சிதறிப்போயுள்ள கூட்டமைப்பு ஒற்றுமையாக வாக்களிக்குமாறு மக்களைக் கோரலாமா? | தினகரன் வாரமஞ்சரி

சிதறிப்போயுள்ள கூட்டமைப்பு ஒற்றுமையாக வாக்களிக்குமாறு மக்களைக் கோரலாமா?

தமிழ் தேசிய கூட்டமைப்பு தாங்கள் சிதறி இருந்துகொண்டு மக்களை சிதறாமல் வாக்களிக்க சொல்வது என்ன நியாயம். 2020 உடன் இவர்களுடைய வரலாறு முடிந்து விட்டது. புது வரலாறை தொடக்குவோம் என்கிறார் மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணியின் வேட்பாளரும், சிரேஷ்்ட சட்டத்தரணியுமான சோ. தேவராஜா. இம்முறை தேர்தலில் கூட்டமைப்பு தோல்வியைத் தழுவும் என்பதில் எந்தவித சந்தேகங்களும் இல்லை என்கிறார். தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய செவ்வி...

கே: நீங்கள் ஒரு சட்டத்தரணி நடைபெற உள்ள தேர்தலை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?

பதில்: இந்த தேர்தல் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானது. ஏனென்றால் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு ஒற்றுமையாக வாக்களித்தனர். 1976ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி என்றும் 1977ம் ஆண்டு தமிழீழத்துக்கான சர்வதேச வாக்கெடுப்பு என்றும் சொல்லி ஒரு முகப்பட்டு தேர்தலை முகங்கொண்டார்கள். 1977-2020வரை அந்த குரல் ஓங்கி ஒலித்தது. தமிழ் மக்கள் 1977- 2020 வரை உண்மையில் யுத்ததிதிற்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். 1977ம் ஆண்டிலேயே அன்றைய ஜனதிபதி ஜயவர்த்தன போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று அறைகூவல் விடுத்து, தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கை பரந்தளவில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வந்தது. சேர்.பொன் இராமநாதன் முதல் ஜீ.ஜீ. பொன்னம்பலம் வரை படித்த தலைவர்கள் இருந்த போதும் தோற்றுப் போனோம். அதற்குப் பிறகு, தந்தை செல்வநாயகம் முதல் அமிர்தலிங்கம் வரை முதலாளி வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் தலைமை தாங்கினார்கள். அதிலும் நாங்கள் தோல்வியடைந்தோம். இந்த தோல்விகளில் இருந்து நாங்கள் பாடம் கற்க வேண்டும். இந்த வரலாற்றில் இருந்து நாங்கள் பாடம் கற்க வேண்டும். நடைபெறவுள்ள இந்த தேர்தலில் மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி 3 ஆசனங்களை பெறுவோம் அதன் மூலம் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றுவோம்.  

கே: நீங்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவானால் உங்களுடைய செயற்பாடுகள் எவ்வாறு அமையும் ?

பதில்: இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என்ற பெயருக்கு அர்த்தம் கொடுக்கிற விதத்தில் நாங்கள் நடந்து கொள்ள வேண்டும். சமாதானம், சமத்துவம், சுயநிர்ணயம், தனிமனித சுதந்திரம், என்ற விடயங்களுக்கு அர்த்தத்தைக் கொடுக்கும் வகையில் நாங்கள் செயற்பட வேண்டும். பன்மைத்துவம் அங்கீகரிக்கப்பட வேண்டும். இலங்கையில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் பற்றிக் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் என்று சொல்லும் போது,அது தமிழ் முஸ்லிம்் மக்கள்தான், 3 தேசிய இனங்களுக்கும், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் பிரதேச சுயாட்சி முறை வழங்கப்பட வேண்டும். அது தான் எங்களுடைய நீண்டகால நோக்கம். யாழ்ப்பாணத்தில் பெறுகின்ற வெற்றியின் மூலம் முஸ்லிம்் மக்களை ஐக்கியப்படுத்துவோம். மலையக மக்களையும் ஐக்கியப்படுத்துவதற்கு தான் நாங்கள் இந்த தேர்தலில் நிற்கின்றோம். 

இன, மொழி, மத, பிரதேச வேறுபாடின்றி நாங்கள் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நாங்கள் வெற்றி பெறுகின்ற போது, தெற்கு சிங்கள மக்கள் எங்களைத் திரும்பிப்பார்ப்பார்கள். தெற்கு சிங்கள மக்கள் எங்களுடன் ஐக்கியப்படுவார்கள்.

கே: யாழ்ப்பாணத்தை பிரதிநிதிப்படுத்தி இந்த தேர்தலில் உங்களால் எத்தனை ஆசனங்களைப் பெற முடியும்? 

பதில்: - 3 ஆசனங்களை எதிர்பார்க்கின்றோம் பாராளுமன்ற தே்ரதல் அல்ல. மாகாண சபை தேர்தலை தான் எங்கள் எதிர்பார்ப்பு. பிரதேச சபை தேர்தலில் முழுமையாக நாங்கள் போட்டியிடவில்லை. 3 பிரதேசங்களில் தான் போட்டியிட்டோம். வலிகாமம் கிழக்கில் 4 ஆசனங்களை பெற்றோம். அதன் பிறகு மாகாண சபைதேர்தல் வந்திருந்தால் கட்டாயம் வெற்றி பெற்றிருப்போம்.

எங்களுடைய சின்னம் பட்டம் என்பது யாருக்கும் தெரியாது ஊடங்களில் வெளியிடப்படவில்லை.் விளம்பரங்கள் செய்வதற்கு வசதிகள் இல்லை. மக்களும் அவர்களுடைய தன்நம்பிக்கையும் தான் எங்களுக்கு உதவி பட்டம் என்பதை மக்களுடைய இதயத்தில் பதப்படுத்துகிறோம் வேட்பாளர் 10 பேரையும் அவர்களுடைய முகங்களையும் பெயர்களையும் நாங்கள் அறிமுகப்படுத்த வேண்டியாதாக இருக்கிறது அதனால் தான் நாங்கள் மக்களோடு நேருக்கு நேராக சந்திக்கின்றோம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் இல்லை காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் இல்லை ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை அனாதைப் பிள்ளைகளுடைய வாழ்வுக்கு ஒரு முடிவில்லை. விதவைப் பெண்களுக்கு வாழ்வாதாரம் இல்லை இவற்றுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். 2010முதல் நடை பெற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் உரிமை கொடுக்க வேண்டும். வீட்டு பணி பெண்களுக்கும் விசேட சலுகை கொடுப்போம்.  

கே: பிரதான கட்சிகளுடன் போட்டியிடுகின்றீர்கள். அவர்களுக்கு ஈடாக வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?  

பதில்: தமிழ் தேசிய அணிகளே 5 பிரிவுகளாக பிரிந்திருக்கின்றன அவர்கள் சிதறிப்போன பின்னர் மக்களை சிதறாமல் வாக்களிக்க சொல்வது என்ன நியாயம் 2020 உடன் இவர்களுடைய வரலாறு முடிந்து விட்டது. புது வரலாறை தொடக்குவோம் அதனால் தான் மக்களை நம்பி இருக்கின்றோம்் தமிழ் மக்கள் தங்களுடைய வரலாற்று அனுபவத்தின் மூலம் உழைக்கும் மக்கள் என்ற தலைமையை உருவாக்கி் 4ம் கட்ட விடுதலை போராட்டத்தை தமிழ் மக்கள் சார்பில் தலைமை தாங்க தயாராக இருக்கிறார்கள். 

கே: எதிர் காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயம் தொடர்பாக எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும்? 

பதில்: அரசிய தீர்வு தொடர்பாக முதலில் தமிழ் அமைப்புக்கள் எல்லாம் ஐக்கியப்பட்டு பொது கோரிக்கையை முன்வைக்க வேண்டும். முஸ்லிம் மக்களுடனும் தலைவர்களுடனும் போச வேண்டும். மலையக மக்களுடனும் தலைவர்களுடனும் பேச வேண்டும் அவர்களுக்கான தனி அடையாளம் பேணப்பட வேண்டும். அந்த மக்களுடைய வீட்டு உரிமை காணி உரிமை சம்பளப் பிரச்சினை என்பன தீர்க்கப்பட வேண்டும் மக்களிடையே ஒற்றுமை இருந்தால் எல்லா பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். 

சுமித்தி தங்கராசா

 

Comments