முடியுமானால் ஐ.தே.க கட்டிய ஒரு வீட்டையேனும் மலையகத்தில் காட்டுங்களேன்! | தினகரன் வாரமஞ்சரி

முடியுமானால் ஐ.தே.க கட்டிய ஒரு வீட்டையேனும் மலையகத்தில் காட்டுங்களேன்!

குளவிக்கொட்டுக்கு மலைக தோட்டத்தொழிலாளர்கள் இரையாகும் நிலைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கபபடும் என்கிறார் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமாகிய சுப்பையா சதாசிவம். அவருடனான இந்த நேர்காணலில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள் பற்றி விரிவாக அலசுகின்றார். நேர்காணல் முழுமையாக....

கே: இந்திய வம்சாவளித் தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்தில் ஒரு தேக்க நிலை காணப்படுகிறது. அரசியல்வாதிகளை ஊக்குவிக்கும் கேள்வி கேட்கும் சமூகமாக அது இல்லாமல் இருப்பதுதான் அரசியல்வாதிகள் விழிப்புணர்வற்றவர்களாக இருப்பதற்கு காரணம் என நினைக்கிறீர்களா? நீங்கள் அரசியலில் மலையக மக்களுக்காக செய்த சேவைகளை பற்றியும் விபரிப்பீர்களா? 

மலையக இந்திய வம்சாவளி மக்கள் இன்று வளர்ச்சியடைந்துள்ளார்கள். 30 வருட காலம் எமது உரிமைகள் பறிக்கபட்டிருந்தமையினால்தான் எமது வளர்ச்சியில் மந்தம் ஏற்ப்பட்டது. 1977ம் ஆண்டுக்கு பிறகு எமக்கு கிடைத்த பிரஜா உரிமை மூலம் தான் நாம் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகின்றோம். நான் 1977ம் ஆண்டு காமினி திஸாநாயக்க, அநுர பண்டாரநாயக்க, செளமியமூர்த்தி தொண்டமான் ஆகியோருடன் அரசியலை ஆரம்பித்தேன். 1977ம் ஆண்டுக் காலப்பகுதியில் பிரஜா உரிமைக்காக போராடி அந்த உரிமையை பெற்ற பின்னர் நம்மில் 1988ஆம் ஆண்டு 10 பேர் மாகாண சபைக்கும் 1994 ஆம் ஆண்டு 11 பேர் பாராளுமன்றமும் செல்லும் வாய்ப்பு எமக்கு கிடைத்தது. நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் மலையக சமூகம் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற சிந்தனையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். அன்று ஆசிரியர் கலாச்சாலைகள், பூல் பேங் தொழிற்பயிற்சி நிலையம், பாடசாலை கட்டிடங்கள், போன்றவற்றை உருவாக்கினோம். ஆசிரியர் நியமனங்கள், கிராம சேவகர் நியமனங்கள் வழங்கினோம். இன்று எவ்வளவோ வளர்சியடைந்து இருக்கின்றோம். இப்போது இருக்கின்ற சந்தர்ப்பங்களை முழுமையாக ஒழுங்காக பயன்படுத்தினோமானால் நாம் ஏனைய சமூகங்களுக்கு நிகராக வாழ முடியும். அன்று தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு கிடைத்ததன் விளைவாக பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் பெருந்தோட்ட பகுதிகளுக்கு கிடைத்தன.

1994ம் ஆண்டுக்கு முன்னர் மலையக பெருந்தோட்டங்களில் வீடுகள் தனியாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். 1976, 1977ஆம் ஆண்டுகளிலே கொல்்வின் ஆர் டி சில்வா வீடமைப்பு அமைச்சராக இருந்தார். அப்போது பெருந்தோட்டங்கள் ஜனவசம வசம் இருந்தது. அன்று குயின் கொட்டேஜ் வீடுகளை எல்லா வசதிகளையும் கொண்டு அமைத்தார்கள். அதன்போதே செளமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் தனிவீடு, காணி உரிமை பெறுவதற்கான போராட்டங்களை நாங்கள் நடத்தினோம். 1994ம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதியாக பதவியேற்றபோது நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக தோட்டபகுதிகளில் ஒரு குழுவை நியமித்து பெருந்தோட்ட மக்களின் வீடு, வாழ்க்கை, தொழில், கல்வி, சுகாதாரம் போன்றவற்றை ஆய்வு செய்தார். இந்த ஆய்விலே வீடமைப்பு, கல்வி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு அனைத்துமே உள்ளடக்கப்பட்டன. இதன் பின்னரே தோட்ட தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. பெருந்தோட்டங்களில் எல்லா அபிவிருத்திகளுக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அன்று கிராம சேவகர் நியமனங்கள் பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் வழங்கப்பட்டதன் விளைவாகத்தான் இன்று பிரதேச சபை எல்லைகளை பிரிக்க முடிகின்றது.

