கசப்பும்... இனிப்பும்.... | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும்... இனிப்பும்....

இந்தப் பத்தி எழுத்துக்கு இன்று 21.06.2020ல் இரண்டாம் கிழமை. இதில், சிற்சில சமயங்களில் என் மூப்பை முன்னிறுத்தி என் அனுபவங்களையோ, நான் சந்தித்தவர்களையோ பதிகையில், ‘சுய பிரலாபம்’ – ‘சுய புராணம்’ ‘பெருமை பீற்றல்’- என்றெல்லாம் எள்ளி நகையாடல்கள் நடக்கும். சிலரால் பிரதம ஆசிரியருக்குப் பெட்டிசன்களும் போகும்.  

அப்படிப்பட்டவர்களுக்கு மிகப் பிரபலமான அறிவுஜீவி, பேராதனைப் புகழ் பேராசிரியர், தமிழ்த் துறைத் தலைவர் (ஓய்வு) துரை மனோகரன், ‘ஞானம்’ இலக்கிய இதழ் (மே- --2020) 46- ஆம் பக்கத்தில் இட்டுள்ள நறுக்கான நாலு வரிகளைச் சமர்ப்பித்து ஒதுங்கிக்கொள்கிறேன்.  

'.. நான் எழுதுவது பத்தி எழுத்துக்கள். பத்தி எழுத்து என்பது ‘தான் கலந்து’ எழுதப்படுபவை...'  

இந்தத் ‘தான் கலந்து’ என்பது, ‘தன் வரலாறு’ என்பதுடனும் தொடர்புபடும். அந்த வகையில் இந்தப் பத்தி எழுத்துக்களில் அவ்வப்போது நான் உள்நுழைய வேண்டிய அவசியமும் கட்டாயமும் ஏற்படும் என்பதை அபிமான நெஞ்சங்கள் நினைவில் கொள்ளுங்கள்.  

நான், என் 83 அகவை ஜீ.வி. த நௌகா’வில் (இது மலையாளம்!) கவிதைத் துறையைத் தவிர மற்றனைத்திலும் கொஞ்சம் கொஞ்சம் தொட்டு, ‘வாழ் நாள் சாதனையாளன்’ (2017) என்ற அரச விருதுடன் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பவன்.  

இதில், ‘பன்னூலாசிரியன்’- என்ற தகுதியைத் தமிழகத்திலும் இங்கும் அடைவதற்குப் பின்புலமாக, பக்க துணை புரிவதில் ஒரு ‘தெல்தோட்ட’ வாசியும் அமைந்தார்.

எனக்கு மட்டுமல்ல, பலருக்கும்   அவரை ஒரு பொழுதில் சந்தித்து "என் நூலின் முதற் பிரதியைப் பெறுவீர்களா?" என்றபோது 'பெறாமல் எப்படி? என் அபிமான ‘தினகரன்’ எழுத்தாளர் அல்லவா! எங்கே, எப்போது? பெறச் சம்மதம்! என்றார்.  

அன்றிலிருந்து, நான் நூல் வெளியீடுகளை நிறுத்தும் வரை அலுக்காத சளைக்காத சிறப்புப் பிரதியாளர்!  

கடைசியாக நான் ‘மலையகக் கானக நிலா கல்லிடைக் குறிச்சியார்’ நூலுக்கு கொழும்புப் புறக்கோட்டை பழைய நகர சபை மண்டபத்தில் 2019 ஏப்ரல் 28ல் தேதி தீர்மானித்து அந்த அருமைப் புரவலருக்கும் அழைப்பு விடுத்திருந்தேன்.  

என்ன ஆயிற்று? வைபவமே புஸ்வானமானது!  

