ஆளும் தரப்பில் போட்டியிட்டு வெல்வதே முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும் | தினகரன் வாரமஞ்சரி

ஆளும் தரப்பில் போட்டியிட்டு வெல்வதே முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும்

இன்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அரசியல் ரீதியாகத் தோல்விடைந்துள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் தோல்வியடைந்தால் அது முஸ்லிம்களின் தோல்வியாகவே கருதவேண்டியிருக்கிறது. ஆளும் கட்சி சார்பாக போட்டியிட்டு தெரிவாகும் வேட்பாளரின் வெற்றிதான் முஸ்லிம்களுடைய வெற்றியாக அமையும் என்று கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஏ. எல். எம்.பாரிஸ் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.   

​கே: நீங்கள் அரசியலில் ஈடுபடுவதற்குக் காரணம் என்ன?  

எனக்கு ஆரம்பத்தில் அரசியலில் ஈடுபடுவதற்கான எந்தவிதமான ஆர்வமும் இருக்க வில்லை. எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நீண்ட கால நண்பனாக இருந்தமையால் அரசியலில் நுழைந்தேன். பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் இருந்து நெருக்கமான நட்புறவைக் கொண்டிருக்கின்றேன்.  

நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக இருகின்ற காலத்தில் கொழும்பை அபிவிருத்தி செய்து ஆசியாவின் ஆச்சரியமான நகராக மாற்றுவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்தார். நகரை அழகுபடுத்தும் திட்டங்கள் அவரது ஆலோசனையின் பேரில் முன்னெடுக்கப்பட்டன. அதில் ஒர் அங்கமாக நகரிலுள்ள பெரிய வர்த்தக நிறுவனங்கள் ஊடாக நகரை அழகுபடுத்தும் வேலைத் திட்டமொன்று முன்னெக்கப்பட்டது. இந்த வேலைத் திட்டத்திற்கான எண்ணக்கருவை அப்பொழுது நடைபெற்ற கூட்டத்தில் நான் முன்வைத்தேன். அந்தக் கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். ஒவ்வொரு வர்த்தக நிறுவனமும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்று கொழும்பு அழகுபடுத்தும் வேலைத் திட்டங்கள் உரிய முறையில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டன. அப்பொழுது நான் கூட அதில் ஒரு பொறுப்பை ஏற்று மரங்களை வாங்கி அன்பளிப்புச் செய்தேன். அவர் முன்னெடுத்த செயற் திட்டங்களில் அனைத்திலும் அவர் பக்கத்தில் இருந்திருக்கின்றேன். அவருடன் மிக நெருக்கமாகப் பழகிய அரசியல் பின்புலம் என்னையும் இந்த அரசியலுக்குள் நுழைய வைத்தது.  

கே: ஜனாதிபதியின் நண்பர் என்று கூறுகின்றீர்கள். முஸ்லிம் சமூகத்தைப் பற்றி அவர் என்ன அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கிறார்.  

உண்மையில் அவர் ஓர் இனவாதி அல்ல. அவர் ஒரு ஜனநாயகவாதி. நேர்மை மிக்க மனிதர். ஒரு சம்பவத்தைக் கூறுகின்றேன். கொழும்பு நகரில் நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத் தொகுதியில் கணிசமானளவுக்கு வீடுகளை முஸ்லிம் குடும்பங்களுக்கு வழங்கி வைக்க வேண்டும். இதில் சிறு தொகையினரே வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதைப் பார்த்தவுடன் மற்றவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு விட்டது. அதில் பிரச்சினை இல்லை. அவர்களுக்கு உரியதை நீங்கள் அவர்களுக்கு கொடுத்த மாதிரி கொடுத்து விடுங்கள் என்று கூறினார்.   

இதே போன்று முஸ்லிம்களுடைய ஒவ்வொரு உரிமைகளிலும் அவர் முஸ்லிம் சமூகத்திற்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். உயிர்த்த ஞாயிறு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட எத்தனையோ அப்பாவி இளைஞர்களை விடுவிப்பதற்கு அவர் பாாிய பங்களிப்பு செய்துள்ளார். அவரிடம் சிறுபான்மை பெரும்பான்மை என்ற பாரட்சமான கொள்கைகள் இல்லை. எல்லோரும் இலங்கையர் என்றும்் நமது தேசமென்ற நிலையான கொள்கையையும் உடையவர்.  

