தமிழகத்தின் கொரோனா கடல்வழியாக வடக்கில் பரவுவதற்கு வாய்ப்பு உண்டா? | தினகரன் வாரமஞ்சரி

தமிழகத்தின் கொரோனா கடல்வழியாக வடக்கில் பரவுவதற்கு வாய்ப்பு உண்டா?

கொரோனா வைரஸின் தாக்கமானது முழுதாக உலகிலிருந்து இன்னும் நீங்கவில்லை. தற்போது வரை உலகளவில் கொரோனா தொற்றால் 80 இலட்சத்துக்கும் அதிகமானோர் பீடிக்கப்பட்டுள்ளதுடன், 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

எனினும் தொடர்ந்தும் நாடுகளை முடக்கி வைத்திருப்பதால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தமது நாடுகளை பாதுகாக்க வேண்டிய இக்கட்டான நிலையில்; கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கையை நோக்கி நாடுகள் திரும்பிக்கொண்டிருக்கின்றன.

இலங்கையை பொறுத்தவரையில் கொரோனாவின் பாதிப்பு ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைவாகவே காணப்படுகிறது. அதன்படி இலங்கையில் 1924 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 1421 பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வந்த காலப் பகுதியில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட துரித நடவடிக்கையினூடாக நாட்டில் பாரிய அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைக்கு சுகாதார தரப்பினருடன் இணைந்து பொலிஸ், பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் அரச உத்தியோகத்தர்களும் பங்களிப்பு செய்திருந்தனர்.

தற்போது எமது நாடு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது இவ்வாறிருக்கையில்; தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை இலங்கையைத் தாக்கும் வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறும் போது, இந்தியாவில் மிக வேகமாக அதிகரித்து வருகின்ற கொரோனா பாதிப்பின் தாக்கம் இலங்கையிலும் காணப்படலாம் என்கின்றனர்.

இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு கடல் மார்க்கமாக வருபவர்கள் மூலம் கொரோனா வைரஸ் வடக்கில் பரவக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாம். அவ்வாறு ஏற்பட்டால் அது ஆபத்தான நிலையை ஏற்படுத்தும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

உலக அளவில் கொரோனா தாக்கம் அதிகமாகக் காணப்படுகின்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளதாக உலக சுகாதார தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. அதேநேரம் இந்தியாவில் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து செல்கின்றது.

எனவே தமிழகத்துக்கு அண்மையில் இருக்கக் கூடிய இலங்கைக்கு இதனால் பாதிப்பு ஏற்படும் என்பது சுகாதாரப் பிரிவினரின் அச்சமாகும். தமிழகத்திலிருந்து அல்லது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோத வியாபாரிகள், அகதிகள், மீனவர்கள் என்போர் சட்டவிரோதமாக உள்நுழைவது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவ்வாறு வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் காணப்படுமானால் அது எமது நாட்டுக்குள் இலகுவாக பரவிவிடும் என்பதே அவர்களின் அச்சத்துக்கு காரணமாகும்.

இவ் விடயத்தை யாழ். மாநகர சபையின் பதில் முதல்வர் ஈசன் கடிதமொன்றினூடாக வட மாகாண ஆளுநருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,

இந்திய மீனவர்கள் வடக்கின் கடல் எல்லைப் பரப்பிற்குள் அதிலும் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக மீன்பிடியை மட்டும் தமது வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்துவரும் குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் தற்பொழுது கொவிட் 19 தாக்கம் அதிகரித்து வருவதனை நாம் அவதானிக்க முடிகின்றது.

இதனால் கொவிட் - 19 பாதிப்பு குறைந்து சுமூகமான நிலையை நோக்கி நகரும் எமது மக்களின் வாழ்வில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மூலம் மீண்டும் கொவிட்-19 தாக்கம் அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் தோன்றுகின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக அவர் குறிப்பிட்ட விடயத்தில் மற்றுமொரு விடயமும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதாவது தமிழக மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் ஏற்கனவே வட பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் சுகாதாரப் பிரிவினர் கூறுவது போன்ற நிலை ஏற்பட்டால் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தில் மேலும் அச்சுறுத்தலையும் பாதிப்பையும் ஏற்படுத்தும். அதுதவிர இந்தியாவிலிருந்து அதிகளவில் போதைப்பொருட்கள் கடல் வழியாக கடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது அதனோடு சேர்த்து மற்றுமொரு அழிவை ஏற்படுத்தும் வைரஸும் இலங்கைக்குள் பரவுவதற்கான வாய்ப்புமுள்ளது.

