குளவி கொட்டிலிருந்து தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்புப் பெறுவது எப்போது? | தினகரன் வாரமஞ்சரி

குளவி கொட்டிலிருந்து தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்புப் பெறுவது எப்போது?

மலையகத்தில் இன்றைய பேசு பொருளாக மாறியுள்ளது அண்மைய குளவி கொட்டுதல்  சம்பவங்கள். கடந்த 25ஆம் திகதி ஹற்றன் டிக்கோயா தோட்டத்தில் 7பேர் குளவி  கொட்டுக்கு இலக்காகியதில் பன்மூர் தோட்டத்தைச் சேர்ந்த 52வயதுடைய மூன்று  பிள்ளைகளின் தாயான அம்பிகா என்பவர் உயிரிழந்தார். 02.06.2020அன்று  மட்டுக்கலை  சென்.கூம்ஸ் தோட்டத்தில்  எட்டுப்பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 4  பிள்ளைகளின் 59வயதான தாயொருவர் உயிரிழந்தார். பொகவந்தலாவ கெம்பியன் ஓல்டி  தோட்டத்தில் ஆறு பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர். டயகம வெஸ்ட் 5ஆம்  பிரிவில் 8பேருக்கு குளவிக்கொட்டுக்கு இலக்காகினர், இவ்வாறு மலையகத்தில்  குளவிக் கொட்டுச் சம்பவங்கள் பரவலாக நடைபெறுவது பற்றிய செய்திகள்  வெளிவருகின்றன. 

இது மாத்திரமின்றி சிறுத்தைகளால் தொழிலாளர்கள் தாக்கப்படுதல், நாய்  போன்ற வளர்ப்பு மிருகங்கள் பலியாகும் சம்பவங்களும், பாம்புக்கடியினால்  தொழிலாளர்கள் பாதிக்கப்படுதல், மலைப்பாம்புகள் தேயிலை மலைகளில்  கண்டுபிடிக்கப்படுதல், தொடர்ச்சியாக அட்டைக் கடிக்கு ஆளாகி குருதிச்சோகை  நோய்க்கு உட்படுதல் போன்ற பிரச்சினைகளும் தொடர்கதைகளாகி வருகின்றன. 

இவ்வாறான அவலங்கள் தொடருமா அல்லது இவ் அவல நிலைக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்பதே கேள்விக்குறியாகவுள்ளது. 

முன்னெப்போதும் இல்லாதவாறு மலையகத்தில் குளவிக் கொட்டுச் சம்பவங்கள்  ஏன் அதிகரித்து வருகின்றன? இதனை  தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்ன? குளவிக்  கொட்டிலிருந்து பாதுகாப்புப் பெறுவது எவ்வாறு? என  மத்திய மாகாண விவசாய ஆலோசகர் (பேராதனை) மற்றும் தேனீ வளர்ப்பு  சம்பந்தமான விடயப் பொறுப்பு அலுவலர்  S.G.K. குலசிங்கவிடம்  வினவியபோது அவர் தெரிவித்ததாவது, 

இலங்கையில் 4வகையான தேனீக்கள்  காணப்படுகின்றன. இவை அனைத்தும் தேனை உற்பத்தி செய்கின்றன. ஒவ்வொரு  இனத்தினதும் வாழ்க்கை முறைகள் வித்தியாசப்படுகின்றன. இதில் ஒரு வகை தேனீயை  மாத்திரமே கூடுகளில் நாம் வளா்த்து தேனைப் பெறமுடியும். தேயிலை மலைகளில்  தொழிலாளர்களைத் தாக்குவது மற்றொரு வகை என்கிறார்.

தோட்டப்புறங்களில் தற்போது தொழிலாளர்களை ஏன் இந்த குளவிகள் அதிகமாக  கொட்டுகின்றன?