எல்லைகள் பிரிப்பதன் ஊடாக பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றன. பெருங் கட்சிகளை சார்ந்திருப்பது நாம் அடிமைகள் போல இருப்பதற்கு சமமாகும். அன்று பேரம் பேசும் சக்தி மிக்கவர்களாக இருந்தோம். நான் 1996 ம் ஆண்டு பாராளுமன்றம் சென்றபோது இந்திய வம்சாவளி மக்களின் கல்வி வளர்ச்சியில் மிகுந்த அக்கறை செலுத்தினேன். தலைவர் செளமியமூர்த்தி தொண்டமானோடு இணைந்து பாடசாலைக் கட்டடங்களை அமைத்துக் கொடுத்தேன். ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு கட்டிடங்களை மாத்திரம் அமைத்துக்கொடுத்தால் போதுமானதாக அமையாது என்று எண்ணி கல்வி நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்கினோம். அன்று கல்வி அமைச்சராக இருந்த ரிச்சர்ட் பத்திரனவிடம் போராடி மேலதிக கல்விச் செயலாளரை நியமித்தோம். முதன் முதலாக தில்லை நடராஜா என்பவர் கல்விச் செயலாளராக நியமனம் பெற்றார். அன்று எம்மிடம் எஸ்.எல்.இ.எஸ்.அதிகாரி ஒருவர் மாத்திரமே இருந்தார். அன்று விசேட அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கமைய மத்திய மாகாணத்தில் 5 மாவட்டங்களில் மேலதிக கல்விப் பணிப்பாளர்களை நியமனம் செய்தோம்.

மேலும் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மாகாண கல்வி அமைச்சை பெற்றுக்கொடுத்தோம். ஒவ்வொரு கல்வி வலயத்திலும் உதவி கல்விப் பணிப்பாளர்களையும், கோட்டக் கல்விப் பணிப்பாளர்களையும் நியமித்தோம். அன்று நுவரெலியா மாவட்டத்திற்கு 68 பேரும் பதுளை மாவட்டத்திற்கு 33 தமிழ் கிராம சேவகர்கள் நியமிக்கப்பட்டார். நுவரெலியா மாவட்டத்தில் படித்த இளைஞர் யுவதிகளுக்கு சமுர்த்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கினோம். இவ்வாறு பல வேலைவாய்ப்புகளை எனது தனிப்பட்ட முயற்சியில் மலையகத்திற்காக பெற்றுக்கொடுத்தேன். 

கே: பெருந்தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி மரணிக்கும் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது இதற்கு தீர்வு என்ன?  

கடந்த மாதம் சென்கூம்ஸ் தோட்டத்தில் பெண் தொழிலாளி ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். நான் வியடமறிந்து அத்தோட்டத்திற்கு சென்று தோட்ட அதிகாரியை சந்தித்து உரையாடினேன். பின்னர் அந்த தொழிலாளி குளவிக்கொட்டுக்கு இலக்காகிய தேயிலை மலைக்கும் சென்று பார்வையிட்டேன். பெண் தொழிலாளர்கள் இடுப்பில் அணியும் ரெட்டு உரசி தேயிலை மரங்களில் இருந்த குளவி கூடு கலைந்து இவர்களை தாக்கியுள்ளது. தேயிலை மலைகளில் காடுகளாக புற்கள் வளர்ந்துள்ளன. பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருடன் இது தொடர்பாக பேசினேன். மிகவிரைவில் குளவிகொட்டிலிருந்து எமது தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்பதாக அவர் என்னிடம் உறுதியளித்துள்ளார். 

