நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது எப்படி? | தினகரன் வாரமஞ்சரி

நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது எப்படி?

கொவிட் 19 தொற்று காரணமாக நொந்து நூடில்ஸ் ஆகிப்போயுள்ள அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் பொருளாதாரங்களை எவ்வாறு தூக்கி நிறுத்தலாம் என்பது நம்முன்னே விரிந்துள்ள மில்லியன் டொலர் பெறுமதியுள்ள கேள்வியாகும். பதில் சொல்ல வேண்டியது பொருளியலாளர்களுடைய வேலை என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.  

இது நியாயமானதோர் எதிர்பார்ப்பும் கூட. கோவிட் 19 நோய் ஏற்படுவதற்கு முன்பிருந்தே உலக நாடுகள் பலவற்றினதும் குறிப்பாக, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் பொருளாதாரங்கள் சுகதேகியான நிலையில் இருக்கவில்லை என்பதே உண்மை. தெற்காசிய வலயத்தின் ஜாம்பவானும் எழுச்சி பெற்றுவரும் பொருளாதாரங்கள் (emerging economies) மத்தியில் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கிய இந்தியாவின் பொருளாதாரம் உள்ளிட்ட வளர்முக நாடுகள் பலவற்றின் பொருளாதாரங்கள் தொடர்ச்சியான பொருளாதாரப் பின்னடைவை எதிர்கொண்டிருந்தன. கோவிட் 19 ஆட்கொல்லி நோய் மரத்தில் இருந்து விழுந்தவனை மாடேறி உழக்கியதுபோல அவற்றைப் பின்னியெடுத்திருக்கிறது.  

உலகின் பல்வேறு நாடுகள் வாரக்கணக்கில் தமது பொருளாதாரங்களை மூடிவைத்திருந்த நிலையில் தற்போது படிப்படியாக அவற்றைத் திறந்து வருகின்றன. இவற்றின் அரசாங்கங்கள் முடங்கிப்போயுள்ள பொருளாதாரங்களை மீளவும் உரிய தடத்தில் எவ்வாறு இயங்கச் செய்து இயல்பு நிலையை ஏற்படுத்தலாம் என முயற்சித்து வருகின்றன. இதன்போது துறைசார் வல்லுனர்களின் ஆலோசனைகள் இன்றியமையாத ஒன்றாகும். ஏறத்தாழ நூறு வருடங்களின் பின்னர் உலகளாவிய ரீதியில் உலகின் எந்தவொரு நாட்டையும் விட்டுவைக்காத ஒரு நோய்ப்பாதிப்பிலிருந்து உடனடியாக ஒரு நாட்டைத் தூக்கி நிறுத்தவல்ல சர்வரோக சஞ்சீவி எந்தவொரு பொருளியல் நிபுணரிடமும் இருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை. ஆனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மேலும் மோசமாகிவிடாமல் தடுத்து பொருளாதாரத்தை நிலைப்படுத்த என்ன செய்யலாம் என்பதுபற்றி முதலில் சிந்திக்கலாம்.  

அதாவது அபாயக் கட்டத்தில் (critical condition) ஆஸ்பத்திரிக்கு அழைத்துவரப்படும் ஒரு நோயாளியின் உடலின் அடிப்படைச் செயற்பாடுகளை நிலையாகப் (stable) பேணும் பொருட்டு உரிய உயிர்காக்கும் (life saving procedures) மருத்துவத்தைச் செய்வதே அவசர மருத்துவப் பிரிவில் இருக்கும் வைத்தியர்களின் முதற்பணியாக இருக்கும். அதுபோல உடனடியாக கோவிட் 19 இன் பின்னர் பொருளாதார நிலைப்படுத்தலுக்கான பணிகளை ஒவ்வொரு நாடுகளினதும் திறைசேரிகளிலும் மத்திய வங்கிகளிலும் உள்ள பொருளியல் நிபுணர்கள் ஏற்கெனவே முன்னெடுத்துள்ளனர். இவர்களிடம் இரு பிரதான பொருளாதார மருத்துவக் கருவிகள் உள்ளன. ஒன்று இறைக் கொள்கை (fiscal policy) மற்றையது பணக் கொள்கை (monetary policy). அரசாங்கத்தின் அரசிறைக் கொள்கையை நாடுகளின் திறைசேரிகளும், பணக்கொள்கையை அவற்றின் மத்திய வங்கிகளும் கையாள்கின்றன. இறைக் கொள்கை என்பது அரசாங்கத்தின் செலவீடுகள் அரசாங்க வருவாய்கள் கடன் முகாமைத்துவம் என்பவற்றை உள்ளடக்கியதாகும். மறுபுறம் பணக்கொள்கை என்பது பண நிரம்பல், வட்டிவீதம், கடன்வழங்கல், பணவீக்கம் என்பவற்றுடன் தொடர்பு பட்டதாகும்.  

