இணக்க அரசியலில் இணைய சிறுபான்மை கட்சிகள் ஆர்வம் | தினகரன் வாரமஞ்சரி

இணக்க அரசியலில் இணைய சிறுபான்மை கட்சிகள் ஆர்வம்

எதிர்காலத்தில் அரசாங்கத்துடன் இணைந்து சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே சரியான தீர்வாக இருக்குமென தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளின் தலைமைகள் பலவும் ஒரு தீர்மானத்திற்கு வந்துள்ளமையை அவர்கள் சார்ந்த கட்சிகளின் தேர்தல்கால பரப்புரைகளில் இருந்து தெளிவாக உணரக்கூடியதாக உள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். இது ஒரு காலத்துக்கேற்ற வரவேற்புக்குரிய ஒரு செயற்பாடாகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இனிவரும் காலங்களிலும் எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பது என்பது எந்தவித பிரயோசனமும் தராத ஒரு விடயம் என்ற முடிவுக்கு வந்துள்ள சிறுபான்மை கட்சிகளின் பெரும்பாலான தலைமைகள் அரசாங்கத்துடன் கைகோர்த்து செயற்படுவதற்கு மறைமுகமாக தமது ஆதரவுக் கரங்களை நீட்டத் தொடங்கியுள்ளன.  

அண்மையில் தேர்தல் பரப்புரைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களான இரா. சம்பந்தன், ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் மற்றும் முன்னாள் நீதியரசர் சி. வி விக்னேஸ்வரன் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ நினைத்தால் சிறுபான்மை மக்களது பல விடயங்களை வென்றெடுக்கலாம் என்று தொனிப்பட உரையாற்றி வருகின்றனர். 

இவர்களது இத்தகைய உரைகளை தமிழ், முஸ்லிம் மக்களும் வரவேற்றுள்ளனர். இன்னும் சில தமிழ் கட்சிகளின் தலைவர்கள் நேரடியாக இல்லாவிடினும் மறைமுகமாக இன்றைய அரசாங்கத்திற்கு தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். 

தேர்தலில் ஆசனங்களைப் பெறுவதற்காக எதிர்ப்பு கோஷ பிரசாரங்களை செய்தாலும் எதிர்காலத்தில் வெற்றிகொண்ட பின்னர் அரசாங்கத்துடன் இணைவதில் இன்று சிறுபான்மை கட்சிகள் மிகவும் ஆர்வமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

தற்போது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் அடுத்து வரும் ஐந்து வருடங்களுக்கு ஆட்சியில் நிலைத்திருக்கும். அதேபோன்று இம்முறை தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஆளும் கட்சியான பொதுஜன பெரமுன பங்காளிக் கட்சிகளின் கூட்டு நிச்சயம் பெற்றுக்கொள்ளும்.

அதனடிப்படையில் எதிர்வரும் பாராளுமன்றமும் அவர்களது ஆட்சியில் இருக்கும்.  

இந்த நிலையில் எதிரணியில் இருந்து எந்த பிரயோசனமும் இருக்காது என்பதனால் ஆளும் கட்சிக்கு இப்போது தமது ஆதரவினை வழங்கி அமைய உள்ள புதிய ஆட்சியில் தாங்களும் பங்காளராக மாறி தமது மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன் அரசியலமைப்பு மாற்றத்திற்கு உதவி செய்து சமாதானம் மிக்க ஒரு நிலைமையை உருவாக்குவதே இந்த சிறுபான்மை கட்சிகளின் பிரதான இலக்காக இருக்கின்றது என்றும் அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

Comments