ஒரு தறுதலை ஸஹ்ரான் தலைமையில் செயல்பட்ட ஒரு இல்ஹாம், ஒரு இன்ஸாப், ஒரு முஆத், ஒரு அசாத் போன்ற அறிவிலிகளின் ஏப்.21 அட்டூழியங்களால், மறைக்கப்பட்டிருந்த மலையக எழுத்தாளன் ஒருவனும் வெளிச்சமிடப்படாமல் மீண்டும் இருளுக்குள் வரவிருந்த தெல்தோட்டப் புரவலரோ இன்னொரு இருட்டறைக்குள் இல்ஹாம், இன்ஸாப் தகப்பன் என்ற ‘தகுதியில்’! இன்றுவரை நிலைமையில் மாற்றமில்லை!  

சங்ரிலா ஸ்டண்ட் மாஸ்டர் (தற்கொலையாளன்) மனைவியிடம் ஒப்படைத்திருந்தவை இரண்டு ஒலிப்பதிவு நாடாக்கள் – தன் குரலில் தமிழில் ஏப்.21க்கு முந்திய இரவு 11.48க்கு ஒரு பதிவும், அதிகாலை 12.03 க்கு மற்றொரு பதிவும் நடந்திருந்தன.  

அவற்றில் தாக்குதல்கள் எப்படிச் செய்யவேண்டும் என்பதையோ அல்லது தற்கொலை புரியாமல் தப்புவது எப்படி என்பதைப் பற்றியோ சொல்லாமல் பெற்றோர்களுக்கு குற்றச்சாட்டை, அட்வைஸ், மன்னிப்புக் கோரல், பிரியாவிடை பெறல் என்றெல்லாம் நிறைய நிறைய உளறல்கள்.  

எனது தாய், தந்தை மற்றும் சகோதர, சகோதரிகளுக்கு வழங்கும் தகவல் இது. நான் சுருக்கமாகச் சொல்வது, உம்மா நீங்கள் செய்யும் பிழையான காரியங்களுக்காக அல்லாவிடம் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும். வாப்பா மார்க்கத்தைக் கடைப்பிடிக்கும் முறை இஸ்லாத்திற்கு முரணானது. அவர் வேறு மதத்தினரோடு கொண்டுள்ள தொடர்பும், தேரர்களுக்கு தானம் வழங்குவதும் பெரிய ஷிர்க்! கு-ஃப்ர்! (மதத்திற்கு மாற்றமானவை, கூடாதவை)  

‘இந்த குரல் பதிவை நீங்கள் கேட்கும்போது நான் இறைவனிடம் சென்றிருப்பேன். இதனை தற்கொலையாக கருதாமல் நான் செய்யும் தியாகமாக இறைவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் வெறுமனே தற்கொலை செய்வதானால், எனது கழுத்தை அறுத்துக்கொண்டு மரணிக்கலாம். அல்லது எங்கோ சென்று உயிர் துறக்கலாம். நான் இவ்வாறு மாற்று மதங்களைப் பின்பற்றுவோரின் உயிரைப் பறித்துக்கொண்டு மரணிப்பது இறைவனிடம் போய் சேர வேண்டும் என்பதற்காகும்.

இறைவன் அன்பின் காரணமாகவே எனக்கு இந்த பாதையை காண்பித்துள்ளான். ஷரீஆ சட்டம் இந்நாட்டுக்கு கொண்டுவரப்படவேண்டும். குர்ஆனை கட்டாயம் வாசியுங்கள். ஹதீஸ் வாசியுங்கள். பிரச்சினைகள் தீர்ந்து மார்க்கம் முற்றாக கடைப்பிடிக்கப்படும் வரை யுத்தம் செய்யுமாறு இறைவன் குர்ஆனில் கூறியுள்ளான். இஸ்லாம் உள்ள தேசத்தில் மாற்று மதத்தவர்களுடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும். இஸ்லாம் அல்லாத நாடொன்றில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும்.  

