வெளிநாட்டு உல்லாசப்பயணிகளை வரவேற்க ஆயத்தமாகும் அறுகம்பே | தினகரன் வாரமஞ்சரி

வெளிநாட்டு உல்லாசப்பயணிகளை வரவேற்க ஆயத்தமாகும் அறுகம்பே

கிழக்கி அதிவனப்புமிகு உல்லாசபுரியாகவும் உலகிலேயே சேர்பிங் (கடல் நீரலைச்ச்சறுக்கலுக்கு) அதிசிறந்த வளமிகு தளமாகவும் விளங்கும் அறுகம்பே உல்லே மீண்டும் உல்லாசத்துறையினரை வரவேற்க ஆயத்தமாகின்றது. 

சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் எ.எம். ஜௌபர் மற்றும் இலங்கை வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் சென்ற வாரம் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை அவரது அமைச்சில் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக உரையாடியபோது அமைச்சர் பாதிப்புக்குள்ளான அனைவருக்கும் நிவாரணம் வழங்குவதாக அளித்த  உறுதிமொழியையடுத்தே இங்குள்ள உல்லாசத்துறையினர் உற்சாகமடைந்துள்ளனர்.  

கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக அறுகம்பே உல்லாசபுரியில் 185 உல்லாச விடுதிகள், 15 உணவு விடுதிகள், 80 பலதரப் பட்ட வியாபார நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டிருந்ததோடு 600 முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள், 16 வழிகாட்டிகள், 70 சபாரி மற்றும் வாகன சாரதிகள் போன்றோர் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர்.  அவர்களும் தமது ஜீவனோபாயத்தை இழந்து பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வந்தனர். இந்த உல்லாசபுரி மனித சஞ்சாரமரற்ற ஒருபிரதேசமாக காட்சியளித்தது. வெளிநாட்டு உல்லாச பயணிகள் மாத்திரமன்றி உள்ளூர் பயணிகளைக்கூட அப்பிரதேசத்தில் காணமுடியவில்லை.  எப்போதும் வெளிநாட்டு “சேர்பிங்” (கடல் நீரலைச் சறுக்கல்) பிரியர்களால் நிரம்பி வழியும் உல்லே சேர்பிங் பொய்ன்ட் மற்றும் குளிக்கும் பிரதேசங்கள் மனித நடமாட்டமேயின்றி வெறிச்சோடிப் போயிருந்தன. “சேர்பிங் போட்ஸ்” விற்பனை செய்யும் கடைகள் மற்றும் சேர்பிங் பயிற்சியாளர்களும் எந்தவித வருமானமுமின்றி அல்லலுற்றிருந்தனர். 

தற்போது அரசு வழங்கிய வாக்குருதியையடுத்து விடுதி உரிமையாளர்கள் எது வித பராமரிப்பும் இல்லாதிருந்த தமது விடுதிகளை புனரமைத்து அழகுபடுத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சிறிய கடைகள், அழகுசாதன நிலையங்கள் சேர்பிங் போர்ட் கடைகள், கைவேலைப்பொருட்களின் காட்சியறைகள் பாரம்பரிய உணவுக்கடைகள் போன்றன திறக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதரப் பரிசோதகர்கள்,  உல்லாச ஹோட்டல் கள் மற்றும் உணவுச்சாலை, சிற்றுண்டிச்சாலை போன்றனவற்றுக்கு விஜயம்செய்து விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தி அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். இரு கைகளையும் சவர்க்காரமிட்டு கழுவுவது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பேணுவது போன்றவை தொடர்பாக கண்டிப்பான உத்தரவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 

இதற்கு புறம்பாக ஹோட்டல் உரிமையாளர்கள் தம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது உல்லாசப்பயணிகளை எவ்வாறு கொவிட் 19 சூழ்நிலையில் நடத்துவது அவர்களை எவ்வாறு கவர்வது, இக்காலகட்டத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு எவ்வகையில் அமைய வேண்டும், குளிர்பானம், தேநீர் எவ்வாறு அமையவேண்டும் என நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை (தொற்றா நோய்ப் பிரிவு) டாக்டர் கே.எல்.எம்.நக்பர் விளக்கினார். படுக்கையறைப் பராமரிப்பு முறைகள் எவ்வாறு அமையவேண்டும் எனவும் வைத்திய அதிகாரிகள் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கிவருகின்றனர். 