கே:  அப்படியாயின் முஸ்லிம் சமூகத்தை மதிக்கின்ற ஜனாபதியின் கரத்தைப் பலப்படுத்த வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு கட்டாயமாக இருக்கிறது. எனவே இத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுக்கு உங்கள் மாவட்ட முஸ்லிம்கள் எந்தளவுக்கு வாக்குகளை வழங்குவார்கள் என்று கூற முடியுமா?  

நண்பர் என்ற வகையில் தனிப்ப்பட்ட ரீதியில் எதையும் கேட்டுப் பெற்றாலும் மக்களின் நலன் சார்ந்த விடயங்களை உாிமையோடு போய் அவாிடம் உதவி கேட்பதற்கு எம்மிடத்தில் அதிகார பலம் இல்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவருடன் நெருங்கி இருந்து வேலை செய்தேன். ஆனால் முஸ்லிம்கள் அவருக்கு வாக்களிக்காமல் விட்டார்கள். முஸ்லிம்கள் அவருக்கு வாக்குகள் வழங்கியிருந்தால் உரிமையுடன் எதையும் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.  

ஜனாதிபதித் தேர்தலின் போது நடைபெற்ற கூட்டங்களுக்கு கூடுதலான முஸ்லிம்கள் கலந்து கொண்டார்கள். அவ்வாறு நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது சட்டத்தரணி அலி சப்ரி உரையாற்றும் போது 35 வீதமான முஸ்லிம் வாக்குகள் கிடைக்கலாம் என்று தெரிவித்தார். அவர் பேசும் போது நான் அவருக்கு அருகில்தான் அமர்ந்து இருந்தேன். ஏன் 65 வீதமான முஸ்லிம்கள் வாக்களிக்க வில்லை என்று அவர் கேட்டார். அந்தளவுக்கு முஸ்லிம்களை நம்பியிருந்தார். தேர்தல் அன்று இரவு நான் அவருடன் தான் இருந்தேன். விடியற்காலை 2.00 மணி அளவில் தேர்தல் பெறுபேறுகளின் முடிவுகள் அறிவிக்கின்றார்கள். முஸ்லிம் பிரதேசங்களில் பெருவாரியான வித்தியாசத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. அது பெரும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது. பெரும்பான்மையின சமூக மக்கள் ஒன்று சேர்ந்தமையினால் சிறுபான்மையின மக்கள் நிராகரிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளாக அவை அமைந்தன.   இன்று அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் கூட அவர்களுடன் இல்லை. பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமற் போகும் போது எமது அடுத்த தலைமுறையினருக்கு நிச்சயமாக பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். நாங்கள் எங்களுக்கே துரோகமிழைத்துக் கொண்டோம் என்ற நிலைதான் வரும்.  

எனவே இது என்னுடைய பிரச்சினை இல்லை. இது வந்து எமது சமுகப் பிரச்சினை. கணிசமானளவு முஸ்லிம் வாழும் கொழும்பு மாவட்டத்தில் இம்முறை ஆளும் தரப்பில் போட்டியிடுவதற்காக ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவம் இலலை. களுத்துறையில் இல்லை. குருநாகல் மாவட்டத்தில் கொடுத்து விட்டு பின்பு அதை இல்லாமற் செய்தார்கள்.  

கண்டியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி என் மேல் உள்ள நம்பிக்கையிலேதான் வாய்ப்பு தந்தார். நான் கூட போட்டியிட முன் வந்தமையும் இம்மாவட்ட முஸ்லிம் மக்களை நம்பித்தான்.  

இன்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அரசியலில் தோல்விடைந்துள்ளது. இந் நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் தோல்வியடைந்தால் அது முஸ்லிம்களின் தோல்வியாகவே கருத வேண்டியிருக்கிறது. ஆளும் கட்சித் தரப்பில் போட்டியிட்டு தொிவாகும் வேட்பாளரின் வெற்றிதான் முஸ்லிம்களுடைய வெற்றியாக அமையும்.  

கே: எவ்வாறாயினும் நீங்கள் கண்டி மாவட்டத்தில் அரசியலில் களமிறங்கக் காரணம் என்ன?  

நான் கண்டி மாவட்டத்தில் கெலிஓய எலமல்தெனியவைச் சேர்ந்தவன். நீண்ட காலமாக கொழும்பில் வாழ்ந்தாலும் என்னுடைய வாக்குப் பதிவு இன்னும் கண்டியிலேதான் இருக்கிறது. என்னை எப்போதும் எந்நேரத்திலும் சந்திக்கலாம்.  

