முஸ்லிம் தலைமைகளுக்கான வரலாற்றுப் பார்வை ஒன்று சேர்ந்து உழைப்பது எப்போது? | தினகரன் வாரமஞ்சரி

முஸ்லிம் தலைமைகளுக்கான வரலாற்றுப் பார்வை ஒன்று சேர்ந்து உழைப்பது எப்போது?

பாராளுமன்றத் தேர்தலில் இம்முறை எனது பார்வை முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப், ஸ்தாபகத் தவிசாளர் எம்.எச்.ஷேகு இஸ்ஸதீன் ஆகியோரின் நினைவலைகளை எமது முஸ்லிம் தலைமைகளின் ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்துப் பார்க்கிறது.  

மூலக் காங்கிரஸின் உரிமை முழக்கங்கள் எமது காதுகளைக் கிழித்த காலங்களான 1986 முதல் 1992 வரை, அஷ்ரஃபுக்கு எதிராக எந்த முஸ்லிம் தலைமையும் தலைகாட்டவில்லை. 1992 இல் லங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்ட ஷேகு இஸ்ஸதீன், அஷ்ரஃபுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்தாரே தவிர, பெரிதாக லங்கா முஸ்லிம் காங்கிரஸை அவர் விமர்சித்ததில்லை. என்னவானாலும் இக்கட்சி பல தலைமைகளால் சவாலுக்கு உள்ளாக்கப்படுவதை, ஸ்தாபகத் தவிசாளர் ஷேகு இஸ்ஸதீனும் விரும்பியிருக்கமாட்டார் என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது. இந்தப் படம் கற்பிக்கும் பாடமாகக் கொண்டே இந்த கருதுகோளுக்கு வந்துள்ளேன்.  

அஷ்ரஃபுக்கும் இவ்விடயத்தில் ஒரு தெளிவிருந்தது. முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி முஸ்லிம் தலைவர்கள் வரலாம். ஆனால், தலைமை வரக்கூடாது, வளரக் கூடாது. இதில் அஷ்ரஃப் கவனமாக நகர்த்திய காய்கள், அவர் மரணிக்கும் வரைக்கும் தோற்கவில்லை.  

வேறு கட்சிகளிலிருந்த எம்பிக்களால் வெறும் அபிவிருத்திகளை மட்டுமே செய்ய முடியும். உரிமையென்றால்ல லங்கா முஸ்லிம் காங்கிரஸால்தான் முடியும் என்பதை அஷ்ரஃப் நிரூபித்ததையும், நாம் ஏற்றுக்கொள்ளவே வேண்டியுள்ளது.  

இதுபற்றி முன்னாள் அமைச்சர் ஏ.சீ.எஸ். ஹமீத் எனக்குச் சொன்னதும் ஞாபகம் வருகிறது. 'அஷ்ரஃபை எப்படியாவது பாதுகாக்க வேண்டும்' என ஒரு கட்டத்தில் அவர் கூறியமை, அபிவிருத்தி அரசியல் வேறு, முஸ்லிம் உரிமை அரசியல் வேறு என்பதில் மர்ஹூம் ஏ.சீ.எஸ். ஹமீதுக்கு இருந்த தெளி வைக் காட்டுகிறது.  

மேலும், முஸ்லிம் எம்.பிக்கள் வேறு கட்சிகளில் தெரிவாவதை அஷ்ரஃபும் விரும்பாதிருக்கவில்லை. 1998இல் பேருவளையில் நடந்த கூட்டமொன்றில் உரையாற்றிய அஷ்ரஃப், 'இதற்கு (பேருவளை) அப்பால் முஸ்லிம் காங்கிரஸை வளர்க்க நான் விரும்பவில்லை' என்றார். பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் பிரதி நிதித்துவம் இழக்கப்படக் கூடாதென்பதே, அஷ்ரஃபின் உரையிலிருந்த மறைமுகக் கருத்து.  

முஸ்லிம்களுக்கான தனிக்கட்சி, தனித்துவ தலைமையின் தேவைகள் 1986ஆம் ஆண்டிலிருந்து உணரப்பட்ட போது, அஷ்ரஃபின் பிரசாரமும் ஷேகு இஸ்ஸதீனின் சிந்தனைகளும் முஸ்லிம்களின் உள்ளங்களில் ஈட்டிபோல ஆழமாகப் பாய்ந்திருந்தன. ஆனால், இதை எங்கு முதலிடுவது? எப்படி முகவரியிடுவது? என்பதில், இவ்விருவருக்கும் வெவ்வேறு சிந்தனைகளிருந்தன.  

