அரசியல் செல்நெறியில் முன்மாதிரியான ஆளுமை | தினகரன் வாரமஞ்சரி

அரசியல் செல்நெறியில் முன்மாதிரியான ஆளுமை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு நேற்று (ஜூன் 20) பிறந்த நாள்.

அப்படியா? என்று கேட்கும் அளவிற்கு அவருடைய பிறந்த நாள் எளிமையாகக் கொண்டாடப்பட்டமை இலங்கை அரசியலில் ஒரு முன்மாதிரி என்றே சொல்ல வேண்டும்.

இலங்கையின் முன்னைய வரலாறுகளைப் பின்னோக்கிப் பார்த்தால், நாட்டுத் தலைவரின் பிறந்த நாள் ஒரு தேசிய விழாவாகவே கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. தேசிய பத்திரிகைகளில் விசேட அனுபந்தங்கள், விளம்பரங்கள் என முழு நாடும் களைகட்டியிருக்கும். எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதி தேர்தலின்போது எப்படி எளிமையைக் கையாண்டாரோ, அதனைவிட அவர் ஜனாதிபதியானதும் எளிமையான நடைமுறைகளைப் பின்பற்றித் தனது நிர்வாகத் திறனை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்.

விமான நிலையத்தில் சாதாரண பயணிகளின் நுழைவாயிலைப் பயன்படுத்தி பயணம் மேற்கொண்டது முதல் அடுத்தடுத்து ஒவ்வொரு செயற்பாட்டையும் எளிமையாகவும் காத்திரமாகவும் முன்னெடுக்கின்றமை ஒட்டுமொத்த அரசியல் செல்நெறிக்கு ஒரு முன்மாதிரி என்றால் மிகையில்லை.

அரசியல்வாதிகள் ஆடம்பரங்களைத் தவிர்த்து மக்களின் அபிவிருத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்திவரும் அதேநேரம், தாமும் அதனைக் கைக்கொண்டு வருவது நாட்டு மக்கள் பெற்ற பெரும்பாக்கியமாகும்.

முன்னைய காலங்களில் போலல்லாது வீதியில் ஜனாதிபதி பயணிக்கிறாரா என்பதுகூடப் பொதுமக்களுக்குத் தெரியாமல், எந்தவித பாதுகாப்புக் கெடுபிடிகளும், வீதித் தடைகளும் இல்லாமல் மக்களோடு மக்களாகப் பயணிப்பது நாட்டு மக்களுக்குக் கிடைத்த முதலாவது அபூர்வ அனுபவம்.

நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றது தொடக்கம், மக்களின் அன்றாடப் பணிகளுடன் தொடர்புடைய முக்கிய அமைச்சுகளுக்குத் திடீர் விஜயங்களை மேற்கொண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டமை மூலம் ஒட்டுமொத்த மக்களின் அபிமானத்தையும் பெற்றுவிட்டதோடு, எதிரணியினரும் மனமுவந்து பாராட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அதேபோன்று அண்மையில் அதிகாரிகளுக்கு அவர் வழங்கியிருக்கும் அறிவுறுத்தல்கள் பற்றி இன்னமும் மக்கள் மத்தியில் ஒரு பேசுபொருளாக உள்ளது.

“நாடு முகங்கொடுத்துள்ள சுகாதார பிரச்சினையை பொருளாதார பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. நாம் ஒரு பூகோள பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளோம். வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உதவும் நிதி மற்றும் அரசிறை வருமான கொள்கைகளை வகுக்கும் பொறுப்பு மத்திய வங்கியிடமும் திறைசேரியிடமுமே உள்ளது.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் முன்னணி நாடுகளினதும் சிறிய நாடுகளினதும் மத்திய வங்கிகள் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான பொறிமுறைகளை முன்வைத்துள்ளன. எனினும், எமது நாட்டின் மத்திய வங்கி பொருளாதார புத்தெழுச்சிக்காக எவ்வித முன்மொழிவையும் முன்வைக்கவில்லை. கடந்த சில வருடங்களாக பல நிறுவனங்களுக்கு அவர்கள் வழங்கிய சேவைகள் மற்றும் உற்பத்திகளுக்காக அரசாங்கம் பெருமளவு நிதியை செலுத்த வேண்டியுள்ளது. அவற்றைப் பிணையாக வைத்துக்கொண்டு 150 பில்லியன் ரூபாய்  நிதி ஏற்பாடுகளை வங்கிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி முன்வைத்த முன்மொழிவை மத்திய வங்கி நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக ஏற்படும் பொருளாதார பின்னடைவு குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மீது சுமத்தப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

மத்திய வங்கியில் நிதி மோசடிகள் இடம்பெற்ற காலப்பகுதியில் இருந்த அதிகாரிகள் இன்னும் தமது பதவிகளில் உள்ளனர். அந்தப் பாரிய மோசடிக்கு உதவிய இவர்கள் நாட்டை கட்டியெழுப்புவதற்கு உதவாது இருப்பது குறித்து ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டிருக்கிறார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக மக்கள் தனக்கு மிகப்பெரும் ஆணையை வழங்கியிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி , அதனை நிறைவேற்றுவதற்கான கடப்பாட்டினை கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறை இணைந்து கொவிட் நோய் தொற்றிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்குப்பாரிய அர்ப்பணிப்பை செய்துள்ளனர். நாட்டைப் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பும் பொறுப்பு மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கு பதிலாக மத்திய வங்கி தனது முன்மொழிவுகளுக்குக்கூடத் தடை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

இந்தப் பிரச்சினைகளை விளங்கிக்கொண்டு மிக விரைவாக மத்திய வங்கி அதன் முன்மொழிவுகளை அல்லது தனது முன்மொழிவுக்கான அனுமதியை வழங்க வேண்டுமென ஜனாதிபதி  அதிகாரிகளிடம் தெரிவித்தது மாத்திரமல்லாது அதனை உடனடியாகவே செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.

ஜனாதிபதி குறிப்பிட்ட முக்கியமான விடயங்கள் குறித்து அரசியல் ரீதியாகவன்றி நாட்டின் நலன் கருதியதாகப் பார்க்க வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியமான வகிபாகத்தைக் கொண்டிருப்பது மத்திய வங்கியும் திறைசேரியும் என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றில்லை. அந்தத் துறைகள் சரியாக இயங்குவதன் மூலமே அபிவிருத்தியும் சாத்தியமாகும்!

Comments