கொரியக் குடாவின் போர் பதற்றமும் அரசியல் பின்புலமும் | தினகரன் வாரமஞ்சரி

கொரியக் குடாவின் போர் பதற்றமும் அரசியல் பின்புலமும்

கொரியக் குடாவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்பு ஓரளவு தணிந்திருந்த நெருக்கடி மீளவும் ஆரம்பித்துள்ளது. கொரோனா காலப்பகுதி முழுவதும் ஒரு ஏவுகணைப் பரிசோதனையுடன் இரண்டு வாரங்களுக்கு மேலாக கிம்ஜோங் உன் தலைமறைவான விடயங்களை கடந்து வேறு எவையும் முக்கியத்துவம் பெறவில்லை. ஆனால் மீளவும் ஒரு பரபரப்பும் அச்சமான சூழலும் ஏற்பட ஆரம்பித்துள்ளது. இக்கட்டுரையும் கொரியக் குடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கான காரணங்களை தேடுவதாக உள்ளது.

முதலாவது வடகொரியாவிலிருந்து தப்பி ஓடிய வடகொரியர்கள்; தென் கொரியாவிலிருந்து வடகொரிய ஆட்சிக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை வீசுவதாகவும் பிரசார வாசகங்கள் பொறிக்கப்பட்ட நைதரசன் பலூன்களும் பறக்கவிடப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் இவ்வாறு பல ஆண்டுகளாக இத்தகைய பலூன் சர்ச்சை இரு நாட்டுக்கும் இடையில் நிலவுகிறது. இத்தகைய நடவடிக்கையை முற்றாக தடை செய்துள்ளதாகவும் கடந்த வாரங்களில் பலூன் மற்றும் பிரசுரங்களை வடகொரியாவுக்குள் அனுப்பிய இரு சகோதரர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தென் கொரிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இத்தகைய பலூன் பறப்பு விவகாரத்தை அடுத்தே இரு நாடுகளும் பின்பற்றிவந்த தொலைத்தொடர்பு அலைவரிசையை நிறுத்தியுள்ளன. ஏறக்குறைய இரு நாட்டுக்கும் இடையில் 49க்கும் மேற்பட்ட தொலைத் தொடர்புகள் உள்ளன. 2014 இல் இருந்து பல தடவை இத்தகைய தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. ஆனால் தற்போது அவை தகர்க்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமன்றி இரு நாடுகளும் பொதுவான பிரதேசமாகிற கேசாங் நகரில் அமைந்துள்ள தகவல் கோபுர தகர்ப்புடன் இரு நாட்டின் எல்லையிலுள்ள இராணுவ விலக்களிக்கப்பட்ட பிரதேசத்தை நோக்கி முன்னேற் தயாராக உள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது.

வடகொரிய இராணுவத்தை அப்பிரதேசத்துக்குள் நுழைவதற்கு தயாராக இருக்குமாறு வடகொரிய தலைவர் கிம் இன் சகோதரி கிம் யோ ஜோங் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன் எல்லையில் இராணுவம் தாக்குதல் நடாத்த தயாராக இருப்பதாகவும் கண்காணிப்பினை அதிகரித்துள்ளதாகவும் வடகொரிய இராணுவம் அறிவித்துள்ளது. ஏறக்குறைய ஒரு போருக்கான தயார்படுத்தலுடன் கட்டளைக்காக இராணுவம் காத்திருப்பது போல் தெரிகிறது.

இரண்டாவது இவ்வாறு ஆத்திரம் ஊட்டும் செயலானது வட, தென் கொரியர்களிக்கிடையில் ஒரு போரை தூண்டக்கூடியதாக அமையுமா? என்பது பிரதான கேள்வியாகும். வெளிப்படையாகப் பார்த்தால் வடகொரியா ஒரு போரை ஆரம்பிக்கப் போவதாகவே தெரிகிறது. ஆனால் உள்ளார்ந்த ரீதியில் வடகொரியா ஒரு போருக்கு தயாராவதென்பது வெளித் தோற்றத்தில் உள்ள அனுமானங்களே. ஆழமாகப் பார்த்தால் அது ஒரு எச்சரிக்கை கலந்த நடவடிக்கை மட்டுமாகவே தெரிகிறது. அதனையும் கடந்து ஒரு போரை வடகொரியா ஆரம்பித்தால் அதில் இலகுவில் வெற்றி அடையும் என்று கூறிவிட முடியாது. எப்போதும் போர் வெற்றியின் அடிப்படையிலே நிகழ்த்தப்படுவதுண்டு. கொரோனா வடகொரிய நட்பு நாடுகளை பெரியளவில் தாக்கி வருகிறது. குறிப்பாக சீனாவின் தலைநகரத்தில் இரண்டாவது அலை கொரோனா தாக்க ஆரம்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறே ரஷ்யாவும் அதிக இழப்பீடுகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழலில் வடகொரியா ஒரு போரை அதுவும் தென்கொரியாவை நோக்கி நகர்த்துவதென்பது அதிர்ச்சியான தகவலாகவே தெரிகிறது. அதனை விட பொருளாதார நெருக்கடியால் வடகொரியா பெரும் பாதிப்பினை எதிர்கொண்டு வருகிறது. அதிலிருந்து மீள்வதென்பது கடினமானதாகவே தெரிகிறது. இப்படியான சந்தர்ப்பத்தில் வடகொரியா ஒரு போரை தொடக்க முயல்வது என்பது கடினமானதாகவே தெரிகிறது. ஆனால் தென் கொரியாவையும் ஏனைய அயல்நாடுகளையும் விட வடகொரியா இராணுவ ரீதியில் வலுவான நிலையில் உள்ளது. அதன் அணுவாயுத பலம் அதனை பாதுகாப்பதுடன் எதிரியை அச்சுறுத்தும் ஆயுதமாக காணப்படுகிறது. அப்படியாயின் ஏன் ஒரு போர்ப்பதற்றத்தை வடகொரியா தானாக உருவாக்கி வருகிறது.

