மத்திய வங்கி கலந்துரையாடல் உணர்த்தும் உண்மை... | தினகரன் வாரமஞ்சரி

மத்திய வங்கி கலந்துரையாடல் உணர்த்தும் உண்மை...

உலகின் ஒட்டுமொத்த உருவத்தையும் மாற்றி வரும் கொவிட் 19 தொற்றுநோய் நாடுகளையும் மக்களையும் புதிதாக சிந்தித்து செயற்பட நிர்ப்பந்தித்திருக்கிறது. இன்றைய நவீன சமூகத்தினாலும் அதன் உயரிய தொழிநுட்ப மற்றும் சுகாதார வளர்ச்சியினாலும் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலாமலிருக்கும் இவ் வாட்கொல்லி தொற்று நோயானது, ஆரம்பத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உயிர்களை பலியெடுத்து வந்ததன் விளைவாக தற்போது ஒட்டுமொத்த உலகமும் பாரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களின் பின்னர் உலக நாடுகள் முகங்கொடுக்க ஆரம்பித்திருக்கும் இந்த பொருளாதார பின்னடைவை சிறியது, பெரியது என்ற வித்தியாசமோ அல்லது முன்னேற்றம் கண்ட, பின்தங்கிய நிலையில் இருக்கின்ற என்ற பாகுபாடோ இன்றி சகல நாடுகளுக்கும் முகங்கொடுக்க நேர்ந்திருப்பதால் அதிலிருந்து மீள்வதற்கான காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இதனை முன்கூட்டியே உணர்ந்த பல நாடுகளில் தமது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பத்தக்க புதிய பொருளாதார முறைமைகளை அந்நாடுகளின் அரச வழிகாட்டலின் கீழ் மத்திய வங்கிகளினால் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும் இலங்கை மத்திய வங்கியானது, இதுவரை அத்தகைய புதிய பொருளாதார பொறிமுறைகளை ஒருபுறத்தில் அரச தலைமைக்கு முன்மொழியாது இருந்ததோடு மறுபுறத்தில் அரச தலைமைத்துவத்தினால் நாட்டின் பொருளாதார பிரச்சினையிலிருந்து மீண்டெழுவதற்காக செயற்படுத்தும்படி மத்திய வங்கிக்கு அறிவுரை வழங்கப்பட்டிருந்த செயற்திட்டத்தினை செயற்படுத்தாதிருந்ததோடு அதற்கான பரிந்துரைகளை முன்மொழியவும் தவறியிருந்தது.  

கடந்த சில வருடங்களாக இந்நாட்டின் பல்வேறு நிறுவனங்களினால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட சேவைகள் மற்றும் வழங்கலுக்காக அரசாங்கம் பெருமளவு நிதியை செலுத்த வேண்டியிருப்பதாகவும் ஆகையால் அவற்றை பிணையாக வைத்துக்கொண்டு 150 பில்லியன் ரூபாவினை அந்நிறுவனங்களின் முதலீட்டுப் பணிகளுக்காக பெற்றுக்கொள்ளத்தக்க வகையில் இலங்கையின் நிதி வங்கிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ஏற்கனவே முன்வைத்திருந்த பரிந்துரையை மத்திய வங்கி செயற்படுத்த தவறியிருந்ததுடன் அப்பரிந்துரையை செயற்படுத்தாவிடின் அதற்கான மாற்று யோசனைகளை முன்மொழிவதிலும் தாமதித்திருந்தது. இதனால் நாட்டில் ஏற்படும் பொருளாதார பின்னடைவு மீதான குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டு வந்தமையே அண்மையில் மத்திய வங்கி அதிகாரிகளின் முன் ஜனாதிபதி கடுமையாக கருத்து வெளியிட்டமைக்கு களம் அமைத்துக் கொடுத்தது.  

இலங்கை மத்திய வங்கியின் வரலாற்றில் இதுவரை இடம்பெற்ற நிதி மோசடிகளில் மிகப் பாரியதாக பேசப்படும் பிணைமுறி மோசடி இடம்பெற்ற சமயத்தில் மத்திய வங்கியில் பொறுப்பு வாய்ந்த பதவிகளிலிருந்த அதிகாரிகள் இதுவரை தொடர்ந்தும் அப்பதவிகளை வகித்து வருகின்றமை ஜனாதிபதியின் கடும் விமர்சனத்திற்கு காரணமாக அமைந்ததோடு, அத்தகையவர்கள் இத்தகைய இக்கட்டான நிலையில் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கான தமது பொறுப்பினை நிறைவேற்றாது இருப்பதை பற்றி அவர் கடும் அதிருப்தியினை வெளியிட்டார்.  

