அதுதான் என உமிழ்கிறார்.

கல்வியறிவில் பின்தங்கிய,  இரத்தினக்கல் வணிகராக இமயமலையைத் தொட்ட ஒரு எம். ஐ.எம். நளீம் ஹாஜியார். பெற்ற அறிவுக் களஞ்சியம் அது! அவ்வளவே!

இனி, இனிப்பொன்றைச் சுவைப்போம்...

கண்ணுக்குத் தெரியாக் கிருமி வழங்கிய  அளவுக்கதிகமான ஓய்வில் என்னைப் பொறுத்தவரையில் வாசிப்பைப் பெருக்கிக்கொள்ளும் வாய்ப்பில் நள்ளிரவு கடந்தும் படித்த  ஒரு நூல் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’  எழுதியிருப்பவர் எந்தவொரு எழுத்தாளரும் அல்லர். ஒரு காலப் போராளி! ‘புலிகள்’  எனப்படுவோரின் மகளிரணித் தலைவி தமிழினி!  தன் வரலாறு என்றே அட்டையில் அறிமுகம்.

271பக்கங்கள் கொண்ட ஒன்றைத் திறனாய்வு செய்வதெல்லாம் இந்தப் பத்தியில் ஆகக் கூடியதொன்றல்ல.

தமிழினி என்ற சிவகாமி, பரந்தன் மண். படித்துக்கொண்டிருந்தவர் (இந்து மகா வித்தியாலயம்) திடுதிப்பென்று 1991ல் இயக்கத்தில்  இணைந்தார்.  கடுமையான உழைப்பின் பின் மகளிரணிக்கே தலைமைதாங்கி பின் 2009ல் அரச கைதியாகி போராளியாக அடையாளப்படுத்தப்பட்டு நான்காண்டுகள் சிறையிலிருந்து புனர்வாழ்வு பெற்றவராக மீண்டு திருமதி ஜெயக்குமரன் ஆனார். எழுதிச் செல்லும் விதியின் கை, அவரை 2015ல் புற்று நோய்க்காளாக்கி மரணிக்க வைத்தது.  மறையமுன் எழுதி வைத்த தன் வரலாற்றில் ஒரு பரந்தன் வாசி கிழக்கிலங்கைக் கடைசி எல்லை வரை களம் காணும் வாய்ப்புகள் பெற்றதை அறிய முடிகிறது. 

அதுவும் எந்த வட பகுதித் தமிழ்ப் பெண்ணுக்கும் கிடைத்திராத அனுபவம் கிழக்கில்!

அதென்ன...?

அவர் வரிகளிலேயே படித்து விடுங்களேன்...

‘முஸ்லிம் மக்களுடன் அதிக அளவில் பழகுவதற்கான சந்தர்ப்பம் கிழக்கு மாகாணத்தில் தான் எனக்குக் கிடைத்தது.

அவர்கள் எம்முடன் மிக இயல்பான பாசத்துடன் பழகினார்கள். முஸ்லிம் மக்களுடைய பண்பு, பழக்க வழக்கங்கள், அவர்களின் சமூக வாழ்க்கை முறை என்பவற்றைக் கிழக்கு மாகாணத்தில் தான் நான் நெருக்கமாக அவதானித்துப் புரிந்துகொண்டேன்.  என்னுடன் வந்திருந்த பல போராளிகளுக்கும்  அதுபுதிய அனுபவமாகவே அமைந்தது.

ஒரு தடவை கோமாரி பாலத்தைக் கடந்து நீண்ட தூரம்சென்றபோது, முஸ்லிம் மக்களின் தற்காலிகத் தங்குமிடங்கள் தென்பட்டன.  உடனே நாங்கள் அவர்களுடன் பேசுவதற்காக இறங்கிச் சென்றபோது எம்மைச் சூழ்ந்துகொண்ட பெண்கள் சிரித்துச் சந்தோசமாகக் கதைத்தார்கள். 

எங்களுக்கும் அது மகிழ்ச்சியானதொரு  அனுபவமாக இருந்தது.  அதிகமான இழப்புகளைச் சந்தித்திருந்த அம்மக்களுக்கும் நாம் உதவ வேண்டும் என்ற விருப்பத்துடன் மறுநாளும்  சில முக்கியமான பொருட்களை அவர்களுக்கு வழங்குவதற்காக எடுத்துக்கொண்டு அங்கு சென்றிருந்தோம்.  பெண்களுக்கான சேலைகளும் துணிகளும், சில அத்தியாவசிய பாவனைப் பொருட்களும் அதிலிருந்தன.

ஆனால் நாம் எதிர்பார்த்ததற்கு மாறாக அன்று அந்தப் பெண்கள் எம்மைக் கண்டதும்  ஓடிப்போய்த் தமது கூடாரங்களுக்குள் ஒளிந்துகொண்ட காட்சி  எனக்கு மிகவும் கவலையைத் தந்தது. நேற்று எங்களுடன் கபடமின்றிச் சிரித்துப் பேசிய முகங்கள் கண்ணுக்குள் நிழலாடின.

