இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் இலங்கை | தினகரன் வாரமஞ்சரி

இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் இலங்கை

உலக நாடுகளின் தாக்கத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வைரஸ் தொற்றின் பாதிப்பு மற்றும் பரம்பல்குறைவாகவே காணப்படுகிறது. இதன் அடிப்டையில் நாட்டை தொடர்ந்தும் முடக்கிவைப்பதில் பயன் இல்லை  என்பதோடு தளர்வு என்பதும் சுமூகமான நிலை உருவாக்கபட வேண்டடிய  அவசியமும் காலத்தின் தேவையாக உள்ளமையினால் நாடு தற்போது படிப்படியாக வழமைக்கு திரும்பி வருகிறது. கொரோனா வைரஸ்தொற்று காரணமாக நாடு கடந்த மூன்ற மாதங்களுக்கு மேலாக செயழிழந்து காணப்பட்டது

அத்தியவசிய தேவைகள்  மட்டும்  அவ்வப்போது  நிவர்த்தி செய்யப்பட்ட  நிலையில் ஏனைய அரச இயந்திரம் முதற்கொண்டு  அனைத்தும்  இயக்கம் இன்றி காணப்பட்டது.

இச்சூழலை விருப்பு வெறுப்புக்கு அப்பால் அனைவரும்  ஏற்றுக்கொள்ளும்  நிலைமையை உருவாக்கியது  கொரோனா  வைரஸ்.

இலங்கையை பொறுத்தவரையில் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடியை சந்தித்தது என்பதற்கு அப்பால்அரசியல் ரீதியாகவும் பெரும் சாவலை சந்தித்தது என்றுதான் கூறவேண்டும். இவ்வாறான ஒரு பேரிடரின்போது நாட்டில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு  காபந்து அரசாங்கத்தை  கொண்டு இவ்வாறான ஒரு சூழலை சமாளிப்பதென்பது ஜனாதிபதிக்கு  பெரும் சவால்  என்பதை மறுக்கமுடியாது. 

இந்நிலையில் வைரஸ் தொற்றினை  ஓரளவு கட்டுப்பாட்டிற்குள்  கொண்டுவந்து சமூகத் தொற்று  வாய்ப்பு  இல்லை  என்ற கட்டத்தில்  தற்போது பாராளுமன்ற  பொதுத் தேர்தல் திகதி  அறிவிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் அதனோடிணைந்ததாக  பாடசாலைகள் மீள ஆரம்பிப்பதற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட  நடவடிக்கையாக  பல்கலைக்கழகங்கள்,  வழிபாட்டுத் தலங்கள் தனியார் கல்வி நிறுவனங்கள்  என்பனவற்றையும் மீள ஆரம்பிப்பதற்கு  உத்தேசிக்கப்பட்டுள்ளது.  இலங்கை  70சதவீதம் வழமைக்கு  திரும்பியுள்ளது என்பதே இதன் அர்த்தம்.

 கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்தது. பின்னர் வேகம் எடுத்த தொற்றுத் தாக்கம் உலகலாவிய  ரீதியானதாக மாறியது. இந்த கொரோனா அபாயம் கடந்த மார்ச் மாதம்  இலங்கையை பிடித்துக்கொண்டதை தொடர்ந்து மார்ச் மாதம் 20ஆம் திகதி நாடுபூராக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு நாடு முடக்கப்பட்டது.  அன்றைய தினமே பாராளுமன்ற தேர்தல் 2020க்கான  வேட்பு மனுத் தாக்கல்  இறுதி  தினமாகவும்  இருந்தது. அதன் பின்னர்   கொரோனா   தொற்று  நாட்டிற்குள்  இணங்கானப்பட்டதை  தொடர்ந்து  முழுமையாக  நாடு முடக்கப்பட்டதன்  காரணமாக தேர்தல்  நடத்துவதில்  சாத்தியத்  தன்மை  அற்றுக் காணப்பட்டது.

மூன்று மாதங்களின் பின்னர் நாடு மெல்ல மெல்ல இயங்கத்தொடங்கியதன் காரணமாக  தடைப்பட்டிருந்த  பாராளுமன்ற தேர்தலினை  மீள நடத்துவதற்கான திகதி அரசினால் அறிவிக்கப்பட்டது. ஆனால்   குறித்த  திகதியில் தேர்தல்  நடத்துவதற்கு சாத்தியம் இல்லை முதலில் நாட்டில் கொரோனா தொற்று இல்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே தேர்தல் சாத்தியம் என தேர்தல்கள்  ஆணைக்குழு தலைவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இவ்வாறு பல இழுபறிகளுக்கு பின்னர், எதிர்வரும் ஆகஸ்ட்  மாதம் 05ஆம்  திகதி  தேர்தல் நடத்துவதற்கு  தீர்மானித்துள்ளதாக  தேர்தல்கள்  ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த  தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் பின்னர் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவான சாத்தியத் தன்மையினையும் அதற்கான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டிய அவசியம் காபந்து அரசுக்கு உள்ளதை உணர்ந்த தரப்பினர் உடனடியாக விரைந்து ஏற்கனவே பல கலந்துரையாடல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீரமானங்களை வரிசையாக அறிவித்தனர்.  அதில் முதல் அறிவிப்பாக  வெளி வந்தது பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவதும் அதற்காக முதல் கட்டமாக அதிபர் ஆசிரியர்கள்  ஜூன் மாதம் 29ஆம் திகதி பாடசாலைக்கு  வருகை  தரவேண்டுமென்பதாகும்.

