வைரஸ் போர் | தினகரன் வாரமஞ்சரி

வைரஸ் போர்

மேரி இளம் வயதிலேயே யுத்தத்தின்போது தனது உறவுகளை இழந்ததால் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி கொழும்பில் உள்ள தனது மாமாவின் உதவியுடன் கல்வி கற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தொற்று நோய்ப் பிரிவில் தாதியாக பணியாற்றுகிறாள். அவள்  தொற்று நோய்ப் பிரிவில் பணிபுரிவதை நினைத்து சற்றும் கவலைப்பட்டதில்லை. துணிச்சல் மிக்க பெண். அவள் தாதியாக பணிபுரிவது அவளுக்கு கர்வமாகவே இருந்தது. உறவினர்களை இழந்த சோகம், அனுபவித்த தனிமை காரணமாக அவள் வீட்டில் இருந்ததைவிட வைத்தியசாலையில் இருந்ததே அதிகம். தொற்று நோயாளர்கள் அனைவரையும் இவள் தனது சொந்தங்களாக்கிக் கொண்டு அவர்களோடு அன்பாகப் பழகுவாள். தனக்கு தொற்று ஏற்பட்டுவிடுமென்று ஒருபோதும் தயங்கியதில்லை.

இவளோடு ஏனைய பிரிவுகளில் பணி புரியும் தாதியர் மேரியின் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லை என்று அவளை நகைச்சுவையாகப் பேசுவதும் உண்டு. மேரியும் அவளது தாதியர் நண்பிகளான அபியும், யூலியும் காலை மற்றும் மதிய உணவை ஒன்றாக வைத்தியசாலைக் கென்ரீனில் உண்பது வழக்கம். காலை உணவு உண்ணும் நேரம் வந்தாலும் மேரி குறித்த நேரத்திற்கு கென்ரீனுக்கு வருவதில்லை. அபியும், யூலியும் கென்ரீன் வந்துவிட்டனர். “எங்க மேரியை இன்னும் காணல்ல”. “உனக்குத் தெரியாதா அவள, விறேக்பெஸ்ட் ரைமில எந்த பேசண்டுக்கு றீட்மெண்ட் செய்றாளோ?” என்றாள் அபி. “அவளப் பாத்திருந்தா கொண்டு வந்த இடியப்பத்த சாப்பிடாமல்தான் இருக்கோணும்” என்றாள் யூலி. “அவள விட்டுத்து சாப்பிட்டாலும் மூஞ்ச தூக்கி வச்சித்து இருப்பாள்” என முணுமுணுத்தபடியே இருந்தாள் அபி.

“அபி மேரி வாறாள் திரும்பிப் பாரு”. “ஆ மேரி கம் உன்னப்பத்தித்தான் இப்ப கதச்சிக்கொண்டு இருக்கிறம், உனக்கு நூறு ஆயுள்”. “எனக்குத் தெரியுமே நீ என்ன பேசியிருப்பா எண்டு”. “தெரியுது தானே ஏன் ஒவ்வொரு நாளும் லேற், உனக்கு விறேக் பெஸ்ட், லஞ்செல்லாம் தேவல்ல பேசண்டுக்கு குடுக்குற ரேபிளட்ட, மருந்தக் குடிச்சித்து அங்கேயே ஒரு வெட்டில தூங்கி எழும்பித்து அங்கேயே இருக்கலாம்”. என கோபமாகப் பேசினாள் அபி. “நீ வேல செய்யுறதே தொற்று நோய்ப் பிரிவு ரைமுக்குச் சாப்பிட்டாத்தானே நோயெல்லாம் எதிர்க்க முடியும் You have to take good food” என்றாள் யூலி”. “sorry. sorry. நானும் எவளவோ றை பண்ணினன் வெள்ளனே வருவம் எண்டு முடியல ok ok கூலா ஏதாச்சும் அபிக்கும், யூலிக்கும் ஓடர் பண்ணுறனே”.  “இப்படியே சொல்லிச் சொல்லி சமாளிக்க உன்னை விட ஆருமேயில்ல”. மேரி அபியையும், யூலியையும் சமாளித்துக் கொண்டு காலை உணவை அவர்களோடு உண்டு விட்டு “லஞ்சிக்கு மீற் பண்ணுவம்” எனக்கூறி வாட்டிற்குச் சென்றாள்.