வெவ்வேறு காலங்களில்  பூக்கும் பூக்களை நாடியே குளவிகள் வருகின்றன. ஊவா மாகாணத்தை எடுத்துக்  கொண்டால் ஒகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் பூக்கும் பூவகைகளைத் தேடியும்,  இறப்பர்  தோட்டங்களில் இறப்பர்  தளிர்களை நாடியும் கண்டி போன்ற  பிரதேசங்களில் மே மற்றும் ஜூன் மாதங்களில் மலரும் பூக்களை நாடியும்  குளவிகள் வருகின்றன. அனுராதபுரம் பகுதிகளில் வேம்பு மற்றும் பூக்கள்  பூக்கும் மார்ச், ஏப்ரல்,மே மாதங்களில் அதிகமாக வருகின்றன. 

இவை ஒரு இடத்தில் தொடர்ச்சியாக இருப்பதில்லை. தேனைப் பெறுவதற்காக நாடு  முழுதும் சுற்றிச் சுற்றித் திரியும் நாம் எவ்வளவு முயற்சி எடுத்து இவற்றை  அப்புறப்படுத்தினாலும் அவை மீண்டும், மீண்டும் மலர்களைத் தேடி வந்தே  தீரும். 

இவை தொழிலாளர்களை தாக்குவதற்கு  காரணம் பருந்து அவற்றைத்  தாக்குவதேயாகும். யார் தம்மைத் தாக்குவது என்று அவற்றுக்குத் தெரியாது குழப்பமடைந்து தமக்கு வரும் ஆபத்திலிருந்து தவிர்ப்பதற்காகவே  அருகிலுள்ள தொழிலாளர்களைத் தாக்குகின்றன என்றார்.

மேலும் சீகிரிய பகுதியில் இருக்கும் குளவிகள் நம் நாட்டவர்களை விட ஏன்  வெள்ளையரையே அதிகம் தாக்குகிறது என யோசித்துப்  பாருங்கள். இவை வாசனைத் திரவியங்களையே அதிகம் நாடி வருகின்றன.  தொழிலாளர்களின் வியர்வை, அவர்கள் பாவிக்கும் கிருமி நாசினிகளின் மணத்தையும் நாடி வருகின்றன. 

பேராதனைப் பல்கலைக் கழகத்திலுள்ள பாலத்திற்கடியில் கட்டப்படும்  அதிகமான குளவிக் கூடுகளை அகற்ற ஒவ்வொரு வருடமும் நடவடிக்கை  மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் அவை திரும்பத்திரும்ப வந்து அதில் கூடுகளை  அமைக்கின்றன. பூக்கள் பூப்பதை எமக்கு நிறுத்த முடியுமா! அதுபோல்தான்  பூக்களை நாடி வரும் தேனீக்களின் வருகையையும் நம்மால் நிறுத்த முடியாது  உயரமான இடங்களிலுள்ள கட்டடங்களிலும், மரக்கிளைகளிலும் தேயிலைச் செடிகளின்  அடிப்பகுதியிலும் கூடுகளை இவை அமைத்துக் கொள்கின்றன. தொடர்ச்சியாக இவை ஒரு  இடத்திலேயே இருக்காது. 

சீனா போன்ற நாடுகளில் தேனீக்களை அழிப்பவர்களுக்கு கடும் தண்டனை  வழங்கப்படுகின்றது. நான் தேனீக்களை அழிப்பதை முற்றுமுழுதாக எதிர்க்கிறேன்.  காரணம் இவை அழிக்கப்படும் பட்சத்தில் தாவர உற்பத்தி பாதிக்கப்பட்டு உணவுத்  தட்டுப்பாடு ஏற்படும்.  இவற்றின் தாக்கத்திலிருந்து நாம் விடுபடுவதற்கு அவற்றின் வாழ்க்கை  வட்டத்தை அறிந்து ஒரு பாதுகாப்பு முறையை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.  குளவிக் கொட்டிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக புகையூட்டுவதற்காக  சிலரைப் பயிற்றுவிக்க வேண்டும் அம்பியூலன்ஸ் சேவைகளை தோட்டங்களில்  துரிதமாக்கிக் கொள்ள வேண்டும். வேறு மாற்று முறைகளையும் கையாள வேண்டும். 