இதன்படி ஜூன் மாதம் 29ஆம்திகதி முதல் 04கட்டங்களின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரும தெரிவித்தள்ளார்.

முதல் கட்டமாக ஜுன் மாதம் 29ஆம் திகதி முதல் ஜுலை மாதம் 3ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி ஊழியர்களே பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும். இதன் போது பாடசாலைகளில் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும்.

ஜூலை 6ஆம் திகதி முதல் பாடசாலை திறக்கப்பட்டு மூன்று கட்டங்களாக கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று தெரிவித்த அமைச்சர் இதற்கமைவாக ஜூலை 06ஆம் திகதி தரம் 5தரம் 11மற்றும் தரம் 13ஆகிய மாணவர்களுக்காக பாடசாலை 2ஆம் கட்டமாக திறக்கப்பட உள்ளது.

மூன்றாம் கட்டமாக ஜூலை மாதம் 20ஆம் திகதி தரம் 10மற்றும் தரம் 12  மாணவர்களுக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும். நான்காம் கட்டமாக முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களை தவிர்ந்த 3, 4, 6, 7, 8,மற்றும்  9தர மாணவர்களுக்காக பாடசாலை ஜுலை மாதம் 27ஆம் திகதி திறக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தரம் 1மற்றும் தரம் 2வகுப்பு மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் இதுவரை தீரமானம் மேற்கொள்ளப்படவில்லையென்றும் தெரிவித்த கல்வி அமைச்சர், செப்டம்பர் 7ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

இதற்கு அடுத்தகட்ட நடவடிக்கையாக தனியார் கல்வி நிறுவனங்களை ஜுன் மாதம் 29ஆம் திகதியில் இருந்து ஆரமப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தோடு நாட்டில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் ஜுன் மாதம் 12ஆம் திகதி முதல் திறக்கப்பட்டடு  தமது வழிபாட்டு ஆராதனைகளை ஆரம்பிக்கலாம் என்றும் ஒவ்வொரு ஆராதனையின் போதும் 50பேருக்கும் மேடற்படாமல்  இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பொதுப்போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிகை அலங்கரிப்பு நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் என்பனவும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து தமது வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு படிமுறையாக மேற்கொள்ளப்படும் அரசின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நாடு வழமையை நோக்கி அடி எடுத்து வைக்கின்றது என்பதைக் காட்டுகிறது. நாட்டில் தற்போது இயல்பு நிலையினை இயக்கும் பெரும்பாலான துறைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன ஏனைய துறைகளும் ஆரம்பத்துக்குக் காத்திருக்கின்றன.   இவை அனைத்துமே சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை முன்னிறுத்தியே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது வெறுமனே அரசின் அறிவுறுத்தலாக மட்டுமல்லாது யதார்த்தத்தில் சாத்தியப்பாட்டு எல்லைக்குள் உள்ளதா என்பதையும் கவனிக்கவேண்டும். அதிகாரிகள் அரசின் அறிவுறுத்தல்களை செயற்படுத்தினாலும் மக்கள் எந்தளவிற்கு செயற்படுகிறன்றனர் என்பதையும் கவனிக்கவேண்டும்.

பொதுப்போக்குவரத்தின் போது குறிப்பாக தனியார்  போக்குவரத்தின் போது மக்கள் சமூக விலகளை பின்பற்றுவதாக தெரியவில்லை. முகக்கவசத்தை பொலிஸாருக்கு பயந்து மட்டுமே அணிகின்றனர் வைரசுக்கு பயந்து அணிவதாக தென்படவில்லை.

இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை நிச்சயமாக எடுப்பது சாத்தியமே ஆங்காங்கே விற்கபடும் தரம் அற்ற  சுவாசக்கவசங்களை அப்புறப்படுத்தவும் வேண்டும். சமூகத் தொற்று அபாயம் முழுமையாக நீங்கிவிடவில்லை என்ற நிலையில் போது சற்று இறுக்கமாக கட்டுப்பாடுகளை விதிப்பதில் தவறில்லையே!

தேர்தல் காலம் என்பதால் தான் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக சிலர் குற்றம்சாட்டலாம். பொலிசாரினதும் இராணுவத்தினதும் பிரசன்னத்தின் மூலமே நாம் நமக்கான கட்டுப்பாடுகளை செயற்படுத்துவோம் என்றில்லாமல் கட்டுப்பாடுகள் எமக்கானவை எமது நலனுக்கானவை என்ற சிந்தனை எழுந்தால் சமூக இடைவெளியைப் பேணலும் முகக் கவசத்தை அணிவதும் கட்டுப்பாடுகளாக அமையாது.

Comments