அன்று நான்கு வயதுச் சிறுமியான சனு என்பவள் சின்னமுத்து அம்மை நோயினால் பீடிக்கப்பட்டு உடல் முழுவதும் நீர்ப் பொக்களங்களாக தொற்று நோய்ப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாள். அவளைக் கவனிப்பதற்காக அவளது அம்மா சங்கரியும் வைத்தியசாலையில் தங்கினாள். சனுவிற்கு றீட்மெண்ட் செய்வதற்கு டொக்டரும் மேரியும் வந்தார்கள். சனுவின் உடலில் இருந்த நீர்ப் பொக்களங்கள் வெடிப்புற்று உடல் முழுவதும் புண்ணாகக் காணப்பட்டதைப் பார்த்து மேரி மனம் வருந்தினாள். உடலில் உள்ள புண்களினால் வலி தாங்க முடியாமல் சனு அழுதாள். அதைக் கண்டு சங்கரியும் அழுதாள். சங்கரியை வெளியே செல்லுமாறு மேரி கூறினாள். சங்கரி வெளியே சென்றதும் டொக்டர் சனுவின் வலியை மறைக்க ஊசியேற்றினார். சனுவும் சற்று மயக்கமாகக் காணப்பட்டாள்.  வெளியில் வந்த மேரி சங்கரியிடம் “டோண்ட் வொறி அது சுகமாயிரும்” எனக் கூறிச் சென்றாள்.

சனுவிற்கு மயக்கம் தெளிந்ததும் மருந்தைக் கொடுப்பதற்காக அவளுக்கு உணவு ஊட்டினாள் சங்கரி. ஆனால் அவள் அதை உண்பதாக இல்லை. இதைக் கண்ட மேரி சங்கரியிடம் இருந்து உணவைப் பெற்றுக்கொண்டு “இங்க பாருங்க வேவி நீங்க இந்த இடியப்பத்த சாப்பிட்டாத்தான் ரேபிளட் போடலாம், நாங்க ஊசி போடலாம், அப்பதானே நீங்க குயிக்கா கிளியறாகி உங்க வீட்ட போகலாம், விளையாடலாம்” எனக் கூறியதைக் கேட்ட சனு இடியப்பத்தை உண்ணத் தொடங்கினாள். நைற் டியூட்டிக்கு மேரி வந்ததும் சனு “மேரி மிஸ் நான் ரேபிளட் சாப்பிட்டன்”. “Good girl”. அன்றிலிருந்து சனுவிற்கு மேரியுடன் ஒரு வித அன்பு ஏற்பட்டது. சனுவின் நோயும் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. சனுவை வீட்டிற்கு அனுப்புமாறு டொக்டர் கூறியதும் சனுவிற்கு ஒரே அழுகை. சனுவைப் பிரிவதற்கு மேரிக்கும் கஸ்டமாக இருந்தது.

