உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான தருணம்..! | தினகரன் வாரமஞ்சரி

உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான தருணம்..!

நாடுகள் பொருளாதார ரீதியில் சுயாதீனத் தன்மையை அடைந்திருப்பதன் அவசியத்தை கொரோனா தொற்று மிகத்தெளிவாக உணர்த்தியிருக்கிறது. எதிர்பாராமல் ஏற்படும் ஏற்றுமதி, இறக்குமதி துறையின் இடைநிறுத்தமானது.

எந்தவொரு நாட்டையும் முற்றாகச் செயலிழக்கச் செய்வதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது. ஆகையால் அதனை உணர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என்ற விடயம் கொரோனாவின் பின்னரான காலத்தில் உலக நாடுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் முதலிடம் பெற்றிருக்கின்றது.

அந்தவகையில் நமது நாட்டின் உள்ளூர் உற்பத்தியை பலப்படுத்த வேண்டிய  அவசியத்தையும் அத்தியாவசியமற்ற பொருட்களின் வகைதொகையற்ற இறக்குமதியை மட்டுப்படுத்தி உள்ளூர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் அரச தலைமை கூடுதல் கவனத்தை கொண்டிருக்கின்றது.  

நாட்டிற்கு திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்து வைக்கப்படுவதற்கு முன்னரான 1970-1977 காலப்பகுதியில் உள்நாட்டு உற்பத்தியை  ஊக்குவிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட அரச துறைசார் பொருளாதார செயற்பாடுகள் தொடர்ந்திருப்பின், இன்று நாடு ஆகக் குறைந்தபட்சம் ஆசியாவில் அபிவிருத்தி அடைந்திருக்கும் நாடுகளுடன்   சமமான நிலையில் நிற்கக்கூடிய கைத்தொழில் உற்பத்தித் திறனை அடைந்திருக்கக்கூடும் என்ற கருத்து கொரோனாவின் பின்னரான காலத்தில் வலுவடைந்திருக்கின்றது.  

அதற்கு காரணம் உப்பு முதல் அரிசி வரையிலான அனைத்து உணவுப்பொருட்களும் ஊசி முதல் ஆடைகள் வரையிலான ஏனைய பொருட்களும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற கொள்கை செயற்படுத்தப்பட்ட 70 -  77 காலகட்டத்தில் நாட்டில் கட்டியெழுப்பப்பட்ட சகல உள்நாட்டு உற்பத்தி முயற்சிகளும் 78ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை திட்டத்தின் கீழ் கைநழுவிப் போனது. கடல் சூழ்ந்த ஒரு தீவாக இருக்கும் பின்னணியிலும் உப்பு, மீன், அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களும் துடைப்பம் முதல் ஆடை வரையிலான ஏனைய உற்பத்தி பொருட்களும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மோகம் கொண்ட ஒரு நாடாக இலங்கை மாறியிருக்கின்றது.  

இதன் விளைவாகவே பெருமளவு பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கின்றது. இதனை உணர்ந்த அரச தலைமை 77 முதல் இதுவரை செயற்பட்டுவந்த அத்தியாவசியமற்ற பொருட்களின் வகைதொகையற்ற இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டுள்ளது. அதனுடன் கொரோனா தொற்றுநோய் காரணமாக நாட்டின் இயல்பு நிலை முடக்கப்பட்டு மக்களின் நடமாட்டம் தத்தமது வீடுகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட பின்னணியில் அரசாங்கத்தினால் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட வீட்டுத்தோட்ட செயற்பாடானது   தற்போது பலன்தரும் நிலையை எட்டியிருக்கின்றது. இச்செயற்பாட்டினை மேலும் ஊக்குவித்து ஆக்கபூர்வமான ஆதரவும் வழிகாட்டலும் சம்பந்தப்பட்ட அரச துறையினரால் வழங்கப்படும் பட்சத்தில் இதன் சாதகமான பலனை அடைவதென்பது சாத்தியமாகியிருக்கின்றது.  