‘எனது தாயாருக்கும் தந்தைக்கும் நான் கூறிக்கொள்ள விரும்புவது, என்னை மன்னியுங்கள். என்னால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம். இது இறைவனின் வழி. அதனாலேயே இப்பாதையை நான் தெரிவு செய்தேன். எனது பெற்றோருக்கும், குடும்பத்திற்கும் பிரச்சினைகள் ஏற்படும் என்பதற்காக இந்த பாதையை தெரிவு செய்யாமல் இருக்க முடியாது. இதேவேளை எனது செயற்பாடு தொடர்பில் நீங்கள் என்மீது பழிசுமத்தினாலும், மறு உலக வாழ்க்கை வரை தொடர்ந்தும் இவ்வாறு பழி சுமத்தப்பட்டு வந்தாலும் நான் உங்களுக்கு மன்னிப்பு வழங்குவேன். அதனால் என்னையும் மன்னியுங்கள். நானும் இன்சாப்பும் அதி உயர் நிலையை அடையப் போகின்றோம். நாங்கள் உயிரிழப்போம். ‘ஜிஹாத் என்பது இக்காலத்தில் கட்டாயமானதாகும்.  

இவை பதிவாகியுள்ள இரு ஒலி நாடாக்களும் இப்பொழுது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினருக்கு, சம்பந்தப்பட்ட பொலிஸ் விசாரணை அதிகாரிகளால் பாரப்படுத்தப்பட்டுள்ளன.  

‘உங்களுக்குச் சிக்கல்கள் ஏற்படலாம்’- பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் பிரச்சினைகள் ஏற்படும் என்ற குரல் பதிவுகள் இடையிடையே தூரநோக்குச் சிந்தனைகள் ஏற்படலாம் என்பதை உணர்த்துகிறது. அதே நேரத்தில் செய்யப்பட்ட அட்டூழியங்களில் சில தன்னாலேயே நிறைவேற்றப்பட்டன என்பதற்கு ஓர் ஒப்புதல் வாக்குமூலமாகவும் படுகிறது.  

எவ்வாறாயினும் அவற்றையெல்லாம் தீர்மானிக்க வேண்டியதும் தீர்ப்புச் சொல்லவேண்டியதும் என் எழுத்தாணி அன்று! ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு!  

நான் இங்கே, அந்த ஒலிப்பதிவுக்குரியவனின் வாப்பாவை அடையாளப்படுத்தி ஒதுங்கிக் கொள்கிறேன்.  

அபிமானிகளில் சிலர் ஏற்கெனவே யூகித்துவிட்டது போல் அவர் இப்ராஹிம்! வை எம். இப்ராஹிம்-, தெல்தோட்டை மண்! என் போன்ற பலரையும் இலக்கியத்துறையில் ஊக்குவித்தவர். புரவலர். மிக மிக சாமான்யராகப் பழ வியாபாரியாக, தேநீர்க் கடைக்காரராக வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து ஆரம்பித்த மனிதர். மலையக முக்கிய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் கொழும்புப் புறக்கோட்டைப் பெரும் வணிகராக மிளிர்ந்தார். தேச கீர்த்தியாக பெரும் விருதாளரான தனது தெல்தொட்ட மண்ணின் ‘மஹ்பத்துல் உலமா அரபுக் கல்லூரி’ நிர்வாகிகளுள் ஒருவராகவும், ‘இபுராஹிமிய்யா தொழில்நுட்பக் கல்லூரி’ நிறுவனராகவும் அறியப்பட்டார்.  

இன்றோ, நாளையோ அல்லது நாளை மறு நாளோ எவ்வாறு அறியப்படுவார் என்பதைக் காலமகளே பதில் சொல்லவேண்டும்.  

இந்த அழகிய சின்னஞ்சிறு மரகதத் தீவின் சிறுபான்மைப் பிரிவினரைப் பிரிப்பதிலும், துண்டு துண்டாக்கி ‘எம்புலி தியாள்’ (ஒருவகை மீன் உணவு) போட்டு உண்ண பார்ப்பதிலும் நாக்கைச் சப்பும் ஒரு பௌத்த துறவியாரை (கல்கி படைத்த ‘சிவகாமியின சபதம்’ நாகநந்தி பிக்குவின் உடன் பிறப்பு) சென்றவாரக் ’கசப்’பில் கசந்தேன்.  