இதன்போது தாம் முன்மொழிந்த செயற்திட்டத்தினை செயற்படுத்துவதா அல்லது அதற்கான மத்திய வங்கியின் மாற்று முன்மொழிவுகளை செயற்படுத்துவதா என்பது தொடர்பான மத்திய வங்கியின் விரிவான அறிக்கையை மறுதினமே தமக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தினார். இதன் காரணமாக தமது முன்மொழிவுகளை மறுதினமே ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய வங்கி மேற்கொண்டதுடன், அதன் வெளித்தோற்றமாகவே மத்திய வங்கி முதல் முறையாக இரவோடு இரவாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றது என்ற சூடான செய்தி சமூக ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.  

கொவிட் தொற்று நோயினை குறிப்பிடத்தக்க வகையில் கட்டுப்படுத்துவதற்கான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக அப் பேரழிவிலிருந்து இதுவரை நாட்டைக் காப்பாற்ற முடிந்தபோதிலும் இலங்கை நாட்டிற்கு முகங்கொடுக்க நேரிட்டிருக்கும் அடுத்த பாரிய சவாலாக அமைவது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதே ஆகுமென தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, நாட்டின் தற்போதைய பொருளாதார அபிவிருத்தி வேகம் மிகக் கீழ் மட்டத்தில் இருந்து வருவதுடன் நாட்டின் தேசிய கடன் தொகையும் அதிகரித்து வருவதாக அண்மையில் தம்மை சந்தித்த ஐரோப்பா சங்கத்தின் உள்நாட்டு உறுப்பினர்களிடம் தெரிவித்திருப்பதோடு, அந்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக செயற்படுத்தவிருக்கும் நடவடிக்கைகளைப் பற்றியும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.  

இப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக இறக்குமதியில் குறிப்பிடத்தக்க கட்டுப்பாட்டினை அமுல்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி, அவ்வாறு இறக்குமதியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதன் அர்த்தம் நாட்டை மீண்டும் மூடிய பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதல்ல எனவும் மாறாக அநாவசிய இறக்குமதிகளைத் தவிர்த்து குறிப்பாக உணவு உற்பத்தி உள்ளிட்ட விவசாய துறையிலும் கைத்தொழில் துறையிலும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருக்கின்றார்.  

அதன்போது வீட்டுத்தோட்ட செயற்பாடுகளை ஊக்குவித்தல், கைவிடப்பட்ட விளைச்சல் நிலங்களில் மீண்டும் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்கான சூழ்நிலையை உருவாக்குதல், அவ்விவசாய நடவடிக்கைகளின்போது இரசாயன உற்பத்திகளின் பயன்பாட்டிற்கு பதிலாக சேதனப் பசளை விவசாயத்தை ஊக்குவித்தல், தரமான விதை வகைகளை பெற்றுக்கொடுத்தல், நவீன தொழிநுட்ப வசதிகளை பெற்றுக்கொடுத்தல் ஆகிய நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் அத்தோடு களஞ்சியசாலை வசதிகள் பற்றாக்குறையினால் உள்நாட்டு விவசாய உற்பத்தியில் நாற்பது சதவீதம் அழிவடைந்து வருவதால் அதனைத் தடுப்பதற்கு விவசாய உற்பத்திகளை பதப்படுத்தல் மற்றும் உலர வைத்தல் மீது மீண்டும் கவனம் செலுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.  

நாட்டின் உற்பத்தி துறைக்கு தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கு சூரியசக்தி மற்றும் காற்றின் விசை ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு கூடுதல் கவனமும் ஆர்வமும் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி, அதன் மூலமும் மின் உற்பத்திக்கான பாரிய செலவினைக் குறைத்து கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்.  

இந்நாட்டு இளைஞர் யுவதிகளுக்கு புதிய தொழிநுட்பம் பற்றிய கல்வியையும் தகவல் தொழிநுட்பம் பற்றிய அறிவையும் பெற்றுக்கொடுத்து சர்வதேச தொழிற்படையின் தரத்திற்கு நம் நாட்டின் தொழிற்படையின் தரத்தினை உயர்த்த வேண்டும் என்பதோடு, அதற்கான வசதிகளை செய்துகொடுக்கும் வகையில் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களின் கற்பித்தல் செயற்பாடுகளை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.  

