எமது நாட்டில் நுண்கடன் திட்டம் ஏன் தோல்வியடைந்தது? | தினகரன் வாரமஞ்சரி

எமது நாட்டில் நுண்கடன் திட்டம் ஏன் தோல்வியடைந்தது?

உலகெங்கும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாம் பல சவால்களை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றோம்.

கொரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக கடன் வசூலிக்கும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடமிருந்து அதனை உடனடியாக அறவிடாமல் கால அவகாசம் வழங்குமாறு அரசாங்கத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

தற்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நுண்நிதி நிறுவன ஊழியர்கள் மக்களிடம் கடன் வசூலிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனால், ஊரடங்கு காரணமாக தொழில் இன்றி இருந்ததால் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை தம்மிடம் அறவிடப்படும் கடன் பணத்திற்கு கால அவகாசம் ஒன்றினை வழங்கவேண்டும் என்று அரசாங்கத்திடம் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். நுண்நிதி நிறுவனங்களின் அதிக வட்டி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைவாக வழங்கப்படும் குறைந்த வட்டியிலான கடன் தொகையை 40ஆயிரம் ரூபாவிலிருந்து 60ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

விசேடமாக வடக்கு மற்றும் வடமத்திய மாகாண மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக கூட்டுறவு கிராமிய வங்கிகள் மற்றும் சிக்கன கடன் சங்கங்கள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்படும் இந்த குறைந்த வட்டியிலான கடன் தொகையின் எல்லையை அதிகரிக்குமாறு பல்வேறு தரப்புகளும் நிதியமைச்சிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன. 6மாவட்ட செயலகங்கள் ஊடாக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம் தொடர்பில் மாவட்ட செயலாளர்கள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்து இதனை மேலும் ஒழுங்குபடுத்துவதற்கு பிரதமர் தீர்மானித்துள்ளார்.

குறிப்பாக வடமாகாணத்திற்கென 292மில்லியன் ரூபாவையும், வடமத்திய மாகாணத்திற்காக 250மில்லியன் ரூபாவையும் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்தில் நுண்நிதி கடன் நெருக்கடியினால் 14ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சர் என்ற வகையில் மேற்கொண்டுள்ள இந்தத் தீர்மானம் காரணமாக, மேலும் பெரும் எண்ணிக்கையான மக்கள் கடன் பெறுவதற்கு தகுதிபெறவுள்ளனர். இது தவிர வருடாந்த வட்டி வீதத்தை 14சதவீதத்திலிருந்து 9சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்திட்டத்தின் முன்னேற்ற அறிக்கையை மூன்று மாதத்திற்கு ஒரு முறை திறைசேரிக்கு அனுப்புவதற்காக மாவட்ட நடவடிக்கைக் குழுவொன்றும் அமைக்கப்படும். கிராமிய மக்களை கடன் சுமையிலிருந்து விடுவிக்கும் பொறுப்பு இந்தக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது

 அமெரிக்க உலக வர்த்தகமையத் தாக்குதலின்  பின்னர் அமெரிக்கப் பொருளாதாரம் நலிந்து போகாமலிருக்க அமெரிக்க அரசு பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை உள்நாட்டில் முன்னெடுத்தது.  மத்திய திறைசேரி வட்டி விகிதத்தை குறைத்து வங்கிகளில் பணப்புழக்கத்தை அதிகரித்தது. இதன் ஓர் அங்கமாக பொதுமக்கள் குறைந்த வட்டி வீதத்தில் பல்வேறு தேவைகளுக்காக வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதை இலகுவாக்கியது.

நம்நாட்டில் தங்கநகைகள் வாங்கி வைத்திருப்பது சேமிப்பு என்றே கருதப்படுகிறது.  அதேபோல மேலைநாடுகளில் வீடு வாங்குவதே முதன்மையான சேமிப்பு எனக் கருதப்படுகிறது. குறைந்த வட்டியில் கடன்கள் இலகுவாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் நிலவியதால் பலரும் வங்கிக்கடன் பெற்று வீடுகளை வாங்கினர். இதனால் வீட்டு விலை அதிகரித்தது.  அதனையடுத்து வீடுகளில் முதலிட்டால் பெரும் லாபம் ஈட்டலாம் என ஆசைப்பட்டு குறைந்த வருமானமுடையவர்களும் வங்கியில் கடன்பட்டு வீடுகளை வாங்கினர்.  பணமீட்டுவதிலேயே குறியாக இருந்த வங்கிகளும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பலருக்கும் வீட்டுக்கடன்களை வழங்கின.  இக்கடன்களுக்குப் பிணையாக அவ்வீடுகளின் உறுதிப் பத்திரங்களை தம்வசம் வைத்திருந்தன.            