மேற்படி விடயம் தொடர்பாக வைத்திய உயரதிகாரியொருவருடன் பேசினோம். கொரோனா தாக்கத்தையடுத்து நாட்டின் விமான நிலையம், துறைமுகம் என்பவற்றினூடான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டது. ஏனைய நாடுகளிலிருந்து கொரோனா நாட்டுக்குள் பரவாமல் தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேநேரம் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே சமூகத்தோடு இணைவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால் தற்போது சட்டவிரோதமாக கடல்வழியாக எந்தவித பரிசோதனைகளும் இல்லாது சமூகத்துக்குள் நுழைபவர்களால் கொரோனா பரவுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகவே உள்ளது. எனவே இது தொடர்பாக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

சட்டவிரோதமாக கடலூடாக நாட்டுக்குள் வருபவர்களைக் கட்டுப்படுத்த, யுத்த காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த கடற் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்று மேற்கொள்ளப்பட வேண்டும். அது தவிர மக்களும் தமது சுய பாதுகாப்பு தொடர்பில் அக்கறையுடன் செயற்பட வேண்டியது அவசியம்.

இதேவேளை வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைபவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட கடல் ரோந்து நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதுதவிர வடக்கிற்கு கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்களத்தின் வடமாகாண பணிப்பாளர் அ. கேதீஸ்வரன் கூறியிருக்கிறார்.

"இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக யாழ்ப்பாணத்துக்குள் சட்டவிரோதமாக வருபவர்கள் மூலம் கொரோனா பரவுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. எனினும் கொரோனா தாக்கம் ஏற்படுமாக இருந்தால் அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து முன்னாயத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.

அண்மையில் மன்னார் பகுதிக்கு இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இருவர் வந்திருந்தனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் அவர்களை அழைத்து வந்தவர்களையும் நாம் தனிமைப்படுத்தியிருந்தோம். இவ்வாறு கொரோனா பரவல் அச்சுறுத்தல் காணப்பட்டால் அதற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்" என்கிறார் கேதீஸ்வரன்.

இதேவேளை வடபகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான சந்தரப்பம் இருப்பதாக கூறுவது தேர்தல் கால அரசியல் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. வடபகுதி மக்களிடையே இவ்வாறு அச்சமான சூழ்நிலையை ஏற்படுத்தி வாக்களிப்பு வீதத்தை குறைப்பதற்கான முயற்சி எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளரான முன்னாள் அமைச்சர் லக்ஷமன் கிரியல்ல குரல் எழுப்பியிருக்கிறார்.

தவிர உலகளவில் எயிட்ஸ் நோய் வேகமாக பரவிவந்த காலப் பகுதியில் தமிழ்நாட்டிலிருந்து கடல்வழியாக இலங்கைக்குள் எயிட்ஸ் நோய் பரவும் வாய்ப்புள்ளதாக அப்போது எச்சரிக்கப்பட்டது. ஆனால் அவ்வாறான எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக பதிவுகளில் இல்லை.

எனினும் அதுபோன்று தற்போதும் கொரோனா வைரஸும் பரவாது என உறுதியாக கூறமுடியாது. கொரோனா வைரஸின் பரவும் தன்மை, அதன் வேகம் என்பன ஏனைய வைரஸ்களை விட வேறுபட்டிருப்பதால் கடந்த கால அனுபவங்களை இதற்கு சாதகமாக பொருத்திப் பார்க்கவும் முடியாது.

எது எவ்வாறு இருந்தாலும் எதனையும் வருமுன் காப்பதே சிறந்ததாகும். எனவே இந்த விடயத்திலும் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதுடன் ஒவ்வொரு தனிமனிதர்களும் தத்தமது சுய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

ரி.விரூஷன்

Comments