கோவிட் 19 நோயினால் பாதிக்கபட்ட நாடுகள் யாவும் பொதுவாக இவ்விரு கொள்கைகளையும் கலந்து பயன்படுத்தி தமது பொருளாதாரங்களை உயிர்ப்பித்து இயங்கச் செய்வதற்காக கடும் பிரயத்தனம் செய்து வருகின்றன. தொழில் முடக்க காலத்தின்போது உற்பத்தி வருமானம், வினியோகம், நுகர்வு நடவடிக்கைகள் மிகவும் பாதிக்கப்பட்டதனால் நிறுவனங்களும், வீட்டுத்துறையினரும், உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனத்துறையினரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை திரவத்தன்மைப் (liquidity) பிரச்சினையாகும். தொழில் முடக்க காலப்பகுதியில் உற்பத்திகள் இல்லாதபடியினாலே வருமானம் இல்லை. வருமானம் இல்லாதபடியினாலே நுகர்வு இல்லை. நுகர்வு இல்லாதபடியினாலே பொருள்கள் சேவைகள் மீதான கேள்வி இல்லை. கேள்வி இல்லாதபடியினாலே முதலீடுகள் இல்லை. முதலீடுகள் இல்லாதபடியினாலே உற்பத்திகள் இல்லை. இந்த நச்சுச் சக்கரத்தை (vicious cycle) உலகநாடுகள் பலவும் தற்போது எதிர்கொள்கின்றன. இந்த நச்சுச் சக்கரத்தை உடைப்பதன் மூலமே உயிரடங்கிப்போகும் நிலையிலுள்ள பொருளாதாரத்தை காப்பாற்ற முடியுமென 1936ல் பிரித்தானியாவைச் சேர்ந்த ஜோன் மேனார்ட் கெயின்ஸ் என்னும் மகாபிரபு குறிப்பிட்டார். இதற்கு அரசாங்கம் தனது செலவீட்டை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அவரது ஆலோசனைகளைப் பின்பற்றியே பிரித்தானியா, அமெரிக்கா போன்ற முதன்மை நாடுகளும், ஏனைய கைத்தொழில்மய நாடுகளும் 1929 தொடக்கம் 1936 வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட உலகப் பெருமந்தத்தில் (great depression) இருந்து மீட்சிபெற்றன.  

இதேபாணியைப் பின்பற்றியே இப்போதும் பெரும்பாலான உலகநாடுகள் கோவிட் 19 நெருக்கடிக்கான உடனடி நடவடிக்கையாக ஊக்குவிப்புப் பொதிகளை (incentive packages) அறிமுகம் செய்து வருகின்றன. தொழில் இழந்த மக்களுக்கான உதவு தொகைகள், முடங்கிய நிறுவனங்களை மீள ஆரம்பிப்பதற்கான கடன் வசதிகள் உள்ளடங்கலாக பல்வேறு வடிவங்களில் அரசாங்க செலவீடுகளை அதிகரிக்கலாம். அமெரிக்க அரசாங்கம் இதன் பொருட்டு டிரில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.  

இவ்வாறு அரசாங்க செலவீடுகளை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கை விரிவாக்க இறைக்கொள்கை(expansionary fiscal policy) எனக் கூறப்படும். இதற்கு மேலதிகமாக வட்டி வீதங்களைக் குறைப்பதன் மூலமும் வங்கிகளின் காசொதுக்குத் தேவைகளைக் குறைத்து கடன் வழங்கலை அதிகரிப்பதன் மூலமும் நிறுவனங்களின் திரவத்தன்மையை அதிகரித்து அவற்றின் மீளியக்கத்திற்கு அரசாங்கம் உதவலாம். இந்த நடவடிக்கை விரிவாக்கப் பணக்கொள்கை Expension aty Monetary policy) எனக் கூறப்படும்.  

மேலோட்டமாகப் பார்க்கும் ஒருவருக்கு அப்புறமென்ன அரசாங்கத்தின் கையில்தானே மத்திய வங்கியும் திறைசேரியும் இருக்கின்றன. இவ்விரு கொள்கைகளையும் அமுல்படுத்தி பொருளாதாரத்தை மீட்டு விடலாமே எனத்தோன்றும். ஆனால் இவ்விரு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில் பல்வேறு தடைகளும் பிரச்சினைகளும் உள்ளன.  