இவ்வாரத்தில், இன்னொரு வரை ‘இனிப்’பில் (ஆமாம்! இனிப்பு) தொய்த்து உச்சிக்கொண்டு போய் ஆராதிக்கப்போகிறேன்.  

வாருங்கள், அத்தனகல்ல பக்கம் போவோம். இப்பகுதி பெரும்பாலும், முன்னாள் பிரதமர்கள் பண்டாரநாயக்கா, ஸ்ரீமாவோ, ஜனாதிபதி சந்திரிகா போன்றோரின் பாரம்பரியங்கள் பேசுவதும் பல ஏக்கர் காணிகளுக்கு அவர்களை உரித்தாளராகக் கொண்டிருப்பதுமாகும்.  

இங்கே சகலமும் சிங்களம். அதன் கலாசாரமே உயிர் மூச்சு! தமிழை, தமிழ் பேசுவோரைத் தேடியலைந்தால் தாகம் ஏற்படும்.  

ஜாஎலை வழியை ஊடறுத்து மினுவாங்கொடை, உடுகம்பொலையைக் கடந்தால் ‘கொஸ்ஸ’ என்றதோர் கிராமம். தவறாமல் அங்கேயும் ஒரு பௌத்த விகாரை. விகாராதிபதியாக பண்டிதமணி ரத்ணவண்ஸ தேரர்.  

அவர் 70களில் தமிழ் ஆர்வலரானார் என்பது அதிசய நிகழ்வு! நவீன தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடுகொண்டவராக மிளிர்ந்து கொண்டிருந்த நிலையில் தமிழ் எழுத்தாளர்கள் பலர் கொரஸ்ஸ கிராமிய வாசனையைப் பெற்றது பேரதிசயம்!  

எழுத்தாளர், ஊடகவியலாளர் (தற்சமயம் ஆஸ்திரேலியா) லெ. முருகபூபதி, 'மல்லிகை' இலக்கிய இதழின் ஒக்டோபர் 2012 வெளியீட்டில் சொல்ல மறந்த கதை என்று இவரைப் பற்றி நிறைய அறியத் தந்துள்ளார்.  

‘நான் பிறந்து வளர்ந்த நீர்கொழும்பில் இலக்கிய வட்டம்’ என்ற அமைப்பை, என் இலக்கிய பிரவேசத்தின் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்திருந்தேன். இந்த அமைப்புக்கு ரத்ணவண்ஸ தேரரை அறிமுகப்படுத்தியவர் கள்ளொழுவை மினுவாங்கொடை எழுத்தாளர் எம். ஏ. எம். நிலாம். (ஆம். இப்போதைய லேக்ஹவுஸ் வெளியீடுகளின் தமிழ்ப் பிரிவு ஆலோசகரே!)  

எங்களிடமிருந்த தமிழ் நூல்களையும் இதழ்களையும் பெற்று தமது தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்ட அவர், தமது கொரஸ்ஸ கிராமத்திலும், வியாங்கொடை, மினுவாங்கொடை முதலான நகரங்களிலும் தமிழ் வகுப்புகளை அறிமுகம் செய்தார். அதில் பல சிங்கள ஆசிரியர்களும், பௌத்த பிக்குகளும் ஆர்வத்துடன் இணைந்தனர். நான், வெள்ளி,- சனி விஹாரையில் தங்கி, அவருடன் சேர்ந்து தமிழ் கற்றுக் கொடுத்து வந்தேன்’ என அருமையான வாக்குமூலம் வழங்கியுள்ளார்.  

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1975 இல் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை நடத்திய பொழுது முதல்நாள் காலையில் தொடக்கவுரையையும் தமிழில் நிகழ்த்தினார். பின்னர் தமது கொரஸ்ஸ கிராமத்திற்கு முற்போக்கு எழுத்தாளர்களை வரவழைத்து ஒரு சிறப்பான கருத்தரங்கையே ஊர் மக்களைக் கொண்டு நடத்தினார்.  

