இதுவரை தமிழ் தேசியத்தை ஆதரித்தவர்கள் அபிவிருத்தியின் பக்கம் திரும்பியுள்ளனர் | தினகரன் வாரமஞ்சரி

இதுவரை தமிழ் தேசியத்தை ஆதரித்தவர்கள் அபிவிருத்தியின் பக்கம் திரும்பியுள்ளனர்

மக்களின் ஆலோசனைக்கு அமைவாகவே போட்டியிடும் 8 வேட்பாளர்களையும் தமிழர்களாகவே நியமித்தோம். அவ்வாறு நியமித்ததன் பின்னர் மக்கள் மத்தியில் எமக்கு அமோக வரவேற்பு கிடைத்தது என்கிறார் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான பரமசிவம் சந்திரகுமார் அவரது நேர்காணல் முழுமையாக...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும், 22 சுயேச்சைக் குழுக்களுமாக 5 ஆசனங்களுக்கு மொத்தம் 304 பேர் போட்டியிடுகின்றர்களே இதனால் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளதல்லவா?  

பதில்: காலத்திற்குக் காலம் நடைபெறுகின்ற தேர்தல்களில் இவ்வாறு குறைந்த ஆசனங்களுக்காக அதிகளவானோர் போட்டியிடுவது இடம்பெற்றுத்தான் வருகின்றது. இம்முறை நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் மக்கள் மிகவும் தெளிவாக உள்ளனர். ஏனைய மாவட்டங்களை விட மட்டக்களப்பு மாவட்டத்தைக் குறிவைத்து அதிகளவு அரசியல் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றமையானது தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்காகத்தான் என்பதை மக்கள் அறிந்துள்ளார்கள். அதனால் ஆளும் கட்சியும், தமிழ் மக்களின் உரிமை சார்ந்த கட்சியும் மட்டுமே இருப்பதாக எண்ணுகின்றார்கள் இவற்றைத் தவிர வேறு எதற்கும் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். 

தமிழ் தேசியத்திற்காக உயிரைத் தியாகம் செய்தவர்கள் அதிகளவானோர் உள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தைப் பெறுத்தவரையில் 75 வீதமானவர்கள் அபிவிருத்தியை எதிர்பார்க்கின்றார்கள். தமிழ் தேசியத்தையும் முற்றாக இல்லாதொழிக்க முடியாது.  

சிறுபான்மை மக்களின் மனங்களை வெல்வதற்காக 8 வேட்பாளர்களையும் தமிழர்களாகவே நாங்கள் களமிறங்கியுள்ளோம்.  

நீங்கள் தேர்தலில் வெற்றிபெற்றதும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான அபிவிருத்தி தொடர்பில் எவ்வகையான திட்டமிடல்களை வைத்திருக்கின்றீர்கள்?  

பதில்: இலங்கையை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் பல எமது கட்சியில் உள்ளன. யுத்தம் நிறைவு பெற்ற பின்னர் வடக்கு கிழக்கிலுள்ள மக்களின் நிலைமையை ஆராய்ந்து, கடந்த ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தியின்பால் என்ன தவறுகள் விடப்பட்டிருக்கின்றன என்பதையும் அறிந்து ஜனாதிபதி, பிரதமர், கட்சியின் ஸ்தாபகர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன். அவ்வாறான செயற்றிட்டங்களை அமுல்படுத்துவதற்கு அரசுக்கு உதவியாக இருப்பேன். மாறாக மக்களை அடக்குமுறைக்குள் ஒருபோதும் தள்ளமாட்டோம். 

5 வருடங்களுக்குள் வடக்கும் கிழக்கும் அபிவிருத்தி செய்யப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விகிதாசார அடிப்படையில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து அபிவிருத்திகளையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கின்றேன்.  

கடந்த ஆட்சிக்காலத்தில் காட்டுயானைகள் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தல், மேச்சல்தரைப் பிரச்சினை, நில ஆக்கிரமிப்புப் பிரச்சினை உள்ளிட்ட எவற்றுக்கும் தீர்வு காணப்படவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர் அவர்கள்கூட முன்னின்று இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவில்லை.  

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எந்த அளவிற்குப் புரிந்து வைத்துள்ளார்கள்? 