முதலாவதாக, விரிவாக்க இறைக்கொள்கையை செயற்படுத்த அரசாங்க செலவீடுகளை அதிகரித்து மக்களின் செலவிடும் ஆற்றலை விரிவாக்கி பொருள்கள் சேவைகள் மீதான கேள்வியை அதிகரித்து அதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கங்களிடம் போதியளவு நிதிக் கையிருப்புக்கள் இருக்க வேண்டும். அல்லது கடன் வாங்கி செலவுசெய்யும் வல்லமை இருக்கவேண்டும். அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளைப் பொறுத்தமட்டில் ஏற்கெனவே அவற்றின் வரவுசெலவுத் திட்டங்களில் பாரிய துண்டுவிழும் தொகைகள் உள்ளன. அத்துடன் அவற்றின் வெளிநின்ற கடன்களும் அதிகம். இந்நிலையில் மேலும் கடன்பெற்று செலவு செய்வது பெரும்பாலான குறைவிருத்தி நாடுகளுக்கு இயலாத காரியம். மாறாக சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல்தேசிய நிதிநிறுவனங்களிடமிருந்தும் நட்பு நாடுகளிடமிருந்தும் நன்கொடைகளைப் (grants) பெற்று செலவுசெய்ய முயலலாம். ஆனால் தற்போதைய உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் தனிப்பட்ட ஒரு நாடு பெறக்கூடிய நன்கொடைகளின் அளவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும்.  

இந்நிலையில் இருக்கும் ஒரே வழியாக உள்நாட்டில் பணத்தை அச்சிட்டு வெளியிடுவதன் மூலம் கடன் பெற்று செலவு செய்ய அரசாங்கங்கள் முயற்சிக்கலாம். ஆனால் இது விலை மட்ட அதிகரிப்பிற்கு தவிர்க்க முடியாதவாறு இட்டுச் செல்லும். 2008 ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின்போது அமெரிக்கா பெருமளவில் டொலரை அச்சிட்டு வெளியிட்டு திரவத்தன்மையை அதிகரித்துக் கொண்டது. வளர்முக நாடுகள் அமெரிக்கா செய்தபடியால் நாமும் செய்தாலென்ன என்று பணத்தை அச்சிட்டன.

விளைவுகள் அந்நாடுகளுக்கு மோசமானதாக அமைந்தன. அமெரிக்க நாணயம் ஒரு சர்வதேச நாணயம் எனவே அதனை அதிகளவில் அச்சிட்டு வெளியிடுவதும் தமது நாட்டுக்குள் மட்டுமே செல்லுபடியாகும். ஒரு நாட்டின் நாணயத்தை அச்சிட்டு வெளியிடுவதும் வெவ்வெறு விளைவுகளை ஏற்படுத்தும். மறுபுறம் அரசவரி வருவாய்களைப் பெருக்கிக் கொள்வதும் இப்போதைய மிகவும் நெருக்கடியான பொருளாதாரச் சூழலில் பெரும்பாலும் நடைமுறைச் சாத்தியமில்லை.  

இரண்டாவதாக விரிவாக்கப் பணக்கொள்கையைச் செயற்படுத்த நாடுகளின் மத்திய வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கலாம். ஒருநாட்டின் தலையாய நிதி நிறுவனம் என்ற வகையிலும் நாட்டின் நிதிமுறைமையின் உறுதிப்பாடு பணத்தின் உள்ளக வெளியக உறுதிப்பாடு என்பவற்றை பேணி பொருளாதார வளர்ச்சி இலக்குகளை எய்த அரசாங்கங்களுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனம் என்ற அடிப்படையிலும் மத்திய வங்கி இதனைச் செய்யமுயலும். கொள்கை வட்டி வீதங்களைக் (policy interest rates) குறைப்பதன் மூலமும் வங்கிகளின் நியதி காசொதுக்கு வீதங்களைக் (statutory reserve ratios) குறைப்பதன் மூலமும் வணிக வங்கிகளின் கடன் வழங்கும் ஆற்றலை அதிகரித்து தனியார்துறை முதலீடுகளையும் தனியார் நுகர்வுச் செலவீடுகளையும் அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முயற்சிக்கலாம்.  

இதனால் நாட்டின் பண நிரம்பல் அதிகரிக்கும். அது விலைமட்ட அதிகரிப்புக்கு இட்டுச்செல்வதனால் பணவீக்கம் ஏற்படும் சாத்தியம் உண்டு. அதாவது பணவீக்க வீதத்தை ஈடுசெய்யும் வண்ணம் உயர்ந்த உற்பத்திப் பெருக்கம் (பொருளாதார வளர்ச்சி) எற்பட வேண்டும். இல்லையெனில் பண வீக்கம் தவிர்க்க முடியாதது.  