இவ்விரண்டிலும் தேரர் தமிழில் நிகழ்த்திய உரைகள் தமிழ் பேசும் சமூகத்தினர் மத்தியில் மட்டுமல்லாது சிங்களவரிடையேயும் பரபரப்பாகப் பேசப்பட்டவொன்றாகும்.  

ஓர் இனத்தையோ மொழியையோ அடிமைப்படுத்தி வேறு இனமோ மொழியோ சுபீட்சம் பெற முடியாது. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஜனநாயகத் தீர்வுகாணப்படல் வேண்டும். அப்பொழுது தான் இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும்.  

‘ஒரு தமிழ்ப் பெண்ணை ஒரு சிங்கள ஆடவர் திருமணம் முடித்தால் அல்லது ஒரு சிங்களவரை தமிழ்ப் பெண் மணம் முடித்தால் தேசிய ஒருமைப்பாடு பிறக்காது. பிள்ளைதான் பிறக்கும்’  

அவர் தம் நீண்ட உரையின் மிகச் சிறு துளி இது.  

நம்ம மூத்த எழுத்தாளர் தேசத்தின் கண் டொமினிக் ஜீவா, யாழ்ப்பாணத்திலிருந்து ‘மல்லிகை’யை வழங்கிக்கொண்டிருந்த 1976ல், தேரர் அவர்களது நிழற் படத்தை மார்ச் இதழின் முகப்பட்டையில் பிரசுரித்துக் கௌரவம் வழங்கியதுடன். முருகபூபதியின் நேர்காணலையும் வெளியிட்டு தனது கடமையைச் சிறப்புறச் செய்தார்.  

(அந்த அட்டை இங்கே அத்தோடு) காதோடு ஒரு செய்தி: அருமை அண்ணா அவர்கள், எதிர்வரும் 27லில் 94 ஆம் அகவைக்குள் அடியெடுத்து வைக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறார்!)  

1977 – 81- – 83 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து இனவாதக் கலவரங்கள் இலங்கையை உலுக்கிய பொழுது பெரிதும் துயருற்று துவண்ட தேரர் கல்லொளுவை சிங்களப் பிரதேசத்தில் இப்பொழுதும் வாழ்ந்துகொண்டிருக்கிற எழுத்தாளர்கள் எம். ஏ. எம். நிலாம், மு. பஷீர் முதலியோருடன் அடிக்கடி தொடர்பு கொண்டவராய் தமிழ் எழுத்தாளர் குடும்பங்களுக்கு என்ன உதவிகள் புரியலாம் என்பதில் உறக்கம் துறந்த மாமனிதர்.   

சிங்கள- – தமிழ் இலக்கியப் பாலமைப்பதில் தீவிரமாக நின்ற தேரர், செங்கை ஆழியானின் ‘வாடைக்காற்’றை சிங்களத்தில் வடிவமைப்பதில் ஒரு முயற்சியை மேற்கொண்டு மூலப்பிரதியை ஒருவரிடம் சரி பார்க்கக் கொடுத்ததில், அதைத் திரும்பப் பெற முடியாத துர்பாக்கியமும் ஏற்பட்டது.  

அத்துடன் மற்றுமொரு துர்ப்பாக்கியம், மூத்த எழுத்தாளர் திக்குவல்லை கமாலின் எலிக்கூடு கவிதைத் தொகுப்பை பெரும்பான்மையின வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் ​மேற்கொண்ட முயற்சியும் கண்பார்வை இழப்பால் நின்றுபோனது.  

அவரை இப்பொழுது கொரஸ்ஸ கிராமத்தில் சந்திக்க நினைத்தால் அதுவும் இயலாது.

அவரது அஸ்தி கலசம் வைக்கப்பட்டிருக்கும் கல்லறையைத் தான் தரிசிக்க முடியும். அஞ்சலி செய்வோம்.  

தேரர் அவர்களது மல்லிகை அட்டைப் படத்தை வழங்கி உதவிய மூத்த எழுத்தாளர் திக்குவல்லை கமாலுக்கு நன்றியறிதல்கள். 

தமிழ்மணி மானா மகீன்

Comments