முஸ்லிம்களின் அதிகூடிய வாக்குகளிருந்த கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவே தலைவர் அஷ்ரஃப் விரும்பியிருந்தார். தலைநகராக இருந்தமை, இங்கு தேசிய கட்சிகளில் தெரிவான பலர், முஸ்லிம் தலைமைக்கு உரிமை கோரப் புறப்பட்டமை, கிழக்கில் பாதுகாப்புக் கெடுபிடிகள் இருந்தமையால் தலைவர் இப்படிச் சிந்தித்திருக்கலாம்.  

தவிசாளரோ, கிழக்கில் விசேடமாக, அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட எண்ணியமைக்கு பல காரணங்களிருந்தன. கிழக்கில் அரச, ஆயுத அடக்கு முறைகள் தலைவிரித்தாடியமை, கொழும்புக்கு அடுத்தபடியாக அதிகூடிய முஸ்லிம் வாக்குகள் அம்பாரையில் செறிவாக இருந்தமை, தலைவரின் பிறப்பிடமாக அம்பாரை மாவட்டம் இருந்தமையும் தவிசாளரின் சிந்தனையில் தாக்கம் செலுத்தியிருக்கும்.  

தனித்துவம் பேசத் தலைப்பட்டமைக்காக கல்முனையிலிருந்து அஷ்ரஃப் விரட்டப்பட்டதும், முஸ்லிம்களின் அரசியலில் மைல்கல்லாகவே பார்க்கப்படுகிறது. இறுதியில் தவிசாளரின் முடிவுக்கு இணக்கம் காணப்பட்டே, லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் முகங்காட்டியது.  

காலக்கழிகைகளில், அஷ்ரஃபும், ஷேகு இஸ்ஸதீனும் பிரிய நேரிட்டுப் பயணங்கள் தொடர்ந்த போதும், ஷேகு இஸ்ஸதீன் வேறு கட்சிகளில் போட்டியிட்டு எம்.பியாக வருவதை அஷ்ரஃப் விரும்பாதிருந்தார்.

இதற்காகத்தான் 2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த ஷேகு இஸ்ஸதீனை, தலைவர் அஷ்ரஃப் திடீரென ஆரத்தழுவிக்கொண்டார். இந்தக் காட்சியைப் படம் பிடித்த ஊடகவியலாள நண்பர் இறக்காமம் பிக்கீர், உண்மையில் பாராட்டுக்குரியவர்தான். இன்று இதுதான் முஸ்லிம் அரசியல் களத்தில் ‘பேசும் படமாக்கப்பட’ வேண்டும்.  

ஷேகு இஸ்ஸதீனை அணைத்தெடுத்து எப்படியாவது முஸ்லிம் தனித்துவ தலைமைக்குப் பலம் சேர்ப்பது, தனித்துவ தலைமைக்கு வித்திட்ட சிந்தனையாளன், தேசிய கட்சியின் சிந்தனையில் சங்கமிக்கக் கூடாதென்பவை தான், அஷ்ரஃபின் விருப்பமாக இருந்திருக்குமோ! தெரியாது.

இன்று இந்த மூலக்காங்கிரஸ்தான் அம்பாரை மாவட்டத்தில் மூன்று காங்கிரஸாகப் பிரிந்து போட்டியிடுகின்றன.  

முஸ்லிம்களின் அரசியல் முகவரியை அறிமுகப்படுத்திய இம்மாவட்டத்திலா இந்நிலைமை என்பதை, இப்படம்தான் கவலைப்படுத்துகிறது. பரவாயில்லை பிரிந்துவிட்டார்கள்.

பழிவாங்கல்கள், அடிதடிகள், அவதூறுகள் இல்லாமலாவது இத்தலைமைகள் அரசியல் செய்யட்டும். இந்தப்பிரிதல்கள் எத்தனை முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்யும் என்ற கவலைக்குள்ளானவர்களாகவே, சமூக ஆர்வலர்கள் வாக்களிக்கவுள்ளனர்.  

சுஐப் எம்.காசிம்

Comments