வட்டிவீதக் குறைப்பு ஊடாக கடன் வழங்கும் ஆற்றலை அதிகரிப்பதன் நோக்கம் உள்நாட்டு முதலீட்டை அதிகரிப்பதாகும். அண்மையில் கனேடிய அரசாங்கம் இதேபாணியில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கான கடன் வசதிகளை செய்துகொடுத்தது. வளர்முக நாடுகளைப் பொறுத்தமட்டில் வட்டிவீதங்கள் குறைவடைந்த போதிலும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் வணிக வங்கிகளிடம் கடன் பெறுவதில் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் உள்ளன.

குறிப்பாக கடன் பிணை நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வது இலகுவானதாக இல்லை. எனவே ஏற்கெனவே கால்பதித்துள்ள நிறுவனங்களே வளர்முக நாடுகளில் இந்த ஊக்குவிப்புப் பொதிகளின் நன்மைகளை பெரும்பாலும் அனுபவிக்கின்றன. எனவே வட்டிவீதக் குறைப்பின் நன்மைகள் பொருளாதாரத்தின் விரும்பத்தகு வளர்ச்சித் துறைகளைச் சென்றடைந்து பொருளாதாரத்தில் மீட்சியை ஏற்படுத்த வேண்டுமானால் குறித்த தெரிவுசெய்த துறைகளை நோக்கிய கடன் வழங்கலை நேரடியாக மேற்கொள்வதுடன் கடன் வழங்கிய பின்னர் அவற்றின் செயலாற்றத்தை கண்காணித்து வழிப்படுத்துவதும் கட்டாயமாகும்.  

அதுமட்டுமன்றி வட்டிவீதக் குறைப்பைப் பயன்படுத்தி கடன் பெறுவதன் நோக்கமும் ஆராயப்பட வேண்டும். குறிப்பாக வட்டி வீதங்கள் குறைவடையும்போது பலர் கடன்பெற்று வாகனங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட நெடுவாழ்வு நுகர்வுப் பொருட்களையும் (consumer durables) காணிகள் சொத்துகள் மற்றும் தங்கம் போன்ற உலோகங்களையும் வாங்குவதையும் காணலாம். இத்தகைய கடன் பெறலும் செலவீடுகளும் பொருளாதாரத்தின் உற்பத்தியைப் பெருக்க உதவாது. அதன்முலம் அந்நியச் செலாவணி வெளியேற்றமும் விலை அதிகரிப்புமே விளைவாகப் பெறப்படும்.  

அதுமட்டுமன்றி வட்டிவீதத்தைக் குறைப்பது ஒரு குறிப்பிட்ட எல்லை வரையிலுமே நன்மைதரும். குறைந்த வட்டி வீதங்கள் கடன்பெறுவதை ஊக்குவிக்கும் அதேவேளை, பொதுமக்களின் சேமிப்பு நாட்டத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.

சமூக நலன்புரிச் செலவீடுகள் குறைவாக உள்ள நாடுகளிலும் மாதாந்த ஓய்வூதியம் வழங்கப்படாத நாடுகளிலும் ஓய்வுபெற்ற பலர் தாம் தொழில்புரிந்த காலத்தில் பெற்ற ஊழியர் சேமலாப நிதி வைப்புகளிலிருந்து பெறும் வட்டி வருவாய்களைக் கொண்டே தமது இறுதிக்காலத்தைக் கழிக்கின்றனர்.

வட்டிவீதக் குறைப்பானது சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படும் நிலையில் உள்ள இத்தகைய விளிம்பு நிலையில் (marginalized) உள்ளோரின் வாழ்வாதாரத்தையே கேள்விக் குறியாக்கி விடலாம். எனவே கோவிட் 19 நெருக்கடியிலிருந்து பொருளாதாரங்களை மீட்க அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் எடுக்கும் உடனடி உயிர்காப்பு நடவடிக்கைகள் ஆழ்ந்த கலந்துரையாடல்கள் அனுபவமிக்க துறைசார் நிபுணர்களின் பங்களிப்புகளுடன் நிதானமாக எடுக்கப்பட வேண்டும்.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நடவடிக்கை எடுப்பதைவிட நிதானமாகச் செயற்படுவதே அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் குறைந்த செலவில் இந்த இக்கட்டிலிருந்து மீட்சிபெற உதவும்.    

எம். கணேசமூர்த்தி
பொருளியல் துறை,
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments