விமானப் படையில் இணையும் விருப்பம் ஈடேறவில்லை | தினகரன் வாரமஞ்சரி

விமானப் படையில் இணையும் விருப்பம் ஈடேறவில்லை

இலங்கையில் உள்ள சிறுகதை எழுத்தாளர்களின் வரிசையில் இணைகிறார் இளம் எழுத்தாளரும் கலைஞருமான பொன்.பத்மநாதன். இவர் "பூக்கள் பூக்காத  பூந்தோட்டம்”எனும் சிறுகதை நூலை விரைவில் வெளியிடவுள்ளார். 

மாத்தளையில் பிறந்து வளர்ந்த இவர், மாத்தளை இந்து கல்லுௗரியில் கல்வி கற்று வந்தார். உயர் தரத்தில் கல்வி கற்கும்போது விமானப் படையில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளார். இதற்கான தேர்வில் தெரிவு செய்யப்பட்டாலும் பெற்றோரின் விருப்பமின்மையால் அது கைகூடாமல் போய்விட்டது. 

அதன் பின் உயர் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்காததால் மேலே என்ன செய்யலாம் என்று யோசித்தார். நண்பரின் உதவியோடு கொழும்புக்கு வந்துள்ளார். கொழும்பில் செட்டியார் தெருவில் இவரது உறவுக்காரரைச் சந்தித்துள்ளார்். அவரிடம் தன் நிலைமையைக் கூறி அவரது நண்பர் மூலமாக செட்டியார் தெருவில் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். நகைத் தொழிலை கற்றுக்கொண்ட இவர், ஆறு வருடங்களின் பின் வாடிக்கையாளர்களின் உதவியுடன் சொந்தமாக தொழிலை ஆரம்பித்து நடாத்தி வருகின்றார். 

சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இவர், பாடசாலை நண்பரான தியாகராஜா என்பவரால் தமிழ் இளைஞர் கலாசார கூட்டமைப்பில் இணைந்து கொண்டார். அதன் கிளையாக ஜயசக்தி இளைஞர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. பெரியவர்கள் தாய் மன்றத்திலும் இளையவர்கள் கிளை மன்றத்திலும் செயல்பட்டார்கள். இந்த மன்றத்தின் மூலமாக இலவசமாகத் திருமணம் செய்து வைத்தல், பாடசாலை மாணவ மாணவியர்களுக்கு இலவச அப்பியாச புத்தகம் பை வழங்கல், சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் முகமாக மாணவர்களுக்கு வங்கியில் பணம் வைப்புச் செய்தல், ஆங்கில தட்டச்சு பயிற்சி வழங்கல் என பல்வேறு சமூக சேவைகள் செய்யப்பட்டன. இவ்வாறு இம் மன்றத்தின் மூலம் மூன்று வருடங்களாக சிறப்பாக சேவையாற்றி வந்ததால் முன்னாள் அமைச்சர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமானால் இளம் வயதிலேயே இவர் கெளரவிக்கப்பட்டார். 

இவர் தான் கலைத்துறையில் ஈடுபட்டது பற்றி இங்கு மனம் திறந்து கூறுகிறார்....! 

எமது தாய் மன்றத்தில் கலைஞர்களான ராஜசேகரன், ஹெலன்குமாரி, கந்தையா, கே. செல்வராஜா, முத்துசாமி ஆகியோர் இருந்தார்கள். அந்த காலத்தில் கொழும்பில் நாடகங்கள் போட்டி போட்டு மேடையேற்றப்பட்டன. 1990ஆம் ஆண்டு அரசாங்கத்தால் தமிழ் நாடகப்போட்டி நடத்தப்பட்டது. பல மன்றங்கள் நாடகங்களை மேடையேற்றி போட்டியில் கலந்து கொள்ள முயற்சித்தன. அவ்வேளையில் வெள்ளி நிலா கலாலயம் ”கவ்வாத்து கத்தி”என்னும் நாடகத்தை மேடையேற்றியது. அதில் நானும் நடித்தேன். அந்நாடகம் முதலாவது பரிசை வென்றது. பாடசாலை நாட்களில் பல நாடகங்களில் நடித்தியிருந்தாலும் கொழும்பில் நான் நடித்த முதல் நாடகம் இதுவாகும். 

இதுவரை எத்தனை நாடகங்களில் நடித்துள்ளீர்கள்? 

முதலாவது நாடகம் ”கவ்வாத்து கத்தி”ஆகும். அதன்பின் ”தண்ணீர் தண்ணீர்”, ”டார்லிங் டார்லிங்”, ”ஒன்று எங்கள் ஜாதியே”, ”மது மதி”போன்ற நாடகங்களிலும் நடித்தேன். மறைந்த கலைஞர் கே. மோகன்குமாரினால் ”விடிவே இல்லாத முடிவு”என்ற நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்நாடகம், 2002ஆம் ஆண்டு நாடக விழாவில் மூன்றாவது பரிசை வென்றது. அடுத்து ”பாவக்காரர்”, ”முரண்்பாடுகளும் முற்று புள்ளிகளும்”, "சிறகுகள் விரிகின்றன, ”மூடதேசத்து முட்டாள் ராஜா”ஆகிய நாடகங்களிலும் நடித்தேன். 

கலைஞர் கே. ஈஸ்வரலிங்கம் 

Comments