கண்டி மாவட்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு வரும் கண்டி வாழ் முஸ்லிம் மக்கள் இனிவரும் காலங்களில் ஏமாறக் கூடாது என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும். நீண்ட காலமாக கண்டி வாழ் முஸ்லிம் மக்கள் அபிவிருத்தி ரீதியாக புறக்கணிக்கப்பட்ட மக்களாகவும் பாதுகாப்பு என்ற வகையில் பல துன்பங்களுக்குள்ளாகி நிர்க்கதியற்ற நிலையிலும் வாழ்ந்து வருகின்றனர். இந்த முஸ்லிம்களுடைய நிலை குறித்து நிரந்தரமான உத்தரவாதத்தை கண்டி முஸ்லிம் அரசியல் தலைமைகளால் வழங்க முடியவில்லை.  

அந்த வகையில் எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் கண்டி வாழ் முஸ்லிம்களையும் பங்காளிகளாக இணைத்துக் கொள்ளவதற்காவே நான் அரசியலில் களமிறங்கியுள்ளேன். கண்டி வாழ் முஸ்லிம் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் தேவைப்பாடுகள் உள்ளன. இதற்கான நிரந்தர தீர்வை என்னால் பெற்றுத தர முடியும் என்று கருதுகின்றேன். இந்த சந்தர்ப்பத்தை கண்டி முஸ்லிம் வாழ் மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  

கே: பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் கட்சியில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ளுமா?  

கண்டி நான்கு முஸ்லிம் பிரதிநிதிகளைப் பெற்றுக் கொண்ட மாவட்டம். முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொள்வதற்காக எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து சுயேச்சை அணியில் போட்டியிடுகிறார்கள். ஆளும் தரப்பில் ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முஸ்லிமகள்் ஒற்றுமையாகச் செயற்படுதல் வேண்டும். தேர்தல் களத்தின் சாதக நிலையைக் கருத்திற் கொண்டு கண்டியில் ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை ஆளும் தரப்பில் பெற்றுக் கொள்வதற்கான ஓர் அரிய சந்தர்ப்பமாகத் தான் இத்தேர்தலைக் கருகிறேன்.  

சுமார் 162000 முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வரலாற்றில் முதற் தடவையாக அமைச்சர் பைசர் முஸ்தபா வெற்றி பெற்றார். அதேவேளை அமைச்சர் ஹலீம் ரவூப் ஹக்கீம் காதர் ஹாஜியார் உள்ளிட்டவர்களும் வெற்றி பெற்றனர். எனவே இத்தேர்தலில் ஆளும் தரப்பில் முஸ்லிம் பிரதிநித்துவம் ஒன்றை பெற்றுக் கொள்ளும் விடயத்தில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. கண்டி வாழ் முஸ்லிம் சமூகம் சிந்தித்து சாதுரியமான தீர்மானம் ஒன்றை எடுத்து ஓர் உறுப்பினரை நிச்சயமாகத் தொிவு செய்வார்கள் என்று நான் நம்புகின்றேன்.  

கே: கண்டி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக களமிறங்கியுள்ள ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் என்ற வகையில் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?  

இந்த தேர்தலில் நாங்கள் எடுக்கின்ற சாியான முடிவே கண்டி மாவட்்ட முஸ்லிம் சமூகத்துக்கு கல்வி அபிவிருத்தி பாதுகாப்பு என்பனவற்றைக் கொண்டு வரும். இப்பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்று ஒரு பலமான ஆட்சியை அமைக்கப் போகின்றது. அதில் நாங்களும் ஒரு பங்காளிகளாக இருந்து ஒரு பலமிக்க சமூகமாக மாற வேண்டும்.  

கே: நீங்கள் கண்டி மாவட்டத்தில் எவ்வாறான பணிகளை மேற்கொள்ளவுள்ளீர்கள் ?  

ஜனாதிபதி கோட்டாபயவின் காலத்தில் கண்டி மாவட்டத்தில் சகல முஸ்லிம் பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். இதுவரையிலும் கண்டியில் ஆண்களுக்கான தரமான முஸ்லிம் பாடசாலை ஒன்று இல்லை.  

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இந்நாட்டில் கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்தி சுபிட்சமான நாடாக மாற்றியமைக்கவுள்ளார். அவரது காலத்தில் கண்டி மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தையும் நிச்சயமாக அபிவிருத்தி செய்வேன்.  

நேர்காணல்: இக்பால் அலி  

Comments