கசப்பும்... இனிப்பும்.... | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும்... இனிப்பும்....

ஓர் ஆச்சரியமான வேண்டுகோள்! 

கடந்த இரு கிழமைகளிலும் கசப்பையும் இனிப்பையும் சுவைக்கிற அபிமானிகள், “ஒரு கசப்பு போதாது!, ஒரு இனிப்புப் போதாது! இரட்டிப்பாக்குங்கள்!” எனக் கோரிக்கை! 

என்ன இது, எழுத்துக்கு வந்த சோதனை! இனிப்பை இரட்டிப் பார்க்கக் கோரலாம், கசப்பையுமா?  

நல்லது கட்டளைக்கு அடிபணிவு! 

இன்றைக்கு எல்லாத்துறைகளிலும் குறிப்பாக ஊடகங்களிலும் இன,- மத பேதமில்லாமல் அடிபடுகிற ஒரு பெயராக “அலி சப்ரி” என்கிற ஒரு ஜனாதிபதி சட்டத்தரணி ஜொலிக்கிறார். இவர் தேசியப் பட்டியல் வேட்பாளராகவும் ஒரு கட்சியில் உள் வாங்கப்பட்டிருக்கிறார்.  

இதுவரை நானும், என் பேனையும் அறிந்திராத இந்த மனிதனை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அறிய வேண்டி ஏற்படுகிறது.  

அந்த வகையில் என் இல்லத்து ‘நிழல்’, கேபிள் தொ. கா. சேனல்களை அடுத்தடுத்து மானிட்டரில் மாற்றிக் கொண்டிருந்த போது, ஒன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஒரு கூட்டத்தில் இப்படியொரு கருத்து முத்துக்களை சிதறடித்துச் சிந்திக்கச் செய்தார். பக்கச்சார்பின்றி ‘கசப்பை’ விழுங்கி ‘சுகம்’ பெற வழிவகை பார்ப்போம்! 

மூன்று குழுவினர் நாட்டில் உள்ளனர். அவர்களால்தான் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாமல் இருக்கிறது. முதலாம் தரப்பு இரத்தம் சிந்தியேனும் ஈழத்தை பெற்றுக்கொள்ளத் துடிக்கும் டயஸ்போராக்கள். இரண்டாம் தரப்பு, தான் மாத்திரம் தான் சுவர்க்கம் போவோம் எனக் கூறிக்கொண்டு அவர்களது கொள்கைகளை அடுத்தவர்களுக்கு திணிக்க முயற்சிக்கும் சஹ்ரான் போன்ற குழுவினர், மூன்றாம் தரப்பினர்தான் இந்நாட்டிலே அனைவரும் அவர்களுக்கு ஏற்றாற்போல் செயற்படவேண்டும் என நினைக்கும் சிங்கள பௌத்த ஆதிக்கவாத தரப்பினர். அதற்கு விரோதமாகத்தான் நாம் போராடுகின்றோம். அதற்கு எதிராகவே இந்த தரப்பில் நாம் இருந்து செயற்படுகின்றோம். எமது தரப்பிலும் அவ்வாறான குழுவினர் இருக்கத்தான் செய்கின்றனர்.  

அவரது இந்தக் கருத்துக்கள் கசப்புச் சுவையுடன் அபிமானிகளுக்கு அர்ப்பணம்.

கலாநிதி, பேராசிரியர் ஏ.ஜி. ஹுசைன் இஸ்மாயில் மேனாள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர். பின்னர் மலேசிய இஸ்லாமிய அறிவியல் பல்கலைக்கழகம் அவரைத் தத்தெடுத்தது. தற்சமயம் அகில இலங்கைக் கல்வி மாநாட்டு அமைப்பின் தலைவர்.  

இவர் தன் அனுபவங்களை கருத்துக்களை அருமையான கட்டுரையாக ‘விடிவெள்ளி’ இதழுக்கு வழங்கியுள்ளார். 

கசப்பு கசப்பாக பலவற்றைப் பதிந்துள்ள அறிஞர் பெருந்தகையின் பல கசப்புகளில் ஒன்றை விழுங்கினேன். 

“கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் முஸ்லிம்களே இலங்கையின் சனத்தொகை விகிதாசாரத்தைப் பொறுத்தவரை மிக அதிகம். கொழும்பிலும் ஏனைய சில பிரதேசங்களிலும் உள்ள முஸ்லிம்களுள் மிக வறிய மக்களே தொற்றினால் பாதிக்கப்பட்டனர். சிறு அறைகளில் குடிசைகளில் பலர் வாழ்கின்றனர். பிள்ளைகளில் அநேகர் பாடசாலைக் கல்வியை தொடர்வதில்லை. முஸ்லிம் பாடசாலைகளில் போதிய வசதிகளும் இல்லை. அவர்கள் தரக்குறைவான பாடசாலைகளில் கல்வி பயில்கின்றனர். வசதி படைத்தவர்கள் தமது பிள்ளைகளை தரம் வாய்ந்த அரச பாடசாலைக்கும் சர்வதேச பாடசாலைகளுக்கும் அனுப்புகின்றனர். 

“அதே நேரம் கிராமங்களில் பள்ளிவாசல்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. தத்தமது கிராமங்களின் அவல நிலையைக் கண்டும் காணாதது போல் வேறு கிராமங்களுக்கும் வெளியூர்களுக்கும் சென்று மார்க்கப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். முஸ்லிம்களில் பெரும்பான்மையினரிடம் நிலவும் வறுமை, படிப்பின்மை, சுகாதாரம் குறைந்த சூழல், ஒழுக்க விழுமியங்களில் வீழ்ச்சி என்பன எதிர்காலத்தில் இவ்வாறான (கொரோனா) தொற்று வியாதிகள் அதிகம் பரவக்கூடிய ஆபத்தை உருவாக்கும்.” 

கடந்த திங்கட்கிழமை ஓர் ஊடக வைபவத்தில் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி இந்த வாரத்து ‘இனிப்’பாக அபிமானிகளுக்கு வழங்கப்படுகிறது.  

சிங்களத் திரைப்படத்துறையில், திரைக்குப் பின்னால் இருந்தவாறே ஜொலியாய் ஜொலிக்கும் ஒரு தம்பதியின் சந்திப்பில் அது ஏற்பட்டது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினது ஆலோசகர்களுள் ஒருவரும், சிங்களத் திரைப்பட நெறியாளர், திரைக்கதாசிரியர், தொ.கா. நாடகத்துறை வித்தகருமான கலாநிதி சோமரத்ன திஸாநாயக்கவினதும் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக முப்பத்திரண்டு ஆண்டுகளாய் ‘மஹஜன சம்பத’ அதிர்ஷ்ட சீட்டிழுப்பு நிகழ்ச்சியின் “புன்னகை அரசி” (நம்ம கே.ஆர் விஜயா வழி!) திருமதி ரேணுகாவினதும் பேப்பர் நெய் தோசை, உளுந்து வடை, சிவப்பு -, -வெள்ளைச் சட்டினி, கமகம சாம்பார், லட்டு, ரவா, கேசரி சகிதம் நான் இருந்த மேசையின் நாற்காலிகளில் அமர, ஏறிட்டுப்பார்த்த நான், என் இயற்கையான உச்ச குரலில் “ஓ! சுனாமி பீப்பிள்! சுப்பர், சுப்பர் ‘சுனாமி!’ என ஆர்வாரிக்க அதைப்பலர் ரசிக்க, உணவை ருசிப்பதா, உரையாடலை ரசிப்பதா என்றானது! 

இவ்விரு கலைத்துறை இலட்சியத் தம்பதிகளை எம்மவரில் ஓரிருவரே அறிந்திருக்கும் வாய்ப்பு! அவர்களது முதல் படமே ‘சரோஜா’ என்ற தமிழ்ப் பெயரில் தான் வந்தது. டாக்கா (பங்களாதேஷ்) அனைத்துலகத் திரைப்பட விழாவில் விருதைப் பெற்றது என்றெல்லாம் பதித்துக் கொண்டு போனால் பலர் கொட்டாவி விடுவீர்கள்! 

சரி! ‘சுனாமி பீப்பிள்’ என உரக்கக் கூவினேனே, ‘சுப்பர் சுனாமி’ என்றேனே, அதையாவது அறிந்தேயாக வேண்டும்! அதுவும் சுனாமி அனர்த்தத்தை சுப்பர் என்று புகழ்ந்ததற்காக பஸ் பிடித்து  வருவீர்கள், எனக்கு ஒரு வழி பார்க்க!  

இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான அவர்களது திரைப்படப் பெயர்தான், ‘சுனாமி’! இங்கே திரையிட முன்னே, 'DRUK' என்ற அனைத்துலகத் திரைப்படவிழாவில் நான்கு விருதுகளைச் சுவீகரித்த ஒன்று! (சிறந்த திரைப்படம், சிறந்த நெறியாளர், சிறந்த நடிகை, சிறப்பான படப்பிடிப்பு) படத்தின் பல காட்சிகளில் தமிழ் கொஞ்சி  விளையாடியது. நிரஞ்சனி சண்முகராஜா என்ற மலையக மங்கை படம் முழுக்க என் அபிமான தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பையும் மிஞ்சினார். வானொலிக்காரர் ஜே. யோகராஜ், தர்ஷன் தர்மராஜ் மற்றும் சிறு தமிழ்க் கலைஞர்கள் சில நிமிடங்களே வந்தாலும் காட்டினார்கள் திறமையை! 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் உலகின் பல பாகங்களையும் எமது மரகதத் தீவையும் முக்கியமாக தெற்கையும் கிழக்கையும்  புரட்டிப் போட்ட ஆழிப் பேரலைகளின் கோரத் தாண்டவத்தில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவத்தைத் தயாரிக்கத் துணிந்தவர் திருமதி ரேணுகா அம்மையார், அவரே தயாரிப்பு, நிர்வாகி, செயற்பாட்டாளராகவும் மாறி படப்பிடிப்புக் களத்தில் புகுந்து கடமை புரிந்து. படத்தைத் திரையில் காட்டினார்!! 

இத்திரைப்படம் சொல்லும் செய்தி மிகமிக மகிமையானது. இன்றைய மனித சமுதாயத்தினருக்கு முக்கியமானது. 

சிங்களப் பெற்றோருக்குப் பிறந்த சிறுமி, தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்த பிள்ளை, இரண்டும் சுனாமி அனர்த்தத்தில் அகப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக இடம் மாறி வளர்கின்றன. “அப்பா,  அம்மா” என்றழைக்க வேண்டிய குழந்தை, “அப்பச்சி-, அம்மா” என அழைக்கிறது. 

அதே போல், மற்றது (சிங்களப் பிள்ளை) “அப்பா, அம்மா” எனச் சொல்லி அழைக்கிறது! “எல்லாம் ஒரே அர்த்தம் தானே?” என்றும் வினவுகின்றன. 

ஓர் உண்மைச் சம்பவம் படச்சுருளாகி பல நாடுகளில் திரையிடப்பட்டு பரிசுகள் பெற்று கடைசியில் இவ்வாண்டு ஆரம்பத்தில் இங்கும் காட்டப்பட்டது. 

சிங்கள ரசிகர்கள் விக்கித்துப் போனார்கள். வியர்க்க விறுவிறுக்க ‘ஏசி’ தியேட்டர்களிலிருந்து வெளியில் வந்தார்கள்.  ஆனால், தமிழ் பேசும் ரசிக கோடிகள் ஆசைக்கும் தியேட்டர் வாயிலை மிதித்தார்களில்லை! 

உங்களையே நீங்கள் கேட்டுக் கொண்டால் “பார்க்கத் தவறிய ஒருவருள் ஒருவரே!   போகட்டும் எதிர்வரும் மாதங்களில் தமிழ் பேசும் இரு இன ரசிகர்களையும் பார்க்க வைக்கும் பல முயற்சிகளை எடுக்கும் தகவலை இரு கலை உள்ளங்களும் எனக்குப் பிரத்தியேகமாகத் தெரிவித்து ‘இனிப்புச் செய்தி’யாகப் போடுங்கள் என்றார்கள். இதோ.... போட்டு விட்டேன்.  இருந்தாலும் என்ன, ரஜினி, விஜய், சூர்யா, அஜித் போன்றோர் படங்களுக்குத் தவமாய்த் தவமிருக்கும் நம்ம தமிழ்த் திரையரங்கு உரிமையாளர்கள் மனம் இறங்கி தியேட்டர்களை வழங்குவார்களா? “ஒரு பெரும் செய்தி” தமிழ் பேசும் சமூகத்திற்குச் சென்றடைய வழி சமைப்பார்களா? சந்தேகம்!?

Comments