கையைக் கழுவி உள்ளே வரவும்! | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

கையைக் கழுவி உள்ளே வரவும்!

வீட்டிலிருந்து வெளியில் சென்று மீண்டும் வந்தால், நன்றாகக் காலைக் கழுவிவிட்டு உள்ளே வரச்சொல்லுவார்கள்.

வெளியில் செல்ல அணிந்து சென்ற காலணியையும் வெளியிலேயே கழற்ற வேண்டும். இது காலா காலமாக வழக்கத்தில் உள்ள பழக்கம். எந்த ஒரு செயலும் பழகப் பழக வழக்கத்திற்கு வந்து விடும் என்கிறார்கள் அறிஞர்கள். ஒரு விடயத்தைத் திரும்பத் திரும்ப 65நாட்கள் செய்து வந்தால், அது தானாகவே வழகத்திற்கு வந்துவிடுமாம்!

இந்தக் கொரோனா படுத்திய பாட்டினால், இப்ப காலைக் கழுவுகிறோமோ இல்லையோ, கட்டாயம் கையைக் கழுவ வேண்டும் என்கிறார்கள். வீட்டுக்குச் சென்றாலும், நன்றாகக் கையைக் கழுவுங்கோ என்கிறார்கள். அத்தோடு நிற்கிறார்களா? தலையில் மஞ்சள் தண்ணீரைத் தெளித்துக் கையைக் கழுவச் சொல்கிறார்கள்.

தலையில் தண்ணீரைத் தெளித்துக் கையைக் கழுவுவதற்கு வேறு அர்த்தமும் உண்டு என்கிறார் நண்பர். " ஐயோ நான் கையைக் கழுவிவிட்டேன், எனக்கேலாது" என்று அடிக்கடி நண்பர் சொல்வார்.

அலுவலகத்திற்கு வேலைக்குச் சென்றாலும் கையைக் கழுவச் சொல்கிறார்கள். முதலில் அந்தக் கூண்டுக்குள் போய் நாலு பக்கமும் சுழலுங்கள். பிறகு கையைக் கழுவுங்கள்.

குழாயைத் திறப்பதற்கு முன்பைப்போல் கையைப் பயன்படுத்த முடியாது; கூடாது. அதற்குக் காலைத்தான் பயன்படுத்த வேண்டும். ரெப்பைக் காலால் அழுத்தினால் தண்ணீர் வருகிறது. அது நல்ல யோசனை. என்றாலும் சற்றுத் தாமதித்துத்தான் அந்த யோசனை வந்திருக்கிறது, முச்சக்கர வண்டி உற்பத்தியாளர்களுக்கு வந்தததைப்போல.

அது என்னெண்டு கேட்கிறீர்கள்தானே?

முன்பெல்லாம் முச்சக்கர வண்டியை இயக்குவதற்கு மூச்சைப் பிடித்துக்ெகாண்டு அந்தப் பிடியைப் பிடித்து இழுக்க வேண்டும். அதற்கும் செல்ப் ஸ்டாற் வைத்திருக்கலாம். ஆனால், அந்த யோசனை சற்றுப்பிந்தித்தான் வந்திருக்கிறது, அதுதான்.

மூச்சுப் பயிற்சி படிப்பிச்ச அனோஜா வீரசிங்க அக்காள் சொன்னாள், "நாம் காலை நன்றாகக் கவனிச்சுக்ெகாள்ள வேண்டும். கால்தான் முக்கியம்!" என்று.

பயிற்சியில் கலந்துகொண்டவர்களிடம் அவர் கேட்டார், "நீங்கள் குளித்துவிட்டுக் காலை எப்படி துடைப்பீர்கள்?"

எல்லோரும் வெவ்வேறு விதமாகப் பதில் சொன்னார்கள்.

தனியாக ஒரு துண்டை வைத்திருக்கிறேன், அதில்தான் காலைத் துடைப்பேன்! முகம், கை, உடல் எல்லாவற்றையும் துடைத்துவிட்டுக் கடைசியாகத்தான் கால்களைத் துடைப்போம் என்றும் சொன்னார்கள். அப்போதுதான் அவர் சொன்னார், "உங்களுக்குக் கால்கள்தான் முக்கியம். கால் இல்லாவிட்டால், மூஞ்சியை மட்டும் வைத்துக்ெகாண்டு என்ன செய்வீர்கள்? என்றார். எல்லோருக்கும் அந்தக் கணத்தில்தான் மூளையில் உறைத்தது. எனக்கும்தான். அன்றிலிருந்து கால்களையும் கண்போல் பார்த்துக்ெகாள்வேன். இருந்தும் சில வேளைகளில் கால்கள் காலைவாரிய சந்தர்ப்பங்களும் உண்டு!

இப்போது முற்றாகவே கால்களைத் துச்சமென நினைத்துக் கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமே எனும்போது சற்றுக் கவலையாகத்தான் இருக்கிறது.

'சிங்கில்' கையைக் காட்டிக் கையைக் கழுவும் பழக்கம் தமிழகத்தின் உணவகங்களில் பல ஆண்டுகளாகவே கண்டிருக்கின்றோம். அதனைப் பார்த்துவிட்டு, சைய்... நாங்கள் இன்னும் எங்கோ இருக்கின்றோம் என்று நினைத்தது உண்டு. இப்போது கொரோனா வந்ததும், பைப்பைத் திறப்பதற்குப் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம்.

ஓரிடத்தில், கையைக் காட்டலாம், இன்னோர் இடத்தில் காலால் மிதிக்கலாம், சில இடங்களில் கையால் இழுக்கலாம்! இல்லையென்றால், கைகளை நன்றாகச் சவர்க்காரம் போட்டுக் கழுவிய பின்னர், மீண்டும் அழுக்குள்ள பைப்பை மூடுவதற்குக் கையைப் பயன்படுத்த வேண்டும். அப்படியென்றால், கையைக் கழுவியதில் என்ன பயன்? அதற்குத் தீர்வாகத்தான் பைப்பைத் திறப்பதற்குக் காலைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள்.

சொந்தக் கையைக்ெகாண்டு பைப்பை மட்டுமல்ல, சொந்த மூக்கு, வாய், கன்னம், கண் என எதையும் தொடக்கூடாது என்கிறார்கள். என்ன கொரோனா உலகமடா இது?!

ஏனென்றால், கைகளை குறைந்தது 20நொடிகள் கழுவ வேண்டும். உங்கள் கைகளின் அனைத்து  பாகங்களுக்கும் கவனம் கொடுங்கள். சவர்க்காரம் மற்றும் நீரைக் கொண்டு நன்றாக  கழுவுங்கள். உங்கள் கண்கள், மூக்கு, மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள். அந்த வழியில்தான் வைரஸ் உங்கள் உடம்பில் பரவும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

கொரோனா வைரஸ், சுவாசத்தின் மூலம் (அருகில் யாராவது இருமிய பிறகு) அல்லது  வைரஸ் பரவியுள்ள ஒரு பொருளை, இடத்தைத் தொட்டுவிட்டுப் பிறகு முகத்தைத் தொடும்  போது இந்த வைரஸ் உடலில் நுழைகிறது என்கிறார்கள். அதனால்தான் கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கழுவச் சொல்கிறார்கள்.

இப்பதான் வாழ்க்ைகக்குக் கை முக்கியம் என்று பாண்டிச்சேரி பொலிஸ்காரர் சொன்னது நினைவிற்கு வருகிறது. அது என்னதென்று அடுத்த வாரம் பார்ப்போம்!

Comments