இக்கடன்களில் பெரும்பாலானவை முதல் ஐந்து வருடங்களுக்கு குறைந்த வட்டியிலும் ஐந்து வருட முடிவில் இரு மடங்கு அல்லது மூன்று மடங்கு வட்டி வீதத்தைக் கொண்டவையாகவும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. 

ஆனால் கடன் பெற்றவர்கள் பலருக்கு இது தொடர்பான போதிய விளக்கம் இருக்கவில்லை. அதைப் பற்றியெல்லாம் வங்கி முகவர்கள் கவலைப்படவில்லை.  அம்மக்கள் நிரந்தர வருமானம் உடையவர்களா அவர்களால் உயர்ந்த வட்டி வீதத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியுமா என்றெல்லாம் அவர்கள் பார்க்கவில்லை.

இவ்வாறு வழங்கப்பட்ட கடன்களின் முதல் ஐந்து வருட முடிவில் வட்டி விகிதம் எகிறியது. கடன்பட்டவர்களில் பெரும்பான்மையினரான குறைந்த வருமானமுள்ள குடும்பத்தினர். மாதாந்தம் வீட்டுக்கடன் கொடுப்பனவுகளை கட்ட முடியாமல் திண்டாடினர்.  கடனைக் கட்டுமாறு வங்கிகள் அவர்களை நெருக்கின.  தம்மிடமுள்ள குறைந்தபட்ச சேமிப்புக்களைக் கொண்டாவது கடனை செலுத்த பலர் முயன்றனர்.  பலர் தம்மிடமுள்ள பொருட்களை விற்று கடனை அடைக்க முயற்சித்தனர்.  அவற்றுக்கான சாத்தியங்கள் எல்லாம் அருகிப்போக பலர் சொல்லாமல் கொள்ளாமல் வீடுகளைவிட்டு வெளியேறினர்.  அவர்கள் தாம் வங்குரோத்து அடைந்து விட்டதாகப் பிரகடனப்படுத்தி தமது கடன்களை இரத்து செய்யுமாறு வங்கிகளைக் கோரினர். 

மேலும் பலர் வீட்டுக் கடனைச் செலுத்தாமலே வீடுகளில் இருக்க முற்பட்டனர்.  வங்கிகள் அவர்களை பொலிஸ் உதவியுடன் வீட்டை விட்டு வெளியேற்றி நடுத்தெருவில் தள்ளின.                    

நுண்கடன் திட்டம் ஒரு உன்னதமான எண்ணக்கரு.  வங்கிகளின் தவறான நடத்தைகளால் ஒட்டுமொத்த நுண்கடனே தவறானதென கூறிவிட முடியாது.  பொருத்தமான வழியில் நடைமுறைப்படுத்தப்பட்டால் அது எமது பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்காற்ற முடியும்.  அது எமது பொருளாதார சூழலுக்கு ஏற்றவாறும் பாரம்பரியத்துக்கும் கலர்சாரத்துக்கும் ஏற்றவாறும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.  நுண்கடன் வங்கிகள் மிகவும் நெருக்கமாக கண்காணிக்கப்பட வேண்டும்.  வங்கிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் கடன்பட்டோரைப் பாதுகாக்கவும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

மேலும் நுண்கடன் வங்கிகள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிராது சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டும்.  கடன் வழங்குவதோடு நின்று விடாது கடனுடன் சேர்த்து கடன் பெறுபவர்களின் தொழில் முயற்சிகளை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும் ஆளுமையை வளர்க்க திட்டங்கள் வங்கிகளால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.  கடன் வசூலிக்க முகவர்களை அனுப்புவதை விடுத்து இத்திட்டத்தில் எந்த அளவுக்கு முன்னேற்றம் பெறப்பட்டுள்ளது என்பதைக் கணக்கிடவும் பின்னடைவுகளை ஏற்படுமிடத்து அதனை நிவர்த்தி செய்ய பயிற்சியாளர்களை அனுப்ப வேண்டும்.

ஒருவனுக்கு மீனை வழங்கினால் அது அவனுக்கு ஒரு நாள் பசியை மட்டுமே தீர்க்கும் அவனுக்கு மீன்பிடிக்க கற்றுக் கொடுத்தால் அவனின் வாழ்நாள் முழுவதுமே பசி தீரும். ஆகவே கடனை மட்டும் வழங்காதீர்கள் அக்கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவதெனவும் கற்பியுங்கள்.

திவியா சிவகுமார்

Comments