“மேரி மிஸ் நீங்க வீட்ட வருவிங்களா?”. “ஓடாச் செல்லம் மிஸ் கண்டிப்பாக வருவன் நீங்க மறக்காம மருந்து சாப்பிடனும்.” சங்கரியும் சனுவும் வாட்டை விட்டு வெளியேறினர். மேரி ஏனைய பேசண்டை பார்வையிடச் சென்றாள். மறுநாள் காலையுணவிற்கு காலம் தாழ்த்திச் சென்ற மேரி யூலியினதும், அபியினதும் பேச்சுக்களைப் பெற்றுக்கொண்டு எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தாள். “என்ன இண்டைக்கு மேடம் பேசாம இருக்கிறாவு எங்கள கூல் பண்ணுறல்லயா?”. “இல்ல பிரண்ஸ் என்ர வாட்டுல சனு எண்ட பிள்ள அட்மிட்டானது. இவ்வளவு நாளும் நிறைய Children க்கு றீட்மெண்ட் பாத்திருக்கன். ஆனால் இந்தப் பிள்ள என்ன வீட்டிற்கு வா எண்டு சொல்லி என்னோட நல்ல குளோஸ். ருடே அவங்கட அம்மா கோல் பண்ணி சொல்லுறாங்க சனு சாப்பிடுறாளில்ல ரேபிளட் போட அடம்பிடிக்கிறாள். உங்களப் பாக்கனும் எண்டு சொல்லுறாள். ரைம் இருந்தா வீட்ட வந்துத்துப் போங்க மிஸ் எண்டு சொல்லுறா?, நான் என்ன செய்யிறது”. “இந்தச் செய்தி நாங்களும் கேள்விப்பட்டம் ரெண்டுபேரும் மாறி மாறி அழுததில வாட்டே குளமாகித்தாமே” என கிண்டலாகப் பேசினாள் யூலி. “ஏன் இப்ப அவள நக்கல் செய்ரா”. என்றாள் அபி. “sorry மேரி உனக்கு விருப்பமண்டா ஈவினிங் போய்ப் பாரன் உனக்கும் ஒரு றிலாக்ஸான மாதிரி இருக்கும்”. “ok” எனக் கூறி விட்டு அவர்களோடு உணவை உண்டு விட்டு மீண்டும் வாட்டிற்குத் திரும்பினாள்.

ஈவினிங் சனுவைப் பார்க்கச் சென்றாள் மேரி. சனுவிற்கு சப்பிறைஸாக இருந்தது. மேரியைப் பார்த்ததும் “வட்ட சப்பிறைஸ் மிஸ்” எனக் கூறிக்கொண்டு மேரியின் கைகளைப் பிடித்து வீட்டினுள் அழைத்து வந்தாள். சில மணி நேரங்கள் சனுவோடும், சங்கரியோடும் உரையாடி விட்டு போகும் போது சனுவிடம் “நீங்க ராபிளட் சாப்பிடனும், இல்ல மிஸ் உங்கட வீட்டிற்கு வரமாட்டன்”. “ok மிஸ் சனு சாப்பிடுவாள்” என தன்னைத் தானே சனு கூறிக்கொண்டாள். அவள் கதைக்கும் மழலை மொழி மேரிக்கு மிகவும் பிடித்திருந்தது. இது வரையும் மேரி சனுவின் அப்பா பற்றிய விபரம் அறிந்திருக்கவில்லை. வாட்டிற்குச் சென்றதும் நோயாளர்களோடு அன்பாகப் பேசினாள். சில தினங்கள் கடந்தன. சங்கரி மேரியை தொலைபேசியில் அழைத்தாள். சனு கதைக்கப் போவதாகக் கூறினாள். “மிஸ் நாளைக்கு நாங்க உங்கட வீட்ட வரட்டுமா எங்கட அப்பா சுவிஸில இருந்து நேற்றுத்தான் வந்தவரு, நான் உங்களப் பத்தி எங்கட அப்பாக்கிட்டச் சொன்னனான் அதனால நாங்க எல்லாரும் உங்கட வீட்ட வரப்போறம்”. “வேவி மிஸ் ருமாறோ டியூட்டில நிப்பன், நீங்க நாளைக்கு வாறீங்களா?, please. “சனு உங்களோட கோபம்”. “அண்டஸ்ராண்ட் வேவி” “ok ok ருமாறோ ஏமாத்தக் கூடாது”. “கண்டிப்பா மிஸ் ஏமாத்த மாட்டன் buy”.

மேரியைப் பார்ப்பதற்காக சனுவும் அவளுடைய அம்மாவும், சுவிஸில் இருந்து வந்த அப்பாவும் வந்தனர். வீட்டிற்கு வந்ததும் சனு மேரியை தனது அப்பாவிடம் அறிமுகப்படுத்தினாள். இருவரும் ஒருவரை ஒருவர் கை குலுக்கிக் கொண்டனர். “ஒரே வைரஸிக்கு எதிரான பேராத்தான் இருக்கும் போல” என்றான். “ஓ வைரஸப் பாத்துப் பாத்துப் பழகிற்று அதனால எனக்கு அதக் கண்டு பயமில்ல”.