நாட்டின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு சான்றுபகரும் இரு முக்கிய சம்பவங்களை இதன்போது இங்கே சுட்டிக்காட்டலாம். நீண்ட காலமாக நாட்டின் உள்ளுர் கடதாசி தேவையைப் பெருமளவை பூர்த்தி செய்துவந்த வாழைச்சேனை கடதாசி உற்பத்திசாலை உள்நாட்டு யுத்தம் காரணமாக பல தசாப்தங்களாக செயலிழந்த நிலைக்கு தள்ளப்பட்டு, இறுதியில் பழைய இரும்புகளுக்காக அப்பாரிய தொழிற்சாலையின் இயந்திர உபகரணங்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற பரிதாப நிலை ஏற்பட்டிருந்த பின்னணியில் ஜனாதிபதியின் நேரடி வழிகாட்டலில் துரிதமாக புனர்நிர்மானப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை நீண்ட இடைவேளைக்கு பின்னர் இன்று மீண்டும் உள்ளுர் கடதாசி உற்பத்தியின் ஆரம்பக்கட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கின்றது. அதற்கமையவே அண்மையில் கடதாசி கோப்புகள் (cardboard files) உற்பத்தியின் பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம்.  

உள்;ர் உற்பத்திகளைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் இன்னுமொரு நடவடிக்கையாகவே பத்திக் ஆடை மற்றும் நெசவு ஆடை ஆகியவற்றை இறக்குமதி செய்தல் முற்றாக நிறுத்தப்படுவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள ஜனாதிபதியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அத்தீர்மானம் முழுமையாக செயற்படுத்தப்படும் பட்சத்தில் குறிப்பாக ஐரோப்பிய சுற்றுலா பிரியர்களின் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் பத்திக் ஆடை உற்பத்திகள் மற்றும் உள்ளுர் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் கைத்தறி சேலைகள் ஆகியவற்றின் உற்பத்தி நாட்டிற்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தரும் வழிகளாக வளர்ச்சியடைவதற்கான ஏராளமான சாத்தியபாடுகள் காணப்படுகின்றன.  

இத்தகைய முற்போக்கு செயற்திட்டங்களைக் கொண்டிருக்கும் ஜனாதிபதி, அண்மையில் அரச வங்கி அதிகாரிகளுடனான சந்திப்பின்போது கொரோனா தொற்றுநோயின் பின்னரான காலப்பகுதியில் அரசாங்கத்தின் வழிகாட்டலின் கீழ் மத்திய வங்கியினால் இலங்கை வங்கித்துறைக்கு வழங்கப்பட்டிருக்கின்ற நிவாரணங்களை நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் பலப்படுத்தும் வகையில் உபயோகப்படுத்துமாறு ஆலோசனை வழங்கியிருக்கின்றார்.  

குறிப்பாக விவசாயம், சிறிய மற்றும் நடுத்தர வணிக முயற்சிகளுக்கு கூடிய ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்றும் மக்களுக்கு சிரமத்தினை ஏற்படுத்தும் பழைய அணுகுமுறைகளுக்கு பதிலாக புதிய அணுகுமுறைகளை கடைப்பிடித்து தூரப்பிரதேசங்களை சேர்ந்த நம்பகமான வாடிக்கையாளர்களையும் வர்த்தகர்களையும் இனங்்கண்டு அவர்களுக்கு தேவையான நிதி வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் இதில் நாடெங்கும் 600 கிளைகளைக் கொண்ட மக்கள் வங்கிக்கு பெரும் பொறுப்பு இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கின்றார். அத்தோடு குத்தகை கடன்களைப் பெற்று பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற அரசின் தீர்மானம் உரிய முறையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இக்கலந்துரையாடலின்போது ஜனாதிபதி வலியுறுத்தியிருக்கின்றார்.  

கொவிட் தொற்று நோயிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதில் உலக நாடுகளின் பாராட்டைப் பெறக்கூடிய திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தியவர் என்ற வகையில் அதன் அடுத்தகட்டமாக நாடு முகங்கொடுக்க நேர்ந்துள்ள பொருளாதார சிக்கல்களிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு ஜனாதிபதி கொண்டிருக்கும் தொலைநோக்குமிக்க பொருளாதார செயற்பாடுகளுக்கு தகுந்த ஒத்துழைப்பினை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தையே நாட்டில் பரபரப்பை ஏற்படுத்த காரணமாக அமைந்த இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுடனான ஜனாதிபதியின் சந்திப்பு வலியுறுத்துகின்றது. இதனை மத்திய வங்கி மாத்திரமன்றி சகல குடிமக்களும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதே இன்றைய நாட்டின் தேவையாக இருக்கின்றது.     

ரவி ரத்னவேல்

Comments