மலையக பல்கலைக்கழகமும் அரசியல்வாதிகள், கல்விமான்களின் செயற்பாடுகளும் | தினகரன் வாரமஞ்சரி

மலையக பல்கலைக்கழகமும் அரசியல்வாதிகள், கல்விமான்களின் செயற்பாடுகளும்

இ.தொ.கா தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் சடுதியான மறைவின் பின்னரான சூழலில், மலையகப் பல்கலைக்கழகம் தொடர்பாக அவருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம், அன்னாரின் மறைவின் ஓராண்டு பூர்த்திக்குள் நுவரெலியா மாவட்டத்தில் ஒரு மலையகப் பல்கலைக்கழகத்தை அமைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது. கடந்த 31.-05-.2020அன்று நோர்வூட் மைதானத்தில் நடைபெற்ற அன்னாரின், இறுதிச் சடங்கு நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, ஆறுமுகன் தொண்டமானின் கனவுகளை நிறைவேற்றுவோம் என உறுதியளித்துள்ளமை அவரது மறைவினால் சோகத்தில் ஆழ்ந்துள்ள மலையக மக்களுக்குக் கிடைத்துள்ள ஆறுதல் தரும் செய்தியாகும்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் மலையகப் பல்கலைக்கழகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மேற்கொண்டிருந்தார். உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன கொட்டகலைப்பகுதியில் பல்கலைக்கழகத்துக்கான அமைவிடத்தைத் தெரிவுசெய்யும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். இது விடயமாக முயற்சிகளை மேற்கொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி. தேவராஜ் தனியார் தொலைக்காட்சியில் ஒரு விரிவான கலந்துரையாடலையும் நடாத்தி இருந்தார்.

மலையக மக்களின் சமூக நலனிலும் அரசியல் செயற்பாடுகளிலும் அக்கறை கொண்ட பி.பி. தேவராஜ் இது தொடர்பில் விரிவான கலந்துரையாடலையும் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தார். இக்கலந்துரையாடலில் மலையகப் பல்கலைக்கழகம் பற்றிய காத்திரமான ஆலோசனைகளையும் கடந்த பதினைந்தாண்டுகளுக்கு மேலாக முன்வைத்துவரும் பல மலையகக் கல்விமான்கள், பேராசிரியா்கள் சோ. சந்திரசேகரம், தை. தனராஜ், எம்.எஸ். மூக்கையா, எஸ்.விஜயச்சந்திரன் கலாநிதிகள் ஏ.எஸ். சந்திரபோஸ், திருமதி. கலாமோகன் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலின்போது இ. தொ. கா. சார்பில் திருமதி அனுஷா சிவராஜா, செந்தில் தொண்டமான், கா. மாரிமுத்து, கணபதி கனகராஜ், மலையக பல்கலைக்கழகம் தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அமைச்சரின் இணைப்பாளராக செயற்பட்ட சுந்தரலிங்கம் ரூபதர்சன், இலங்கை இந்திய சமுதாயப் பேரவையின் சிரேஷ்ட உப தலைவர் ராஜ்சிவராமன் மற்றும் மலையக கல்வி அபிவிருத்தி மன்ற செயற்பாட்டாளர்கள் கொழும்பிலுள்ள சமூக ஆர்வலர்கள் முன்னணி தொழிலதிபர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் உட்பட பலர் முக்கிய பங்களிப்புகளைச் செய்தனர்.

மலையக பல்கலைக்கழகக் கோரிக்கைக்கான பல நியாயங்களை கல்விமான்கள் முன்வைக்கின்கின்றனர்.

மலையகத்தில் மூன்று பல்கலைக்கழகங்கள் செயற்பட்டாலும் (பேராதனை, சப்ரகமுவ, ஊவா வெல்லஸ்ஸ) இவை எதிலும் பதினைந்து இலட்சம் இந்திய வம்சாவழி மலையக மக்களின் அடையாளமோ பண்பாடோ பிரதிபலிக்கப்படுவதில்லை.

நாட்டின் சகல சிறுபான்மையினரின் அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் வடக்கிலும் கிழக்கிலும் அமைந்துள்ளன. எனவே மலையக மக்களின் அடையாளத்தை பிரதிபலிக்கும் ஒரு மலையகப் பல்கலைக்கழகம் தேவை.

இலங்கையில் பதினைந்து தேசிய பல்கலைக்கழகங்கள் உள்ளன. அத்துடன் பல்கலைக்கழகங்களை நிறுவும் பணி நின்றுவிடாது. வவுனியா பல்கலைக்கழகம் நிறுவப்படுவதும் உறுதியாக உள்ளது. எனவே அடுத்த பல்கலைக்கழகம் மலையகப் பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும் என்பது மலையக மக்களின் அபிலாசையாகும்.

இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சிறுபான்மையினருக்கான பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியும் இந்தியாவில் சிறுபான்மையினருக்கென ஐந்து பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார். அமெரிக்காவில் கறுப்பு இனத்தவருக்கென உயர்கல்வி வழங்கும் கல்லூரிகள் உள்ளன. (இவற்றில் ஏனைய இனத்தவர்களும் உயர்கல்வி பயில்கின்றனர்.

மலையக மக்களின் அடையாளத்துடன் ஏற்படுத்தப்படும் பல்கலைக்கழகமானது அவர்களுடைய வாழ்விடத்திற்கு அண்மையில் அமையும்போது உயர்கல்வியில் பின்தங்கிய மக்கள் மத்தியில் இயல்பாகவே உயர்கல்விக்கான அபிலாசையும் உத்வேகமும் ஊக்கமும் ஏற்படவும் உயர்கல்வி பற்றி நினைக்காத தொழிலாளர்களுக்கென தொழிலாளர் உயர்கல்வி கற்கைநெறிகள் உருவாகவும் வாய்ப்புக்கள் உள்ளன.

கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி அக்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கோரிக்கையை முன்வைத்தபோது நாட்டின் கலாசார மறுமலர்ச்சிக்கு ஒரு பல்கலைக்கழகம் தேவை என்பதை வலியுறுத்தினார். அவருடைய கூற்று மலையக மக்களுக்கும் பொருந்தும். அவர்களுடைய பண்பாட்டு அம்சங்களை வரலாறு,கலைகள், நாட்டாரியல், மொழி, இலக்கியம், சமூகவியல் என்பவற்றைக் கருத்திற் கொண்டு இயங்குகின்ற துறைகள் இன்றைய பல்கலைக்கழக அமைப்பில் இல்லை. (மலேசியப் பல்கலைக்கழகத்தில் ஒரு இந்திய கற்கைத் துறை செயற்படுகிறது. இதனை ஒழுங்கமைத்துக் கொடுத்தவர் வண. தனிநாயகம் அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது)

உத்தேச மலையகப் பல்கலைக்கழகம் இத்துறை சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு. சமூகங்களின் மேம்பாட்டிற்கு நிறுவனங்கள் அவசியமானவை. மலையக மக்களுக்கு தமிழ் மொழிவழிப் பாடசாலைகளும் ஆசிரியர் கல்லூரிகளும் இருந்தபோதிலும் அவர்களுக்கென ஒரு பல்கலைக்கழகம் இன்னும் உருவாகவில்லை.

கடந்த காலங்களில் இ.தொ.கா முன்னாள் தலைவர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான், மறைந்த மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரன், முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் ஆகியோரிடம் மலையகப் பல்கலைக்கழகத்திற்கான பல ஆலோசனைகள் இதற்கு முன்னரும் மலையக கல்விமான்களால் முன்வைக்கப்பட்டன. சமூக அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் எம். வாமதேவன் இம்முயற்சிகளில் பங்களிப்புச் செய்துள்ளார். மலையகப் பல்கலைக்கழகம் தொடர்பாக மலையக கல்விமான்களால் ஆலோசனைகளை முழுமையாகத் தயாரிக்க முடியும். மலையக அரசியல் அதிகார பீடங்களே இதனை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து ஆவனசெய்ய வேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர். பெ. சந்திரசேகரனும் மனோ கணேசனும் இக்கோரிக்கையை முறையாகத் தயாரிக்க இக்கல்விமான்களைக் கொண்ட குழுக்களை அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமரர் பெ.சந்திரசேகரனின் முதலாவது சிரார்த்ததின நிகழ்வுகள் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் (2011.-01-.18) அன்று நடைபெற்ற நினைவுப் பேருரையில் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் மலையகத்தில் உயர்கல்வி போதிக்கும் கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகள், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் என்பவற்றுக்கு அப்பால் மலையகத்துக்கென தனியானதொரு பல்கலைக்கழகம் அவசியம் என்பதை அப்போது வலியுறுத்தினார். முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் 10.-02.-2011அன்று பாராளுமன்றத்தில் அன்னாரின் அனுதாப் பிரேரணையின் போது மலையக மக்களின் வாழ்க்கையில் மேம்பாடு காண்பதற்குத் தேவையான கொள்கைகளையும் வேலைத்திட்டங்களையும் தயாரிப்பதற்காக மலையகத்தைச் சேர்ந்த பல அறிஞர்களையும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களையும் கொண்ட ஆலோசனைக் குழுவை ஏற்படுத்தியிருந்தார்.