வீட்டுத்தோட்ட செயற்பாடுகளுடன் இணைந்ததாக நீண்ட காலமாக கைவிடப்பட்டிருந்த வயல் நிலங்களை மீண்டும் நெல் உற்பத்தியில் ஈடுபடுத்துவதற்கான முயற்சி இளைஞர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அச்செயற்பாடானது உள்நாட்டு அரிசி உற்பத்தியில் சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்துவதோடு இளைய தலைமுறை விவசாயத்துறை தனது சமூக பெறுமதியினை குறைத்து எடைபோடும் ஒரு செயற்பாடாகும் எனக் கொண்டிருந்த நோக்கினை மாற்றியமைத்து இளைஞர்களை மென்மேலும் விவசாயத் துறையில் ஈடுபட தூண்டியிருப்பதை நாடு தழுவிய ரீதியில் காணக்கூடியதாக இருக்கின்றது. 

ஏற்கனவே உலக நாடுகளின் நற்பெயரை பெற்றிருக்கும் ஏலம், கராம்பு, கறுவா, மிளகு ஆகிய உள்நாட்டு உற்பத்திகளுக்கு அண்மைக்காலமாக தலைதூக்கியிருந்த மீள் ஏற்றுமதி எனும் இலங்கை நாட்டு உற்பத்திகளின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து வந்த செயற்பாடுகள் பெருமளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கும் பின்னணியில் மேற்குறிப்பிட்ட பொருட்களின் தரமான உற்பத்திகளுக்கு வெளிநாட்டு சந்தைவாய்ப்பை அதிகரித்துக் கொள்ளக்கூடியதற்கான சாத்தியப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.

மறுபுறத்தில் இரசாயன பசளை மற்றும் கிருமி  நாசினிகள் உபயோகப்படுத்தாத இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மேற்குறிப்பிட்ட வாசனைத் திரவியங்கள் மற்றும் தேயிலை ஆகியவற்றிற்கான வெளிநாட்டு சந்தை வாய்ப்பை அதிகரித்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமும் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கின்றது.  

இந்நகர்வுகளைக் கருத்திற்கொண்டே வர்த்தக அல்லது உற்பத்தித்துறையில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள முனைவோருக்கு அரசாங்கம் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற கொள்கையை  ஜனாதிபதி வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக புதிய தொழில் முயற்சியுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கும் முதலீடு தொடர்பில் அரச வங்கிகளின் நேர்மையான, நேரடியான ஒத்துழைப்பு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி வலியுறுத்தியிருக்கின்றார். அதற்கமைய குறுகிய கால மற்றும் நீண்ட கால உள்ளூர் முதலீடுகளுக்கு தேவையான நிதி வசதியையும் அரச வங்கிகள் செய்துகொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியிருக்கின்றார். ஏனெனில் உரிய ஆரம்ப முதலீடு இன்மையே எமது நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான புதிய உள்ளூர் உற்பத்தி முனைப்புகள் கைகூடாது செல்ல காரணமாக அமைந்திருக்கின்றது.

இதற்கு பரிகாரம் காணும் வகையிலேயே மிகக் குறைந்த வட்டியுடனான கடன் வாய்ப்புகளை நம் நாட்டு முதலீட்டாளர்களுக்கு பெற்றுக்கொடுத்தலை உடனடியாக செயற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை வழங்கியிருக்கின்றார்.  

ஏனெனில் சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தி முயற்சியாளர்களுக்கு தேவையான முதலீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான நம்பகமான வழியாக இருந்துவரும் அரச வங்கிகளின், அத்தகையோருக்கு தேவையான முதலீட்டினை கடனாகப் பெற்றுக்கொடுப்பதில் பூர்த்திசெய்ய வேண்டியிருக்கும் கடினமான செயற்பாடுகள், கடனைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் கால தாமதம் மற்றும் அரச வங்கிகள் கோரும் உத்தரவாதத்தினை பெற்றுக்கொடுப்பதில் இம்முதலீட்டாளர்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் அசெளகரியங்கள் ஆகியன புதிய தொழில் முனைப்பாளர்களை வலுவிழக்கச் செய்வதாகவே அமைந்திருக்கின்றது.  