“சனுவ மிஸ் மட்டும் கவனிக்கலண்டா இப்ப இவள் இப்பிடி இருக்கமாட்டா” என்றாள் சங்கரி. “தங்ஸ் மிஸ் இவளக் கவனிச்சிக்கிட்டதுக்கு” என்றார் சனுவின் தந்தை. “அத விடுங்க அது என்ர கடம” எனக்கூறி மூவரும் ரீ குடித்து விட்டு இனிப்புக்களையும் உண்டு விட்டு இரவு ஏழு மணிக்கு மேரியின் வீட்டை விட்டு வெளியேறினர். ஆனால் அன்றிலிருந்தே இலங்கையில் வைரசுக்கு எதிரான போர் ஆரம்பமாகி விட்டது என்பது அவளுக்குப் புரியவில்லை.

மறுநாள் மேரி வைத்தியசாலைக்குச் சென்றதும் ஒரே பரபரப்பாக இருந்தது. சீனாவில் கொரோனா எனும் வைரஸ் தாக்கியதாகவும் அது ஏனைய நாடுகளையும் ஆக்கிரமித்து விட்டதாகவும் இலங்கையிலும் பரவும் அபாயம் இருப்பதாகக் கூறி இன்றிலிருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மீடியாக்கள் ஒலி, ஒளி பரப்பிக் கொண்டிருந்தன. திடீரென்று அன்றிலிருந்து இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது ஒரு தொற்று நோய் என்பதால் வைத்தியர்கள், தாதியர்கள் இணைந்து விசேட கூட்டம் ஒன்றை வைத்தியசாலையில் ஏற்படுத்தினர். அதில் பிரதானமாக மேரியும் இருந்தாள். இத்தொற்று பரவும் அறிகுறிகளும் சமூக இடைவெளிகளைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் பற்றி டொக்டர் பிரியங்கே தெளிவுபடுத்தினார். மற்றுமொரு டொக்டர் “சீனாவில் நிறையப் பேர் இறந்திரிக்கிறாங்க இப்பதான் இது கொரோனா எனப்படும் வைரஸ் தாக்கம்; என கண்டுபிடிச்சிரிக்காங்க, உலக சுகாதாரத் திணைக்களம் மக்கள் எப்பிடி இதிலிருந்து தங்கள பாதுகாத்துக் கொள்ளனும் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கு காய்ச்சலாக அட்மிட்டாகினா கடுமையாக செக் பண்ணுங்க, அதற்குரிய பாதுகாப்பு முகக் கவசம், கையுறைகளை அணிந்து முதலில நம்மள நாமே பாதுகாக்க வேணும்”.எனக் கூறினார். “எந்த வைரஸ் தொற்றாயிருந்தா எனக்குப் பரவால்ல அத எதுக்கிறத்துக்கு இன்னும் சக்திய வளக்க வேண்டியது தான்”. என நினைத்துக்கொண்டு கூட்டத்தை நிறைவு செய்து வாட்டினுள் சென்றாள் மேரி.

திடீரென்று ஒரு சிறுமி கடும் காய்ச்சலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். இச்சிறுமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் PCR பரிசோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் நினைத்ததைப்போன்று அவளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அச்சிறுமியைப் பார்வையிடச் சென்றாள் மேரி. அவள் வேறு யாருமில்லை சனுதான். மேரிக்கு தன்னை நினைப்பதைவிட தன்னோடு தொடர்புகளை ஏற்படுத்தியவர்களையே நினைத்து கவலையுற்றாள். வைத்தியர்கள் மேரியின் குடும்பத்தினர் அவர்களோடு தொடர்புகளைப் பேணியவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்தியது. மேரியும் தானும் சனுவோடு தொடர்புகளைப் பேணியதாக் கூறி தனக்கும் PCR  பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கூறினாள். அவளோடு ஒட்டுமொத்த வைத்தியர்கள் மற்றும் தாதியர்களும் கூட்டத்தில் பங்கு பற்றியதால் அவர்களும் PCR  பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியிருந்தது. அது மட்டுமல்லாது மேரியின் வாட்டிலுள்ள பேசண்டுகளும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவேண்டிய தேவை இருந்தது.