மலையக மக்கள் ஓர் தனித்துவமான இனக்குழுவினர் என்ற முறையிலும் அவர்கள் இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காகப் பல தியாகங்களைச் செய்தவர்கள் என்ற முறையிலும் நீண்டகாலமாக உயர்கல்வி முறையில் சமவாய்ப்பினைப் பெறாதவர்கள் என்ற முறையிலும் தனித்துவமான மலையகப் பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என அமரர் சந்திரசேகரன் குறிப்பிட்டிருந்தார். தனது ஆலோசனைக் குழுவின் மேலான கருத்துக்களைக் கேட்டு மலையகப் பல்கலைக்கழகம் ஒன்றிற்கான அத்திவாரப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கிய காலத்தில்தான் துரதிஷ்டவசமாக காலன் அவரது உயிரைப் பறித்தெடுத்தான். சந்திரசேகரன் மறைந்துவிட்டாலும் அவரது சிந்தனையான மலையகப் பல்கலைக்கழகத்தை அவரது அரசியல் வாரிசுகளும் ஏனைய மலையகத் தலைமைத்துவங்களும் ஒன்றிணைந்து உருவாக்கி அவரது கனவை நனவாக்க திடசங்கற்பம் பூணவேண்டும்.

பெ. சந்திரசேகரன் சமூக அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றதும் திறந்த பல்கலைக்கழகத்தின் கிளையொன்றை ஹட்டனில் நிறுவுவதற்கு முயற்சிசெய்து அதில் வெற்றியும் கண்டார். அக்கிளை தற்போது சிறப்பாக இயங்கி வருகிறது. பதினான்கு கற்கை நெறிகளை சுமார் அறுநூறு மாணவர்கள் கற்கின்றனர். நாற்பதுக்கு மேற்பட்ட வருகைதரு விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். அக்காலத்தில் திறந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த பேராசிரியர் உமா குமாரசுவாமி தனது முழு ஆதரவையும் வழங்கி இருந்தார். பேராசிரியர் சோ. சந்திரசேகரம், கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ், எம். வாமதேவன், சி.நவரட்ண, எம். மெய்யநாதன், ஏ. லோறன்ஸ் ஆகியோர் அமைச்சருக்கு உறுதுணையாக இருந்தனர்.

இக்கிளையின் திறப்புவிழா ஹட்டனில் நடைபெறுவதற்கு முன்னர் இவ்விடயம் பற்றி அறிந்துகொள்ள காலி நகருக்கு விஐயம் செய்து பரிசீலனை செய்தார். மலையக உயர் கல்விக்கான நிறுவன வளர்ச்சியில் பெ. சந்திரசேகரன் முக்கிய பங்களிப்பு செய்தவர் என்பதனை நினைவுகூரும் இப்பின்புலத்தில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இக்கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட்டார். அமைச்சரானவுடன் இது தொடர்பாக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவுடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில்தான் அவருடைய திடீர் இழப்பு நிகழ்ந்தது.

இதனைத் தொடர்ந்தே உயர்கல்வி அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்த்தன அமரர் ஆறுமுகம் தொண்டமானின் ஓராண்டு நிகழ்வுக்கு முன்னர் மலையகப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் அதற்கான அங்கீகாரம் அமைச்சரவையில் பெறப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமரர் ஆறுமுகனின் மறைவு மலையகத்தில் பெரும் அதிர்வையும் மாறாத சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசாங்கத்தின் இந்தஅறிவிப்பானது ஒரு மனஆறுதலைத் தருவதாக உள்ளது. அத்துடன் மலையக மக்களுக்குக் கிடைத்த மற்றொரு அதிகாரபூர்வமான அங்கீகாரம் எனவும் இதனைக் கருத்தில் கொள்ளமுடியும்.

இச்சந்தர்ப்பத்தில் ஒரு நெருடலான விடயத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன். இக்கோரிக்கைகளை ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் போன்றோர் முன்வைத்தபோது எழுந்த பல எதிர்ப்புக்களை நினைவு கூறுவது பொருத்தமாகும். இதில் சில மலையகத்தவரும் சம்பந்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மகிந்த ராஜபக்ஷ அரசின் இந்த உடன்பாடான அறிவிப்பு மலையக மக்களுக்கான நியாயமான கோரிக்கையாகும். அவர்கள் அத்தகைய மலையகப் பல்கலைக்கழகம் ஒன்றைப்பெற உரித்துடையவர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டு விட்டது. இக்கோரிக்கையை முன்வைத்த கல்விமான்கள் அரசாங்கத் தலைவர்களிடம் கூறியது, கடந்த இருநூறு ஆண்டுகளாக இந்நாட்டின் மேம்பாட்டிற்காக உழைத்து, ஒரு பாரிய பெருந்தோட்டப் பொருளாதாரத்தை உருவாக்கிய மலையக மக்களுக்குச் சன்மானமாக மலையகப் பல்கலைக்கழகத்தைத் தாருங்கள் என்பதேயாகும்.  

எச்.எச். விக்கிரமசிங்க 

Comments