பதுளை தோட்டங்களில் நிகழும் தரிசு காணி அபகரிப்பு | தினகரன் வாரமஞ்சரி

பதுளை தோட்டங்களில் நிகழும் தரிசு காணி அபகரிப்பு

கொவிட் 19  தொற்று காரணமாக  மக்களின் அன்றாட வாழ்க்கை முறை, தொழில், கல்வி என அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையில் பொருளாதார ரீதியான நெருக்கடி அதிகரித்து வருவதை காணமுடிகின்றது. புதிதாக பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளின் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டு இருக்கின்றது. 

எனினும் தொழிலாளர்களின் வேதனத்தில் அதிகரிப்பு ஏற்படாததால்  அவர்கள் அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட காலத்தில் நாடு ஊரடங்கு உத்தரவால் முடக்கப்பட்டிருந்தது. தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரம் தொழிலுக்கு சென்று உழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 

ஏனைய தொழிற்துறைகள் முடக்கப்பட்டதால், வீடுகளுக்குள் முடங்கிய மலையக இளைஞர், யுவதிகளும் ஏனையோரும் விவசாய நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டினர். சிலர் தங்கள் வீட்டு தோட்டங்களையும், சிலர்  ஏற்கனவே விவசாயம் செய்து கைவிடப்பட்ட நிலங்களையும்,  தரிசு நிலங்களையும் விவசாயத்திற்காகப் பயன்படுத்தினர். மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் கூட மத்திய மாகாணத் தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களை விவசாய நடவடிக்கைகளுக்காக பெற்று கொடுக்க கம்பனி நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முனைப்புடன் செயற்பட்டிருந்தார். 

பதுளை மாவட்டத்தில் பெருந்தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களிலும் தோட்ட நிர்வாகங்களின் இடையூறுகளுக்கு மத்தியில் பயிர்செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இவ்வாறான சூழ்நிலையில் அண்மைக்காலமாக தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களை வெளியார் அத்துமீறி கைப்பற்றுவது பரவலாக அதிகரித்து வருகின்றது. இதன்போது தொழிலாளர்களுக்கும், அத்துமீறும் தரப்பினருக்குமிடையில் கைகலப்புகள் ஏற்பட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 

புவியியல்சார் அமைவிடத்தின் தன்மை காரணமாக பதுளை மாவட்டத்தில் பெருந்தோட்டங்களும், கிராமங்களும் அருகருகே காணப்படுகின்றன. இதன் காரணமாக அடிக்கடி தோட்ட நிலங்களும், தேயிலை மலைகளும் வெளியாரின் அத்துமீறலுக்கும், அபகரிப்பிற்கும் உட்பட்டு வருகின்றன. இச்செயற்பாடுகள் 1990 காலப்பகுதியில் இருந்தே அதிகரித்து காணப்படுவதாக துறைசார் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மத்திய மாகாணத்தை விட ஊவா மாகாணத்தில் இவ்வாறான ஆக்கிரமிப்புகள் தோட்ட நிலங்களை மையமாகக் கொண்டு அதிகரிக்க புவியியல் அமைப்பே காரணமாகும். தரிசு நிலங்களை மலையக மக்களுக்கு விவசாய நடவடிக்கைகளுக்கு பிரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென   முன்னைய ஜனாதிபதி பதவிக்காலத்தில் வாக்குறுதியளித்த தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியில் இருக்கும்போது, கொரோனா வைரஸ் தாக்கத்தில் நாடு கட்டுண்டு இருக்கையில் பதுளை மாவட்ட தோட்ட தரிசு நிலங்கள் பெருவாரியாக பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த கிராம மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இச்சூழ்நிலையில் எவரும் எதிர்பாராத வேளையில் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவது, மலையக மக்களை சிந்திக்க வைத்துள்ளதுடன் ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் தோட்டத் தரிசுநில ஆக்கிரமிப்பு தொடர்பாக பதுளை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளும், தொழிற்சங்க தலைவர்களும் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்களென  கேட்டபோது தெரிவித்த கருத்துக்கள் இங்கு தொகுத்து தரப்படுகின்றன.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், 

நான் அரசியலில் இருக்கும் வரை தோட்டங்களில் உள்ள ஒரு சாண் நிலத்தையேனும் வெளியாருக்கு தாரை வார்க்க இடமளிக்கப் போவதில்லை. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களுக்கு நான் நேரடியாக சென்று மக்களோடு மக்களாக போராடி காணி ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தினேன். பதுளை மாவட்டத்தில் இச்செயற்பாடு பரவலாக இடம்பெறுவதன் பின்னணியில் அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதாக  சந்தேகிக்கின்றேன். தரிசு நிலங்களை பயனுள்ள வகையில் தேயிலை செய்கைக்காகவும், தொழிலாளர்களின் விவசாய நடவடிக்கைக்காகவும் பயன்படுத்த அனுமதியளிக்க தோட்ட நிர்வாகங்கள் முன்வர வேண்டும். இதற்கு தேவையான அழுத்தங்களை நாம் தோட்ட நிர்வாகங்களுக்கு கொடுப்போம் என்றார். 