பதில்: இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களைத் தெரிவு செய்ய முன்னர் நாம் மாவட்ட ரீதியிலும், தொகுதி ரீதியிலும், கிராமங்கள் தோறும், சங்கங்கள், பொது அமைப்புக்கள் உள்ளிட்ட பலவற்றின் கருத்துக்களை அறிந்திருந்தோம். கருத்துக்களைப் பெற்ற பின்னர்தான் மக்கள் தந்த ஆலோசனைகளுக்கு அமைவாக போட்டியிடும் 8 வேட்பாளர்களையும் தமிழர்களாகவே நியமித்தோம். அவ்வாறு நியமித்ததன் பின்னர் மக்கள் மத்தியில் எமக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.  

பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் அபிவிருத்தியை நேசித்த  ஒன்பதினாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கடந்த தேரதலில் எமக்கு வாக்களித்திருந்தார்கள். கல்குடா தொகுதியில் நாலாயிரத்திற்கு அதிகமான வாக்குகள் அளித்திருந்தார்கள். எனவே மக்கள் அபிவிருத்தியை விரும்புகின்றார்கள்.  

தங்களுடைய கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 வேட்பாளர்களும் தமிழர்களாக உள்ளதால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பன சவாலாக அமையாதா? 

பதில்: எந்தக் கட்சியும் சவாலாக அமையாது. ஏனெனில் மக்களின் மன நிலையில் மாற்றம் வந்துள்ளது. மக்கள் எமது ஜனாதிபதியின் செயற்பாடுகளையும், வேலைத்திட்டங்களையும் வரவேற்கின்றார்கள். மக்கள் எம்மை நன்கு புரிந்து கொண்டுள்ளதனாலும், அபிவிருத்தியை நாம் மட்டுமே செய்ய முடியும் என உணர்வதனாலும், எமக்கு எந்தக் கட்சியும் சவாலாக இருக்காது. 

கடந்த தேர்தல்களைவிட மட்டக்களப்பு மாவட்டத்தின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிப்பதற்கு என்ன செய்யலாம்? 

பதில்: யுத்தத்திற்குப் பின்னர் வாக்களிப்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லை என்ற மனோநிலை தமிழ் மக்களுக்கு இருந்ததால்த்தான்  வாக்களிப்பு வீதம் குறைவடைந்திருந்தது. மாறாக இம்முறை மக்கள் அபிவிருத்தியைப் பற்றிச் சிந்திப்பதனாலும், நாடு முன்னேற வேண்டும் என நினைப்பதனாலும்,  தாமாகவே உணர்ந்து வாக்களிப்பார்கள். இதனால் என்றுமில்லாத வகையில் வாக்களிப்பு வீதம் அதிகரிக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.  

2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதியில் எவரும் தெரிவு செய்யப்படாத நிலையில் தற்போது நடைபெறவுள்ள தேர்தல் எவ்வாறு பார்க்கப்படுகின்றது? 

பதில்: 2010ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசியத்திற்கு வாக்களித்து இரண்டு பேரை இந்த தொகுதியிலிலிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருந்தார்கள். அவ்வாறு அவர்கள் பாராளுமன்றம் சென்று தமது தேவைகளை நிறைவேற்றினார்களே தவிர பட்டிருப்புத் தொகுதி மக்களுக்கு எதனையும் செய்திருக்கவில்லை. அதில் அதிர்ச்சியடைந்த அந்த தொகுதி மக்கள் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மிகச் சொற்பமாகவே வாக்களித்தனர்.  

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யாது என அறிந்ததால், சிலர் தேசியக் கட்சிகளுக்கு வாக்களித்திருந்தனர். இந்நிலையில் இம்முறை மக்கள் எமது கட்சியின் மீதும், ஜனாதிபதியின் மீதும் கொண்டுள்ள விருப்பின் காரணாக வாக்களிப்பு வீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றேன்.  

தமிழ் தேசியத்தை இதுவரை ஆதரித்தவர்கள் அபிவிருத்தியை நோக்கி எமது பக்கம் வந்துள்ளார்கள். பாராளுமன்றத் தேர்தல் வெற்றியைத் தரும்.  

வ.சக்திவேல்

Comments