தூரநோக்குடன் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் இ.தொ.கா | தினகரன் வாரமஞ்சரி

தூரநோக்குடன் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் இ.தொ.கா

1939 ஆம் ஆண்டு நமது நாட்டிற்கு விஜயம் செய்த பாரத நாட்டின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான நட்பு பாலமாக இலங்கை இந்திய காங்கிரசை உருவாக்கினார். அந்த அமைப்பிலிருந்து மர்ஹூம் ஏ. அஸீஸ் வெளியேற சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் இ.தொ.கா உருவானது.  

இ.தொ.காவை தென் கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய தொழிற்சங்கமாக மாற்றிய பெருமை அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானை சார்ந்தது என்றால் மிகையாகாது. அக்காலகட்டத்தில் இ.தொ.சார்பில் பத்து அங்கத்தவர்களை தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பும் விதத்தில் அரசியல் தொழிற்சங்க ரீதியாக பலம் வாய்ந்த அமைப்பாக உருவாக்கினார்.  

சௌமியமூர்த்தி தொண்டமானின் இறுதி காலத்தில் அவர் தனது மகன் வழி பேரனான ஆறுமுகன் தொண்டமானை இ.தொ.கா.வில் உள்வாங்கி அவரை தொழிற் சங்க ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் செயல்பட வைத்தார். சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவின் பின்னர் இ.தொ.காவின் பொதுச் செயலாளர், தலைவர் என பதவிகளை வகித்த ஆறுமுகன் தொண்டமான் சௌமியமூர்த்தியைப் போன்றே அஞ்சா நெஞ்சத்துடன் பெரும்பான்மை சமூகத்தினரும் வியக்கத்தக்க விதத்தில் துணிச்சலுடன் செயல்பட்டார்.  

ஆறுமுகன் தொண்டமானும் தனக்கு பின்பு இலங்கை தொழிலாளர் காங்கிரசை வழிநடாத்தும் நோக்கத்துடன் அவரின் மகன் ஜீவன் தொண்டமானை இளைஞர் அணித் தலைவராகவும் உதவி பொதுச் செயலாளராகவும் செயல்பட வைத்தார்.  

ஆறுமுகன் தொண்டமான் மறைவின் பின் மலையகம் தமக்கென ஒரு தலைவன் இல்லாத சோகத்தில் ஆழ்ந்து தவிக்கிறது. அன்னாரது இறுதிக்கிரியைகளின்போது உரையாற்றிய அவரின் புதல்வன் ஜீவன் தொண்டமான் சூழ்ந்துள்ள இருள் அகலும், சேவல் கூறும், வழமையாக உதிப்பது போன்று சூரியன் உதிக்கும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழியாது. அழிந்து விட்டதாக நினைக்கக் கூடாது எனக் குறிப்பிட்டார்.   ஏறத்தாழ எண்பத்தொரு வருடங்களாக இந்திய வம்சாவளி தமிழர்களின் குரல்களாக ஒலித்த இ.தொ.காவின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் தனது தந்தை வழியில் சென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸை வழிநடத்துவார் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.  

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை தொழிற்சங்க ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு தொழிற்சங்க, அரசியல் ரீதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அனுபவம் வாய்ந்த மூத்த உறுப்பினர்கள், கல்வி மான்கள், அனுபவம் வாய்ந்தவர்கள் புதிதாக தெரிவு செய்யப்படவுள்ள தலைவருக்கு ஆலோசனைகள் வழங்கினால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதன் அழியாப் புகழை தொடர்ந்து தொழிற்சங்க ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.  

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் சம்பந்தமாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை கூட்டு உடன்படிக்கையில் கையொப்பம் இடும் மூன்று தோட்டத் தொழிற்சங்கங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் ஒன்று.

எனவே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பொதுச் செயலாளர் தோட்டத் தொழிலாளர்களின் பொதுவான பிரச்சினைகளுக்கும் அரசியல் ரீதியிலான பிரச்சினைகளை இனம் கண்டு அவற்றை உரிய தரப்பினருடன் முன் வைத்து உரிய தீர்வுகளை காணவேண்டும்.  

இந்த நாட்டின் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தூர நோக்குடன் செயல்பட வேண்டியமை காலத்தின் கட்டாயத் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. 

சி.ப.சீலன்

Comments