முன்னாள் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த்குமார்

 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோடு தொடர்புடைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்  பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பெரும்பான்மை சமூகத்தினரிடம் எமது காணி நிலம், எங்களுடைய நாடு போன்ற ஆதிக்க உணர்வு இயல்பாகவே ஏற்பட்டு விடுகின்றது. அண்மையில் இடம்பெற்ற காணி ஆக்கிரமிப்பு சம்பவங்களை நோக்கும்போது ஒரு பின்புல சக்தியின் தூண்டுதலின் பேரில் இச்செயற்பாடுகள் நடைபெறுவதாக எண்ணத் தோன்றுகிறது. ஆக்கிரமிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் வன்முறையில் ஈடுபட்டு தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முயல்வதை எல்ல பிரதேசத்தின் எல்லவத்தை தோட்டத்தில் பெண் தொழிலாளி மீது இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் உணர்த்துகின்றது.

மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் காணி ஆக்கிரமிப்பு சம்பவங்களில் நாம் தலையீடு செய்யும்போது ஆக்கிரமிப்பு தற்காலிகமாக கைவிடப்படுகின்றது. மீண்டும் இப்பிரச்சினை காலதாமதமாக தலைதூக்குகின்றது. தரிசு நிலங்களை முறையாக பயன்படுத்தும் பொறிமுறையை தோட்ட நிர்வாகங்கள் வகுக்காத வரை இப்பிரச்சினை தோட்டங்களில் தொடர் கதையாக இருக்கும் என்றார்.

விவசாயத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆர்.எம். கிருஸ்ணசாமி கருத்து தெரிவிக்கையில், தோட்ட நிர்வாகங்கள்    தோட்டங்களிலுள்ள  சிறிய நிலப்பரப்பை கையகப்படுத்தி வீடமைப்பு அல்லது விவசாயம் செய்ய முயன்றால் உடனடியாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வேலையை நிறுத்தி விடுகின்றன. 

தவிர சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலமை ரோபேரி, கனவரல்ல உட்பட பல தோட்டங்களில் காணப்படுகின்றன. தொழிலாளர்கள் நூற்றாண்டுகளுக்கு மேலாக பரம்பரையாக பயிர் செய்த காணிகளை கூட தோட்ட நிர்வாகங்கள் சட்ட அழுத்தங்களை பிரயோகித்து கையகப்படுத்துகின்றன. பயிர்ச்செய்கை நிலங்களில் கல் வேலி அமைக்கவோ, தரிசு நிலங்களில் விவசாயம் செய்யவோ தோட்ட நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை. மாறாக தொழிலாளர்களினதும் அவர்களது குடும்பத்தினரதும் வேலையை நிறுத்தி அவர்கள் மீது பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து அடிபணிய வைக்கின்றனர். இதற்கு தோட்டங்களில் உள்ள சில எதிர் தொழிற்சங்க உறுப்பினர்கள் துணைபோவது கவலைக்குரிய விடயமாகும். 

முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் ருத்திரதீபன்  கருத்து   தெரிவிக்கையில்,  கம்பனி நிர்வாகங்களின் அசமந்த போக்கு காரணமாக தரிசு நிலங்கள் வெளியாரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. தோட்டங்களில் உள்ள நிலங்களில் பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபடும் போதும், தமது குடியிருப்புகளை விஸ்தரிக்கும்போதும் தோட்ட நிர்வாகங்களினால் தொழில் இழப்பு குடும்ப உறுப்பினர்களின் தொழில் பறிப்பு, பொலிஸ் முறைப்பாடு மற்றும் தொழில் நீதிமன்ற வழக்கு என நான்கு வகையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த நடைமுறை தோட்டங்களில் தொடர்வதால் தொழிலாளர்கள் தமது குடியிருப்பு சார்ந்த பகுதியை மாத்திரம் தக்கவைத்து கொண்டு வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  

இதனால் தரிசு நிலங்கள் தோட்டங்களில் அதிகரித்து வருவதுடன் வெளியார் ஆக்கிரமிப்பிற்கும் சாதகமாகியுள்ளது. தரிசு நிலங்களை பயனுள்ள வகையில் தோட்ட நிர்வாகங்கள் பயன்படுத்த தேவையான அழுத்தத்தை தொழிற்சங்கங்கள் வழங்க வேண்டும் என்றார்.