கே: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி முழு நாட்டிலும் எவ்வாறு இருக்கின்றது. அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் அதன் வெற்றி எவ்வாறு அமையும்? 

இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும். அதேநேரம் முழு நாட்டிலும் வெற்றி வாகை சூடும். பொதுஜன பெரமுனவின் அபேட்சகர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்படுகின்றார்.

கொவிட்19 கொரோனா வைரஸ் தொற்றில் உலகமே இன்று பின்னடைவை சந்தித்துள்ள போதிலும் அவர் தனிமனிதனாக நின்று முழு நாட்டையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார். இவருடைய ஆளுமையை மக்கள் விரும்புகின்றனர். அவரை ஆதரித்தால் நன்மைகள் உருவாகும் என்பதை உணர்ந்துள்ளார்கள்.

நுவரெலியா மாவட்டத்தில் மக்கள் மிக தெளிவாக இருக்கின்றார்கள். கடந்த முறை செய்த தவறை மீண்டும் செய்யமாட்டார்கள். நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்க வாக்களித்து தமிழ்பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க காத்துக்கொண்டிருக்கின்றார்கள். 

கே: நுவரெலியா மாவட்டத்தில் உங்களது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதா?  

நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன். நுவரெலியா மாவட்டத்தில் நான் செய்த அபிவிருத்திகளை விட வேறு யாருமே முன்னெடுக்கவில்லை என்றே கூறுவேன். நுவரெலியா மாவட்டத்தில் எத்தனையோ அரசியல்வாதிகள் இருக்கலாம் இருந்திருக்கலாம் ஆனால் நான் செய்த அபிவிருத்்திகளை எவறுமே செய்யவில்லை. சிலர் அரசியலுக்காக வந்து அரசியல் நடத்தினார்களே தவிர திட்டமிட்டு சமூக அபிவிருத்திகளை எவரும் முன்னெடுக்கவில்லை. நான் எந்த கட்சியை சார்ந்திருந்தாலும் மக்களுக்கு சேவை செய்துள்ளேன். எனவே மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள். நான் இம்முறை பாராளுமன்றம் சென்றால் பழைய கதைகளை பேசாமல் புதிய விடயங்களை சிந்தித்து எமது சமூகத்திற்கு என்னென்ன தேவையோ அதனை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். 

கே: அமரர் ஆறுமுகன் தொண்டமான் வசம் இருந்த சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மீண்டும் மலையகத்திற்கு கிடைக்குமா? 

ஒரு அமைச்சர் இறந்த பின்னர் அரசியல் யாப்பின் படி ஒரு அமைச்சு ஒரு அமைச்சரிடமே இருக்க வேண்டும். அதன் பிரகாரம் அந்த அமைச்சை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றார். பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ் பிரதிநிதி ஒருவருக்கு இந்த அமைச்சு நிச்சயமாக கிடைக்கும். அதில் எவ்வித மாற்றமும் இல்லை. 

கே: கடந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டங்கள் பெருந்தோட்ட மக்களுக்கு முறையாக சென்றடைந்ததா? 

நிச்சயமாக இல்லை. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் கட்டப்பட்ட ஒரு வீட்டை காட்டுங்கள் பார்ப்போம். மலையகத்தில் கட்டப்பட்ட அனைத்து வீடுகளும் இந்திய அரசாங்கத்தினால் கட்டப்பட்டவை. இந்திய அரசாங்கத்தினால் கட்டப்பட்ட வீடுகளை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கட்டியதாக கூறுகின்றார்கள். இந்திய அரசாங்கத்தினால் கட்டப்பட்ட வீடுகளை தாமே கட்டியதாக காண்பித்து அரசியல் நடத்துகின்றார்கள். அந்த அரசாங்கம் விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வீடுகளை கட்டியிருந்தால் மலையகத்தில் வீடுகளை கட்டிமுடித்திருக்கலாம். 

கே: பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு கிடைக்குமா? 

கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து தொழிற்ச்சங்கங்களும் அது தொடர்பாக பெருந்தோட்ட கம்பனிகளிடம் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றன. நாங்களும் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றோம். 1000 ரூபா சம்பளத்தை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் முயற்சிகளில் முழுமையாக ஈடுப்பட்டு வருகின்றோம்.  

தலவாக்கலை பி.கேதீஸ்

 

Comments