ஓரிரு முஸ்லிம் பெரியவர்கள் வந்து எம்முடன் கதைத்தனர். பெண்களுக்காக நாம் கொண்டு வந்திருந்த பொருட்களைப் பெண்களிடமே கொடுக்க விரும்பினோம். மெதுவாக அவர்களது கூடாரங்களுக்குள் தலையை நீட்டி அவர்களுடன் கதைக்க முற்பட்டபோதும், முன்னைய நாள் கதைத்தது போன்று மனம்  திறந்து கதைக்காது அமைதியாக ஒதுங்கிச் சென்றார்கள்.

“நீங்கள் நேற்று எங்களுடன் சிரித்துச் சந்தோசமாகக் கதைத்தது போல இன்று ஏன் கதைக்கவில்லை”  எனக்கேட்டோம்.

“இது வீதிக்கரைதானே. நாங்கள் பெரும்பாலும் வெளியில் வருவதில்லை. நேற்று நீங்கள் பெண்கள் மட்டும்  வந்திருந்தீர்கள். இன்று ஆண்களுமல்லவா வந்திருக்கிறார்கள்” எனக் கூறினார்கள்.

ஆனால் அது ஒரு வெறும் சாட்டுத்தான் என்பது எமக்குத் தெளிவாகவே புரிந்தது.  எங்களுடன்  அவர்கள் பழகுவதை யாரோ  தடுத்திருக்க வேண்டும் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.  நாங்கள் அவர்களுடன்  கதைத்து அவர்களுக்காகக் கொண்டுவந்திருந்த பொருட்களைக் கொடுத்தபோதும்  சிறிது தயக்கத்துடன் தான் அவற்றைப் பெற்றுக்கொண்டார்கள்.  உண்மையில், அவர்களும் எமது பெண் போராளிகளும்  ஒருவரோடொருவர் மிகுந்த  நட்போடு பழகும் விருப்பத்தைக் கொண்டிருந்தார்கள்.

தமது  கூடாரங்களில் சமைக்கப்பட்டிருந்த உணவுகளையும் தேநீரையும்  எங்களுக்குத் தந்து உபசரித்தார்கள். எங்களோடு நெருக்கமாக அமர்ந்து கைகளைப் பற்றிக்கொண்டு  கதைத்துச் சிரித்த அந்தச் சந்தோசமான நிமிடங்களை மீண்டும் நினைவுகூரும்போது என் கண்களில் கண்ணீர் கசிகிறது.  ஒரு ஆயுதப் போராட்டத்தைப் பாதுகாப்பதற்காக எத்தனை அன்பு நிறைந்த வழிகளை மூடிக்கொண்டு நாம்  தனித்துப் போயிருந்தோம் என்பதை முள்ளிவாய்க்காலின் இறுகிப்போன நாட்கள் எனக்கு உணர்த்தின.

சிறு வயதிலிருந்தே எம்மிடமிருந்த இயல்புகளாலும்  பழக்க வழக்கங்களாலும் வேறுபட்ட மக்களுடன் பழகி, அவர்களது உணர்வுகளையும்  நன்கு புரிந்துகொண்டு வளர்வது எவ்வளவு முக்கியமானது என்பதைக் கிழக்கு மாகாணத்தில் தான் நான் உணர்ந்துகொண்டேன்.

பரந்து விரிந்த  உலகில் எத்தனை பிரிவினைகள், பாகுபாடுகள் இருந்தாலும் மானுடத்தின் பொது மொழியான அன்பு என்பது அனைத்துத் தடைகளையும் தாண்டி மனிதர்களை இணைக்கும் பாலம் என்பதை எனது நேரடி அனுபவங்கள் எனக்குக் கற்றுத் தந்தன.

எமது இனத்தின் வாழ்க்கைப் பண்புகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கும்  நாம் நாமாக வாழ்வதற்கும் ஆசைப்படுவது எத்தனை நியாயமானதோ அதுபோலவே இன்னொரு மக்கள் கூட்டத்தின் உரிமைகளையும் உணர்வுகளையும் புரிந்துகொள்வதும் மதித்து நடத்துவதும் மிக முக்கியமானது. இலங்கைத் தீவின் அரசியல் வரலாற்றைத் தீர்மானித்த மூத்த தலைமைகளின் குறுகிய மன வக்கிரங்களால் ஒரு சந்ததியின் வாழ்வு பாழடிக்கப்பட்டுவிட்டதாகவே நான் எண்ணுகிறேன்.

பக்கங்கள்- 131, 132,133

எப்படி, பார்த்தீர்களா,  படித்தீர்களா? கடைசியான சில வரிகள்’ பரந்து விரிந்த உலகில் எத்தனை பிரிவினைகள்...’ என்று ஆரம்பிக்கும் எழுத்துக்களும், எமது இனத்தின் வாழ்க்கைப் பண்புகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கும்... என்ற பதிவுகளும் என் நெஞ்சுக் கூட்டிற்குள் பதிந்​ேத பதிந்துள்ளன. உங்கள் மனநிலையை அறியத்தாருங்கள்.

அம்மா தமிழினி உங்களுக்கு இந்த மூத்த எழுத்தாளனின் மரியாதைக்குரிய அஞ்சலிகள்...

(அடுத்தவாரம் மற்றுமொரு கசப்பும் இனிப்பும் பகுதியில் சந்திப்போம்)

தமிழ்மணி மானா மகீன்

Comments