பதுளை மாவட்ட முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சென்னன்  கூறுகையில்,  காணி ஆக்கிரமிப்பு கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்றது. நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது ஹாலி எல, உனுகொல்ல பகுதியில் இவ்வாறு காணி ஆக்கிரமிப்பு இடம்பெற்றபோது தலையிட்டு அதை தடுத்து நிறுத்தினேன். எனினும் இப்பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக உள்ள காரணத்தினால் இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று தரிசு நிலங்களை தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுப்போம் என்றார். 

பதுளை மாவட்டத்தில் உள்ள தோட்டங்களில் பல ஏக்கர் காணிகள் தரிசு நிலங்களாக காணப்படுகின்றன. தேயிலை செய்கை வலுவிழந்துபோன இவ்வாறான காணிகள் தரிசாக மட்டுமன்றி பற்றைக் காடுகளும் அதிகரித்துள்ளன. 

கம்பனி நிர்வாகங்கள் இலாபத்தை மட்டும் நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றன. புதிய தேயிலை கன்றுகளை நடவோ,  மாற்று பயிர்ச்செய்கைகளை தோட்டங்களில் மேற்கொள்ளவோ பெரும்பாலான கம்பனிகள் ஆர்வம் காட்டவில்லை. அப்புகஸ்தென்ன கம்பனியின் கீழ் இயங்கும் டெமேரியா தோட்டம் போன்றவற்றில் மிளகு, கருவா, வாழை போன்ற மாற்று பயிர்கள் செய்கைப் பண்ணப்படுகின்றன. சில தோட்டங்கள் இறப்பர் செய்கையில் ஆர்வம் காட்டி வருகின்றன. அதிகமான இறப்பர் தோட்டங்கள் பற்றைக் காடுகளாகவே காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக தரிசு நிலங்களின் பரப்பு தோட்டங்களில் கூடிக்கொண்டே செல்கின்றது. அதிகமான தொழிலாளர்கள் தேயிலை தொழிற்றுறையை விட்டு வெளியேறி வேறு தொழில்களுக்கு சென்றுள்ளனர். இச் செயற்பாட்டால் தோட்டங்களின் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இருக்கின்ற குறைந்த தொழிலாளர்களை வைத்து தோட்டங்களை கொண்டு நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதன் காரணமாக புதிய தேயிலை கன்றுகளை நடவோ, புதிய பயிர்ச்செய்கையில் ஈடுபடவோ தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதுவும் தரிசு நிலங்கள் அதிகரிக்க காரணமாகியுள்ளது. 

பதுளை மாவட்டத்தின் கோணக்கலை பிளார்னிவத்தை, உனுகொல்ல, எல்லவத்தை மற்றும் மாவட்டத்தின் பரவலான தோட்டங்களில் தரிசு நில ஆக்கிரமிப்பு முயற்சிகள் வெளியாரினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கடந்த காலங்களை போலல்லாமல் தொழிலாளர்கள் இம் முயற்சிகளை முறியடிக்க இம்முறை களத்தில் நேரடியாக இறங்கி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சில இடங்களில் இச்சம்பவங்களை தடுக்க இடம்பெற்ற கைகலப்பில் தொழிலாளர்கள் காயமடைந்தும் உள்ளார்கள். மக்கள் பிரதிநிதிகளும் சம்பவ இடத்திற்குச் சென்று மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து காணி ஆக்கிரமிப்பை தடுத்திருக்கிறார்கள். 

இம் முயற்சிகள் தற்காலிகமானவை என ஒருசில மக்கள் பிரதிநிதிகள் கூறவும் செய்திருக்கின்றார்கள். இதை வைத்து பார்க்கும்போது தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களை பாதுகாக்க ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்கள் அவசியம் என்பது புலனாகின்றது. தற்போதைய சூழ்நிலையில் வேலையற்று இருக்கும் மலையக இளைஞர்களுக்கு தரிசு நிலங்களை விவசாய நோக்கத்திற்காக பகிர்ந்தளிக்க முடியும். தேயிலை செய்கைக்கு உகந்த தரிசு நிலங்களில் புதிய தேயிலை கன்றுகளை நட முடியும். தவிர மாற்று பயிர்செய்கை முயற்சிகளையும் மேற்கொள்ள முடியும். இவ்விடயங்கள் குறித்து குத்தகை அடிப்படையில் தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது தொழிற்சங்கங்களின் பொறுப்பாகும். 

மலையக மண்ணின் வளங்கள் பல்வேறு வழிகளில் சுரண்டப்படுகின்றன. இறுதியாக நிலமும் பலவந்தமாக ஆக்கிரமிப்புக்குள்ளாகி வருகின்றது. இதனைத் தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் உரிய தரப்பினரை அணுகாது மெத்தனம் காட்டினால் எம்மவரின் காணி நிலம் எவருக்கே சொந்தமாகிவிடும்.  

ஆ. புவியரசன்

Comments