இந்நிலையில் மாற்றம் ஏற்படும் பின்னணியிலேயே பெரும் எண்ணிக்கையிலான முதலீடுகள் என்பது சாத்தியப்படும். ஆயினும் இதற்கு குறிப்பிடத்தக்க தடையை ஏற்படுத்தும் வகையிலேயே நம் நாட்டு அமைச்சுக்களின் செயற்பாடுகள் அமைவதை காணலாம். உதாரணமாக,   புதிய உற்பத்தி முனைப்பாளருக்கு ஒரு அமைச்சின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெறும் அதேவேளை இன்னொரு அமைச்சின் செயற்பாடுகள் அவ் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவதற்கு தடையாக அமைந்துவிடுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அத்தகைய சூழலானது தொடரக்கூடாது என்பதனாலேயே கைத்தொழில், வர்த்தக முயற்சிகள் மற்றும் அபிவிருத்தி பணிகள் ஆகியவற்றில் நேரடியாக தொடர்புபடும் சகல அமைச்சுக்களும் ஒன்றிணையப்பட்ட செயலணி ஒன்றினை ஜனாதிபதி உருவாக்கியிருக்கின்றார். இதன் மூலம் புதிய தொழில் முயற்சியாளர்களுக்கு தமது சொந்தக் காலில் எழுந்து நிற்பதற்கு கைக்கொடுக்கும் அதேவேளை அவர்களின் முதலீட்டிற்கு தேவையான நிதி மற்றும் பொருள் ரீதியான உத்தரவாதத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.  

குறிப்பாக புதிய தொழில் முயற்சியாளர்களை    தீர்வின்றி அங்குமிங்கும் என இழுத்தடிப்பதற்குப் பதிலாக புதிய தொழில் முயற்சிகளுக்கு தேவையான சகல அமைச்சுக்களின் ஒத்துழைப்பையும் ஒரே இடத்திலிருந்து பெற்றுக்கொடுப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக நிதி, சட்ட ரீதியான ஆலோசனைகள், உற்பத்திக்கான வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள், சுற்றாடல் சாத்தியவள அறிக்கையை பெற்றுக்கொள்ளல், தேவையான மனித வளங்களை பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் மற்றும் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான வசதிகள் தொடர்பில் புதிய முயற்சியாளர்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் பிரச்சினைகளை   தீர்த்து அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்து இதன் மூலம் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றது.  

மேற்குறிப்பிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதன் மூலம் உள்நாட்டு உற்பத்திகளை உயர்ந்த தரத்தில் உற்பத்தி செய்து உள்நாட்டு நுகர்வோருக்காக சந்தைப்படுத்தும் அதேவேளை ஏற்றுமதி துறையிலும் தடம் பதிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கின்றது.  

இவ்வாறு புதிய உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் துடைப்பம் முதல் மருந்து வகைகள் வரையிலான சகல அத்தியாவசிய உற்பத்திகளையும் உயர்ந்த தரத்தில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதற்கான நேரடி உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.  

ஏற்கனவே நமது நாட்டுக்கு தேவையான மருந்துப்பொருட்களில் சிறிய பகுதியினை உள்நாட்டில் உற்பத்தி செய்துவரும் அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் போன்ற பல்வேறு அரச மற்றும் தனியார் முதலீட்டு நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதனையே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

குறிப்பாக நமது நாட்டில் காணப்படும் இயற்கை வளங்களின் எண்ணிக்கையை விட மிகக்குறைந்த அளவிலான இயற்கை வளங்களைக் கொண்ட சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகள் தத்தமது உற்பத்தி துறையில் பெரும் வெற்றியினை ஈட்டிவரும் பின்னணியில் நமது நாட்டின் செயற்பாடுகளையும் காத்திரமான முறையில் உயர்த்துவதற்கான முயற்சியை எடுப்பதற்கான சந்தர்ப்பமே இப்போது ஏற்பட்டிருக்கின்றது.

இதனை உரிய விதத்தில் பயன்படுத்திக் கொள்வதிலேயே எமது நாட்டிற்கான எதிர்கால பயணம் தங்கியிருக்கின்றது.   உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான தருணம்..!

ரவிரத்னவேல்

Comments