தோட்ட முகாமைத்துவம் குளவிக் கொட்டுக்குத் தீர்வாக,  

குளவிகள் இருக்கும் தேயிலை மலைகளை இனங்கண்டு தற்காலிகமாக  தொழிலாளர்களை கொழுந்து பறித்தலிலிருந்து தவிர்க்க வேண்டும். அதன் பின்னர்  அவற்றை விரட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

குளவிகள் இருக்குமென எதிர்பார்க்கப்படும் தேயிலை மலைகளில் வேலை  செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உறைகளை வழங்கி  தொழிலில்  ஈடுபடுத்தும் போது குளவிக் கொட்டிலிருந்து பாதுகாப்புப் பெறலாம். 

தொழிற்சாலையொன்றில் வேலை செய்யும் ஒருவருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டாலோ  அல்லது உயிரிழப்பு ஏற்பட்டாலோ அவரது வயது, இன்னும் எவ்வளவு காலம் அவர் தொழிலில் ஈடுபட முடியும் என்பவற்றைக் கணித்து நட்டஈடு வழங்கப்படும். ஆனால்  தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை குளவிக் கொட்டுக்கு ஆளாகும்போது  அவ்வாறு நட்டஈடு வழங்கப்படுவதில்லை. 

வேலை நேரத்தின்போது தொழிலாளர்ளுக்கு நட்ட ஈட்டு சட்டத்தின் பிரகாரம்  (Compensation) நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். மலையக தோட்டப் பகுதிகளில்  சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தலாக  புலிகள் நடமாடும் இடங்களை அவதானித்து வேலித் தடைகளை ஏற்படுத்த வேண்டும். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.  இவற்றை புறந்தள்ளிவிட்டு மேடைகளில் பேசி மாத்திரம் பயனில்லை சட்ட ரிதியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரிய பிரச்சினையாக தோற்றம் பெற்றிருக்கும்  இதனைத தீர்க்க தோட்ட முகாமைத்துவங்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென  அரசியல்வாதிகள் வலியுறுத்த வேண்டும். 

கொரோனாத் தொற்று காரணமாக சகல தொழிற்றுறைகளும் செயலிழந்த நிலையில்  தோட்டத் தொழிலாளர்களை மாத்திரம் தொழில் செய்யுமாறு அரசாங்கம்  அனுமதித்திருந்தது. இதற்கான காரணம் என்ன? கொரோனாத் தொற்றுக் காலங்களிலும்  உலக சந்தையில் தேயிலைக்கான கேள்வி அதிகமாக இருந்தது. இந்தியா, தேயிலைச்  சந்தையில் தனது பங்களிப்பை செய்ய முடியாமலிருந்தது. இதனால் தேயிலையின் விலை  சர்வதேச சந்தையில் அதிகரித்திருத்தது. இந்நிலையில் வருமானத்தை ஈட்டித்  தருவதற்காக தோட்டத் தொழிலாளர்களே பயன்படுத்தப்பட்டனர். ஆனால் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்படுவதில்லை.  கொரோனா காலத்திலும்கூட தொழிலாளர்களை வருமானத்திற்காக பயன்படுத்தும்போது ஏன்  அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. 

தோட்டத் தொழிலாளர்களும் இந்நாட்டுப் பிரஜைகளே என்பதைக் கருத்திற்கொண்டு  அரசாங்கம் உடனடியாக இந்த விடயத்தில் தலையிட வேண்டும். மேலும் காலம்  தாழ்த்தாது இனிமேலாவது இந்த ஓரவஞ்சனைகளை போக்க சம்பந்தப்பட்ட தரப்பினர்   அனைவருமே செயலில் இறங்குவது காலத்தின் ஒரு கட்டாயத் தேவையாகும்.

மருதமுத்து நவநீதன் - புசல்லாவை தினகரன் நிருபர்

Comments