அண்மையில் சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் எ.எம்.ஜௌபரின் ஏற்பாட்டில் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்கியை அதிகரிக்கும் Immunity Booster - Anti Virul ​ைபக்கற்றுகள் வழங்கும் நிகழ்வும் கவனஈர்ப்பு நிகழ்வும் அறுகம்பை தனியார் உல்லாச விடுதியொன்றில் அதன் தலைவர் எ.எம்.ஜௌபர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை (தொற்றாநோய் பிரிவு) பணிப்பாளர் டாக்டர் கே.எல்.எம். நக்பர் நோய் எதிர்ப்பு சக்திக்கான பூஸ்டர் வில்லைகள் அடங்கிய பைக்கற்றுகளை வழங்கியதோடு இக்காலகட்டத்தில் உல்லாச பயணிகளுக்கு பரிமாறப்படும் குளிர் பானங்கள், ஆகாரங்கள் மற்றும் உணவுகள் எவ்வாறு அவர்களைக் கவரும் விதத்தில் அமையவேண்டும் என்பதையும் விளக்கினார். சுகாதார வைத்திய அதிகாரியின் பணிப்புரைக்கு அமைவாக பொதுச் சுகாதாரப்பரிசோகர்கள் அடிக்கடி சோதனையிட்டும் வருகின்றனர். 

இதேவேளை வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை பெரிதும் கவரும் பாணமைப் பகுதியில் அமைந்துள்ள குமுன பறவைகள், விலங்குகள் சரணாலயமும் அவர்களை வரவேற்க ஆயத்தமாகின்றது. சுமார் 35,500 ஹெக்டயர் நிலப்பரப்பைக்கொண்ட  இச்சரணாலயம் பறவைகளு க்குப் பெயர் போனது. இங்கு நூற்றைம்பது வகையான பறவையினங்களும் பதினெட்டு வகையான மிருகங்களும் சுதந்திரமாக உலாவுகின்றன. இங்கு நீரில் வாழும் பறவைகளின் எழில்மிகு காட்சிகளைக் காண உள்ளூர்  மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் பெருமளவில் வருகை தருவது வழக்கம். இங்கு  பல்லாயிரம் மைல்களுக்கப்பாலுள்ள பறவைகள் கூட்டம் கூட்டமாக வருகின்றமை ஒரு சிறப்பு அம்சமாகும். ஜூன், ஜூலை மாதங்களில் இவை இங்கு வருகின்றன. யானை, குரங்கு, பன்றி போன்றவற்றை சர்வசாதாரணமாக நாம் பயணிக்கும் பாதைகளிலே காணக்கூடியதாக இருக்கின்றது.

அதேவேளை மான்கள், கவரிமான்கள் சாரி சாரியாக பாதையோரங்களில் நடமாடுவதையும் சர்வ சாதரணமாகவே காணலாம். அபூர்வ பிராணியாக நாம் கருதும் சிறுத்தையைக்கூட நமது அதிர்ஷ்டத்தைப் பொறுத்து இங்கு காணக்கூடிய வாய்ப்பும் உண்டு. 

சுற்றுலாத்துறை வளர்ச்சி உயர்ந்து வரத்தொடங்கிய 2018ஆம் ஆண்டு 5500 வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் 40,000 உள்ளூர் பயணிகளும் இங்கு விஜயம் செய்திருந்தனர். இதுபோன்ற எழில்மிகு இயற்கை சூழலில் பறவைகள், மிருகங்கள் சுதந்திரமாக எதுவித அச்சமுமின்றி உலவித்திரிவதை தாம் வேறு எந்த நாடுகளிலுமே கண்டதில்லை எனவும் வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் தெரிவிக்கின்றனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பின்னர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்  சுற்றுலாத்துறையை மிகவும் பாதித்துள்ளதோடு சுற்றுலாத்துறையை நிலைகுலையச் செய்துள்ளது. 

பாணமை கடற்கரை, பாணமை குரோகடைல் நீர்த்தடாகம், எலிபன்ட் ரொக், பீ நட் பீச், பீனட் பாம், விஸ்கி பொன்ட் ஆகியனவும் உல்லாசப்பயணிகளியும், உள்ளூர் பயணிகளையும் பெரிதும் ஈர்க்கும் இடங்களாக உள்ளன. உலகிலேயே சேர்பிங் (கடல் நீரலைச் சறுக்கலுக்கு) அதிசிறந்த பாதுகாப்பான  தளமாக விளங்கும் அறுகம்பே உல்லேயில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சர்வதேச மட்டத்திலான “சேர்பிங்” (கடல் நீரலைச்ச்சறுக்கல்) நடைபெற்றமையும் இதற்கு 24 நாடுகளைச் சேர்ந்த 120 அதிசிறந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டமையும் இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போட்டியைக் கண்டுகளிக்க பல்வேறு நாடுகளையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான செர்பிங் பிரியர்கள் கலந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடக்கூடிய அம்சமாகும். சொர்க்கபுரியாக விளங்கும் கிழக்கின் அறுகம்பே உல்லேயை பார்த்து இரசிக்க யார்தான் விரும்பமாட்டார்கள்?

கலாபூசணம் எம்.எ.பகுர்டீன்
அட்டாளைச்சேனை குறூப் நிருபர் 

Comments