ஒன்று தென்கொரியாவுக்கு ஒரு எச்சரிக்கையை வெளிப்படுத்துவதற்கு. அது தென் கொரியாவுக்கு மட்டுமானதல்ல. பலதடவை அமெரிக்காவை நம்பமுடியாது எனவும் அமெரிக்காவுடனான போச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கிம் அறிவித்துக் கொண்டிருக்கிறார். எனவே தான் தென் கொரியாவுக்கூடாக அமெரிக்காவுக்கு தெளிவான செய்தியை வடகொரியா கொடுக்க முனைவதை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

இரண்டாவது அமெரிக்கா சீனாவை தனிமைப்படுத்த பெரும் பிரயத்தனங்களை கடந்த கொரோனாக் காலத்தை பயன்படுத்தி மேற்கொண்டு வந்தது. அதிலும் தென் சீனக்கடல் பிரதான மையப்பகுதியாக அமைந்திருந்தது. சீனாவுக்கு எதிராக அவுஸ்ரேலியாவையும் சிங்கப்பூர்-அவுஸ்ரேலிய இராணுவ உறவையும் தென்கொரிய அமெரிக்க நெருக்கத்தையும் ஏற்படுத்தி வந்துள்ளது. இவை அனைத்தும் சீனாவுக்கு எதிரான இராணுவ அரசியல் பொருளாதார பொறிகளாகவே அமைந்திருந்தது.

அத்தகைய அமெரிக்க உத்தியை உடைப்பதற்கு களம் இறக்கப்பட்ட ஒரு விடயமாகவே வடகொரிய தென்கொரிய விவகாரம் அமைந்துள்ளது. சீனா ரஷ்யா வடகொரிய என்பன அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கூட்டினை தகர்ப்பதற்கு முனைகின்றன.

மூன்று அத்தகைய எண்ணத்திற்கு வலுச் சேர்க்கும் விதத்தில் ரஷ்யாவின் நகர்வு அமைந்துள்ளது. கடந்த காலத்தில் ரஷ்யா வடகொரியா தரப்பிலிருந்து கொண்டு அமெரிக்க -வடகொரிய முறுகலுக்கு சமாதான உரையாடல் மேற்கொள்ள முன்வந்தது. ஆனால் தற்போது கவலை மட்டும் தெரிவித்துவிட்டு அவதானித்துக் கொண்டிருகிறது. ரஷ்ய அரசின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோ வட-தென் கொரிய முறுகல் நிலை கவலையளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அதனை தடுக்கும் இராஜீக முயற்சிகள் எதனையும் முன்னெடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

நான்கு சீனாவின் எல்லையில் எழுந்திருக்கும் தள்ளுமுள்ளு பெரும் சண்டையாக மாறி கேணல்தர அதிகாரி கொல்லப்படும் அளவுக்கு கத்திச் சண்டை நிகழ்ந்திருகிறது. ஆனால் ஆயுதங்களை வைத்துக் கொண்டே அத்தகைய நடவடிக்கையை இரு நாட்டு இராணுவமும் வெளிப்படுத்தியுள்ளது. அவ்வாறே ரஷ்யாவில் அமெரிக்காவின் உளவாளி ஒருவருக்கு ரஷ்யா தண்டனை அறிவித்துள்ளது.

சீனா ஒர் அவுஸ்ரேலியருக்கு உளவு பார்த்தார் எனறடிப்படையில் தண்டனை அறிவித்துள்ளது.

எனவே சீனாவின் நட்பு நாடுகளும் சீனாவும் அமெரிக்காவின் பொறிகளை தோற்கடிக்க நகர்வுகளை ஆரம்பித்துள்ளன. அதில் ஒன்றாகவே வடகொரியாவின் நடவடிக்கைகள் அமைந்தள்ளன. இவ்வாறு ஒரு எச்சரிக்கையை தென் கொரியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் அதன் சகபாடிகளுக்கும் கொடுத்துள்ளதுடன் அவர்களது நிகழ்ச்சி நிரலை குழப்பும் நடவடிக்கையை சீன நட்பு நாடுகள் ஆரம்பித்துள்ளன. இது தவறுதலாக போராக மாறுமாக அமைந்தால் அதிக விளைவுகளை வடகொரியா மட்டுமல்ல சீன நட்பு நாடுகளே எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்

Comments