இதை விரும்பாத சில தாதியர்கள் “உன்னாலதான் இந்த வைரஸ் கொஸ்பிற்றலுக்கு வந்தது, உன்னோட பழகினத்த”. மற்றுமொரு தாதி  பேசண்டோட எப்பிடி பழகணும் எண்டு தெரியாது, குடும்பம் ஒண்டு இருந்தாத்தானே அதுகள் விளங்கும்” என அவளது மனதைப் புண்படுத்தினாள். இதைக் கேட்டுக்கொண்டிருந்த மேரியின் நண்பிகள் அதற்கு ஒத்திசைப்பது போல் நின்றனர். பின்னர் பலரும் மேரியைப் பேசத் தொடங்கினர். பேச்சு அதிகமாகி அவர்களுக்குள்ளே சண்டை ஏற்பட்டது. ஒரு தாதியர் மற்றொரு தாதியரை அங்கு இருந்த கத்தியால் தாக்கினார். இரத்தம் சிந்துவதைக் கண்ட டொக்டர் பிரியங்கே “stop it நீங்க எல்லாம் டொக்டரா, நேசா இல்ல றோட்டுல குடிச்சித்து அலையுற குடிகாறாக்களா? மேரிக்குத் தெரியுமா அவங்களுக்கு கொரோனா இருக்கண்டு சுவிஸில இருந்து வந்தத்தாலதான் அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கு கொரோனா வந்து சாகிறத்துக்கிடயில நீங்க ஒருத்தர ஒருத்தர் வெட்டித்துச் செத்திருவிங்க போலயிருக்கு PCR பரிசோதனைக்கு நீங்களே கோப்றேற் பண்ணல்லண்டா பொதுமக்கள் எப்பிடி கோப்றேற் பண்ணுவாங்க, நீங்க கோப்றேற் பண்ணாட்டிப் பிரச்சனல்ல I will call police ok”. இதைக் கேட்டதும் அனைவரும் PCR பரிசோதனைக்கு தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்.

PCR  பரிசோதனைகளும் இடம்பெற்று முடிவுகள் பெறப்பட்டபோது மேரிக்கும் ஏனையவர்களுக்கும் கொரோனாத் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. தங்களுக்கு கொரோனாத் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டதும் மேரியிடம் “  sorry” மேரி என அபியும், யூலியும் கூறினர். ஏனையோரும் தங்களை மன்னிக்குமாறு மேரியிடம் கேட்டனர். அதற்கு மேரி “Its ok எண்ட பிரண்ஸ்சே எனக்கு ஆறுதல் சொல்லல்ல, அவங்கள விட நீங்க OK, இது உங்களுக்கும் எனக்கும் இடையில நடக்கிற போராட்டம் இல்ல, நாட்டில நடக்கிற வைரசுக் கெதிரான போராட்டம் டொக்டருக்கும், நேசுக்கும், இராணுவத்தினருக்கும் இதில பெரிய கடம இருக்கி, எதிரி எல்லா இடமும் பரவியிருக்கு, உங்க வீட்டிலயும் இருக்கலாம், அவங்களயும் வார்த்தைகளால நோகடிக்காதங்க அவங்களுக்கு ஆறுதலா இருங்க, ok 21 நாளைக்குப் பிறகு சந்திப்பம்” எனக் கூறி தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டாள் மேரி. 21 நாட்கள் கடந்ததும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. மேரி தன்னுடைய பாதுகாப்பையும் பொருட்படுத்தாது நோயாளர்களை கவனித்து வந்தாள். ஏனைய டொக்டஸ் மற்றும் நேஸ் தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் வழங்கினர். கொரோனாத் தொற்றாளர்களும் சுகமடையத் தொடங்கினர். ஒரு நாட்டில் எத்தகைய போர் இடம்பெறுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ற விதத்தில் ஒற்றுமையாகச் செயற்படும்போது அதனை வெற்றி கொள்ளலாம். டொக்டர்ஸ், நேஸ், இராணுவத்தினர் மாத்திரமல்ல மக்களும் இதனை கவனத்திற்கொள்ள வேண்டும் என்பதே மேரியின் அவாவாக இருந்நது. 

சிவராசா ஓசாநிதி - சித்தாண்டி

Comments